Fasting at least twice a month to give rest to the stomach | மாதம் இரு முறையாவது வயிற்றுக்கு ஓய்வு கொடுக்க விரதம்

பக்தி செலுத்துவதால் முக்தி கிடைத்துவிடும் என்றால், நாம் செலுத்தும் பக்தியே நேராக முக்தியைக் கொடுத்து விடுகிறது என்று அர்த்தமில்லை. நாம் செய்யும் செயல் எதுவுமே தானாக எந்தப் பலனையும் தருவதில்லை. பலன்களைத் தருபவர் ஈஸ்வரனாகவே இருக்கிறார். முதலில் உள்ளத்தை பால் போல் தூய்மை ஆக்க வேண்டும். பக்தி என்னும் தீயில் அதை பதமாக காய்ச்ச வேண்டும். சாந்தத்தைக் கொண்டு உறை ஊற்றி தயிராக்க வேண்டும். 

இதயம் என்னும் குடத்தில் தயிர் ஊற்றி அது உறைந்ததும், சித்த ஏகாக்கிரதம் என்னும் மத்தைக் கொண்டு கடைந்து, பூத்துவரும் வெண்ணெயைப் போன்ற ஞானத்தால் இதயத்தில் வீற்றிருக்கும் பரமபுருஷனைக் உணர வேண்டும். தயிரில் பால், வெண்ணெய், நெய் ஆகிய முப்பொருளும் அடங்கியிருந்தாலும், அவற்றை தக்க முறைகள் கொண்டே தனித்தனியாக்க முடியும் என்பது உண்மை. அதைப்போலவே நம் இதயத்தில் உறைந்திருக்கும் கடவுளை காண வேண்டுமானால், தக்க முயற்சிகள் எடுத்தால் தான் இயலும். அதற்கு மிகுந்த பொறுமையும், சகிப்புத்தன்மையும், விடாமுயற்சியும் தேவை.

மாதம் இரு முறையாவது வயிற்றுக்கு ஓய்வு கொடுக்க விரதம் இருத்தல் அறம். இதனால், பெரும்பாலான உடல் வியாதிகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும். வீட்டுக்குப் பயனற்ற பொருட்களை வாங்குவதால் பணமும், காலமும் விரயமாகிறது. எதை வாங்கினாலும் அவசியம் தேவையா என சிந்தித்து வாங்குதல் அறம். இதிலிருந்து பெரும்பாலான மனோவியாதிகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். கோபத்தை அடக்குதல் மிகச் சிறந்த அறம். மிக கடினமானதும் கூட. பேச்சளவில் கோபத்தை அடக்குவதாகச் சொல்லலாம். ஆனால், இடைவிடாத பயிற்சியால் மட்டுமே சாந்த குணத்தை அடைய முடியும். மேன்மையும் அடைய முடியும்.

கோபத்தை அடக்க முடியாது என பலர் எண்ணுகிறார்கள். அதற்கு சரியான ஒரு கடிவாளம் போட்டுவிட்டால் அலைபாய்ந்து கொண்டிருக்காது. முயற்சி, பக்தி, தியானம் உள்ளவர்கள் அதனை வசப்படுத்திவிடுகிறார்கள். செயல்களில் ஒருமுகத்தன்மையோடு ஈடுபட்டு அதில் வெற்றியும் காண்கிறார்கள். மனதில் ஏற்படும் அளவற்ற, தேவையில்லாத, எண்ணங்களே, கோபத்திற்கும், நாம் அனுபவிக்கும் அத்தனை துன்பங்களுக்கும் மூலகாரணமாக இருக்கிறது. இதனால் நமது மனம் பாதிக்கப்படுகிறது, சிந்திக்கும் ஆற்றலை புத்தி இழக்கிறது.

நாம் கண்ணால் ஒரு பொருளைப் பார்க்கும்போது, 'என்னை அனுபவியுங்கள்' என்று எந்தப் பொருளும் கேட்பதில்லை; அதனைப் பார்க்கும் கண்ணும் சொல்வதில்லை. மனம் தான் அனுபவிக்கத் துடிக்கிறது. அதற்காக எத்தகைய செயலைச் செய்யவும் தூண்டுகிறது. அதனால் தீமைகள் தான் வருமே தவிர நன்மைகள் எதுவும் உண்டாகாது. மனம் நமது சொல்கேட்டு நடந்தால் தான் நமது புத்தி சரியாக இருப்பதாக அர்த்தம்; மனதை கட்டுப்படுத்த முடியாதவர்கள் சரியாக புத்தி அமையப் பெறாதவர்கள் என்று என்று மனோதத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். எனவே, மனதை அடக்கி வாழப் பழகுவது அறம் என்கிறது சாஸ்திரம். இதனால் நாம் மட்டும் அல்லாது நம்மை சுற்றியுள்ள எல்லோரும் மேன்மை அடைய முடியும்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,