Showing posts with label Mahabharatham Story. Show all posts
Showing posts with label Mahabharatham Story. Show all posts

Pandavarkalin Vetriyai Thedi Tantavanukku Thiruvila | பாண்டவர்களின் வெற்றியை தேடி தந்தவனுக்கு திருவிழா

பாண்டவர்களுக்கும் துரியோதனனின் கூட்டத்தாருக்கும் போர் என்பது தவிர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அப்படி ஏற்பட்ட போரில் பாண்டவர்களின் வெற்றிக்கு காரணமாகத் திகழ்ந்தவன் அரவான் என்று மகாபாரதம் கூறுகிறது.


அர்ச்சுனனுக்கும் நாக கன்னிக்கும் பிறந்தவன் அரவான். சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன்.

அரவான் களப்பலியானதால்தான் பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றார்கள் என்பது புராண வரலாறு!

பாண்டவர்கள் வெற்றியடைய பகவான் கிருஷ்ணர் பல தந்திரங்களை கையாண்டார், பாண்டவர்களில் ஒருவரான ஜோதிட மேதை சகாதேவனிடம், பாண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற என்ன வழி? எனக் கேட்கிறார். சகாதேவனும், ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து வெற்றிக்கான வழியை கூறுகிறார்.

போர் ஆரம்பிப்பதற்குரிய நாளைக் குறிப்பிட்டுச் சொன்னதுடன், சாமுத்ரிகா லட்சணம் கொண்ட இளைஞன் ஒருவனை களப்பலி கொடுத்தால் வெற்றி உறுதி என கூறுகிறார்.

சகாதேவன் குறிப்பிட்ட லட்சணம் பொருந்தியவர்கள் கிருஷ்ணன். அர்ச்சுனன் அவனது மகன் நாக கன்னிக்குப் பிறந்த அரவான் ஆகிய மூன்று பேரே.
அர்ச்சுனன் இல்லேயேல் போர் இல்லை.

கண்ணன் இல்லையேல் வருங்காலமே இல்லை. மிஞ்சியிருப்பது அரவான். எனவே, அரவானைச் சந்தித்தார் கண்ணன். அரவானிடம் பாண்டவர்களின் நிலையைச் சொன்னார் கண்ணன்.

கண்ணன் சொல்வதை ஒரு வேண்டுகோளாக ஏற்றான் அரவான் களப்பலிக்கு தயார் என்று சம்மதித்தான். தன் தியாகத்தால் நீதி நிலைக்கும். தர்மம் வெல்லும், போரில் பாண்டவர்களுக்கு வெற்றி கிட்டும் என்பதால் முழு மனதுடன் சம்மதித்தான்.

அதே நேரத்தில் ஒரு நிபந்தனையும் விதித்தான். திருமணமாகாதவன் நான். பெண் சுகம் என்றால் என்ன என்று அறியாதவன். ஆகவே என்னை யாராவது ஒருத்தி திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவருடன் ஒரு இரவாவது இல்லறம் நடத்த வேண்டும்.

அடுத்து களப்பலி ஆனதும் வெட்டுப்பட்ட என் தலைக்குப் போர் முடியும் வரை போரில் நடைபெறும் காட்சிகளைக் காணும் சக்தியைத் தர வேண்டும்.

இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஏற்பாடு செய்தால் நாளைக்கே நான் களப்பலிக்குத் தயார் என்றான். கண்ணன் சிந்தித்தார்.

இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றி விடலாம், ஆனால் முதல் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது?

போருக்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில் அரவானுக்கு எப்படித் திருமணம் நடத்த முடியும்? எந்தப் பெண் இதற்கு சம்மதிப்பாள்?

கண்ணன் ஒரு முடிவுக்கு வந்தார். பிறகு அரவானிடம், உன் ஆசைகள் நிறைவேறும். இன்றிரவு உன்னைத் தேடி ஓர் அழகிய பெண் வருவாள். அவளை நீ கந்தர்வ விவாகம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இரு.

மாலை நேரம் முடிந்து இரவு மெள்ள மெள்ள தலை காட்டியது. அப்பொழுது, அரவான் தங்கியிருந்த மாளிகை நோக்கி ஓர் அழகிய பெண் எழிலாக நடந்து சென்றாள். அவள் நடந்து வரும் அழகை ரசித்தான் அரவான், அவளை அன்புடன் நெருங்கினான்.

மாளிகை முன் உள்ள நந்தவனத்தில் நிலவின் சாட்சியாக அவளை காந்தர்வ விவாகம் செய்து கொண்டான். அரவானின் ஆசை நிறைவேறியது.

அரவான் காந்தர்வ விவாகம் செய்து கொண்ட அந்த அழகி யார்? அரவானின் விருப்பத்தை நிறைவேற்ற கண்ணன், தன் மாய சக்தியால் ஓர் அழகியை உருவாக்கி அனுப்பினார் என்றும் கண்ணனே பெண்ணாக மாறினார் என்றும் புராணத் தகவல்கள் கூறுகின்றன.

எது எப்படியிருந்தாலும், அரவான் முழுமையாக மகிழ்ச்சி அடைந்தான். விடிந்ததும் கண்ணனிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற, நீராடி தூய ஆடை அணிந்து களப்பலிக்குத் தயார் ஆனான். முறைப்படி அரவான் களப்பலி ஆனான்.

பாண்டவர்களுக்கும் துரியோதனர் கூட்டத்தினருக்கும் போர் ஆரம்பமாயிற்று. குரு சேத்திரத்தில் பதினெட்டு நாட்கள் நடந்த இந்தப் போரினை அரவானின் தலை கண்டு களித்தது. இந்த நிகழ்வுகளில் ஒன்றான அரவான் களப்பலியான நிகழ்வினை நினைவூட்டும் வகையில் சித்திரை மாதம் பவுர்ணமியை ஒட்டி விழுப்புரம் அருகில் உள்ள கூவாகம் என்னும் கிராமத்திலிருக்கும் கூத்தாண்டவர் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது. 

தமிழகத்தில் சில கிராமங்களில் அரவானுக்கு சிறிய கோயில்கள் உள்ளன. அக்கோயில்களில் அரவானின் தலை மட்டும் கதை வடிவில் இருப்பதைக் காணலாம். பாரதப் போருக்காக களப்பலியான அரவானின் தலை போர் முடியும் வரை உயிருடனிருந்தது. போரில் நடந்த நிகழ்ச்சிகளை அரவான் கண்டு களித்தான், பாண்டவர்கள் வெற்றி பெற்றதும் கண்ணபிரான், அரவானை உயிர்ப்பித்தார் என்றும் புராணம் கூறுகிறது.

இந்த வரலாற்றை பின்னணியாக கொண்டு சிங்கப்பூரில் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் ஆகஸ்ட்/அக்டோபர் திரெளபதை அம்மனுக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. இத்திருவிழா 1842 முதல் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.




Mahabharatham Kannan Alutha Idam | மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்

மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்..


உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது என்று அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்த கண்ணன் அழுத இடம் ஒன்று உண்டு.

அது எந்த இடம் தெரியுமா?

கர்ணன் அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் செய்த தர்மம் அவனைக் காத்து நின்றது.

அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான்.

கண்ணனுக்கே தாங்கவில்லை. "உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான்.

அப்போதும் கர்ணன் "மறு பிறவி என்று ஒன்று வேண்டாம். அப்படி ஒரு வேளை பிறக்க நேர்ந்தால், யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா" என்று வேண்டினான்.

கண்ணன் அழுதே விட்டான். இப்படி ஒரு நல்லவனா என்று அவனால் தாங்க முடியவில்லை.

கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான்.

கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தக் கண்ணீரால் கர்ணனை நீராட்டினான்.

கர்ணன் கேட்டதோ இல்லை என்று சொல்லாத உள்ளம் மட்டும் தான்.
கண்ணன் மேலும் பலவற்றை சேர்த்துத் தருகிறான்

"நீ எத்தனை பிறவி எடுத்தாலும், தானம் செய்து, அதைச் செய்ய நிறைய செல்வமும் பெற்று, முடிவில் முக்தியும் அடைவாய் " என்று வரம் தந்தான்.
இறைவனைக் காண வேண்டும், முக்தி அடைய வேண்டும் என்று எவ்வளவோ பேர் எவ்வளவோ தவம் செய்வார்கள். எவ்வளவோ படிப்பார்கள்.

கர்ணன் இறைவனைக் காண வேண்டும் என்று தவம் செய்யவில்லை. முக்தி வேண்டும் என்று மெனக்கெட வில்லை.

இறைவன் அவனைத் தேடி வந்தான். கேட்காதபோதே விஸ்வரூப தரிசனம் தந்தான். அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான். கண்ணீர் விட்டான். செல்வம், ஈகை, முக்தி என்று எல்லாம் கொடுத்தான்.

இறைவனைத் தேட வேண்டாம். அவன் நாம் இருக்கும் இடம் தேடி வருவான். கேட்காதது எல்லாம் தருவான். நம்மைக் கட்டி அணைத்துக் கொள்வான்.

அதற்கு என்ன செய்ய வேண்டும்?
கர்ணன் தானம் செய்தான், செய் நன்றி மறவாமல் இருந்தான்.
எளியவர்களுக்கு உதவி செய்தான், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி மறக்காமல் இருந்தான். அவ்வளவுதான்.
உலகளந்த பெருமாள், அவனிடம் கை நீட்டி நின்றார்.
ஈகை எவ்வளவு பெரிய நற்செயல்.



Pithamagar kalathil viizththappattaar | பிதாமகர் களத்தில் வீழ்த்தப்பட்டார்


பிதாமகர் களத்தில் வீழ்த்தப்பட்டார் பீஷ்மர் என்ற செய்தி கர்ணனை அடைந்ததும், அதிர்ந்துபோனான். எவர் வீழ்த்தியது என ஆவேசப்பட்டான். அர்ஜீனனின் பெயர் கேட்டவுடன் கொதித்தான்.

பிதாமகரை அத்தனை எளிதாய் வீழ்த்திவிட்டானா அர்ஜீனன்?.. என கோபப்பட்டான் கர்ணன். இல்லை. சிகண்டியை முன்னிறுத்தி பீஷ்மரை வீழ்த்திவிட்டார்கள்.. என்றான் தகவல் கொண்டுவந்த வீரன்.

அதர்மத்தின் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்று எங்களை குறைகூறிய பாண்டவர்களே, அதர்மத்தினைக் கையாளுவதுதான் தர்மமா ?

அர்ஜீனா.. இதோ வருகிறேன். சந்திக்கிறேன் உன்னை களத்தில். உன்னைக் கொல்லவேண்டும் என நான் நினைத்ததற்கான காரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக கூடிக்கொண்டே போகின்றன.. என தனக்குள் பொங்கினான்.

இறுதியாக ஒருமுறை, பீஷ்மரின் திருமுகத்தைக் கண்டுவரக் கிளம்பினான் குருஷேத்திரம் நோக்கி. கௌரவர் சேனையும், பாண்டவர் சேனையும் அணிவகுத்து நின்று, ஒவ்வொருவராய் பீஷ்மரைக் கண்டு கலங்கியபடியே நகர்ந்தார்கள் களத்தில்.

போதும் புறப்பட்டுவிடலாம் என நினைத்த பீஷ்மம், தனது தாயின் மடியினைத் தேடியது. தாய் தந்த அமுதோடு உயிர்கொண்டோம். அதோடே, உயிர் துறப்போம் என்று எண்ணிய பீஷ்மர், அர்ஜீனனை அருகில் அழைத்தார்.

அர்ஜீனா.. தாகம் அதிகம். இதுவரை கொண்ட அத்தனை தாகத்தினையும் மறக்கச் செய்யும் அதீத தாகம். என் தாய் கங்கையால் மட்டுமே தீர்க்கமுடிந்த தாகம். தீராமல், இவ்விடம் விட்டு நகர்தல் என்பது இயலாது. புரிகிறதா ?.. என்றார்.

அர்ஜீனனின் கண்கள் கண்ணனை நோக்க, அவனும் தலையசைக்க, தனது பாணங்களை நிலம் நோக்கி செலுத்தினான் அர்ஜீனன். நிலம் பிளந்து, பாறைகள் தாண்டி, ஆழத்தில் பயணித்துக் கொண்டிருந்த கங்கையினை தொட்டது அர்ஜீனனின் அம்புகள்.

அம்பு பயணித்த இடைவெளியின் ஊடே, பீஷ்மரின் சுவாசமும் கலந்து பயணிக்க, சீறி எழுந்தாள் கங்கை. கிடைத்த இடைவெளியில் பொங்கி வழிந்து ஊற்றாய் பெருகி, பாலாய்ப் பொழிந்தாள். மண்தொட்டு கிளம்பிய கங்கை, நேராக, தன் மகனின் தாகம் தீர்க்கத் தாயாக மாறி, பாலூட்ட ஆரம்பித்தாள் பிதாமகர் பீஷ்மருக்கு.

கங்கை உள்நிரம்பியதும், வெம்மையாய் இருந்த கொஞ்ச நஞ்ச எண்ணங்களும் குளிர்ந்துபோக, போதும் தாயே போதும். கொண்டதொரு பணி நிறைவாய் முடிந்தது. விடைகொடு எனக்கு.. என்று மனதாலேயே தன் தாயை வணங்க, கங்கை அடங்கினாள்.

பீஷ்மத்தைப் பெற்றதனால், புனிதமானாள் கங்கை என நாளைய சரித்திரம் சொல்லுமடா உன் பெயரை.. என வாழ்த்தினாள். பீஷ்மரின் கண்கள் விண்ணை நோக்கின. தேவர்களும், விண்ணவர்களும் புடைசூழ நிற்பது கண்டு வணங்கினார். சூரிய தேவனுக்கு அருகிலேயே, மரண தேவனும் தன் அனுமதிக்கு காத்திருப்பது தெரிந்தது.

வாரும் மரணதேவரே.. வாரும். இதுநாள்வரை உம் கடமை நிறைவேற்றத் தடையாயிருந்தமைக்கு மன்னியும் என்னை. நானே அழைக்கிறேன் உம்மை. வந்தெம்மை ஆட்கொள்ளும்.. என பீஷ்மரின் மனம் இறைஞ்சியது.

சற்றுப் பொறும் பீஷ்மரே. இருக்கும் அத்தனை பேரையும் விருப்பு வெறுப்பின்றி ஆசீர்வதித்து செல்கிறீரே.. வந்து கொண்டிருக்கிறான் எம் மைந்தன். அவனையும் ஆசிகொடுத்துவிட்டுச் செல்லாமே.. வேண்டினான் சூரியதேவன்.

அதேநேரம், கர்ணனும் நுழைந்தான் அவ்விடம். அம்புப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த பீஷ்மரைக் கண்டதும் ஆடிப்போனான் கர்ணன். மனம் கலங்கியது. அவரை எதிர்த்து உதிர்த்த வார்த்தைகள் நினைவில் வந்து நெஞ்சினைக் கிளறியது. அவரது கால் தொட்டு வணங்கினான். அருகே சென்றான்.

பிதாமகரே.. அறியாமல் கோபத்தில் நான் உதிர்த்த வார்த்தைகள், உம்மைக் காயப்படுத்தியிருப்பின் மன்னியுங்கள் என்னை... என்றான் கர்ணன். தவறான புரிதலால் ஏற்பட்ட விளைவிற்கு காரணமாக எதையுமே கற்பிக்க இயலாது கர்ணா.. இதோ.. நீ விரும்பியது காத்திருக்கிறது. நாளைமுதல் நான் களத்தில் இருக்கப் போவதில்லை... என்றார் பீஷ்மர்.

அவசரப்பட்டு பேசிவிட்டேனோ என்று அதற்காகப் பலமுறை வருந்தியிருக்கிறேன் பிதாமகரே. உம்மோடு களம்புகுந்து, பார்போற்றும் உமது வீரத்தினை அருகிருந்து காணும் கொடுப்பினை கிட்டியும், அவசரப்பட்டு தவறவிட்டுவிட்டேனே என வருந்தாத நாளில்லை ஐயனே.. என்றான் கர்ணன் உருக்கமாக.

எல்லாம் நன்மைக்கே கர்ணா.. என் இடத்தை நிரப்பாமல் செல்கிறேனே என்ற கடைசிக்குறையும் தீர்ந்தது உன்னால். களம் காண்பாய் கர்ணா.. என்றார் பீஷ்மர்.
நீங்கள் இட்ட பணி தொடர, வெற்றி பெற வாழ்த்தியருள வேண்டுகிறேன் பிதாமகரே.. என்றான் கர்ணன்.

எவரும் பெறமுடியாத புகழினை இக்களத்தினில் நீ பெறுவாய் கர்ணா.. உன் தர்மம் அதற்குத் துணைநிற்கும்.. என கர்ணனை ஆசீர்வதித்த பீஷ்மர், கண்மூட ஆரம்பித்தார்.

மனதாலேயே மரணதேவனை ஆட்கொள்ள அழைக்க, பீஷ்மரின் ஆன்மாவினை தனதாக்கிக் கொண்டான் மரணதேவன். உடல் மட்டுமே உயிர்ப்போடு இருந்தது.
விண்ணெங்கும், மண்ணெங்கும் பீஷ்ம.. பீஷ்ம..பீஷ்ம.. என்னும் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன.

கலங்கிய கண்களோடும், கனத்த இதயத்தோடும் செய்வதறியாது நின்ற அர்ஜீனனை அவ்விடம் விட்டு சற்று தூரமாய் அழைத்துவந்தான் கண்ணன். இழப்பின் வலி என்னவென்பதை பிதாமகர் உணர்த்திப் போனபின்பும், மண்ணிற்கான இப்போர் தொடரத்தான் வேண்டுமா கண்ணா ?.. கலங்கியபடியே கேட்டான் அர்ஜீனன்.

பீஷ்மர் ஆவது அத்தனை எளிதென்று எண்ணிவிட்டாயா அர்ஜீனா ?.. கேட்டான் கண்ணன். நான் கேட்பது என்ன ? நீ சொல்வது என்ன ?.. எரிச்சலோடு கேட்டான் அர்ஜீனன். புரிந்துகொள்ளும் மனநிலையில் நீயில்லை எனப் பொருள் அர்ஜீனா.. என்றான் கண்ணன்.

என்ன புரியவில்லை ? இன்னும் என்ன புரியவேண்டும் ? எவர் பார்த்து இவர்போல் ஆகவேண்டும் என நினைத்தேனோ, அவரை என்னைக் கொண்டே வீழ்த்த வைத்தது புரியவில்லையா எனக்கு ? மனம் முழுதும் நிறைந்திருந்த பிதாமகரை, மண்விட்டு அனுப்ப, காரணமாகிப் போனேனே நான்.. இதுகூடவா எனக்குப் புரியவில்லை ?.. படபடத்தான் அர்ஜீனன்.

பீஷ்மர் மண்விட்டுப் போய் வெகுகாலமாகிவிட்டது அர்ஜூனா... என்றான் கண்ணன். திகைப்பாய்ப் பார்த்தான் அர்ஜீனன். ஆம் அர்ஜீனா.. மண்ணாள மட்டும் பீஷ்மர் நினைத்திருந்தால், தடுப்பார் எவருமில்லை அன்று. மண்ணோடு தன் தொடர்பை என்றோ விட்டொழித்தார் பீஷ்மர். அதனாலேயே, தன் சுக துக்கங்களை அவரால் மறக்க முடிந்தது.

தன்னைப் பற்றிய நினைவே இன்றி, தம் குலத்திற்காக மட்டுமே வாழ்வினை அர்ப்பணிக்க முடிந்தது. பிரம்மச்சரியம் மட்டுமே பீஷ்மமாகாது அர்ஜீனா.. விருப்பு, வெறுப்பின்றி எதனையும் அணுகமுடிவதே பீஷ்மம். கொண்ட கொள்கைக்காக, தனைப்பற்றிய சிந்தனையே இன்றி, தொடர்ந்து கடமையாற்றுவதே பீஷ்மம்.

பீஷ்மரின் கொள்கை தன் குலம் காத்து நிற்பது மட்டுமே. அதற்கு எது சரியோ, அதை மட்டுமே சிந்தனையில் கொள்பவர். அது சரியா, தவறா என்றுகூட யோசிக்கமாட்டார்.

தன் நிலை தாழ்ந்தாலும் கவலைப்படாமல், தன்னை நம்பியிருக்கும் தன் குலம் காப்பவர் எவரோ.. அவரே பீஷ்மர். அதற்காக, அவர் கைக்கொண்ட தவம்தான் பிரம்மச்சர்யம்.

மண்ணிலிருந்து தன்னை விலக்கிக் கொள்பவனால் மட்டுமே பீஷ்மனாக முடியும்.. என்றான் கண்ணன். பஞ்சபூதங்களில் ஒன்றுதானே இம்மண். அதை மட்டும் விட்டு விலகிநின்றால் போதுமா ?.. கேட்டான் அர்ஜீனன்.

நீர், நெருப்பு என இரண்டையும் தன்னுள் அடக்கி, தன்னைத் தொட்டே தன் பலத்தினை நிரூபிக்க முடியும் என வாயுவிற்கும் வாய்ப்பளிக்கும் மண்ணை அத்தனை சாதாரணமாக எண்ணிவிடாதே அர்ஜீனா. இங்கு அனைத்திற்கும் காரணம் மண்தான். மண்தொட முடியாத ஒரே விஷயம் ஆகாயம் மட்டுமே. அதுவும், இறப்பிற்கு பின்மட்டுமே அடையமுடியும் இடம்.

உலகின் அத்தனை செயல்களுக்கும் ஆதாரமாய் நிற்பது மண் மட்டுமே. மனிதப்பிறவியின் அசைக்கவே முடியாத, விடவே இயலாத, ஆழமான ஓர் உணர்வு ஆசை. அந்த ஆசையின் அஸ்திவாரமே மண் தான்.

கருவில் இருக்கும்வரை, மண்ணோடு தொடர்பில்லை. வெளியில் வந்தபின்னும், தாய்மடியில் இருக்கும்வரை, தனக்கென்று ஓர் தனித்த சிந்தனை இருப்பதே இல்லை எந்தக் குழந்தைக்கும்.

எப்போது குழந்தை என்ற ஓருயிர், மண்தொட ஆரம்பிக்கிறதோ.. அப்போது நுழைகிறது அதனுள் ஆசை. தான் படுத்திருக்கும் இடம் தன் இடம். அதுமட்டும் போதுமா ? போதாது. உள்நுழைந்த ஆசை விட்டுவிடுமா என்ன ? புரள்கிறது குழந்தை.. இன்னும் இடம் கிடைக்கிறது. அதுவும் தன் இடம் என்றபின், முன்னோக்கி நகர்கிறது.. தவழ்கிறது இடம் பிடிக்க.

அதுவும் போதவில்லை. கண்படும் இடமெல்லாம் தனதாகவேண்டுமே.. எழ முயற்சித்து தொட நினைக்கிறது.. எழுகிறது.. நடக்கிறது.. ஓடுகிறது.. இத்தனை இடம் கிடைத்தும் போதவில்லை. மண் மட்டும் போதுமா ? மண்மேல் இருக்கும் அத்தனை சுகங்களும் வேண்டும்.. ஓடுகிறது.. தேடுகிறது.. வாழ்நாள் முழுதும் தேடியே ஓய்கிறது.

முதுமையில் தளர்ந்து மறுபடியும் மண்மேல் விழும்வரை ஓய்வதில்லை. எல்லாம் ஓய்ந்தபின்னே, உயிர்பிரிந்து போனபின்னே, மண்ணால் வந்த மனிதனின் ஆசை, மண்ணுக்குள்ளேயேதான் புதைக்கவும் படுகிறது. இத்தனைக்கும் காரணமான இம்மண்ணை மட்டும், அத்தனை எளிதாய் எவராலும் துறக்க முடியாது.

வாழும் காலத்திலேயே, மண்ணாசையை.. மண்ணால் கொண்ட உணர்வுகளை துறந்து நின்றதால்தான் அவர் பீஷ்மர்.. என கண்ணன் கூறியதைக் கேட்ட அர்ஜீனன் திகைத்தான்.

அதனால்தான், மண்படாது பீஷ்மரை அம்புப் படுக்கையில் ஏற்றச் சொன்னாயா கண்ணா ?.. விழிகள் விரியக் கேட்டான் அர்ஜீனன்.
சரியான புரிதல்தான் அர்ஜீனா.

பிதாமகர் பீஷ்மர் வாவென்றழைக்காமல், மரணதேவனால் அவரை நெருங்கக்கூட இயலாது. வாழும்போது மண்ணோடு தான் கொண்ட உறவறுத்து வாழ்ந்த பீஷ்மர், இறுதி நேரத்தில் மண்மீது விழுந்துவிட்டால், மண் அவரை விட்டுவிடுமா என்ன ? மறுபடியும் வாழவேண்டும் என்ற ஆசைதனை அவருள் புகுத்திவிட்டால் ?..

மீண்டும் எழுந்து, பீஷ்மம் மறந்து, மண்ணாள ஆசை கொண்டுவிட்டால். ?
உன்னால், என்னால், எவராலும் அவரை தடுத்து நிறுத்திட இயலாது என்பதால்தான் அம்புப் படுக்கையில் கிடத்தச் சொன்னேன். ஒருவேளை, அதிலிருக்கும்போதும், மண்தொட அவர் விரும்பினாலும், அம்புகள் குத்தி நிற்கும் உடலின் வலி அதிகரிக்கும்.

மண்தொட ஆசைப்பட்டால், வலிதான் மிஞ்சும் என்பதாலேயே, மறந்தும் கூட அவர் அதனை செய்ய மாட்டார். அதனாலேயே, இறுதிவரை அவரை மண் பார்க்க விடாமல், விழிகளை விண்நோக்கியே இருக்கச் செய்தேன். பீஷ்மர் தவறலாம் அர்ஜீனா.. அவர் கொண்ட பீஷ்மம் தவறிவிடக்கூடாது.. என்றான் கண்ணன்.

இத்தனையும்தான் நானறிந்து கொண்டேனே ? மண் வேண்டாம் என என்னால் போரிடாமல் விலக முடியாதா ?.. ஆதங்கத்தோடு கேட்டான் அர்ஜீனன்.
சிரித்தான் கண்ணன்.

நீ நிற்பதே மண்மீதுதான். உன் இருப்பே மண்மீதுதான் என்றபின், விலகி எங்கு செல்ல முடியும் அர்ஜீனா ? விண் நோக்கிச் செல்ல, உனக்கான காலம் இன்னும் வரவில்லை என்றபின்,

மண்ணில்தான் போராடவேண்டும். மண்ணோடுதான் போராடவேண்டும்.. மண்ணிற்குள் மறைந்து மண்ணாகும்வரை.. என்றான் கண்ணன்.
அர்ஜீனனுக்குப் புரிந்தது.

மண்ணில் கலக்கத்தான் இத்தனை போராட்டங்களும்.. மண்ணாக மாறத்தான் இந்த ஓர் பிறவியும். நாம் கொண்ட சுகங்களும், துக்கங்களும் மண்ணால்தான் அருளப்பட்டது. அதை அடையத்தான் இந்த வாழ்க்கைப் போராட்டமும்.

எதை வெல்ல நினைத்தோமோ, அதில்தான் அடங்கப் போகிறோம். இங்கு நாம் கண்ட உறவுகள் அத்தனையும், இந்த மண் தந்ததுதான். உறவுகளையும், உணர்வுகளையும் கொடுத்த மண்தான், அவைகளை திரும்பவும் பெற்றுக் கொள்ளப் போகிறது.

எனில், நான் என்பது யார் ? நான் என்பதும் அதுதான்.
இதைப் புரிந்து கொள்ளவே வாழ்க்கை. புரிந்தாலும், புரியாவிட்டாலும், தான் யார் என்பதை மண் புரியவைத்துவிடும்.

அர்ஜீனன், தர்மன், பீமன், நகுலன், சகாதேவன், துரியோதனன், கர்ணன், துரோணன் என எல்லாம் ஒன்றுதான். அத்தனை பேரும், விரைவாய் மண்ணோடு கலக்க, போராடும் களமே வாழ்க்கை. எவர் முந்துகிறார் என்பது மட்டுமே வாழ்க்கையின் சுவாரஸ்யம்.

வா கண்ணா.. நாளைய போருக்கு தயார் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உண்டு.. என அர்ஜீனன் கூற, கண்ணனுக்குப் புரிந்தது.. தன்னை எவரென உணர்ந்துவிட்டான் அர்ஜீனன் என்பது.

இங்கு ஒவ்வொருவர் வாழ்வும் குருஷேத்திரமே.. ஒவ்வொருவரும் அர்ஜீனரே. விளங்கச் சொல்ல, கண்ணன் எனும் சாரதி ஒவ்வொருவர் உள்ளும் உண்டு. வாழும்போதே அதை உணர்ந்தது, பீஷ்மரைத் தவிர வேறு எவரும் இல்லை.



Bhishmar viizssi ataiyum naal vanthathu | பீஷ்மர் வீழ்ச்சி அடையும் நாள் வந்தது.

பீஷ்மர் வீழ்ச்சி அடையும் நாள் வந்தது. கௌரவர்கள் அசுர வியூகத்தை அமைக்க, பாண்டவர்கள் தேவ வியூகத்தை அமைத்தனர். சிகண்டியை முன் நிறுத்திப் பாண்டவர்களின் படை முன்னேறியது. இதுவரை இல்லாத பாதுகாப்பு இன்று பீஷ்மருக்கு இருந்தது. இன்று பீஷ்மரை கொன்றாக வேண்டும் என்று பாண்டவர் பாசறையில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

பார்த்தன் உணர்ச்சிவசம் பட்டிருந்தான். கலங்கி நின்றான். தன் செல்ல தாத்தாவாகிய பீஷ்மரின் மடியில் அமர்ந்து விளையாடிய நேரங்களை கண்ணீருடன் நினைவு கூர்ந்தான். தன் தாத்தா சிறுவயதில் கூறிய கதைகளில் மீண்டுமொரு முறை கடைசியாக மூழ்கினான். தன் அன்பிற்கும், பாசத்திற்கும், மரியாதைக்கும் உரிய பீஷ்மரை கொல்ல போகிறோமே என்று வேதனை அடைந்தான். காண்டீபத்தைதொட அவன் மனமும் கைகளும் மறுத்தன. 

நாம் தோற்றாலும் பரவாயில்லை கங்கை புத்திரரை கொல்ல மாட்டேன் என்று கிருஷ்ணரையும் அண்ணன்களையும் தழுவி அழுதான். அங்கு சில நிமிடங்கள் நிசப்தம் நிலவியது.... காற்று வீச மறந்தது... கூடியிருந்த அனைத்து மகாராதர்களின் கண்களிலும் இந்த காட்சி ஈரமாக படர்ந்தது...

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சமாதானம் செய்ய வார்த்தை இன்றி சிலையானார்... சிறிது நேரம் கழித்து “அர்ஜுனா, பீஷ்மரின் சாபம் முடியும் நேரம் நெருங்கிவட்டது. அவர் முக்தி அடைய போகிறார். நீ அவரை கொல்லபோவதில்லை அவருக்கு உன் கைகளால் முக்தி கொடுக்க போகிறாய். அவருக்கு விதிக்கபட்டது இதுதான் பார்த்தா. உன் பாசத்திற்குரிய அன்பு தாத்தாவிற்கு நீ கொடுக்க போகும் மிக பெரிய பரிசு இது இந்திரன் மகனே.

எடு காண்டீபத்தை, மோக்ஷத்தை கொடுத்து அவரை வழி அனுப்பு. அவரின் ஆசி என்றும் உன்னோடு இருக்கும் “ என்றார். அர்ஜுனனுக்கு பீஷ்மரின் பிறப்பு ரகசியத்தை மீண்டும் ஒரு முறை சொல்லி முடித்தார். அர்ஜுனன் தெளிவானான். காண்டீபதில் நானேற்றினான். நானை சுண்டிவிட்டான். அதன் ஒலி எட்டு திக்கிற்கும் சென்றடைந்தது. சத்தத்தை கேட்ட அணைத்து ஜீவராசிகளும் ஒரு நிமிடம் மிரண்டது. வில்லுக்கு “விஜயன்” தேரில் ஏறி போருக்கு தயாரானான்......

இச்ச மரணம் (விரும்பிய போது மரணம்) என்ற வரத்தை தன் தந்தையிடம் இருந்து பெற்றிருந்தார் பீஷ்மர். அப்படிப்பட்ட பீஷ்மரை எப்படி தோற்கடிப்பது? எப்படி கொல்வது? என்று பாண்டவர்கள் அனைவரும் குழம்பி இருந்தனர். அப்போது அர்ஜுனன் “கொல்ல முடியவில்லை என்றால் என்ன? அவரின் உடல் அசைய முடியாதபடி காயங்களை ஏற்படுத்தினால் போதும்” என்றான்.

அப்போது குறுக்கிட்ட தருமர் “அவர் கைகளில் வில் இருக்கும் வரை, அவரை காயப்படுத்தும் ஆற்றல் படைத்த வீரன் மூவுலகிலும் யாரும் பிறக்கவில்லை. பிறகு எப்படி அவரை காயப்படுத்துவது ?“ என்றார்.

அர்ஜுனன் “அவர் காயம் அடைய வேண்டும் என்றால் வில்லை கீழே வைக்க வேண்டும், அவர் போர்களத்தில் வில்லை கீழே வைக்க மாட்டார் என்று அனைவர்க்கும் தெரியும். அப்படியிருக்க அவர் வில்லை கீழே வைக்க என்ன செய்வது? “ என்று கிருஷ்ணரை பார்த்து கேட்டான்.

“போர்களத்தில் பெண் இருந்தால் கூடவா அவர் தன் வில்லை கீழே வைக்கமாட்டார்?” புன்னகையோடு பதில் அளித்தார் பரந்தாமன்.
“போர்களத்தில் பெண்ணா? போர்களத்தில் பெண்களை அனுமதிப்பதில்லையே, அது யுத்த தர்மம் அல்லவே ?” என்று அர்ஜுனன் குழம்பி நின்றான்.

கிருஷ்ணர் அர்ஜுனனிடம் “தர்மத்தின் பக்கம் நின்று போராடும் அர்ஜுனா, நான் சொல்வதை கேள். சிகண்டியை நீ ஆண் என்று கருதினால் உன் தேரில் ஏற்றிக்கொள். பீஷ்மர் சிகண்டியை பெண் என்று கருதினால் தன் வில்லை கீழே வைப்பார். அது தான் சரியான சமயம் பார்த்தா !!!” என்று பதில் அளித்தார்.

போரில் அன்றும் பீஷ்மர் தன் அம்புகளை காற்றென செலுத்தி கொண்டிருந்தார். பாண்டவர்களுக்கு சவாலாக நின்றார். பாண்டவர்களின் வெற்றியை தடுக்கும் ஒரே ஒரு மாபெரும் சக்தியாக இருந்தார். இந்த நிலையில் தான் அர்ஜுனனின் தேர் அவருக்கு நேர் எதிராக சென்று நின்றது. கிருஷ்ணரின் முகத்தில் அமைதியான புன்னகை. பீஷ்மரை சொர்கத்திற்கு வரவேற்கும் ஆசிர்வாதம் பகவானின் கண்களில் தெரிந்தது. அதை பார்த்த பீஷ்மர் மனதில் ஆனந்தம். 

கிருஷ்ணரை வணங்கி நின்றார். தன் முடிவை அறிந்த பீஷ்மர் கடைசி முறையாக தன் வில்லை கையில் ஏந்தினார். பல ஆண்டுகளாக ஆயிரம் ஆயிரம் வீரர்களை கொன்று வெற்றி கொண்டு, தோல்வியே இல்லாத மகாராதனாக தான் விளங்கியதற்கு காரனமாய் இருந்த தன் வில்லை தொட்டு அதற்க்கு இறுதி வணக்கத்தை வீரத்தோடு தெரிவித்தார்.

தனக்கு மிகவும் செல்லமான பேரன் அர்ஜுனனின் தேரில் அவனின் கொடி வெற்றி களிப்போடு பறப்பதை பார்த்தார். சிகன்டிகை அர்ஜுனனின் தேரில் அவனுக்கு முன் நிற்பதை கண்டார். தன் விரதப்படி பீஷ்மர் சிகண்டியைத் தாக்கவில்லை. சிகண்டி யார் என்பதை நினைவு கூர்ந்தார். தன் ஆயுதத்தை கீழே வைத்தார், ஆயுதம் ஏதும் கையில் இல்லை.

“பார்த்தா செலுத்து உன் அம்பை. விடை கொடு பீஷ்மருக்கு.“ என்றார் ஸ்ரீ கிருஷ்ணர்.அர்ச்சுனன் மனதை ஒருமுகம் செய்தான். தைரியத்தை மனதிற்குள் புகுத்தினான். தன் நடுக்கத்தை கட்டு படுத்தினான். தன் முழு பலத்தோடும், ஆற்றலோடும் செலுத்தினான் அம்பை. அம்பு காற்றை கிழித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் பீஷ்மரின் கவசத்தைப் பிளந்தது.
வாழ்த்துக்கள்
!!! அர்ஜுனா!!!! உன்னிடம் தோற்பதில் பெருமை அடைகிறேன்” என்று போர்க்களம் முழுவதும் கேட்க்குமாறு வாழ்த்தினார் பீஷ்மர். அடுத்த அம்பும் சீறியது. பீஷ்மரின் நெஞ்சு கூட்டை பதம் பார்த்தது.

“மகிழ்ச்சி அர்ஜுனா!!!! உனக்கு என் நன்றிகள். உன் குருக்களுக்கும், உன் தந்தைக்கும், நீ பெருமை சேர்த்து விட்டாய். வாழ்க உன் புகழ். பீஷ்மனை வீழ்த்திய உன் புகழ் இந்த உலகம் அழியும் வரை வாழட்டும்” என்று ஆசி வழங்கினார்.

அடுத்தது ஏழு அம்புகள், பீஷ்மரின் மார்பில் பாய்ந்தது. அர்ச்சுனனின் அம்புகள் பீஷ்மரின் உடலெங்கும் தைத்தன. பீஷ்மர் நிலை குலைந்தார். துரியோதனன் மாவீரரான பீஷ்மரின் உடல் அர்ஜுனனின் அம்புகளால் துளைக்கப்படுவதை கண்டு திகைத்து நின்றான். முப்பத்தி முக்கோடி தேவர்களும் ஸ்தம்பித்து நின்றனர். தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேரிலிருந்து பீஷ்மர் சாய்ந்த போது மலர் மழை பொழிந்தனர்.

தேரில் இருந்து சாய்ந்த பீஷ்மரை கண்ட அர்ஜுனன் மனம் நொந்தான். தன் காண்டீபத்தை கீழே போட்டான். போர்களமே அதிரும்படி “பிதாமகரே என்ன காரியம் செய்தேன் நான். பரந்தாமா!!! இந்த கொடிய செயல் செய்வது தான் என் விதியா? இதற்காகவா நான் வில் வித்தை பயின்றேன்? இத்தகைய கொடிய செயலை என்னை செய்ய வைப்பது தான் உன் லீலைகளா? இது தான் உன் தர்மமா?” என்று கதறி அழுதான். கிருஷ்ணரை கட்டி தழுவி அவர் மார்பில் சாய்ந்து ஆறுதல் தேடினான்.

“பீஷ்மா உன் மரணத்திற்கு நானே காரணமாக இருப்பேன்” என்று கடந்த பிறவியில் அம்பையாக சபதம் செய்த சிகண்டியின் சபதமும் நிறைவேறியது.
இரு தரப்பாரும் பீஷ்மரின் வீழ்ச்சிக் கண்டு திகைத்தனர். கீழே வீழ்ந்த வீர பீஷ்மரின் உடல் தரையில் படவில்லை. உடம்பில் தைத்திருந்த அம்புகள் உடல் பூமியில் படாது தடுத்தன. அவரைக் கௌரவிக்க தன் தாயாகிய கங்காதேவி பல ரிஷிகளை அனுப்பினாள். அன்னப்பறவை வடிவம் தாங்கி அவர்கள் பீஷ்மரிடம் வந்து பணிந்து சென்றனர். அவர் செய்த புண்ணிய காலம் வரை உயிருடன் இருக்கத் தீர்மானித்திருந்தார். இப்படி மரணத்தைத் தள்ளிப்போடும் வரத்தை தந்தை சாந்தனுவிடமிருந்து வரமாக பெற்றிருந்தார்.

அவர் உடல் பூமியில் படவில்லை என்றாலும். தலை தொங்கி கொண்டிருந்தது. அருகில் இருந்தோர் தலயணைக் கொணர்ந்தனர். ஆனால் அவற்றை விரும்பாத பீஷ்மர் அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் மூன்று அம்புகளை வில்லில் பொருத்தி வானத்தில் செலுத்தினான். அவை நுனிப்பகுதி மேலாகவும், கூர்மையான பகுதி தரையில் பொருந்துமாறும் அமைந்து பீஷ்மரின் தலையைத் தாங்கின. பீஷ்மர் புன்னகை பூத்தார். கடும் போர் புரிந்த பீஷ்மருக்கு தாகம் எடுத்தது. பல மன்னர்கள் தண்ணீர் கொணர்ந்தனர். பீஷ்மர் மீண்டும் ஒரு முறை அர்ச்சுனனை நோக்கினார். குறிப்புணர்ந்த அர்ச்சுனன், அம்பு ஒன்றை பூமியில் செலுத்தினான். தன் தாயாகிய கங்கா தேவியின் அருளால் கங்கை மேலே பீரிட்டு வந்தது. கங்கை மைந்தன் அந்த நீரைப் பருகினார்.

பீஷ்மர் பின் துரியோதனனைப் பார்த்து “அர்ச்சுனனின் ஆற்றலைப் பார்த்தாயா? தெய்வ பலம் பெற்றவன் இவன். இவனிடம் சிவனின் பாசுபதக் கணையும் உள்ளது. விஷ்ணுவின் நாராயணக் கணையும் உள்ளது. அது மட்டுமின்றி அனுமனின் ஆற்றலைப் பெற்ற பீமனின் வல்லமையும் உனக்குத் தெரியும். இப்போதேனும் நீ சமாதானமாய் போய் விடு. அவர்கள் நாட்டை அவர்களிடம் ஒப்படைத்து விடு. இப்போர் என்னுடன் முடியட்டும்'” என்றார். அந்த சூழ்நிலையிலும் பீஷ்மரின் அறிவுரையை துரியோதனன் ஏற்கவில்லை.

எல்லோரும் பிரிந்து சென்றதும்..நள்ளிரவில் கர்ணன் ஓடிவந்து அவர் பாதங்களில் வீழ்ந்து அழுதான். “ராதையின் மைந்தனான நான்..சில சமயங்களில் தங்களுக்கு மரியாதைத் தர தவறிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கதறி அழுதான்.

அது கேட்ட பீஷ்மர் “கர்ணா..நீ ராதையின் மகன் அல்ல. குந்தியின் மைந்தன் என்று எனக்கு முன்பே தெரியும். சூரிய குமரன் நீ. இதை வியாசர் எனக்குக் கூறினார். காரணமின்றி நீ பாண்டவர்களை பகைத்ததால் நானும் உன்னிடம் கோபமாக நடந்துக் கொண்டேன். பாண்டவர்கள் உன் தம்பியர். நீ அவர்களுடன் சேர்ந்து தருமத்தைப் போற்று” என்றார்.

கர்ணன் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை. “துரியோதனனுக்கு எதிராகப் போர் புரிவதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.மன்னியுங்கள்” என்றான். “கர்ணா..அறம் வெல்லும்.நீ விரும்பியப்படியே செய்” என்று கூறிவிட்டு நித்திரையில் ஆழ்ந்தார் பிதாமகன்.

குருக்ஷேத்திர போரின் மிகப்பெரிய இழப்பாகவும், தீர்க்க முடியாத சோகமாகவும் அமைந்தது பீஷ்மரின் வீழ்ச்சி. பீஷ்மர் தலைமையில் கௌரவர்கள் களமாடிய கடைசி நாள் இது தான். பீஷ்ம பருவம் இத்துடன் முடிந்துவிட, அடுத்தநாள் துரோணர் தலைமை பொறுப்பை ஏற்றார். துரோண பருவம் என்று அழைக்க படும்.

பீஷ்மரின் வீழ்ச்சியோடு அன்றைய நாள் போர் முடிவிற்கு வந்தது.



Mahabharatha poar parriyu athil amaikkappatta viyuukangkal | மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்களும்

மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்களும்


வியாசர் இயற்றிய‌ மகாபாரதத்தில் பாண்டவர்க‌ளுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போரில், இந்த இரு அணிகளுக்கும் தலைமை ஏற்று தத்தமது படைகளைத் தற்காத்துக் கொள்வதற்கும், எதிரிப் படைகளை தாக்கி அழிப்பதற்கும் பல்வேறு வகையான‌ சிறப்பு தோற்றத்தில் அவரவர் ப‌டைகளைக் கொண்டு போரில் வெற்றி பெற பலவிதமான வியூகங்கள் அமைத்துப் போரிட்டனர்.

40 லட்சம்பேர் பங்குபெற்ற 18 நாட்கள் நடந்த மிகப்பிரமாண்டமான மகாபாரதப்போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்கள் பற்றியும் தெரிந்து
கொள்ளுங்கள்....
வியூகம் என்பது படைகளின் அமைப்புக்களை குறிக்கும். அந்த வியூகங்களின் பெயர்களை கீழே பட்டியலிடப்ட்டுபள்ளன.
.
1.கிராஞ்ச வியுகம்/நாரை வியூகம் (Heron formation)
2.மகர வியுகம்/முதலை வியூகம் (Crocodile formation)
3.கூர்ம வியுகம்/ஆமை வியூகம் (Tortoise or Turtle formation)
4.திரிசூலம்  வியுகம் (Trident Formation)
5.சக்கர வியுகம் (Wheel or Discus Formation)
6.கமலா வியுகம் or பத்மாவியுகம் or பூத்த தாமரைமலர் வியூகம் (Lotus Formation)
7.கருட வியுகம் (Eagle Formation)
8.ஊர்மி வியுகம் / கடல் அலைகள் போன்ற வியூகம் (Ocean Formation)
9.மண்டல வியுகம்/ வான் மண்டல வியூகம் (Galaxy Formation)
10.வஜ்ர வியுகம் / வைரம் /வஜ்ராயுத (இடிமுழக்க)போன்ற வியூகம் (Diamond or Thunderbolt Formation)
11.சகட வியுகம் / பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம் (Box or Cart formation)
12.அசுர வியுகம் (Demon Formation)
13.தேவ வியுகம்(Divine Formation)
14.சூச்சி வியுகம் / ஊசி போன்ற வியூகம் (Needle Formation)
15.ஸ்ரிங்கடக வியுகம் / வளைந்த கொம்புகள் போன்ற வியூகம் (Horned Formation)
16.சந்திரகல வியுகம் / பிறை சந்திர வடிவ வியூகம் (Crescent or Curved Blade Formation)
17.மலர் வியுகம்/ பூ மாலை போன்ற வியூகம் (Garland Formation)
18.சர்ப வியுகம் (Snake Formation).....

மகாபாரதத்தில், குருசேத்திரப் போரின் போது பாண்டவர் தரப்பில் 7 அக்குரோணி படைகளும், கௌரவர்கள் தரப்பில் 11 அக்குரோணி படைகளுமாக 18 அக்குரோணி படைகள் பங்கெடுத்தது.

ஒரு அக்குரோணி என்பது 21870 தேர்களையும், 21870 யானைகளையும், 65610 குதிரைகளையும், 109350 படை வீரர்களையும் உள்ளடக்கியது படைப்பிரிவுகளின் கணக்கு படைப்பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகின்றன:

ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவு, ஒரு பட்டி எனப்படும். 
3 பட்டிகள் கொண்டது
1 சேனாமுகம்
3 சேனாமுகங்கள் கொண்டது
1 குல்மா
3 குல்மாக்கள் 1 கனம்
3 கனங்கள் 1 வாகினி
3 வாகினிகள் 1 பிரிதனா
3 பிரிதனாக்கள் 1 சம்மு
3 சம்முக்கள் 1 அனிகினி
10 அனிகினிக்கள்
1 அக்குரோணி

குருசேத்திரப்போர் படை விபரங்கள் குருசேத்திரப் போரில் கௌரவர்களுக்குச் சார்பாக அத்தினாபுரத்துப் படைகளும் அவர்களுக்கு ஆதரவான பிற படைகளுமாகப் 11 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலும், பாஞ்சாலம், விராடம், போன்ற பல்வேறு அரசுகளின் படைகளை உள்ளடக்கிய பாண்டவர்களுக்குச் சார்பான 7 அக்குரோணி படைகள் ஒருபுறத்திலுமாகப் போரிட்டன.

கௌரவர் தரப்புப் படைகள் துரியோதனன் தரப்பில் போரிட்ட படைகள்:
பாகதத்தன் படைகள் - 1அக்குரோணி
சல்யனின் மதுராப் படைகள் - 2 அக்குரோணிகள்
பூரிசுவரர்கள் - 1 அக்குரோணி

கிருதவர்மன் (கிருட்டிணனின்
நாராயணிப் படைகள்) - 1அக்குரோணி
சயத்திரதன் படைகள் - 1அக்குரோணி
காம்போச அரசன்
சுதக்சினனின் படைகள் - 1 அக்குரோணி
விந்தன், அனுவிந்தன் என்போரின் அவாந்திப்படைகள் - 1 அக்குரோணி ஐந்து கேகய சகோதரர்
படைகள் - 1 அக்குரோணி
அத்தினாபுரத்துப் படைகள் - 3அக்குரோணி
பாண்டவர் தரப்புப் படைகள் விருஷ்னி வம்சத்துச்
சாத்யகியின் படைகள் - 1அக்குரோணி

நீலனின் மகிசுமதிப் படைகள் -1 அக்குரோணி
சேதிசு அரசர்
திருட்டகேதுவின் படைகள் - 1 அக்குரோணி
சராசந்தனின் மகன்
சயத்சேனனின் படைகள் - 1
அக்குரோணி
துருபதனின் படைகள் - 1
அக்குரோணி
மத்சய அரசன் விராடனின்
படைகள் - 1 அக்குரோணி
திராவிட அரசர்களின் படைகள்
(சோழரும் ,பாண்டியரும்) - 1
அக்குரோணி......
தற்போதைய
கணக்குப்படி பாண்டவர்கள்
படையில்7 அக்குரோணி
(15,30,900 படைகளும்)
கௌரவர் படையில்11
அக்குரோணி
(24,05,700 படைகளும்)
இருந்தன.




மகாபாரத்துல யுத்தம் ஆரம்பிக்கும் முன்பு அபிமன்யூக்கு திருமணம் நடக்கும்.

மகாபாரத்துல யுத்தம் ஆரம்பிக்கும் முன்பு அபிமன்யூக்கு திருமணம் நடக்கும். அப்போது பாண்டவர்களின் பக்கம் எத்தனை அரசர்கள் உதவியாக இருக்க போகிறார்கள் என்பதை அந்த திருமண நிகழ்வை வைத்து தான் முடிவுக்கு வர முடியும் என்ற கணக்கில் பாண்டவர்கள் காத்திருந்தனர்.

சல்லியர் மிகு‌ந்த பலம் வாய்ந்த ஆளுமையாக மகாபாரத்தில் வலம் வருபவர். அவர் உறுதியாக பாண்டவர்கள் பக்கம் தான் நிற்பார் என்று பாண்டவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தனர். அப்போது தவறுதலாக வழிமாறி சல்லியர் எதிர் கட்சியான கெளரவர்கள் படையில் சேர வேண்டிய நிர்ப்பந்தம் ஆகிவிடும்.

இதனை விசாரிக்க சுருதகீர்த்தி (அர்ஜூனனுக்கும் திரெளபதிக்கும் பிறந்தவன்) அனுப்படுவான். சல்லியர் தங்கி இருக்கும் இடம் அடையவும் சுருதகீர்த்திக்கு புரிந்துவிடும் தாத்தா அவர்களின் பக்கம் தான் என்று. அங்கே இருக்கும் அசுவத்தாமனிடம் அதில் இருக்கும் சூது பற்றின விவரம் அறிய தன் கேள்வியை வைப்பான். எப்படி அவரை உங்களோட இணைத்தீர்கள் என்று.?

இங்கு தான் மாகாபாரத்தின் பல முடிச்சுகள் அவிழும் விதமாக அசுவத்தாமன் பதல் தருவார். (நான் சுருக்கமா எழுதிருக்கேன்)

"நாம் யார் மீது அளவு கடந்த நம்பிக்கை வைக்கிறோம் அவர்களை எப்போதும் நாம் சந்தேகத்திற்கிடமான இடத்தில் பொருத்தி பார்க்க மாட்டோம்.

உங்களின் நம்பிக்கைதான் எதிரிகளின் பலம் " என்று அசுவத்தாமன் சுருதகீர்த்திக்கு பதிலாக தருவார். ஒரு நிமிடம் ஆடிப்போகும் சுருதகீர்த்தி தன் தந்தையின் வாழ்நாள் எதிரியாக இருக்கும் அசுவத்தாமனை அந்த நேரத்து குருவாக பணிந்து சில நுணுக்கங்களை தெரிந்து கொள்வான்.

அசுவத்தாமன் வழியணுப்பும் போது சுருதகீர்த்தியை உச்சி முகர்ந்து இளம் வயது அர்ஜூனனை பார்ப்பது போல் என் முன் நிற்கிறாய் "நீ வாழி" என்று வாழ்த்துவான்.

இறுதிக் கட்ட பாரத போர் முடிந்த தருவாயில் அசுவத்தாமன் சற்றும் பழி வாங்க அஞ்சாத அதே சினத்துடன் எந்த சிரத்தின் மீது தன் கை வைத்து நல்லாசி வழங்கினானோ அதே கைகளால் உபபாண்டவர்களை தீயிட்டு கொல்வான்.

இப்ப இதுல இருந்து நாம எடுத்துக்க வேண்டியது
1:) மலை போல நம்பிய யாரையும் அலட்சியமாக விடக்கூடாது. எப்பவும் அவங்க மேல நம்ம பார்வை இருக்கணும். இல்லைன்னா எப்பவாவது கோமாளி ஆயிருவோம்.

2:)  நம்மை ஆசீர்வதிக்கும் அத்தனை கரங்களும் நமக்கானது அல்ல அவ்வளவு தான்.




அரசே மனித ஆயுளை அறுக்கும் வாள்கள் ஆறு

ஒரு முறை திருதராஷ்டிரன், தன் சகோதரர் விதுரரிடம், ‘‘மனிதனுக்கு ஆயுள் நூறு வருடம் என்பர். எனினும் இதுவரை நூறு வருடங்களைக் கடந்த மனிதர்கள் எவரும் இல்லை என்றே தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டார்.

விதுரர் பதில் சொன்னார்: ‘‘அரசே மனித ஆயுளை அறுக்கும் வாள்கள் ஆறு.

1) கர்வம்.

மனிதர்களில் பலர், ‘இந்த உலகில் நானே கெட்டிக்காரன். மற்றவரெல்லாம் முட்டாள்!’ என்று நினைக்கிறார்கள். ஒருவனுக்கு கர்வம் ஏற்பட்டால் கடவுள் சும்மா இருக்க மாட்டார். ஆகவே, கர்வம் இல்லாமல் இருக்க, தனது குற்றம் குறைகளைப் பார்க்க வேண்டும். பிறரிடம் நற்குணங்களையே பார்க்க வேண்டும்.
2) வாள்- அதிகம் பேசுவது.
தனக்குப் பேச விஷயங்கள் இல்லாதபோதும், வீண் பேச்சு பேசுபவன், வீண் வம்பை விலைக்கு வாங்குகிறான்.

3)வாள்- தியாக உணர்வு இன்மை.
அதீத ஆசையே மனிதனின் தியாக உணர்வைத் தடுக்கிறது. இதை உணர்ந்தால், தியாக உணர்வு தானே வரும்.

4) வாள்- கோபம்.
கோபத்தை வெல்பவனே உண்மையான யோகி. கோபம் வந்து விட்டால், தர்மம் எது? அதர்மம் எது என்பது தெரியாமல் போகிறது. விவேகம் இழந்து பாவங்களைச் செய்ய நேரிடுகிறது.

5) வாள்- சுயநலம்.
சுயநலமே எல்லா தீமைகளுக்கும் காரணம். சுயநலம் கொண்டவன் தனது காரியத்துக்காக பாவம் செய்யத் தயங்குவதில்லை.

6) வாள்- துரோகம்.
இந்த உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிது. அப்படிப் பட்டவர்களுக்குத் துரோகம் செய்வது தவறு.
*இந்த ஆறு விஷயங்களிலிருந்தும் ஒருவன் விலகி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் நூற்றாண்டை நிறைவு செய்வான்.’’*


Drona received his thumb as a gift from Ekalaiva | துரோணர் ஏகலைவனிடம் கட்டைவிரலை குரு தட்சணையாக பெற்றதில்


#துரோணர் ஏகலைவனிடம் கட்டைவிரலை குரு தட்சணையாக பெற்றதில்- கிருஷ்ணரின் பங்கு பற்றிய பதிவு.


ஏகலைவன் துரோணரையும் துரோணர் ஏகலைவனையும் காப்பாற்றி கொண்டதில் , பகவான் கிருஷ்ணரின் செயல் பின்னணியில் உள்ளது. அதை பற்றி தெரிந்து கொள்வோமா!. உண்மையில் நடந்தது என்னவெனில், ஏகலைவனிடம் இருந்து குருதட்சணையாக கட்டைவிரலை துரோணர் பெற்றது. துரோணரின் நிலை பரிதாபத்திற்குரிய ஒன்றாகும்.

ஆம், துரோணர் அரச குடும்பத்து ஆசிரியர், எல்லா விதத்திலும் அரசனுக்கு கட்டுபட்டவர், அவனை மீறி அவர் ஏதும் செய்துவிட முடியாது. சுருக்கமாக சொன்னால் அரச குடும்பத்து அடிமைகளில் அவரும் ஒருவர். அந்நாளில் ராஜவம்சத்திற்கும் மற்றும் சத்திரிய வம்சத்திற்கும் மட்டுமே சில பயிற்சிகள் கற்றுகொடுக்கபடும்.

எல்லோரும் எல்லாம் பயின்றால், அரசுக்கு எதிரான சக்திகள் தலையெடுக்கும் எனும் தந்திரம் அது. அவ்வகையில் பாண்டவரும், கவுரவரும் பயில்கின்றார்கள், தேரோட்டி மகனான கர்ணனும் பரசுராமரிடம் சத்திரியர் என பொய்யுரைத்து வில்வித்தை பயில்கிறான்.

ஏகலைவனின் குலத்தொழில் வேட்டையாடுதல்.

ஏகலைவன் குடும்பத்தினர் பரம்பரை பரம்பரையாக வேட்டையாடுவதால், ஏகலைவன் இயற்கையிலேயே ,இலக்கை நோக்கி துல்லியமாக அம்பு எய்யும் திறனையும், துரோணர் தனது சீடர்களுக்கு பயிற்சி அளிக்கும்போது, ஏகலைவன் மனதால் துரோணரிடமிருந்து பெற்ற ஞானமும், ஒருங்கே ஒன்று சேர மிகச் சிறந்த வில்லாளனாக உருவெடுத்திருப்பான்.

பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் அரங்கேற்றம் முடிந்தபின்புதான், ஏகலைவன் என்றொருவன் இருப்பதும், அவன் வில்வித்தையில் அர்ஜூனனையும் மிஞ்சி நிற்பதும் அறியபடுகின்றது. அரசவாரிசுகளையும் மீறி ஒரு வேட்டுவன் வித்தையில் மிஞ்சி நிற்பது , அரசகுடும்பத்துக்கும் நல்லதல்ல .நாட்டுக்கும் நல்லதல்ல, அவன் எதிரிகையில் வீழ்ந்தால் முடிந்தது கதை.

நாட்டு மக்களை சேர்த்து கலகம் செய்தால் இன்னும் மோசம், அதற்காக வேட்டுவனை அரண்மனைக்கும் அழைக்க முடியாது .அதற்கு அரசு விதிமுறைகளில் வழியில்லை.

*"இப்படி ஒரு சிக்கல் இருக்க, ஏகலைவனை அரசவையினரும் துரோணரும் சந்திக்கின்றனர் .
ஏகலைவனின் வித்தையை அர்ஜுனனும் பாராட்டுகின்றான்.."*
*"அர்ஜூனனை மீறி ஜொலித்து நிற்கின்றான் ஏகலைவன், அவனை விட்டுவைப்பது நல்லதல்ல என அரசவை முடிவெடுக்கின்றது."*
*"ஏகலைவன் குரு யார் என கேட்க, அவன் துரோணர் சிலையினை காட்டுகின்றான்."*
*"ஆம் ! துரோணரை மனதால் வணங்கி, வளர்ந்து, தானே வித்தை பயின்றவன் ஏகலைவன்*
*"எல்லோரும் ஏகலைவன் துரோணரின் சிலையை காட்டியதும் அதிர்கின்றனர்.
*"காரணம் துரோணர் அரசகுடும்பத்துக்கு மட்டுமே ஆசிரியர்.."*
*"அப்படியானால் இவனை இவ்வளவு திறமையாக அவர் உருவாக்க காரணம் என்ன எனும் சந்தேக கேள்விகள் எழுகின்றன‌"*
*"துரோணர் அரச குடும்பத்துக்கு எதிராக, ஒருவனை ரகசியமாக வளர்ப்பதாக சந்தேகம் அவர்மீதே படர்கின்றது,.."*
*"அரசகுடும்பத்துடன் உறவாடுவது, ராஜநாகத்துடன் உறவாடுவதற்கு சமம்"*
*"சிக்கலில் தவிக்கின்றார் துரோணர், ராஜதுரோக குற்றசாட்டு அவர்மேல் சுமத்தபடும் ஆபத்து நெருங்கிற்று, இதன் சூத்திரதாரி கிருஷ்ணர்"*
*"அவரை காக்கும் ஒரே நம்பிக்கையாக ஏகலைவன் நிற்கின்றான்."*
*"அவன் நிச்சயம் துரோணரின் பெருமைக்கு உரியவன். துரோணரின் மாபெரும் மகிழ்ச்சியும் சாதனையும் அவன்."*
ஆனால் விதி?
*"துரோணருக்கு அவனை விடவும் முடியவில்லை. எடுக்கவும் முடியவில்லை, தவிக்கின்றார்."*
*"ஆம் ! அரச கட்டளை மீறி அவர் என்ன செய்யமுடியும்?."*
"*அவனை கொல்லவேண்டிய இடம் அது, ஆம் அரசனின் கோபம் அவனை முதலில் கொல்லும் துரோணரை அடுத்து கொல்லும், ராஜதுரோகம் எனும் குற்றத்துக்கான தண்டனை அது."*
*"யோசித்தார் துரோணர், அந்த சீடன் அழிவதில் அவருக்கு விருப்பமில்லை. அவனை பலமிழக்க வைத்தால் போதுமென ,குருதட்சனையாக கட்டைவிரலை கேட்கின்றார்."*
*"குரு கேட்டால் தலையை கொடுக்கவும் துணியும் ஏகலைவன் ,கட்டை விரலை மகிழ்வாய் கொடுத்து பலமிழக்கின்றான்."*
*"இனி அவனால் வில்வித்தை அவ்வளவு துல்லியமாக செய்யமுடியாது."*
*"குருவுக்கு சிஷ்யன் கொடுக்கும் காணிக்கை அவரை காக்கும் என்பது சாஸ்திர நம்பிக்கை ."*
*"கண்ணீரோடு அவனின் கட்டை விரலை , தாயத்தில் வைத்து கழுத்தில் கட்டிகொள்கின்றார் துரோணர்."*
*"அந்த காட்சி உருக்கமானது, கண்ணீர் வரவழைக்கும் காட்சி அது. துரோணருக்கு அவனை போல மாணவன் இல்லை, நல்ல ஆசிரியனுக்கு சிறந்த மாணவனை விட பெருமை எது?
ஆனால் விதி?
*"அப்பக்கம் ஏகலவைனுக்கோ குருநாதருக்காக வித்தையினையே கொடுத்துவிட்ட தியாக மகிழ்ச்சி, தன் கட்டைவிரல் அவர் கழுத்தில் இருப்பதில் அளவற்ற மகிழ்ச்சி."*
*"தானே அவரின் மார்பில் சாய்ந்ததாக மகிழ்ந்தான், துரோணர் அரண்மனை திரும்பினார்."*
*'ஆம்! துரோணர் அவன் உயிரை காத்தார், அவன் துரோணர் உயிரை காத்தான்."*
*"காலங்கள் ஓடின பாண்டவருக்கும், கௌரவருக்கும் யுத்தம் நெருங்கிற்று."*
*"ஒவ்வொருவரின் பலத்தையும் அளந்த கிருஷ்ணர் ,துரோணர் பக்கமும் வருகின்றார், ஏற்கனவே கட்டை விரல் வாங்க காரணமே அந்த மாயவனே!"*
*"வில்வித்தை ஒன்றுக்காக கர்ணணையே அரசனாக்கி கைக்குள் வைத்திருக்கும் துரியன் ."*
*"ஏகலைவன் கிடைத்தால் விடுவானா? "*
*"கிருஷ்ணரின் கவலை கிருஷ்ணருக்கு"*
*"துரோணர் கழுத்தில் இருப்பது உன்னதமான சிஷ்யனின் காணிக்கை, அது துரோரணை சாகவிடாது , அது இருக்கும்வரை துரோணர் வீழமாட்டார்"*
என்ன செய்யலாம்?
*"அதே வித்தைதான், ஏழை அந்தணராக மாறிய கிருஷ்ணர் யாசகனாய் வந்தார் , தன் மகளுக்கு திருமணமென்றும் ஒரு தாலிக்கும் வழியில்லை எனவும் அழுது அந்த தாயத்தையே உற்று பார்த்தார்."*
*"குறிப்பறிந்த துரோணர் இதைவிட பெரும் தாலி இல்லை, இது ஆசிமிக்கது என அதை வழங்கினார்,"*
*"துரோணரின் கழுத்தில் இருந்த அந்த பெரும் கவசத்தை அகற்றினார் கிருஷ்ணர்"*
*"அதன்பின் எல்லாம் முடிந்தது."*
*"சாகும் வேளையில் துரோணர் முன் தன் புல்லாங்குழலை காட்டினார் கிருஷ்ணர். அதில் அந்த விரலை பதித்திருந்தார்."*
*"அதை கண்டவுடன் துரோணருக்கு எல்லாம் விளங்கிற்று."*
*"மெல்ல பேசினார் கிருஷ்ணர். அவர் குரல் அந்த ஞான தத்துவத்தை போதித்தது."*
*"துரோணாச்சாரியே.. சிஷ்யர்களில் எல்லாம் உயர்ந்தவன் ஏகலைவன், ஆசிரியரில் எல்லாம் உயந்தவன் நீங்கள்."*
*"உங்களுக்குள்ளான உணர்வும் புரிந்துணர்வும் பாசமும் எந்த குருவுக்கும் சீடனுக்கும் அமையாது."*
*"அவனை அன்றே கொன்றிருந்தால், நீங்கள் பாவியாயிருப்பீர்கள் விட்டிருந்தால் அவனை நீங்களே வளர்த்தீர்கள் என பழிசுமந்திருப்பீர்கள் ,
*"அவன் பாண்டவர் பக்கம் வந்தாலும் கௌரவர் பக்கம் வந்தாலும் பழி உமக்கே*"
*"உம் மாணவர்களின் அர்ஜூனன் பெரும் அடையாளம். ஆனால் நீ நேரடியாக பயிற்றுவித்தாய்."*
*"ஆனால் உன்னை மனதால் வணங்கி வளர்ந்த ஏகலைவனே அவனை விட உயர்ந்தவன் ."*
*"ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதன் அடையாளம் ஏகலைவன்."*
*"அங்கு உன் உயிரை அவன் காத்து மாணவனின் கடமையினை செய்தான்,."*
*"நீங்கள் அவன் உயிரை காப்பாற்றி ஆசிரியனுக்குரிய கடமையினை காத்தீர்கள்."*
*"நீங்கள் கேட்டவுடன் கொடுத்த அந்த விரல், அவனின் தியாகத்துக்கும் குருசிஷ்ய பாவத்துக்கும் என்றும் எடுத்துகாட்டாய் இருக்கும்."*
*"உங்கள் பெயர் இருக்குமிடமெல்லாம் அவனும் இருப்பான்..."*
*"மேலும் துரோணரிடம் புத்திர பாசம் மோகத்தில் இருந்து விடுபடவும், தர்ம வழியில் நடக்கவும் உயிரை தியாகம் செய்ய பணிக்கிறார் கிருஷ்ணர் ."*
*"அந்த புல்லாங்குழலின் இருந்த விரலை நோக்கியபடியே உயிர்நீத்தார் துரோணர்"*

ஆம் ! நல்ல மாணவன் ஆசிரியர் வரலாற்றில் நிலைப்பான் என்பதுதான் ஏகலைவன் வாழ்வின் தத்துவம். மகாபாரதத்தின் ஒவ்வொரு காட்சியும் சிலாகிப்பானவை, வெற்று பாத்திரம் என்றோ தேவையற்ற திணிப்பு என்றோ எதுவுமில்லை. ஆயிரம் அர்த்தமும் உருக்கமும் தியாகமும் நிறைந்த காட்சி ஏகலைவன் துரோணர் காட்சி, அது சொல்லும் தத்துவம் ஏராளம்.

ஏகலைவன் கதை போல கொண்டாடபட வேண்டிய ஆயிரம் கதைகள் உண்டு. பெரும் அர்த்தமும் ஞானமும் பெற அவற்றையெல்லாம் படிக்க வேண்டும். நமது நாட்டின் பெரும் அறிவார்ந்த ஞான புதையலை மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு விளக்க வேண்டும். நம் பாரம்பரியத்திற்கு ஏற்றவாறு நடக்கவேண்டிய பொறுப்பும் கட்டுப்பாடும் எக்காலத்திற்கும் நமக்கு உண்டு என்பதை, நாம் நினைவில் கொள்வோமாக!.

Drona-Ekalaiva


விதுரர் கூறுகிறார் , யாருக்கெல்லாம் தூக்கம் வராது?

விதுரர் கூறுகிறார் , யாருக்கெல்லாம் தூக்கம் வராது?

தூக்கம் வராமல் தவிப்போரும் உளர். உணவு இல்லாதவன் தூங்கமாட்டான்; கெட்ட நடத்தை உள்ளவனுக்கு தூக்கம் வராது; திருடன் தூங்கமாட்டான்; ஏராளமான உணவு உண்டவனுக்கு தூக்கம் வராது; நோயுற்றவன் தூங்கமாட்டான்;தீயவனுக்கு தூக்கம் வராது. பிறர் மனைவியை அடைய முயற்சிப்பவனுக்கும் காமுகனுக்கும் தூக்கம் வராது;

நல்லவர்களை விரோதித்துக் கொண்டவனுக்குத் தூக்கம் வராது; பண்பில்லாதவளை மனைவியாகக் கொண்டவனுக்குத் தூக்கம் வராது; கெட்ட எண்ணங்கள் கொண்டவனுக்குத் தூக்கம் வராது; நல்ல பிள்ளைகளைப் பெறாதவனுக்குத் தூக்கம் வராது.. மன்னிக்கும் தன்மையே வலிமை... வாழ்க்கைக்கு வழிகாட்டும் விதுர நீதி.

 விதுர நீதி கூறும் வாழ்க்கையின் தத்துவம்!

ஒருவன், ஒரு பெருங் காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழைய முடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான துஷ்ட மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்து போய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான். அப்போது மிகவும் கோரமான அவ லட்சணமான - யாவரும் வெறுக்கக் கூடிய பெண் ஒருத்தி ஓடி வந்து, தன் இரு கைகளாலும் அந்த மனிதனைக் கட்டிப் பிடித்தாள். 

அவளைப் பார்த்துப் பயந்துபோன அந்த மனிதன், திமிறிக் கொண்டு இன்னும் வேகமாக ஓடினான். அவ்வாறு ஓடும் போது, புற்களும் காட்டுக்கொடிகளும் மூடி மறைத்திருந்த பாழுங்கிணறு ஒன்றில் தொபுக்கடீரென விழுந்தான். நல்லவேளையாக, கிணற்றுக்குள் நெருங்கி வளர்ந்திருந்த கொடிகளைப் பிடித்துத் தொங்கி, தப்பித்தான். அவன் மனம் தடக் தடக் என்று பயங்கரமாக அடித்துக் கொண்டது. 

அப்பாடா! எப்படியோ தப்பிவிட்டோம்! என்ற எண்ணத்தில், கிணற்றில் தொங்கிய மனிதன் கீழே பார்த்தான். அங்கே... அவன் காலடியில் பெரிய பாம்பு தலையைத் தூக்கியபடி பார்த்துக் கொண்டிருந்தது. தொங்கிக் கொண்டிருந்த மனிதன், அந்தப் பாம்பைப் பார்த்ததும் மேலும் நடுங்கினான். எப்படியாவது மேலே போய்விடலாம் என்ற எண்ணத்தோடு தலை உயர்த்தி மேலே பார்த்தபோது, கிணற்றின் மேலே இன்னொரு ஆபத்து காத்துக் கொண்டிருந்தது. ஆறு முகங்களும் பன்னிரண்டு கால்களுமாக, பல வண்ணங்களுடன் காணப்பட்ட ஒரு பெரிய விசித்திர யானைதான் அது.

அந்த மனிதன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்க... கரக்... கரக்... என்று சத்தம் கேட்டது. பார்த்தால்... அவன் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த வேர்களைக் கறுப்பும் வெளுப்புமான எலிகள் கடித்து, அறுத்துக் கொண்டிருந்தன. இவ்வளவு சோதனைகளும் ஒருபுறம் இருக்க, அவன் சற்றும் எதிர்பார்க்காத இன்னொன்றும் நடந்தது. ஆம்... உச்சியில் இருந்த தேன்கூடு ஒன்று திடீரென்று சிதைந்து, அதில் இருந்து ஒரு சில தேன் துளிகள், ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருந்த அந்த மனிதனின் நாவில் விழுந்தன. அவ்வளவுதான்... அனைத்து துயரங்களையும் மறந்தவன், தேன் துளிகளைச் சுவைக்க ஆரம்பித்து விட்டான். 

என்னய்யா மனுஷன் அவன்! பைத்தியக்காரன்! தேனைச் சுவைக்கும் நேரமா இது! அந்த மனிதன் வேறு யாருமல்ல; நாம்தான்! கதையை மற்றொரு முறை நன்றாகப் படியுங்கள். அது சொல்லும் எச்சரிக்கை புரியும்.

கதையில் வரும் காடு என்பது சம்சாரக்காடு. பிறப்பும் இறப்பும் நிறைந்தது. காட்டில் உள்ள துஷ்ட மிருகங்கள் பலவிதமான நோய்களைக் குறிக்கும். அந்த நோய்களில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக நாம் படாத பாடுபடுகிறோம். அப்போது அனைவராலும் வெறுக்கப்படும், கோரமான பெண் ஒருத்தி கட்டிப் பிடிக்கிறாள் என்று கதையில் பார்த்தோம் அல்லவா? 

அந்தப் பெண்- முதுமை, கிழத்தனம் என்பதன் குறியீடு. முதுமை வந்து நம்மைத் தழுவிக் கொள்கிறது. அதில் இருந்தும் தப்பிப் பிழைத்து ஓடலாம் என்று பார்க்கிறோம். ஆனால், உடம்பு நம்மை விடமாட்டேன் என்கிறது. கிணறு என்பது உடம்பைக் குறிக்கும். செயலற்றுப் போய் அதில் விழுந்து விட்டோம். கிணற்றில், கீழே இருக்கும் பெரும் பாம்பு எமன். அவன் எல்லாப் பிராணிகளின் உயிரையும் வாங்கும் அந்தகன். மனிதன் பிடித்துக்கொண்டு தொங்குவதாகச் சொன்ன வேர்கள், நமக்கு உயிர் வாழ்வதில் இருக்கும் ஆசைகள். அதனால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆறு முகங்கள், பன்னிரண்டு கால்கள் உள்ள யானை என்று ஒன்றை பார்தோமே.. 

அந்த யானை என்பது ஓர் ஆண்டு; ஆறு முகங்கள் என்பது (2 மாதங்களைக் கொண்ட) ஆறு விதமான பருவங்களைக் குறிக்கும்; பன்னிரண்டு கால்கள் என்பது பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கும். மனிதன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களை அறுக்கும் கறுப்பு - வெளுப்பு எலிகள், இரவையும் பகலையும் குறிக்கும். இரவும் பகலும் ஆன காலம் நம் வாழ்நாட்களை அரித்துக்கொண்டிருக்கின்றன.

தேன் துளிகள் என்பது காமச்சுவை. பலவிதமான விஷயங்களிலும் ஈடுபட்டு ஏதாவது சந்தோஷம் துளி அளவு கிடைத்தாலும் போதும்; அனைத்தையும் மறந்து விடுகிறான் மனிதன். அதாவது.. தப்பவே முடியாத நோய்கள், முதுமை, காலம் போன்றவற்றில் இருந்தெல்லாம் தப்பி விட்டதாக நினைத்து, சின்னஞ் சிறு சந்தோஷங்களில் நம்மை மறந்து இருக்கிறோம். கதை வடிவாகச் சொல்லி இவ்வாறு நம்மை எச்சரிக்கிறது, விதுர நீதி. நீதி நூல்கள் பல இருந்தாலும், அவற்றில் முதலிடம் பிடித்திருப்பது விதுர நீதிதான். அந்த அளவுக்கு மிகவும் உயர்ந்ததான நீதி நூல் இது.

அறம் 
அறம் எனப்படும் ஒழுக்கநெறி என்பது ஒருவர் சமூகத்தில் எவ்வாறு நடக்க வேண்டும் என்பது தொடர்பான பார்வைகளை குறிக்கிறது. இதை நல்லவை, தீயவை என்பன தொடர்பில் ஒரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகளின் தொகுப்பு எனலாம். ஒழுக்கநெறிகள் எல்லாச் சமுதாயங்களிலுமே ஒன்றுபோல இருப்பதில்லை. காலம், நம்பிக்கைகள், பண்பாடு என்பவற்றைப் பொறுத்து இவை வேறுபடுகின்றன. ஒழுக்கநெறிகள், சமூகம், மெய்யியல், சமயம், தனிமனிதரின் மனச்சாட்சிபோன்றவற்றால் வரையறுக்கப்படுகின்றன.

நீதி 
ஒழுக்கம் என்பது வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய முறைமை. திருக்குறள் இதனை அறத்தாறு [1] எனக் குறிப்பிடுகிறது. ஆற்றில் வெள்ளம் பள்ளத்தை நோக்கி ஓடும். உயிரினங்களுக்கு உதவிக்கொண்டே ஓடும். அது அடித்துக்கொண்டு வந்தவை வண்டலாகப் படியும். அது போல உயிரினங்களுக்கு உதவுவது அறம். ஓடும் மண்ணில் ஊறி ஊற்றுத் தெளிவு போல் வெளிப்பட்டு உதவுவது ஒழுக்கம். இந்த ஒழுக்கத்தைப் பிற்காலத் தமிழ் நீதி என்னும் சொல்லால் குறிப்பிடுகிறது.

நீதம் என்னும் வடசொல் வெண்ணெய்யைக் குறிக்கும். பாலில் வெண்ணெய் எடுப்பது போல வாழ்க்கைப் பாங்கில் அனுபவத்தில் திரட்டப்பட்ட நல்லாறு தான் நீதி ஆக , நீதி கருத்துக்களாக மாறுகிறது.

விதுர நீதி
மக்களுக்கு தனிமனித ஒழுக்கத்தை ,சமூக பாரம்பரிய கட்டுப்பாடுகளை அறிவுறுத்துவதற்காக பெரியோர்கள் கூறிய அறிவுரைகளை நீதி கருத்துக்கள் என்பார்கள். அறிவிற் சிறந்த மேலோர் சமூக மாற்றங்களுக்கு தகுந்தவாறு ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ள வேண்டிய தனிமனித ஒழுக்கத்தை, சமூக கட்டுப்பாடுகளை நீதிக் கருத்துக்களாக கூறியுள்ளார்கள். அப்படி ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ள வேண்டிய தனிமனித ஒழுக்கத்தை,

குருஷேத்திர போரை ஆரம்பிக்கும் முதல் நாள் இரவு தன் சகோதரன் திருதராஷ்டிரனுக்கு எடுத்துக் கூறிய நீதிக் கருத்துக்களே விதுர நீதியாக தொகுக்கப்பட்டன.

விதுரர் கூறிய அறிவுரைகள் இக்காலம் மட்டுமல்ல எக்காலத்திற்கும் உரியது.



கண்ணபிரான் மீது குற்றம் சாட்டினார் உதங்க முனிவர்.

மகாபாரதப் போர் முடிந்ததைத் தொடர்ந்து, கிருஷ்ணர் துவாரகைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் உதங்க முனிவர் எதிர்பட்டார். அவர் கண்ணனை வணங்கி, “நலமா?” என்று விசாரித்தார்.

“உலகில் எல்லாரும் நலமாக இருந்தால், நானும் நலமாகவே இருப்பேன்” என்று கூறினார் கண்ணபிரான். அதைக் கேட்டதும் உதங்கரின் குரலில் கோபமும் ஆதங்கமும் எட்டிப் பார்த்தன. “அது எப்படி எல்லோரும் நலமாக இருக்க முடியும். குருசேத்திரப் போரில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள். அதற்குத் தாங்களும் தானே காரணம்?” என்றார்.

கண்ணன் புன்னகை தவழும் முகத்துடன், “நான் யாருடனும் போரிடவில்லை. யாரையும் தாக்கவில்லை. பின் எப்படி இறப்புகளுக்கு நான் பொறுப்பாக முடியும்?. மேலும் பிறப்பும், இறப்பும் இயல்பானது என்பது உங்களுக்கு தெரியாதா?” என்று கேட்டார்.

“நீங்கள் போரிடாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் மனது வைத்திருந்தால் போரே நடைபெறாமல் தடுத்திருக்கலாம். ஒரு இறப்பு கூட இல்லாமல் தவிர்த்திருக்கலாம். இயல்பான இறப்பாக இருந்தால் சரி. ஆனால் இப்போது நடைபெற்ற இறப்பு அப்படியல்லவே!” என்று மீண்டும் கண்ணபிரான் மீது குற்றம் சாட்டினார் உதங்க முனிவர்.

அர்ச்சுனனுக்கு பகவத் கீதையை எடுத்துரைத்தது போல், உதங்கருக்கும் மற்றொரு கீதையை உபதேசிக்கும் படி ஆகிவிட்டது கண்ணனுக்கு. போருக்கு முன்பாக கவுரவர்களை சந்தித்து ராஜ்ஜியத்தில் பாதியை கொடுத்தால் போரை தவிர்த்து விடலாம் என்று தான் கேட்டுக் கொண்டது, அதற்கு கவுரவர்கள் சம்மதிக்காமல் இழிவு படுத்தியது, தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்காக இந்தப் போரை நிகழ்த்தியது என்பது வரை கூறி முடித்தார் கிருஷ்ணர்.

உதங்கருக்கு உண்மை புரிந்தது. “கண்ணா! என்னையும் மதித்து இவ்வளவு பெரிய விளக்கம் அளித்தீர்களே!” என்று கண் கலங்கினார். கண்ணனின் விளக்கத்தில் மெய்சிலிர்த்த உதங்கர், “உங்கள் விஸ்வரூப தரிசனத்தைக் காண வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

அதன்படியே தனது விஸ்வரூபத்தை காட்டி அருளினார் கண்ணன். மேலும் வேறு என்ன வரம் வேண்டும்? என்று விஷமமாகக் கேட்டார். “இதை விட வேறு என்ன வேண்டும்?” என்று நெஞ்சுருகி நின்ற உதங்கரிடம், விடாப்பிடியாக, வேறு ஏதாவது கேட்கும்படி கூறினார் கிருஷ்ண பகவான்.

அவரது வற்புறுத்தலால், “நான் வேண்டும் போது எனக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும்” என்று வரம் கேட்டார் உதங்கர். அவ்வாறே அருள்புரிந்து அங்கிருந்து சென்றார் கண்ணன்.

ஒரு முறை பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார் உதங்க முனிவர். அப்போது அவருக்குப் பயங்கரத் தாகம் ஏற்பட்டது. கரம் குவித்துக் கண்ணனை பிரார்த்தனை செய்தார்.

அப்போது அந்த வழியாக அருவறுப்பு கொள்ளச் செய்யும் தோற்றத்துடன், முகம் சுளிக்கும்படியாக ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர் தன் கையில் இருந்த குவளையை உதங்கரிடம் நீட்டி, “ஐயா! தாங்கள் தாகமாக இருப்பதாக நான் அறிகிறேன். 

இந்தத் தண்ணீரை அருந்தி உங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளுங்கள்!” என்று கூறினார். உதங்கரோ, எதிர்பட்டவரின் உருவத்தை கண்டு வெறுப்பு கொண்டார். “தண்ணீர் வேண்டாம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

அவரது மனம் மிகவும் சினம் கொண்டிருந்தது. “கண்ணா! நீ ஒரு குற்றவாளி. என்னை ஏமாற்றி விட்டாய். வரத்தைக் கொடுத்து விட்டு, அதனைப் பயன்படுத்த முடியாதபடி செய்து விட்டாய்!” என்று சத்தமாக கூறிக் கண்ணனை நிந்தனை செய்தார் உதங்கர்.

கண்ணன், உதங்கர் இருந்த பாலைவனத்திற்கு விரைந்து வந்தார். “முனிவரே! என் மீது உங்களுக்கு என்ன கோபம்?. நான் கொடுத்த வரத்தின்படி உங்களுக்குத் தண்ணீர் கிடைக்கும்படி செய்தேனே! தாங்கள்தானே அதனை வேண்டாம் என்று கூறி மறுத்தீர்கள்!” என்று கேட்டார்.

“கண்ணா! நீ பேச்சில் சாமர்த்தியம் காட்டுகிறாய். நான் கேட்ட தண்ணீரைக் கொடுத்தனுப்புவதற்கு உனக்கு வேறு யாருமே கிடைக்கவில்லையா? என்னை அவமதிப்பதற்காகவே அருவறுப்பு மிகுந்த ஒருவனிடம் தண்ணீரைக் கொடுத்து அனுப்பியிருக்கிறாய்!’ என்று ஆதங்கத்துடன் கூச்சல் போட்டார் உதங்க முனிவர்.

“என்னை ஏமாற்றி விட்டீர்கள் உதங்கரே! நீங்கள் பேதங்களைக் கடந்தவர், மேம்பட்டவர் என்று எண்ணியிருந்தேன். அனைத்தும் பொய்யாகப் போய்விட்டது” என்றார் கண்ணன்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் மவுனமானார் உதங்கர். “உங்களுடைய தாகத்தைத் தணிக்க, தண்ணீருக்குப் பதிலாக நான் அமிர்தத்தையே வழங்க முடிவு செய்திருந்தேன். அதை நிறைவேற்றும்படி இந்திரனை அழைத்து உத்தரவும் பிறப்பித்தேன். ஆனால், அவனோ தயங்கிய படியே அமிர்தத்தை அளிக்கும் அளவுக்கு உதங்கர் உயர்ந்தவரா?” என்று கேட்டான். 

நானோ அவர் மிகப்பெரிய ஞானி என்றுரைத்தேன். அதற்கு இந்திரனோ, அப்படியானால் அதை அவர் நிரூபிக்க வேண்டும் என்று கூறி அருவறுப்பு கொள்ளத்தக்க வடிவில் உங்களிடம் அமிர்தத்தை கொண்டு வந்து கொடுத்தான். உருவத்தில் வேறுபாடு காட்டி, கிடைக்க இருந்த அமிர்தத்தை இழந்து விட்டீர்கள் உதங்கரே!. அத்துடன் என்னையும் ஏமாற்றி விட்டீர்கள்!” என்று கூறி விட்டு அங்கிருந்து மறைந்தார் கண்ணன்.

தான் செய்த தவறை உணர்ந்து வருந்தியபடி தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தார் உதங்க முனிவர்.

பஞ்சவர்ணேஸ்வர் ஆலயம்.உறையூர்-

உதங்க முனிவர் தன்னுடைய மனைவியுடன் கங்கையில் நீராடிய போது, அவர் மனைவி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டார்.

உதங்க முனிவர் வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக இருந்தமையால், அவருக்கு மனைவியின் இறப்பு பற்றி தெரிந்தது. ஞானியாக இருந்தாலும் மனைவி இழந்தமையால் பித்து பிடித்தவரானார்.

பல இடங்களில் சுற்றித் திரிந்து பின்பு உறையூர் சிவலாயத்திற்கு வந்தார். இங்கு இறைவன் காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிகால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும்,

முதல் ஜாம வைர லிங்கமாகவும் மற்றும் அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் காட்சியளித்தார். இதனால் இத்தல மூலவருக்கு பஞ்சவர்ணேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.உதங்க முனிவருக்கு இறைவன் ஆடிப்பவுர்ணமியில் இந்த ஐந்த வண்ணம் காட்டியதால் இறைவனை ஆடிப்பவுர்ணமியில் தரிசிப்பது சிறப்பாகும்.



மகாபாரதம் இதை விட சுருக்கமாக சொல்ல முடியுமா?

மகாபாரதம் இதை விட சுருக்கமாக சொல்ல முடியுமா..! இது. என் மனதை தொட்ட ஒரு வரின் பதிவு

பாரதப் போர் – உண்மையில் யாருக்கிடையே நடைபெற்றது?

பதினெட்டு நாட்கள் நடைபெற்ற பாரதப் போரில் மக்கள் தொகையில் கிட்டதட்ட 80% ஆண்கள் இறந்துவிட்டனர் என்பதை அறிந்த வருண் என்கிற மாணவன், பாரதப் போர் நடைபெற்றதாக கூறப்படும் குருஷேத்ரத்திற்கு நேரில் சென்று பார்த்தான்.

‘கௌரவர்களும் பாண்டவர்களும் போரிட்ட ரத்த பூமியின் மீது தான் நாம் நிற்கிறோமா?

கிருஷ்ண பரமாத்மா இங்கே தான் பார்த்தனுக்கு பார்த்தசாரதியாக தேர் ஒட்டினாரா?’ பல்வேறு சந்தேகங்கள் அவனுக்குள் எழுந்தன.

அந்த மண்ணையே வெறிச்சென்று பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில், “உன்னால் ஒரு போதும் உண்மையை கண்டுபிடிக்க முடியாது மகனே” என்கிற குரல் கேட்டது. குரல் வந்த திக்கை ஆச்சரியத்துடன் நோக்கினான். புழுதி பறக்கும் மண்ணுக்கிடையே காவி உடை அணிந்த ஒரு உருவம் தென்பட்டது.

“குருக்ஷேத்திர போரை பற்றி தெரிந்துகொள்ள நீ இங்கே வந்திருக்கிறாய் என்று தெரியும். ஆனால் அந்த போர் உண்மையில் யார் யாருக்கிடையே எதன் பொருட்டு நடைபெற்றது என்று தெரிந்துகொள்ளாமல் நீ அந்த போரை அறிந்துகொள்ளமுடியாது.”

“நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?” – சற்றே குழப்பத்துடன் கேட்டான் வருண். “மகாபாரதம் ஒரு இதிகாசம். ஒரு மாபெரும் காவியம். அது உண்மை என்பதை விட அது ஒரு தத்துவம். அதை தான் அனைவரும் புரிந்துகொள்ள முயற்சிக்கவேண்டும்.” அந்த காவியுடை பெரியவர் வருணைப் பார்த்து மர்மப் புன்னகை ஒன்றை உதிர்த்தார். 

அது என்ன தத்துவம் ஐயா? எனக்கு கொஞ்சம் விளக்குங்களேன்.

நிச்சயம்! அதற்காகத் தானே வந்திருக்கிறேன்

பஞ்சபாண்டவர்கள் வேறு யாருமல்ல. கண், காது, மூக்கு, வாய், மெய் ஆகிய நம் ஐம்புலன்கள் தான்!!!!

கௌரவர்கள் யார் தெரியுமா?

இந்த ஐந்துபுலன்களை தினந்தோறும் தாக்கி தங்களுக்கு இரையாக்க முயற்சிக்கும் தீமைகள் தான் கௌரவர்கள்! எண்ணிக்கையில் பெரிதான இவர்களை எதிர்த்து உன்னால் (ஐம்புலன்களால்) போரிட முடியுமா?

முடியும்…! எப்போது தெரியுமா? 

வருண் மலங்க மலங்க விழித்தான்.

கிருஷ்ண பரமாத்மா உன் தேரை செலுத்துவதன் மூலம்.

வருண் சற்று பெருமூச்சு விட்டான். பெரியவர் தொடர்ந்தார்.

கிருஷ்ணர் தான் உன் மனசாட்சி. உன் ஆன்மா. உன் வழிகாட்டி. அவர் பொறுப்பில் உன் வாழ்க்கையை நீ ஒப்படைத்தால் எதற்கும் கவலைப்பட வேண்டியதில்லை.

வருண் பெரியவர் சொல்வதை கேட்டு மெய்மறந்து போனான். ஆனால் வேறொரு சந்தேகம் அவனுக்கு தோன்றியது.

“கௌரவர்கள் தீயவர்கள் என்றால் அப்போது பெரியவர்களான துரோணாச்சாரியாரும் பீஷ்மாரும் அவர்கள் பக்கம் நின்று அவர்களுக்காக போரிடுகிறார்கள்?”

வேறொன்றுமில்லை…. நீ வளர வளர உனக்கு மூத்தவர்கள் குறித்த உன் கண்ணோட்டம் மாறுகிறது.

நீ வளரும் காலகட்டங்களில் யாரெல்லாம் குற்றமற்றவர்கள், அப்பழுக்கற்றவர்கள் என்று எண்ணினாயோ அவர்கள் உண்மையில் அப்படி கிடையாது.

அவர்களிடமும் தவறுகள் உண்டு என்று உணர்கிறாய்.

எனவே அவர்கள் உனது நன்மைக்காக இருக்கிறார்களா, அவர்கள் உனக்கு தேவையா இல்லையா என்று நீ தான் தீர்மானிக்க வேண்டும்.

“மேலும் அவர்கள் உன் நன்மைக்காக போராடவேண்டும் என்று நீ ஒரு கட்டத்தில் விரும்புவாய்.

இது தான் வாழ்க்கையின் கடினமான பகுதி.

கீதையின் பாடமும் இது தான்.”

வருண் உடனே மண்டியிட்டு தரையில் அமர்ந்தான்.

களைப்பினால் அல்ல. கீதை உணர்த்தும் பாடத்தை ஓரளவு புரிந்ததும் அதன் மீது ஏற்பட்ட பிரமிப்பினால்.

“அப்போது கர்ணன்?” அவன் கேள்வி தொடர்ந்தது.

“விஷயத்துக்கு வந்துவிட்டாய் மகனே.

உன் ஐம்புலன்களின் சகோதரன் அவன். அவன் பெயர் தான் ஆசை. மோகம். அவன் உன் இந்திரியங்களின் ஒரு பகுதி. உன்னுடன் பிறந்தவன்.

ஆனால், தீமைகளின் பக்கம் தான் எப்போதும் நிற்பான். தான் செய்வது தவறு என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் ஏதேனும் சாக்கு போக்கு சொல்வான். உன் விருப்பம் போல. ஆசை போல.”

நான் சொல்வது உண்மை தானே? தீயவற்றுக்கு துணைபோகத் தானே மனம் ஆசைப்படுகிறது…?

வருண் “ஆம்…” என்பது போல தலையசைத்தான்.

இப்போது தரையை பார்த்தான்.

அவனுக்குள் ஓராயிரம் எண்ணங்கள். சிந்தனைகள். எல்லாவற்றையும் ஒன்றாக்கி தலைநிமிர்ந்து மேலே பார்த்தான்.

அந்த காவிப்பெரியவரை காணவில்லை.
அவர் புழுதிகள் எழுப்பிய திரையில் மறைந்துவிட்டிருந்தார்.


Navagunjara | Nabagunjara | நவகுஞ்சரம்

மகாபாரதத்தில் வரும் வித்தியாசமான உடலமைப்பைக் கொண்ட பறவை நவகுஞ்சரம்.

ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது.

சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால்,

யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கையுடன் கூடிய விலங்கு எப்படி இருக்கும்?

அதுதான் நவகுஞ்சரம்.

‘நவ’ என்றால் ஒன்பதைக் குறிக்கிறது. ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர்.

ஒரிய மொழிக் கவிஞரான சரளதாசர் எழுதிய மகாபாரதக் கதையில் நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுனன் மலை மீது தவம் செய்துகொண்டிருந்தார்.

அப்போது நவகுஞ்சர உருவெடுத்து கிருஷ்ணர், அர்ஜுனன் முன் தோன்றியதாக வருகிறது.

தவத்திலிருந்து கண் விழித்த அர்ஜூனன், முதலில் நவகுஞ்சரத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்து திகைத்தார்.

பின்னர் அதன் கையில் தாமரைப் பூவைப் பார்த்தார்.

வெவ்வேறு விலங்குகளின் உடல் உறுப்புகள் சேர்ந்த அதன் உடலமைப்பைப் பார்த்து, ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டார்.

அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் சொன்ன வார்த்தைகள் ஞாபகத்துக்கு வந்தன.

'மனிதர்களின் எண்ணங்கள் ஒரு வரையறைக்கு உட்பட்டவை. உலகமோ எல்லையற்றது' என்பதை உணர்ந்தார் அர்ஜுனன்.

இதுவரை பார்த்திராத ஓர் உயிர் இந்த உலகில் இருக்கலாம் என்றும் நினைத்தார்.

தன்னைச் சோதிப்பதற்காக இந்த உருவத்தில் வந்திருப்பது கிருஷ்ணன்தான் என்று தெரிந்துகொண்டு, எடுத்த வில்லை கீழே போட்டுவிட்டு வணங்கினார்.

ஒடிஷாவில் விளையாடப்படும் கஞ்சிபா சீட்டுக்கட்டு விளையாட்டில் நவகுஞ்சரம் ராஜாவாகவும், அர்ஜுனன் மந்திரியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிஷாவில் வரையப்படும் ஓவியங்களில் நவகுஞ்சரம் பல வகைகளில் வரையப்படுகிறது.

நவகுஞ்சரத்தின் உருவம் பூரி கோவிலின் வடக்குப்புரத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

அதன் கையில் இருக்கும் நீலச் சக்கிரம் பூரி கோவில் கோபுர கலசத்தின் உச்சாணியில் கம்பீரமாக வீற்றிருக்கிறது.


சகுனி அடிபட்ட புலி | Mahabharatha Story

மஹாபாரதத்தில் இதுவரை பலராலும் அறியப்படாத அத்தியாயம்! 
சகுனி வாழ்வின் ஃப்ளாஷ்பேக்!*

"ஒருபுறம் நூறு எதிரிகள். இன்னொரு புறம் ஐந்து எதிரிகள். உங்கள் ஐவரை அழிப்பதாக கூறியே, பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் மூலமே அழித்து. உங்களையும் நடைபிணமாக்கியவன் சகுனி என்பதை அறியாமல் பேசுகிறாய். என்றார் கிருஷ்ணர். "

*சகுனி*

தன் முன்னே கை நீட்டி விரல்கள் விரித்து கண்மூடி அமர்ந்து இருக்கும் தந்தை சுபலனைக் கண்டான் சகுனி, இந்த கைகள்தானே என்னை வாரியணைத்தவை. இந்த விரல்கள்தானே என் கண்ணி துடைத்தவை. இந்த கைகள் தானே எனக்கு வாள்வீசக் கற்றுத் தந்தவை. இதன் விரல்களை என் கைகளாலேயே வெட்டவேண்டிய நிலை வந்ததே.

இடையில் இருந்த குறுவாளால் ஒவ்வொரு விரலாய் வெட்டினான் சகுனி அவன் தந்தையோ வலிதாளாமல் உதடு கடித்து கடித்து சத்தம் வராமல் வாய் மூடி கண்கள் தெறிக்க அமர்ந்து இருந்தார்.

கண் திறந்தான் சுபலன். எதிரே கண்ணீரோடு அமர்ந்திருக்கும் மகனைப் பார்த்தான்.

மகனே சகுனி. எவ்வளவு அழகான குடும்பம் நமது. காந்தாரி என்ற அழகு மகள். வீரத்திற்கு இலக்கணமாக மூன்று புதல்வர்கள். அதில் இளையவனாய் நீ. இன்றோ அனைவரையும் இழந்து அநாதைகளாய் நிற்கிறோம். இதோ. இன்னும் சிறிது நேரத்தில் நானும் இறந்துவிடுவேன்.

நீ இருக்க வேண்டும். நம் குலத்தையே அழித்த பீஷ்மரின் குலத்தை ஒட்டுமொத்தமாய் வேரறுக்க நீ இருக்கவேண்டும் என்பதாலேயே எங்கள் அனைவருக்கும் இந்த சிறையில் அளிக்கப்பட்ட ஒரு பிடி உணவை உனக்கே தந்து ஒவ்வொருவராய் இறந்து கொண்டிருக்கிறோம்.

எங்கள் ஒவ்வொருவர் இறப்பையும் நேரில் கண்ட உன் கண்கள் நாளை பீஷ்மரின் குலத்தில் ஒவ்வொருவரின் இறப்பையும் கண்டு மகிழ வேண்டும். அதற்கும் காரணமாக நீயே இருக்கவேண்டும். என்றான்.

அவ்வளவு பலம் என்னிடம் இல்லையே தந்தையே.?.கேட்டான் சகுனி.

மகனே.உன் பலம் உடல்வலிமை சார்ந்ததல்ல. மன வலிமை சார்ந்தது. அதை உன் புத்தியின் வழியே பிரயோகப்படுத்து. திட்டங்களால் எதிரிகளை தகர்க்கமுயற்சிசெய், எவரையுமே நேரடியாக எதிர்க்காதே. வேறு எவரையாவது தூண்டிவிட்டு நீ நினைப்பவரை அழி. சந்தர்ப்பத்திற்கு காத்திரு. குழப்பங்களை உண்டாக்கு. நிர்மூலமாக்கு உன் எதிரிகளை.

இன்றிலிருந்து சகுனி என்ற பெயருக்கு இதுதான் பொருளாக இருக்கவேண்டும். வெட்டிய என் விரல்களை தாயக் கட்டைகளாக செய்து வைத்துக் கொள். நீ எந்த எண்ணை நினைத்து உருட்டினாலும். அந்த எண்ணாக நான் வந்து விழுவேன். தகுந்த நேரத்தில் இதைப் பயன்படுத்துவதுதான் உன் திறமை.

எந்தக் குலத்தின் பெருமை நம்மால் கெட்டுவிடும் என எண்ணி நம்மை சிறையில் அடைத்து பீஷ்மர் அழித்தாரோ. அந்தக் குலத்தையே நாசம் செய்வதுதான் உன் வாழ்க்கையின் இலட்சியமாக இருக்க வேண்டும். என்றான் சுபலன்.

தந்தையே. நாம் என்னதான் தவறு செய்தோம்.? எதற்காக பீஷ்மர் நம்மை அழிக்கத் துணிந்தார்.? என் சகோதரி காந்தாரியைக் கூட அவர் வந்து கேட்டதால்தானே திருதராஷ்டிரனுக்கே மணமுடித்து கொடுத்தோம்.? பிறகு என் நமக்கிந்த முடிவு.? கேட்டான் சகுனி.

மகனே. காந்தாரியின் ஜாதக பலன்படி அவளுக்கு முதல் கணவனாக வருபவன் உடன் பலியாவான் என இருந்ததால். ஒரு ஆட்டுக் கிடாவை அவளுக்கு சாஸ்திரப்படி திருமணம் செய்து அதனை பலியிட்டோம். அதன்பின் சில காலம் கழித்து அவளுக்கு இரண்டாவதாக திருதராஷ்டிரனை மணமுடித்தோம். இது பீஷ்மருக்கு தெரிந்தவுடன் கோபப்பட்டார்.
நமது விளக்கத்தையும் கேட்கவில்லை.

ஆடாகவே இருந்தாலும். அது பலியானதால்.காந்தாரி ஓர் விதவைதானே.ஓர் விதவையை என் குலத்தில் கட்டிவைத்து என் குலப் பெருமையை சீரழித்து விட்டீர்களே. நீங்கள் வெளியில் இருந்தால், உங்களால் அந்த ரகசியம் வெளிப்பட்டு, அதனால் உலகமே நாளை என் குலத்தையே கேவலமாகப் பேசுமே என பொங்கியெழுந்த பீஷ்மர் நம்மை சிறையிலடைத்து தன் தர்மத்தை நிலைநாட்ட தினமும் ஒரு கைப்பிடி உணவு தருகிறார். அதை நாங்கள் உண்ணாமல் தியாகம் செய்து உனக்களித்து உயிர்ப்பித்து வந்தோம்.

உன்னை உயிர்ப்பித்தது நம் குலத்தை வளர்க்க அல்ல. பீஷ்மரின் குலத்தை அழிக்க. எனவே, அன்பு பாசம் கருணை நன்றி நேசம் என எதையைமே நெஞ்சில் கொள்ளாமல்.வெறுப்பு பழி, வெஞ்சினம்,இகழ்ச்சி என இவைகளை மட்டுமே மனதில்கொள். என்றான் சுபலன்.

இதைக் கூறும்போதே சுபலனின் கண்கள் இருண்டன. தன் உயிர் தன்னை
விட்டுப் பிரியப் போவதை அறிந்தான். தன் ஒட்டுமொத்த உயிர்ச் சக்தியையும் தன் இன்னொரு கையில் கொண்டு வந்தான் சுபலன்.

தன் வாளினை எடுத்தான். சகுனியின் கணுக்காலை வாளின் பின்புறத்தால் அடித்து உடைத்தான். வலி தாளாமல் அலறினான் சகுனி.

தந்தையே. என்ன இது.? ஏன் இப்படி ஒரு காரியம் செய்தீர்கள்.? வாழ்நாள் முழுதும் எனை ஊனமாக்கி விட்டீர்களே. கால் தாங்கி தாங்கி நான் நடப்பதைப் பார்த்து எனை அனைவரும் ஏளனம் செய்வார்களே.? ஒரு தந்தை மகனுக்கு செய்யக் கூடிய காரியமா இது.? என்று கோபத்துடன் கேட்டான் சகுனி.

மகனே. என்னை மன்னித்து விடு. இனி உன்னைப் பார்க்கும் எவரும் ஏளனமாகவே பார்க்க வேண்டும். அது உன் நெஞ்சில் கேவலமாகப் பதியும். கோபத்தையும் வெறுப்பையும் அவர்கள் மேல் உண்டாக்கும். அது எரிதழலாய் உன் மனதில் பரவும். அதனாலேயே எவரிடத்தும் உன்னால் அன்பு கொள்ள முடியாது.

நீ வேதனையுடன் இனி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் உன்னை ஏளனம் செய்யும். அந்த ஏளனமே அவர்கள் அழிவிற்கும் காரணமாகும். உன்னுடைய இந்த இழிநிலைக்கு காரணம் பீஷ்மர் அல்ல. அவர் காக்க நினைத்த இந்த குலம்தான். இதை அழிப்பதே உன் நோக்கம். மகனே. அதை அழிப்பேன் என எனக்கு வாக்கு கொடு...
எனக் கூறிக் கொண்டிருக்கும்போதே சுபலனின் உயிர்ப்பறவை அவன் உடலை விட்டு பறந்தது.

தன் தந்தையின் முகம் பிடித்து சகுனி அலறிய சத்தம் பீஷ்மரின்
காதுகளிலும் கேட்டது. ஆனால், அது தன் குலத்தின் அழிவிற்கான ஆரம்ப சங்கோசை என்பதை அவர் அறியவே இல்லை.

காலம் ஓடியது. தந்தையின் எண்ணப்படியே, கௌரவர்களோடு உறவாடி, பாண்டவர்களை எதிரியாக்கி, பீஷ்மர் காத்து நின்ற குலத்தினை அழித்து, தானும் களத்தில் மாண்டான் சகுனி.

போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் மனக்கேதம் நீக்கும் பொருட்டு பெரிய யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த அரண்மனைக்குள் நுழைந்தார் கிருஷ்ணர், தர்மன் வரவேற்க. மற்றவர் தலைவணங்க உள்ளே நுழைந்தார் கிருஷ்ணர்.

யாகம் தொடங்கலாமே...
சொர்க்கத்தை அடைய அவரவர்க்குரிய பாகத்தை வைத்தாயிற்று அல்லவா? எனக் கேட்டார்.

ஆயிற்று கண்ணா. முதலில் பீஷ்மர் பிறகு துரோணர் என வரிசையாக வைத்தாயிற்று. உன் வருகைக்காகத்தான் காத்திருந்தோம். என்றான் அர்ஜுனன்.

யாகத்தின் முதல் வேண்டுதல் யார் பெயரில்..? கேட்டார் கிருஷ்ணர்.

குலத்தின் தோன்றலுக்கு காரணமான பீஷ்மரின் பெயரில்தான். என்றார் தர்மன்.

வீரமரணம் அடைந்தவர்க்காக நடத்தும் யாகத்தில் முதல் பாகம் சகுனியின் பெயரில் அல்லவா இருக்க வேண்டும். என்று கிருஷ்ணர் சொன்னவுடன். பாண்டவர்கள் அதிர்ந்தனர். பீமன் பல் கடித்தான். அர்ஜுனனின் கை தானாக உறைவாளை நோக்கிச் சென்றது.

என்னாயிற்று கண்ணா உனக்கு.? முதல் பாகம் என்பது நாம் அளிக்கும் மிகப்பெரிய மரியாதை. அதை பாவி சகுனிக்கா முதலில் வழங்குவது? பீமனின் கோபம் வார்த்தைகளாய் வெளிப்பட்டது.

ஆம். அதற்குத் தகுதியானவன் அவன் ஒருவனே. என்றார் கிருஷ்ணர் அமைதியாக.

பீஷ்மரை விட சிறந்தவனா சகுனி.? நயவஞ்சகமே உருவானவனுக்கு வீரமரண மரியாதையா. ?. கேட்டான் அர்ஜுனன்.

அர்ஜுனா. வீரமரணம் என்பது போர்க்களத்தில் எதிரியுடன் நேருக்கு நேர் நின்று மோதி உயிர் துறத்தல் என்பதல்ல. தான் கொண்ட கொள்கைக்காக எத்தகைய தியாகங்களையும் புரிந்து, எத்தனை தடைவரினும் தகர்த்து, தன் இலட்சியம் நிறைவேறிய பின் கடமை முடிந்ததென தன் உயிர் துறப்பதுதான் வீர மரணம். இதில் பீஷ்மரை விட உயர்ந்தவன் சகுனியே. என்றார் கிருஷ்ணர்.

பீஷ்மரின் இலட்சியம் நிறைவேறாமல் போயிருக்கலாம். போரில் பாண்டவர் தோற்கவில்லை. ஆனால், எங்களை அழித்துவிட வேண்டும் என்ற சகுனியின் இலட்சியமும் வெல்லவில்லையே..?. கேட்டான் தர்மன்.

போரில் உடன்பிறந்தவர், உற்றார் உறவினர். பெற்ற பிள்ளைகள் என அனைவரையும் இழந்து நிற்கும் நீங்கள் ஐவரும், எல்லாம் இருந்தும், எதுவும் இல்லாதவர்கள். நடைபிணமாய் வாழ்பவர்கள். என் இருப்பு ஒன்றே உங்களை இங்கு இருக்க வைத்தது.
உங்கள் வாரிசுகளை அழித்தபின்னும் சகுனியின் ஆசை நிறைவேறவில்லை என்றா சொல்கிறீர்கள்.? கேட்ட கிருஷ்ணரின் கேள்விக் கணைகளில் இருந்த உண்மையைத் தாங்க முடியாமல் தலைகுனிந்தனர் பாண்டவர்கள்.

அப்படிப் பார்த்தால் சகுனியின் இலட்சியம் எங்களை அழிப்பதைவிட துரியோதனனுக்கு வெற்றியைத் தேடித் தருவதில்தானே இருந்தது. அது நிறைவேறவில்லையே. கெளரவர்கள் அனைவரும் அழிக்கப்பட்டனரே. என அர்ஜுனன் வினவ, சிரித்தார் கிருஷ்ணர்.

அர்ஜுனா. எதை நினைத்து தன் வாழ்வை சகுனி ஆரம்பித்தானோ அதை முடித்தே சென்றான். ஒருபுறம் நூறு எதிரிகள். இன்னொரு புறம் ஐந்து எதிரிகள். உங்கள் ஐவரை அழிப்பதாக கூறியே, பல செயல்கள் மூலம் தனது நூறு எதிரிகளை உங்கள் மூலமே அழித்து. உங்களையும் நடைபிணமாக்கியவன் சகுனி என்பதை அறியாமல் பேசுகிறாய். என்றார் கிருஷ்ணர்.

என்ன? கெளரவர்களை அழிப்பதே சகுனியின் இலட்சியமா? ஏன் கண்ணா. ஏன்.?. அதுவரை மெளனமாக இருந்த திருதராஷ்டிரன் கேட்டார்.

கெளரவர்களை மட்டும் அல்ல. உங்கள் ஒட்டுமொத்த குலத்தையும் வேரறுப்பதே அவன் நோக்கம். இலட்சியம். எல்லாம். அதை நிறைவேற்ற தனி ஒருவனாக அவனால் முடியாது என்பதால். கெளரவ பாண்டவர்களுக்கிடையே விரோதத்தை வளர்த்து தன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொண்டான் சகுனி. என்றார் கிருஷ்ணர்.

பாம்பென்று தெரியாமல் பால் வார்த்து நானே என் பிள்ளைகளின் அழிவிற்கு காரணமாகிப் போனேனே. பல் கடித்து காலை தரையில் உதைத்து தன் கோபத்தை வெளிப் படுத்தினார் திருதராஷ்டிரன்.

இல்லை. பாம்பல்ல சகுனி அடிபட்ட புலி அவன். பழிவாங்க காத்திருந்தான். நேரம் வாய்த்ததும் பயன்படுத்திக் கொண்டான். என்றார் கிருஷ்ணர்.

துரோகி. நல்லவன்போல் நடித்து ஏமாற்றினானே. என்றார் திருதராஷ்டிரன்.

இங்கிருக்கும் எவரையும் விட சகுனி நல்லவன்தான். உங்கள் பிள்ளை துரியோதனனைக் கொன்றதற்காக பீமனைக் கொல்ல நினைத்த நீங்கள் நல்லவர் என்றால், அபிமன்யுவைக் கொன்ற ஜயத்ரதனை கொன்று பழிவாங்கிய அர்ஜுனன் நல்லவன் என்றால்.
பாஞ்சாலியின் சபதத்தை நிறைவேற்ற துரியோதனனைக் கொன்ற பீமன் நல்லவன் என்றால்...

தன் கண் எதிரிலேயே தன் குடும்பத்தினர் ஒவ்வொருவராய் உணவின்றி உயிர் துறப்பதை பார்த்திருந்த சகுனி. அதற்கு காரணமான உங்கள் குலத்தையே அழிக்க நினைத்து அதற்காகவே உயிர் வாழ்ந்த சகுனி. உங்கள் எல்லோரையும் விட நல்லவனே. என்றார் கிருஷ்ணர்.

என்ன சொல்கிறாய் கண்ணா.? எங்கள் குலத்தால் சகுனியின் குடும்பம் அழிந்ததா..? இதை நம்பவே முடியவில்லையே. என் மனைவியின் சகோதரன் என்பதால் நான்தானே அவனை வளர்த்து வந்தேன். பிறகு வேறு எவர் அவன் குடும்பத்தை அழித்தது.? சகுனியின் வாழ்வின் சரித்திரம்தான் என்ன..? சொல் கண்ணா. கதறிக் கேட்டான் திருதராஷ்டிரன்.

அது எனக்கும், பீஷ்மருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம். அது இருக்கட்டும். நான் கூறியது போல் சகுனிக்கு முதல் பாகம் தரமுடியுமா. முடியாதா..? கேட்டார் கிருஷ்ணர்.

கோபப்படாதே கண்ணா. யாகத்தின் முதல் பாகத்தை எவருக்குமே தீங்கிழைக்காத, எவரிடத்தும் தவறு செய்யாத பீஷ்மரை விட்டு. சகுனிக்கு தரச் சொல்வதை எங்கள் மனம் ஏற்கவில்லையே. என்றார் தர்மர் அமைதியாக.

தர்மா. வீரனாக. நல்லவனாக, ஒழுக்கமானவனாக இருந்த சகுனியை இந்த நிலைக்கு ஆளாக்கியதே பீஷ்மர்தான் என்று அறிவாயா? சகுனியின் குடும்பத்தையே உங்கள் குலத்தின் பெருமை குறைந்துவிடக் கூடாது என்பதற்காக. அழித்து மறைத்தவர் பீஷ்மர்தான் அறிவாயா? தப்பிப் பிழைத்தவன் சகுனி, தன் வாழ்வியலை மாற்றிக் கொண்டான் தன் இலட்சியம் வெல்வதற்காக. இதில் என்ன தவறு?

போரை வெல்ல நாம் செய்த அதர்மங்கள் எல்லாம் தர்மங்களகும்போது. அவன் கொண்ட இலட்சியம் வெல்ல சகுனி செய்த செயல்களும் தர்மங்களே. என்றார் கிருஷ்ணர்.

பாஞ்சாலியை துகிலுரிக்க வைத்ததுதான் சகுனி செய்த தர்மமா..? கேலியாய்க் கேட்டான் பீமன்.

பீமா. வரம்பு மீறிப் பேசுகிறாய். யோசித்துப் பார் அன்றைய நிகழ்வை, எனக்குப் பதிலாக என் மாமன் சகுனி தாயம் உருட்டுவார் என துரியோதனன் சொன்னவுடன், எங்களுக்கு பதிலாக கண்ணன் தாயம் உருட்டுவான் என உங்களில் எவரேனும் கூறியிருந்தால், அது நடந்தே இருக்காது. அங்கு போட்டி தர்மனுக்கும் துரியோதனனுக்கும் இடையேதான் நடந்ததே தவிர சகுனியுடன் அல்ல. அந்த இடத்தில் தாயக் கட்டைகளைப் போல் சகுனியும் ஓர் கருவியே.

பாஞ்சாலியின் அவமானம் சகுனியால் திட்டமிடப் பட்டதல்ல. அதற்கு முழுக்கப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தருமனும் துரியோதனனும்தான். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உங்களைப் போலவே சகுனியும் பார்வையாளன்தான். பழிகாரன் அல்ல. புரிந்து கொண்டு பேசு.

கடுமையாகச் சொன்ன கிருஷ்ணரைப் பணிந்தான் சகாதேவன்.

பரந்தாமா. பீமனை மன்னித்து அருளுங்கள். நீங்கள் கூறி அதை மறுத்த அவப்பெயர் எங்களுக்கு வேண்டாம். இந்த யாகத்தின் முதல் பாகம் சகுனிக்கே தரப்படும். என்றான் சகாதேவன்.அனைவரும் வேறு வழியின்றி ஒப்புக் கொண்டனர்.

யாகம் முடிந்து கிருஷ்ணர் விடைபெற்றார். அவரைப் பின் தொடர்ந்த சகாதேவன்.

பரந்தாமா. சகுனிக்காக பரிந்து பேச தாங்களே முன்வந்தது ஆச்சரியமே. இதற்கு கண்டிப்பாக வேறு காரணம் இருக்கும். அதை நானறியலாமா.? சகுனியைக் கொன்றவன் என்ற உரிமையில் கேட்கிறேன். என்றான் பணிவுடன்.

சகாதேவா. காலத்தின் மறு உருவம் தான் நீ. அதனால் தான் உனக்கு எதிர்காலம் அறியக் கூடிய ஜோதிடக்கலை எளிதாக வந்தது. சகுனியைக் கொன்றது நீயல்ல. அவன் இலட்சியம் முடிந்தவுடன் உன் உருவான காலம் அவனை அழைத்துக் கொண்டது. கவலை வேண்டாம்.

அது மட்டுமின்றி. இந்தப் பிரபஞ்சத்திலேயே அவன் காலம் முழுதும் என்னையே, அடுத்து நான் என்ன செய்வேன் என்பதையே அனுதினமும் நினைத்துக் கொண்டிருந்தவன் சகுனி ஒருவனே. அது பக்தியாக இல்லாவிட்டாலும் கூட என்னையே நினைத்திருந்ததால் அவனும் என் பக்தனே.

என் ஒவ்வொரு அசைவிற்கும் பொருளறிந்தவன். அவன் உயிரோடு இருக்கும் வரை என்னால் அவனுக்காக எதுவும் செய்ய முடியவில்லை.

அவனை என் பக்தனாக... அவன் விரும்பாவிடினும். அவனை நான் ஏற்றுக் கொண்டதனால். யாகத்தின் முதல்பாகத்தை அவனுக்கு அளிக்க வைத்து பெருமைப் படுத்தினேன்.

"என்னை விரும்பி ஏற்பதோ..
விரும்பாமல் ஏற்பதோ முக்கியம் அல்ல.

என்னை ஏற்பது என்பது மட்டுமே முக்கியம். அதுபோதும் ஒருவனை நான் ஆட்கொள்ள.."

என்ற கிருஷ்ணரை வியந்து வணங்கி வழியனுப்பி வைத்தான் சகாதேவன்..!

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !



Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...