Bhishmar viizssi ataiyum naal vanthathu | பீஷ்மர் வீழ்ச்சி அடையும் நாள் வந்தது.

பீஷ்மர் வீழ்ச்சி அடையும் நாள் வந்தது. கௌரவர்கள் அசுர வியூகத்தை அமைக்க, பாண்டவர்கள் தேவ வியூகத்தை அமைத்தனர். சிகண்டியை முன் நிறுத்திப் பாண்டவர்களின் படை முன்னேறியது. இதுவரை இல்லாத பாதுகாப்பு இன்று பீஷ்மருக்கு இருந்தது. இன்று பீஷ்மரை கொன்றாக வேண்டும் என்று பாண்டவர் பாசறையில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

பார்த்தன் உணர்ச்சிவசம் பட்டிருந்தான். கலங்கி நின்றான். தன் செல்ல தாத்தாவாகிய பீஷ்மரின் மடியில் அமர்ந்து விளையாடிய நேரங்களை கண்ணீருடன் நினைவு கூர்ந்தான். தன் தாத்தா சிறுவயதில் கூறிய கதைகளில் மீண்டுமொரு முறை கடைசியாக மூழ்கினான். தன் அன்பிற்கும், பாசத்திற்கும், மரியாதைக்கும் உரிய பீஷ்மரை கொல்ல போகிறோமே என்று வேதனை அடைந்தான். காண்டீபத்தைதொட அவன் மனமும் கைகளும் மறுத்தன. 

நாம் தோற்றாலும் பரவாயில்லை கங்கை புத்திரரை கொல்ல மாட்டேன் என்று கிருஷ்ணரையும் அண்ணன்களையும் தழுவி அழுதான். அங்கு சில நிமிடங்கள் நிசப்தம் நிலவியது.... காற்று வீச மறந்தது... கூடியிருந்த அனைத்து மகாராதர்களின் கண்களிலும் இந்த காட்சி ஈரமாக படர்ந்தது...

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சமாதானம் செய்ய வார்த்தை இன்றி சிலையானார்... சிறிது நேரம் கழித்து “அர்ஜுனா, பீஷ்மரின் சாபம் முடியும் நேரம் நெருங்கிவட்டது. அவர் முக்தி அடைய போகிறார். நீ அவரை கொல்லபோவதில்லை அவருக்கு உன் கைகளால் முக்தி கொடுக்க போகிறாய். அவருக்கு விதிக்கபட்டது இதுதான் பார்த்தா. உன் பாசத்திற்குரிய அன்பு தாத்தாவிற்கு நீ கொடுக்க போகும் மிக பெரிய பரிசு இது இந்திரன் மகனே.

எடு காண்டீபத்தை, மோக்ஷத்தை கொடுத்து அவரை வழி அனுப்பு. அவரின் ஆசி என்றும் உன்னோடு இருக்கும் “ என்றார். அர்ஜுனனுக்கு பீஷ்மரின் பிறப்பு ரகசியத்தை மீண்டும் ஒரு முறை சொல்லி முடித்தார். அர்ஜுனன் தெளிவானான். காண்டீபதில் நானேற்றினான். நானை சுண்டிவிட்டான். அதன் ஒலி எட்டு திக்கிற்கும் சென்றடைந்தது. சத்தத்தை கேட்ட அணைத்து ஜீவராசிகளும் ஒரு நிமிடம் மிரண்டது. வில்லுக்கு “விஜயன்” தேரில் ஏறி போருக்கு தயாரானான்......

இச்ச மரணம் (விரும்பிய போது மரணம்) என்ற வரத்தை தன் தந்தையிடம் இருந்து பெற்றிருந்தார் பீஷ்மர். அப்படிப்பட்ட பீஷ்மரை எப்படி தோற்கடிப்பது? எப்படி கொல்வது? என்று பாண்டவர்கள் அனைவரும் குழம்பி இருந்தனர். அப்போது அர்ஜுனன் “கொல்ல முடியவில்லை என்றால் என்ன? அவரின் உடல் அசைய முடியாதபடி காயங்களை ஏற்படுத்தினால் போதும்” என்றான்.

அப்போது குறுக்கிட்ட தருமர் “அவர் கைகளில் வில் இருக்கும் வரை, அவரை காயப்படுத்தும் ஆற்றல் படைத்த வீரன் மூவுலகிலும் யாரும் பிறக்கவில்லை. பிறகு எப்படி அவரை காயப்படுத்துவது ?“ என்றார்.

அர்ஜுனன் “அவர் காயம் அடைய வேண்டும் என்றால் வில்லை கீழே வைக்க வேண்டும், அவர் போர்களத்தில் வில்லை கீழே வைக்க மாட்டார் என்று அனைவர்க்கும் தெரியும். அப்படியிருக்க அவர் வில்லை கீழே வைக்க என்ன செய்வது? “ என்று கிருஷ்ணரை பார்த்து கேட்டான்.

“போர்களத்தில் பெண் இருந்தால் கூடவா அவர் தன் வில்லை கீழே வைக்கமாட்டார்?” புன்னகையோடு பதில் அளித்தார் பரந்தாமன்.
“போர்களத்தில் பெண்ணா? போர்களத்தில் பெண்களை அனுமதிப்பதில்லையே, அது யுத்த தர்மம் அல்லவே ?” என்று அர்ஜுனன் குழம்பி நின்றான்.

கிருஷ்ணர் அர்ஜுனனிடம் “தர்மத்தின் பக்கம் நின்று போராடும் அர்ஜுனா, நான் சொல்வதை கேள். சிகண்டியை நீ ஆண் என்று கருதினால் உன் தேரில் ஏற்றிக்கொள். பீஷ்மர் சிகண்டியை பெண் என்று கருதினால் தன் வில்லை கீழே வைப்பார். அது தான் சரியான சமயம் பார்த்தா !!!” என்று பதில் அளித்தார்.

போரில் அன்றும் பீஷ்மர் தன் அம்புகளை காற்றென செலுத்தி கொண்டிருந்தார். பாண்டவர்களுக்கு சவாலாக நின்றார். பாண்டவர்களின் வெற்றியை தடுக்கும் ஒரே ஒரு மாபெரும் சக்தியாக இருந்தார். இந்த நிலையில் தான் அர்ஜுனனின் தேர் அவருக்கு நேர் எதிராக சென்று நின்றது. கிருஷ்ணரின் முகத்தில் அமைதியான புன்னகை. பீஷ்மரை சொர்கத்திற்கு வரவேற்கும் ஆசிர்வாதம் பகவானின் கண்களில் தெரிந்தது. அதை பார்த்த பீஷ்மர் மனதில் ஆனந்தம். 

கிருஷ்ணரை வணங்கி நின்றார். தன் முடிவை அறிந்த பீஷ்மர் கடைசி முறையாக தன் வில்லை கையில் ஏந்தினார். பல ஆண்டுகளாக ஆயிரம் ஆயிரம் வீரர்களை கொன்று வெற்றி கொண்டு, தோல்வியே இல்லாத மகாராதனாக தான் விளங்கியதற்கு காரனமாய் இருந்த தன் வில்லை தொட்டு அதற்க்கு இறுதி வணக்கத்தை வீரத்தோடு தெரிவித்தார்.

தனக்கு மிகவும் செல்லமான பேரன் அர்ஜுனனின் தேரில் அவனின் கொடி வெற்றி களிப்போடு பறப்பதை பார்த்தார். சிகன்டிகை அர்ஜுனனின் தேரில் அவனுக்கு முன் நிற்பதை கண்டார். தன் விரதப்படி பீஷ்மர் சிகண்டியைத் தாக்கவில்லை. சிகண்டி யார் என்பதை நினைவு கூர்ந்தார். தன் ஆயுதத்தை கீழே வைத்தார், ஆயுதம் ஏதும் கையில் இல்லை.

“பார்த்தா செலுத்து உன் அம்பை. விடை கொடு பீஷ்மருக்கு.“ என்றார் ஸ்ரீ கிருஷ்ணர்.அர்ச்சுனன் மனதை ஒருமுகம் செய்தான். தைரியத்தை மனதிற்குள் புகுத்தினான். தன் நடுக்கத்தை கட்டு படுத்தினான். தன் முழு பலத்தோடும், ஆற்றலோடும் செலுத்தினான் அம்பை. அம்பு காற்றை கிழித்து கொண்டு கண் இமைக்கும் நேரத்தில் பீஷ்மரின் கவசத்தைப் பிளந்தது.
வாழ்த்துக்கள்
!!! அர்ஜுனா!!!! உன்னிடம் தோற்பதில் பெருமை அடைகிறேன்” என்று போர்க்களம் முழுவதும் கேட்க்குமாறு வாழ்த்தினார் பீஷ்மர். அடுத்த அம்பும் சீறியது. பீஷ்மரின் நெஞ்சு கூட்டை பதம் பார்த்தது.

“மகிழ்ச்சி அர்ஜுனா!!!! உனக்கு என் நன்றிகள். உன் குருக்களுக்கும், உன் தந்தைக்கும், நீ பெருமை சேர்த்து விட்டாய். வாழ்க உன் புகழ். பீஷ்மனை வீழ்த்திய உன் புகழ் இந்த உலகம் அழியும் வரை வாழட்டும்” என்று ஆசி வழங்கினார்.

அடுத்தது ஏழு அம்புகள், பீஷ்மரின் மார்பில் பாய்ந்தது. அர்ச்சுனனின் அம்புகள் பீஷ்மரின் உடலெங்கும் தைத்தன. பீஷ்மர் நிலை குலைந்தார். துரியோதனன் மாவீரரான பீஷ்மரின் உடல் அர்ஜுனனின் அம்புகளால் துளைக்கப்படுவதை கண்டு திகைத்து நின்றான். முப்பத்தி முக்கோடி தேவர்களும் ஸ்தம்பித்து நின்றனர். தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தேரிலிருந்து பீஷ்மர் சாய்ந்த போது மலர் மழை பொழிந்தனர்.

தேரில் இருந்து சாய்ந்த பீஷ்மரை கண்ட அர்ஜுனன் மனம் நொந்தான். தன் காண்டீபத்தை கீழே போட்டான். போர்களமே அதிரும்படி “பிதாமகரே என்ன காரியம் செய்தேன் நான். பரந்தாமா!!! இந்த கொடிய செயல் செய்வது தான் என் விதியா? இதற்காகவா நான் வில் வித்தை பயின்றேன்? இத்தகைய கொடிய செயலை என்னை செய்ய வைப்பது தான் உன் லீலைகளா? இது தான் உன் தர்மமா?” என்று கதறி அழுதான். கிருஷ்ணரை கட்டி தழுவி அவர் மார்பில் சாய்ந்து ஆறுதல் தேடினான்.

“பீஷ்மா உன் மரணத்திற்கு நானே காரணமாக இருப்பேன்” என்று கடந்த பிறவியில் அம்பையாக சபதம் செய்த சிகண்டியின் சபதமும் நிறைவேறியது.
இரு தரப்பாரும் பீஷ்மரின் வீழ்ச்சிக் கண்டு திகைத்தனர். கீழே வீழ்ந்த வீர பீஷ்மரின் உடல் தரையில் படவில்லை. உடம்பில் தைத்திருந்த அம்புகள் உடல் பூமியில் படாது தடுத்தன. அவரைக் கௌரவிக்க தன் தாயாகிய கங்காதேவி பல ரிஷிகளை அனுப்பினாள். அன்னப்பறவை வடிவம் தாங்கி அவர்கள் பீஷ்மரிடம் வந்து பணிந்து சென்றனர். அவர் செய்த புண்ணிய காலம் வரை உயிருடன் இருக்கத் தீர்மானித்திருந்தார். இப்படி மரணத்தைத் தள்ளிப்போடும் வரத்தை தந்தை சாந்தனுவிடமிருந்து வரமாக பெற்றிருந்தார்.

அவர் உடல் பூமியில் படவில்லை என்றாலும். தலை தொங்கி கொண்டிருந்தது. அருகில் இருந்தோர் தலயணைக் கொணர்ந்தனர். ஆனால் அவற்றை விரும்பாத பீஷ்மர் அர்ச்சுனனைப் பார்த்தார். அர்ச்சுனன் மூன்று அம்புகளை வில்லில் பொருத்தி வானத்தில் செலுத்தினான். அவை நுனிப்பகுதி மேலாகவும், கூர்மையான பகுதி தரையில் பொருந்துமாறும் அமைந்து பீஷ்மரின் தலையைத் தாங்கின. பீஷ்மர் புன்னகை பூத்தார். கடும் போர் புரிந்த பீஷ்மருக்கு தாகம் எடுத்தது. பல மன்னர்கள் தண்ணீர் கொணர்ந்தனர். பீஷ்மர் மீண்டும் ஒரு முறை அர்ச்சுனனை நோக்கினார். குறிப்புணர்ந்த அர்ச்சுனன், அம்பு ஒன்றை பூமியில் செலுத்தினான். தன் தாயாகிய கங்கா தேவியின் அருளால் கங்கை மேலே பீரிட்டு வந்தது. கங்கை மைந்தன் அந்த நீரைப் பருகினார்.

பீஷ்மர் பின் துரியோதனனைப் பார்த்து “அர்ச்சுனனின் ஆற்றலைப் பார்த்தாயா? தெய்வ பலம் பெற்றவன் இவன். இவனிடம் சிவனின் பாசுபதக் கணையும் உள்ளது. விஷ்ணுவின் நாராயணக் கணையும் உள்ளது. அது மட்டுமின்றி அனுமனின் ஆற்றலைப் பெற்ற பீமனின் வல்லமையும் உனக்குத் தெரியும். இப்போதேனும் நீ சமாதானமாய் போய் விடு. அவர்கள் நாட்டை அவர்களிடம் ஒப்படைத்து விடு. இப்போர் என்னுடன் முடியட்டும்'” என்றார். அந்த சூழ்நிலையிலும் பீஷ்மரின் அறிவுரையை துரியோதனன் ஏற்கவில்லை.

எல்லோரும் பிரிந்து சென்றதும்..நள்ளிரவில் கர்ணன் ஓடிவந்து அவர் பாதங்களில் வீழ்ந்து அழுதான். “ராதையின் மைந்தனான நான்..சில சமயங்களில் தங்களுக்கு மரியாதைத் தர தவறிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கதறி அழுதான்.

அது கேட்ட பீஷ்மர் “கர்ணா..நீ ராதையின் மகன் அல்ல. குந்தியின் மைந்தன் என்று எனக்கு முன்பே தெரியும். சூரிய குமரன் நீ. இதை வியாசர் எனக்குக் கூறினார். காரணமின்றி நீ பாண்டவர்களை பகைத்ததால் நானும் உன்னிடம் கோபமாக நடந்துக் கொண்டேன். பாண்டவர்கள் உன் தம்பியர். நீ அவர்களுடன் சேர்ந்து தருமத்தைப் போற்று” என்றார்.

கர்ணன் கொள்கையை மாற்றிக் கொள்ளவில்லை. “துரியோதனனுக்கு எதிராகப் போர் புரிவதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.மன்னியுங்கள்” என்றான். “கர்ணா..அறம் வெல்லும்.நீ விரும்பியப்படியே செய்” என்று கூறிவிட்டு நித்திரையில் ஆழ்ந்தார் பிதாமகன்.

குருக்ஷேத்திர போரின் மிகப்பெரிய இழப்பாகவும், தீர்க்க முடியாத சோகமாகவும் அமைந்தது பீஷ்மரின் வீழ்ச்சி. பீஷ்மர் தலைமையில் கௌரவர்கள் களமாடிய கடைசி நாள் இது தான். பீஷ்ம பருவம் இத்துடன் முடிந்துவிட, அடுத்தநாள் துரோணர் தலைமை பொறுப்பை ஏற்றார். துரோண பருவம் என்று அழைக்க படும்.

பீஷ்மரின் வீழ்ச்சியோடு அன்றைய நாள் போர் முடிவிற்கு வந்தது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,