மகாபாரதப் போர் முடிந்ததைத் தொடர்ந்து, கிருஷ்ணர் துவாரகைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் உதங்க முனிவர் எதிர்பட்டார். அவர் கண்ணனை வணங்கி, “நலமா?” என்று விசாரித்தார்.
“உலகில் எல்லாரும் நலமாக இருந்தால், நானும் நலமாகவே இருப்பேன்” என்று கூறினார் கண்ணபிரான். அதைக் கேட்டதும் உதங்கரின் குரலில் கோபமும் ஆதங்கமும் எட்டிப் பார்த்தன. “அது எப்படி எல்லோரும் நலமாக இருக்க முடியும். குருசேத்திரப் போரில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள். அதற்குத் தாங்களும் தானே காரணம்?” என்றார்.
கண்ணன் புன்னகை தவழும் முகத்துடன், “நான் யாருடனும் போரிடவில்லை. யாரையும் தாக்கவில்லை. பின் எப்படி இறப்புகளுக்கு நான் பொறுப்பாக முடியும்?. மேலும் பிறப்பும், இறப்பும் இயல்பானது என்பது உங்களுக்கு தெரியாதா?” என்று கேட்டார்.
“நீங்கள் போரிடாமல் இருந்திருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் மனது வைத்திருந்தால் போரே நடைபெறாமல் தடுத்திருக்கலாம். ஒரு இறப்பு கூட இல்லாமல் தவிர்த்திருக்கலாம். இயல்பான இறப்பாக இருந்தால் சரி. ஆனால் இப்போது நடைபெற்ற இறப்பு அப்படியல்லவே!” என்று மீண்டும் கண்ணபிரான் மீது குற்றம் சாட்டினார் உதங்க முனிவர்.
அர்ச்சுனனுக்கு பகவத் கீதையை எடுத்துரைத்தது போல், உதங்கருக்கும் மற்றொரு கீதையை உபதேசிக்கும் படி ஆகிவிட்டது கண்ணனுக்கு. போருக்கு முன்பாக கவுரவர்களை சந்தித்து ராஜ்ஜியத்தில் பாதியை கொடுத்தால் போரை தவிர்த்து விடலாம் என்று தான் கேட்டுக் கொண்டது, அதற்கு கவுரவர்கள் சம்மதிக்காமல் இழிவு படுத்தியது, தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்காக இந்தப் போரை நிகழ்த்தியது என்பது வரை கூறி முடித்தார் கிருஷ்ணர்.
உதங்கருக்கு உண்மை புரிந்தது. “கண்ணா! என்னையும் மதித்து இவ்வளவு பெரிய விளக்கம் அளித்தீர்களே!” என்று கண் கலங்கினார். கண்ணனின் விளக்கத்தில் மெய்சிலிர்த்த உதங்கர், “உங்கள் விஸ்வரூப தரிசனத்தைக் காண வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
அதன்படியே தனது விஸ்வரூபத்தை காட்டி அருளினார் கண்ணன். மேலும் வேறு என்ன வரம் வேண்டும்? என்று விஷமமாகக் கேட்டார். “இதை விட வேறு என்ன வேண்டும்?” என்று நெஞ்சுருகி நின்ற உதங்கரிடம், விடாப்பிடியாக, வேறு ஏதாவது கேட்கும்படி கூறினார் கிருஷ்ண பகவான்.
அவரது வற்புறுத்தலால், “நான் வேண்டும் போது எனக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும்” என்று வரம் கேட்டார் உதங்கர். அவ்வாறே அருள்புரிந்து அங்கிருந்து சென்றார் கண்ணன்.
ஒரு முறை பாலைவனத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார் உதங்க முனிவர். அப்போது அவருக்குப் பயங்கரத் தாகம் ஏற்பட்டது. கரம் குவித்துக் கண்ணனை பிரார்த்தனை செய்தார்.
அப்போது அந்த வழியாக அருவறுப்பு கொள்ளச் செய்யும் தோற்றத்துடன், முகம் சுளிக்கும்படியாக ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவர் தன் கையில் இருந்த குவளையை உதங்கரிடம் நீட்டி, “ஐயா! தாங்கள் தாகமாக இருப்பதாக நான் அறிகிறேன்.
இந்தத் தண்ணீரை அருந்தி உங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளுங்கள்!” என்று கூறினார். உதங்கரோ, எதிர்பட்டவரின் உருவத்தை கண்டு வெறுப்பு கொண்டார். “தண்ணீர் வேண்டாம்” என்று கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
அவரது மனம் மிகவும் சினம் கொண்டிருந்தது. “கண்ணா! நீ ஒரு குற்றவாளி. என்னை ஏமாற்றி விட்டாய். வரத்தைக் கொடுத்து விட்டு, அதனைப் பயன்படுத்த முடியாதபடி செய்து விட்டாய்!” என்று சத்தமாக கூறிக் கண்ணனை நிந்தனை செய்தார் உதங்கர்.
கண்ணன், உதங்கர் இருந்த பாலைவனத்திற்கு விரைந்து வந்தார். “முனிவரே! என் மீது உங்களுக்கு என்ன கோபம்?. நான் கொடுத்த வரத்தின்படி உங்களுக்குத் தண்ணீர் கிடைக்கும்படி செய்தேனே! தாங்கள்தானே அதனை வேண்டாம் என்று கூறி மறுத்தீர்கள்!” என்று கேட்டார்.
“கண்ணா! நீ பேச்சில் சாமர்த்தியம் காட்டுகிறாய். நான் கேட்ட தண்ணீரைக் கொடுத்தனுப்புவதற்கு உனக்கு வேறு யாருமே கிடைக்கவில்லையா? என்னை அவமதிப்பதற்காகவே அருவறுப்பு மிகுந்த ஒருவனிடம் தண்ணீரைக் கொடுத்து அனுப்பியிருக்கிறாய்!’ என்று ஆதங்கத்துடன் கூச்சல் போட்டார் உதங்க முனிவர்.
“என்னை ஏமாற்றி விட்டீர்கள் உதங்கரே! நீங்கள் பேதங்களைக் கடந்தவர், மேம்பட்டவர் என்று எண்ணியிருந்தேன். அனைத்தும் பொய்யாகப் போய்விட்டது” என்றார் கண்ணன்.
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் மவுனமானார் உதங்கர். “உங்களுடைய தாகத்தைத் தணிக்க, தண்ணீருக்குப் பதிலாக நான் அமிர்தத்தையே வழங்க முடிவு செய்திருந்தேன். அதை நிறைவேற்றும்படி இந்திரனை அழைத்து உத்தரவும் பிறப்பித்தேன். ஆனால், அவனோ தயங்கிய படியே அமிர்தத்தை அளிக்கும் அளவுக்கு உதங்கர் உயர்ந்தவரா?” என்று கேட்டான்.
நானோ அவர் மிகப்பெரிய ஞானி என்றுரைத்தேன். அதற்கு இந்திரனோ, அப்படியானால் அதை அவர் நிரூபிக்க வேண்டும் என்று கூறி அருவறுப்பு கொள்ளத்தக்க வடிவில் உங்களிடம் அமிர்தத்தை கொண்டு வந்து கொடுத்தான். உருவத்தில் வேறுபாடு காட்டி, கிடைக்க இருந்த அமிர்தத்தை இழந்து விட்டீர்கள் உதங்கரே!. அத்துடன் என்னையும் ஏமாற்றி விட்டீர்கள்!” என்று கூறி விட்டு அங்கிருந்து மறைந்தார் கண்ணன்.
தான் செய்த தவறை உணர்ந்து வருந்தியபடி தலை கவிழ்ந்து நின்று கொண்டிருந்தார் உதங்க முனிவர்.
பஞ்சவர்ணேஸ்வர் ஆலயம்.உறையூர்-
உதங்க முனிவர் தன்னுடைய மனைவியுடன் கங்கையில் நீராடிய போது, அவர் மனைவி முதலையால் இழுத்துச் செல்லப்பட்டார்.
உதங்க முனிவர் வேதம், ஆகமம், புராணங்களில் வல்லவராக இருந்தமையால், அவருக்கு மனைவியின் இறப்பு பற்றி தெரிந்தது. ஞானியாக இருந்தாலும் மனைவி இழந்தமையால் பித்து பிடித்தவரானார்.
பல இடங்களில் சுற்றித் திரிந்து பின்பு உறையூர் சிவலாயத்திற்கு வந்தார். இங்கு இறைவன் காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிகால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும்,
முதல் ஜாம வைர லிங்கமாகவும் மற்றும் அர்த்த ஜாம வழிபாட்டில் சித்திர லிங்கமாகவும் காட்சியளித்தார். இதனால் இத்தல மூலவருக்கு பஞ்சவர்ணேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது.உதங்க முனிவருக்கு இறைவன் ஆடிப்பவுர்ணமியில் இந்த ஐந்த வண்ணம் காட்டியதால் இறைவனை ஆடிப்பவுர்ணமியில் தரிசிப்பது சிறப்பாகும்.
No comments:
Post a Comment