Showing posts with label shivan Temple. Show all posts
Showing posts with label shivan Temple. Show all posts

A temple where more than 200 saints are enshrined in one place | 200க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில் சமாதியான சிவாலயம்

200க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில் சமாதியான சிவாலயம்!


சுமார் 4000 ஆண்டுகளுக்குமுன் ஒரே இடத்தில் மன்னனால் 200க்கும் மேற்பட்ட மகான்களை சமாதி செய்து வைக்கப்பட்ட பிரசித்தமான சிவாலயம், இன்று பராமரிப்பின்றி தனிநபர் ஒருவரின் அர்ப்பணிப்பால் புதுப்பிக்கபட்டு இருக்கிறது. ஒரு சாதாரண சிவபக்தன் தான் குடியிருந்த வீட்டை விற்று கிடைத்த பணத்தில் ஆலய புணரமைப்பு பணிகளை செய்து வருகிறார்.

இவ்வாலயத்தின் சிறப்பை வார்த்தையால் சொல்ல இயலவில்லை. ஆலயத்தில் எங்கு நின்றாலும் Cosmic Vibration நம்மை ஆட்கொள்கிறது. நமது வாழ்வியல் முறைகளை அங்குள்ள சிற்பங்கள் பறைசாற்றுகின்றன. அதில் ஒரு சிற்பம் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை பிறப்பை காட்டுகிறது, அப்புறம் குழந்தை நிலை தடுமாறியிருக்கும் போது (இன்று Breach என்று சிசேரியன் செய்வார்கள்) மருத்துவம் பார்க்கும் டெக்னிக்கூட தத்ரூபமாக தூணில் சிற்பமாக காட்டபட்டுள்ளது.

அதனை தொடும்போது நமது மூச்சு நிலை பிராணாயாமத்தை உணரலாம் ஒரு தூணில் பிராணயாம பயிற்சியை விளக்கும் அரிய சிற்பம் உள்ளது. ஒரு சிறப்பு என்னவென்றால் அந்த சிற்பத்தின்மீது கை வைத்தாலே நமக்கு மூச்சு மேலும் கீழும் இயங்கத்தொடங்கி பிராணயாமம் இயல்பாகவே நடக்கிறது. இது சத்தியமான உண்மை.

இன்னும் பல சிறப்புகள் கொண்டுள்ள சிவாலயம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் குறைந்துவிடும். இப்பவும் பௌர்ணமி யாகபூஜை சிறப்பாக செய்யபடுகிறது. யாக ஜோதியில் பல்வேறு இறை ரூபங்கள் காட்சிகளாக கிடைத்துள்ளது. Photo ஆலய பராமரிப்பு செய்யும் சிவனடியாரிடம் தொகுப்பாக இருக்கு. பாக்கியமுள்ளவர்கள் பௌர்ணமி ஹோமத்தில் பங்கெடுக்கலாம் முடிந்தால் காணிக்கை செலுத்தலாம். கட்டாயமில்லை.

ஆலய அமைவிடம்:- தென்காசி To மதுரை மார்க்கத்தில் கடையநல்லூருக்கு அடுத்த 4Km தூரத்தில் சுந்தரேஸ்வரபுரம் என்ற ஊரில் ஊருக்கு வெளியே அமைதியான தோப்புகளின் நடுவே அமைந்துள்ளது.

கடையநல்லூரிலிருந்து Auto வசதியுள்ளது. சிவனருள் கிடைத்தவர்கள் பாக்கியவான்கள் தரிசிக்கலாம். திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் உள்ள சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் சூரியன் மறைந்துவிட்ட போதும் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.



தலைகீழாக விழும் கோபுரத்தின் நிழல்!

இந்தியாவில் உள்ள பல முக்கிய திருத்தலங்களில் பல விதமான அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளன. அந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ஒரு கோவிலின் நிழல் தலை கீழாக விழும் அதிசயம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு சிவன் கோவிலில் நிகழ்கிறது.

பெங்களூரில் இருந்து சுமார் 350 கி. மீ தூரத்தில் உள்ள ஹம்பி என்னும் இடத்தில் அமைந்துள்ளது விருபாட்சர் கோயில். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள இந்த கோவில் உலக பாரம்பரிய களங்களில் ஒன்றாக உள்ளது.

இந்த கோவிலின் ராஜ கோபுரம் சுமார் 165 அடி உயரம் கொண்டது. இதன் நிழல் ஒரு சுவற்றில் இங்கு தலை கீழாக விழுகிறது. இந்த அதிசய நிழலின் ரகசியம் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. நிழலானது தலைகீழாக விழவேண்டுமானால் அதற்கு கண்ணாடி போன்று ஏதாவது ஒன்று நிச்சயம் தேவை படும். ஆனால் எதுவுமே இல்லாமல் இந்த கோவிலின் நிழல் எப்படி தலை கீழாக விழுகிறது என்பதை எவராலும் அறிய முடியவில்லை.

உள்ளூர் மக்கள் இதை இறைவனின் அருள் என்றும், அறிவியலாளர்கள் இதை கட்டிட கலையின் நுணுக்கம் என்றும் கூறுகின்றனர்.மேலும் சில விஞ்ஞானிகள், கோபுரத்திற்க்கும் சுவருக்கும் இடையே ஒரு துளை லென்ஸ் போல செயல்பட்டு கோபுரத்தின் நிழலை தலைகீழாக விழ செய்கிறது என்று கூறுகின்றனர். ஆயினும் எதுவும் 100 சதவிகிதம் நிரூபிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

இந்த கோவிலில் உள்ள மண்டபம் ஒன்றில் 114 தூண்கள் உள்ளன. மற்றொரு மண்டபத்தின் நடுவில் ஒரு வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு அதில் துங்கபத்திரா ஆற்றின் நீர் மடப்பள்ளியை அடைந்து பின் வெளிப்பிரகாரம் வழியாக வெளியேறுகிறது.

வடிகால் கால்வாய் முதல் வானளாவிய கோபுரம் வரை அனைத்திலும் மிக சிறந்த கட்டிட கலையின் திறன் காண்போரை பிரமிக்கவைக்கிறது. இஸ்லாமிய படையெடுப்பினால் கால மாற்றத்தினாலும் இந்த பகுதியில் இருந்த பல கோவிலிகள் சிதிலமடைந்த போதிலும் இந்த கோவில் மட்டும் காலத்தை கடந்து கம்பீரமாக நின்று நமது நாட்டின் கலாச்சாரத்தையும் கட்டிடக்கலை திறனையும் உலகிற்கு பறை சாற்றுகிறது.



கர்நாடகா மாநிலம் மகதி அருள்மிகு ஶ்ரீசோமேஸ்வரர் திருக்கோயில்

இந்த திருத்தலம் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரூவிலிருந்து 45 கி.மீ. தூரத்தில் மகதி எனுமிடத்தில் அமைந்துள்ளது.

சோலூர் 18 கி.மீ.தூரம் யஷ்வந்த்பூர் 50 கி.மீ.தூரம் பேரூந்து வசதி தனியார் வாகன வசதி உள்ளது.

இறைவன் திருநாமம் : ஶ்ரீசோமேஸ்வரர்சுவாமி
இறைவி திருநாமம் : ஶ்ரீபார்வதிதேவி

மிகப் பெரிய நிலப்பரப்பில் நிறைய மண்டபங்களுடன் இத்திருக்கோயில் நிர்மானிக்கபபட்டுள்ளது. மண்டபங்கள் சிலது முகலாயர் படையெடுப்பில் இடிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் உள்ள கோயிலில் பழுது நீக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. நான்கு பக்கங்களிலும் நான்கு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளது. சிற்பக்கலை கோயில் மண்டபங்களிலும் சுவர்களிலும் அருமையாக உள்ளது.

3 அடி உயரமான மூலவர் திருமேனியில் ஶ்ரீசோமேஸ்வரர் சுவாமி அருள் புரிகிறார். எதிரில் மண்டபத்தில் நந்திகேஸ்வர சுவாமியை காணலாம்.

5 அடி உயரத்தில் ஶ்ரீபார்வதிதேவி மூலவருக்கு பக்கத்து சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.

ஶ்ரீசத்யநாராயண சுவாமியும் இத்திருத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தரிசன நேரம் :
காலை 9 மணி முதல் 12 வரை 
மாலை 6 மணி முதல் 8 மணி வரையும் 
 சனி, ஞாயிறு கிழமைகளிலும் விசேட நாட்களில்
6 மணி முதல் இரவு  8 மணி வரை.

ஸ்ரீபாஸ்கராச்சாரியார் அருளிய ஸ்ரீசிவாஷ்டகம்

3) ஸம்ஸார மாயா ஜலதி ப்ரவாஹ
ஸம்மக்ன முதபிராந்த மசாந்த சித்தம் l
த்வத்பாத ஸேவா விமுகம் ஸகாமம்
ஸுதுர்ஜனம் மாம் சிவ பாஹி சம்போ ll

சம்சாரம் என்னும் மாயா சமுத்திரத்தின் பெருக்கில் மூழ்கிக் கிடப்பவனும் சுழல்களில் உழல்பவனும் அமைதியற்றவனும், உன் பாத சேவையில் ஈடுபடுபடாதவனும் எல்லா ஆசைகளும் உள்ளவனம் மிகத் தீயவனான என்னை
அழிவற்ற சுகத்தின் இருப்பிடமான சிவமே ரக்ஷியுங்கள்.

ஓம் நமோ நமசிவாய.



Parvathamalai | பருவதமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்கிறார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதி மங்கலம் கிராமத்தில் தென்கைலாயம் என்று அழைக்கப்படும் 4560 அடி உயரம் கொண்ட பருவத மலை உள்ளது.

இந்த மலையில் மல்லிகார்ஜுசாமி கோவில் உள்ளது. மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி, தண்டவாளப்படி, ஏணிப்படிகள் உள்ளன. பவுர்ணமி மற்றும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். சித்தர்கள் வாழும் மலையான இதில் பல பேருக்கு சித்தர்கள் காட்சி கொடுத்துள்ளார்கள்.

வட மாநிலங்களில் செய்வதுபோல இங்கும் அவரவரே இறைவனுக்கு அபிஷேகம் செய்வது பெரிய பாக்கியம் ஆகும். இந்த பர்வதமலையை ஒரு முறை தரிசித்தால் பூமியிலுள்ள அனைத்து சிவாலயங்களையும் தரிசித்த பலன் உண்டு என்கிறது தல புராணம்.

சிறப்புகள்
பருவத மலையில் தீபம் ஏற்றி ஒரு நாள் அபிஷேகம் செய்தால் 365 நாட்கள் பூஜை செய்த பலன் கிடைக்கும். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு.

இந்த மலை மொத்தம் ஏழு சடைப்பரிவுகளைக் கொண்டது. 3 ஆயிரம் அடி உயரமுள்ள செங்குத்தான கடற்பாறைப்படி, தண்டவாளப்படி, ஏணிப்படி, ஆகாயப்படிகளைக் கொண்ட அதிசய மலையான இதில் எப்போதும் மூலிகைக் காற்று வீசி தீராத நோயும் தீர்க்கும்.

இம்மலையில் நூற்றுக்கணக்கான குகைகளில் சித்தர்கள் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள் என்று வரலாறு கூறுகிறது.. இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு.

இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்து பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம்.

சித்தர்கள் கழுகாகத் திகழும் திருக்கழுக்குன்றம் போல் இங்கும் மூன்று கழுகுகள் இந்தமலையை சுற்றிய வண்ணம் உள்ளதைக் காணலாம். பவுர்ணமி பூஜை இங்கு சிறப்பாக நடக்கும் இத்தலத்திற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது.

அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறது தல புராணம்.

சகல நோயும் தீர்க்கும் பாதாளச் சுனைத் தீர்த்தம் இங்கு உண்டு. 26 கி.மீ., சுற்றளவுள்ள இந்த மலையை பவுர்ணமி தினத்தில் ஒரு முறை கிரிவலம் வந்தால் கைலாயத்தையே சுற்றி வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். கன்னியாகுமரி போன்று இங்கும் சூரிய உதயம், அஸ்தமனம் காண கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான். இத்தலத்திலுள்ள சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம்.

பின்_குறிப்பு
மலைக்கு வருபவர்கள் உணவு, தண்ணீர், போர்வை, டார்ச் லைட், தீபம் ஏற்றுவதற்கு விளக்கு எண்ணெய், பூஜைப் பொருட்கள் வாங்கி வருவது முக்கியம். வாழ்வில் ஒரு முறையேனும் மலைக்கு வந்து செல்வது பூர்வ ஜென்ம புண்ணியம். மலையிலுள்ள சாதுக்களின் தரிசனம் பாப விமோசனம்.

போக்குவரத்து_வசதி
சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இந்த பருவத மலைக்கு செல்ல நேரடி பஸ் வசதி உள்ளது. அல்லது திருவண்ணாமலை சென்று பின் அங்கிருந்தும் இந்த கோவிலுக்கு செல்லலாம். 



மூன்று வேளையும் நிறம் மாறும் பழமை வாய்ந்த சிவலிங்கம்

மூன்று வேளையும் நிறம் மாறும் 1000 வருடம் பழமை வாய்ந்த சிவலிங்கம்... இன்று வரை துலங்காத மர்மம்!

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் உள்ள சிவாலயத்தில் தினமும் நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் உள்ளது.

தோல்பூரில் உள்ள 1000 ஆண்டு பழமைவாய்ந்த இந்த சிவனின் பெயர் அக்ஷலேஷ்வர் மஹாதேவ் என்பதாகும். இந்த லிங்கமானது காலை, நண்பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளில் வெவ்வேறு நிறங்களில்காட்சியளிக்கிறது. இந்த அதிசயமானது வருடத்தின் அனைத்து நாட்களிலும் நிகழ்கிறது.

காலை நேரங்களில் சிவந்த நிறத்தில் காட்சியளிக்கும் இந்த லிங்கம் , நண்பகலில் காவி நிறத்தில்காட்சியளிக்கிறது,

இரவில் கருப்பாக காட்சியளிக்கிறது. மீண்டும் காலையில் சிவப்பு நிறமாக மாறிவிடுகிறது.இதுகுறித்து அங்குள்ள மக்கள் கூறுகையில் இரவெல்லாம் கருப்பு நிறத்தில் இருக்கும் இறைவன் பகலில் சிவப்பு நிறத்தில் மாறி பக்தர்களை ஆசிர்வதிப்பதாக நம்புகின்றனர்.

மேலும் இந்த ஆலயத்தில் ஏராளமான ரகசியங்கள் புதைந்திருக்கிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இங்குள்ள சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது , இந்த சிவலிங்கத்தின் உயரம் இதுவரையில் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் அடிப்பகுதி ஆயிரம் அடிகளையும் தாண்டி, தரைக்குக் கீழே புதைந்து கிடக்கிறது. சிவன் அடிமுடி காண முடியாதவர் என்பதை உணர்த்துகிற இது ஆலயமாக விளங்குகிறது.

பூமியில் சிவன் காலடி எடுத்து வைத்த ஒரே இடம் இது தான். இந்த இடம்தான் பூமியின் மையமாக இருக்கும் என கோவில் நிர்வாகத்தினர் கூறுகின்றனர். திருமணம் ஆகாதவர்கள் இந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் மனதுக்குப் பிடித்த வாழ்க்கைத்துணை அமைந்துவிடும் என்கின்றனர்.

திருவாதவூர் கோயில்

நான் கோயிலுக்கு உள்ளே நுழையும் போது இடதுபுறம் ஒரு கிணறு போன்ற தோற்றம் கொண்ட ஒரு தெப்பக்குளமும், வலது பக்கத்தில் ஒரு பெரிய உயரமான கல் மண்டபமும் உள்ள பெரிய வெளிப் பிரகாரமும், அதற்கு அடுத்து இருந்த இரண்டாம் பிரகாரத்தில் இடது பக்கத்தில் பிரகாரத்தின் சுவரின் நடுவே இருந்த ஒரு வாயில் அம்மன் சன்னதி செல்லும் பாதை என்ற அறிவிப்புடன் இருந்ததையும் பார்க்க முடிந்தது.

கொஞ்சம் படிகள் ஏறிச் சென்று தான் சிவன் சன்னதி அடைய முடியும் என்பதைச் சொல்லும் கல் படிக்கட்டுகள் இருந்தன. கோயிலில் மனித நடமாட்டம் இருப்பதாக தெரியவில்லை. பணியாளர்களும் கூட யாரும் இல்லை என்று தான் தோன்றுகிறது. 

விஸ்தீரமான பிரகாரத்தில் கல்தளம் எங்கும் வெளிச்சம் மற்றும் வெயிலையும் அமைதியையும் தனிமையையும் பரப்பி காவலுக்கு வைத்து விட்டுத் தான் பணியாளர்கள் அருகில் எங்கோ சென்றிருந்தனர் போலும். வெகுகாலம் அதே இடத்தில் அசைவின்றி இருந்ததால் இறுகிப் போயிருந்த அந்தப்படிக்கட்டுகளில் ஏறி சுவாமி சன்னதிக்கு உள்ளே நுழைந்த போது, அத்தனை நேரம் பழகிய வெயிலுடனான நட்பை சட்டென முறிக்க மணமின்றி என் கண்கள் தயங்குகையில், பிரகாரத்தின் வெளிச்சத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கொஞ்சம் இருளாக இருப்பது போலத் தோன்றிய சுவாமி சன்னதி என் கண்களின் மீது விசனம் கொண்டு மேலும் இருளைப் போர்த்திக்கொண்டு விட்டது.

பிறகு என் கண்கள் அந்த சன்னதியில் இருந்த இருளோடு பழகத் துவங்கிய போது தான் சுவாமி சன்னதி நிதானமாக தன்னைப் புலப்படுத்தியது. அப்போது என் கண்களுக்குப் புலப்பட்ட கருவறையில் கம்பீரமாக வீற்றிருந்த சிவலிங்கத் திருமேனியின் அழகைக் கண்டு உற்சாகம் கொண்டது மனது. அந்த சிவலிங்கத் திருமேனிக்குப் பின்புறம் ஐந்தாறு துண்டுகளாக இருந்த கண்ணாடியை ஒரே தகரத்தில் அல்லது தட்டில் இணைத்து அதன் முன் ஏற்றி வைக்கப் பட்டிருந்த அகல் விளக்கு எண் திசைகளிலும் பிரகாசமான ஒளியைப் பரப்பியதில் கருவறையில் அழகு பிரகாசம் கொண்டது.

சன்னதியில் குருக்கள் கூட இல்லாமல் போனதும் கூட நல்லது தான். சிவனோடு நாம் பேசுவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதாக எண்ணம் கொண்டது மனது. புதிதாக நான் பார்த்த அந்தக் கோயில் மற்றும் அதன் அழகு குறித்த மகிழ்ச்சி பரவசம் எல்லாவற்றையும் தாண்டி, சன்னதியில் யாருமற்ற தனிமையில் எங்கோ என் மனதின் ஓரத்தில் இருந்த எனக்குப் பிடிக்காத ஆனாலும் வேறுவழியின்றி நான் பார்த்து வந்த என் பஞ்சாலை வேலைக்குப் பதிலாக ஏதாவதொரு நல்ல வேலை வேண்டும் என்று ஆவல், ஆனால் அது நாள் வரை அது கிடைக்கவில்லை என்பதான என் ஆற்றாமையை என் மனக்குறையை இத்தலத்து இறைவனிடம் சொல்லி அழலாம் (சொல்ல வேண்டும் என்று தான் முதலில் தோன்றியது. பிறகு தான் வந்தது அழலாம் என்ற எண்ணம்) என்று கண்களை மூடிக்கொண்டு, பிரார்த்தனை செய்து கொண்டு  (வெளியே கேட்காதபடி அழுதபடி)

நான் இருந்த போது ஏதோ மெல்லிய சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண்களைத் திறந்து பார்த்தால், வெளியே இருந்த வெயிலோ காற்றோ தான் சத்தம் கொடுத்தது என்று நினைக்கும்படி ஆளரவமற்று வெறுமையாய் இருந்தது சன்னதி.

அப்போது பிரபஞ்சம் முழுவதும் ஓசையின்றி போனதோ அல்லது என் காதுகளில் தான் ஏதும் கோளாறோ என்று நான் நினைக்கும் படி அங்கு நிலவிய அதீதமான அமைதி எனக்கு அச்சமூட்டுவதாக இருந்தது.  ஆனால் அந்த நிலை வெகுநேரம் நீடிக்கவில்லை. தாள முடியாத அந்த அமைதியைக் கலைத்து மென்மையாக மிகவும் மென்மையாக யாரோ மூச்சு விடுவது போல ஒலி கேட்டது. என்னைத் தவிர அருகில் வேறு யாரும் இல்லாதபோது எங்கிருந்து வருகிறது இந்த மூச்சுச் சத்தம் என்று தெரியாமல் நான் திடுக்கிட்டு யார் என்று தெரியவில்லையே என்று நினைக்கையில், அது நந்தி சிலையில் இருந்து தான் வருகிறதோ என்று எனக்குத் தோன்றியது. அது உண்மை தான் என்று நினைக்கும் படியும் இருந்தது.

பயத்துடனும் பரபரப்புடனும் அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்த என் கண்களில் தட்டுப்பட்டது எதிரே உலோகத் திருமேனி வடிவில் இருந்த நடராஜர் சிலை. அந்த சிலை கூட அசைந்தது போலவும், அதிலும் நான் வரும் போது பார்த்தது போல இல்லாமல் இப்போது தன் கால்களை மாற்றி ஆடியிருப்பது போலவும் தோன்றியவுடன், பயத்தில் ஈசுவரனைப் பார்த்தேன். அந்த மூச்சுக் காற்று அந்த அருஉருவத் திருமேனியில் இருந்து தான் வருகிறதோ என்று நான் நினைக்கும் படி கருவறையில் லிங்கத் திருமேனிக்கு அருகில் இருந்த சரவிளக்கில் இருந்த தீபம் அந்த மூச்சுக் காற்றில் இலேசாக அசைவது போலத் தெரிந்தது.

மனம் அச்சமடைந்த நிலையில், ஓடு ஓடு உடனே இந்த இடத்தை விட்டு ஓடு என்று மனதுக்குள் ஒரு குரல் கேட்டது. இறைவன் உயிரோடு இருப்பது போல் தோன்றுகிறது எனவே உடனே வெளியே வா என்று மனம் சொல்கையில், இன்னும் ஒரு குரல் நல்லது தானே, இறைவனை நேரில் பார்க்கக் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாதே என்று சொல்கையில், எனக்குப் புரிந்தது. கல்திருமேனியின் அசைவு அல்லது அசைந்ததான என் பிரம்மையையே என்னால் தாங்க முடியவில்லை எனில், இறைவனே நேரில் தோன்றினால் அந்த தீட்சன்யத்தை பார்க்கக்கூடிய அல்லது தாங்கக்கூடிய சக்தி எனக்கு இல்லை என்பது புரிந்தது‌. 

அதனால் தான் கண்டவர் விண்டதில்லை. விண்டவர் கண்டதில்லை என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது என்று அந்த படபடப்பிலும் எனக்குத் தோன்றியது. அவசரம் அவசரமாக நான் சன்னதியை விட்டு வெளியேற நினைத்த போது ஆபத்பாந்தவன் போல கோயில் குருக்கள் உள்ளே நுழையு , அதுவரை என்னை அச்சமூட்டி மூச்சுத் திணறும்படி செய்த அந்த அமைதி , மறைத்துக் கொண்டு இருந்த மேகங்கள் நகர்ந்து வழிவிட சூரியன் வெளிப்படுவது போல அல்லது கற்பூரம் காற்றில் கரைந்து போல கரைந்து தான் போனது போலும்.
( இந்த அனுபவத்தை ஒரு கவிதையாக எழுதினேன். அது காலச்சுவடு இதழில் வெளிவந்தது. அதனை இணைத்து உள்ளேன்.)

ஸ்தல வரலாறு அல்லது ஸ்தல புராணம் என்பது பற்றி எல்லாம் தெரியாமல், திருவாதவூர் கோயிலிற்குச் சென்ற நான் அந்த ஊரின் கோயிலின் பின்னணி தெரிந்த பிறகு இப்படி கதைகள் அல்லது சரித்திர பின்னணி உடைய அழகிய பெரிய கோயில்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் (சைவ வைணவ பேதமின்றி) ஊர் ஊராகச் சென்று கோயில் கோயிலாகப் பார்க்கத் தொடங்கி, பின்னாளில், அப்படி பிரசித்தி பெற்ற ஏராளமான சரித்திரப் பின்னணி கொண்ட ஒரு பெரிய சிவாலயத்தில் ஒரு திருக்கோயில் செயல் அலுவலராக நான் பணியில் சேர்ந்ததும் நிகழ்ந்தது.

நான் திருவாதவூர் கோயிலுக்கு முதன் முதலாக வந்த போது, எனது பிரார்த்தனையை வெறுமனே மனதுக்குள் சொல்லிவிட்டுப் போகாமல், சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவதினி என்று வாய்விட்டு அழத் தோன்றியதற்குக் காரணம் மாணிக்கவாசகர் பிறந்த அந்த மண்ணை நான் மிதித்ததாலும், அந்த மண்ணின் தாக்கத்தாலும் தான் என்பது தானே உண்மை. 

வாதவூரான் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்.



சிதம்பரம் தீர்த்த மஹிமை

சிதம்பரத்திலே பத்துத் தீர்த்தங்கள் உள்ளன. 

அவை: -

1. சிவ கங்கை - இது கனகசபைக்கு வடக்கே உள்ளது.

2. குய்ய தீர்த்தம் - இது திருக்கோயிலுக்கு வடகிழக்கே உள்ள சமுத்திரத்திற் பாசமறுத்த துறை.

3. புலிமடு - இது திருக்கோயிலுக்குத் தெற்கே உள்ளது.

4. வியாக்கிரபாத தீர்த்தம் - இது திருக்கோயிலுக்கு மேற்கே, திருப்புலீச்சுரத்துக்கு எதிரே உள்ளது. இது இளமைநாயனார் குளம் எனவும் பெயர் பெறும்.

5. அனந்த தீர்த்தம் - இது திருக்கோயிலுக்கு மேற்கே திருவனந்தேச்சுரத்துக்கு முன் உள்ளது.

6. நாகசேரி - இது திருவனந்த்தேச்சுரத்துக்கு மேற்ௐஏ உள்ளது.

7. பிரம தீர்த்தம் - இது திருக்கோயிலுக்கு வடமேற்கே திருக்களாஞ்சேரியில் உள்ளது.

8. சிவப்பிரியை - இது திருக்கோயிலுக்கு வடக்கே பிரமசாமுண்டி கோயிலுக்கு முன்னே உள்ளது.

9. திருப்பாற் கடல் - இது சிவப்பிரியைக்குத் தென்கிழக்கே உள்ளது.

10. பரமானந்த கூபம் - இது கனகசபைக்குக் கிழக்கே உள்ளது.


சிவகங்கை சிவவடிவம். அது கோடி ஜன்மார்ஜிதமான பாவ சமூகங்களைத் தனது மகாத்மிய புண்ணிய சிரவணத்தினாற் போக்க வல்லமையுள்ளது. அச்சிவகங்கையின் தென்கரையில் சிவபெருமான் ஆநந்தத்தாண்டவம் செய்துவருகின்றார். அத்தீர்த்தம் உலகின் கண்ணுள்ள எல்லாப் புனித தீர்த்தங்களிலும் மிகப் புனிதமுடையது.

 

புண்ணியத்தை விருத்திசெய்து வீடளித்தற்குப் பெரிய காரணமானது. தங்கமயமான பங்கய மலர்ந்து எங்கும் மணம் வீசும் அத்தீர்த்தத்தில் பக்தியில்லாது, விளையாட்டாகவாயினும் அருந்தல் குளித்தல் ஸ்நான முதலியவைகள் செய்தவரைப் பார்த்த எமனுடைய ஹிருதயம் நடுங்கும். அவர்களுடைய வரவை நினைத்துச் சிவலோகம் விசாலத்தை அபேக்ஷிக்கும். 


புண்ணியம் நிறைந்த அத்தீர்த்தத்தில் ஒருமுறை ஸ்நானஞ் செய்தவன் பிறகு எத்தலத்தில் எவ்விதமா யிருப்பினும் சிவலோகத்தை யடைவான். அதில் ஸ்நானஞ்செய்து, சிற்றம்பலத்தில் நர்த்தனஞ் செய்யும் சிவபெருமானைத் தரிசித்துச் சிவ பஞ்சாக்ஷரத்தை ஆயிரத்தெட்டு உரு ஜெபித்தவன் சகல பாவங்களினின்றும் விடுபட்டு சிவரூபத்தை யடைவான். மேஷ சங்கரமணத்தில் ஸ்நானஞ் செய்தவர்கள் உடனே மகா பாவங்களினின்றும் விடுபடுவார்கள். 


ஆனிமாசப் பிரவேசத்திலும், அந்தமாசத்திய கிருஷ்ணபக்ஷ அஷ்டமியிலும் ஸ்நாநஞ் செய்தவர்கள் அளவிறந்த சிவ புண்ணியங்களை அடைவார்கள். துலா மாசத்தில் உத்திர நக்ஷத்த்ரத்தில் ஸ்நானஞ் செய்தவர்கள் ஜனன மரணத்தினின்றும் நீங்குவார்கள். தை மாசத்தில் புஷ்ய நக்ஷத்திரத்தில் ஸ்நானஞ் செய்தவர்கள் தேவர்கட்கெல்லாம் தலைவராவார்கள். பங்குனி மாசத்தில் உத்திர நக்ஷத்திரத்தில் ஸ்நானஞ் செய்தவர்கள் சிவபெருமானது சாரூப்பியத்தை யடைவார்கள். சுக்கிரவாரத்தில் ஸ்நானம் பண்ணினவர்களின் புண்ணியவிசேஷத்தைச் சொல்ல முடியாது. 


மாசிமாசம் கிருஷ்ணபக்ஷம் அஷ்டமியில் ஸ்நானஞ் செய்தவர்கள் பிதுர் குலங்களில் நூறு குலங்களை மோக்ஷத்திற் சேர்ப்பார்கள். ஆவணி மாசத்தில் ஸ்நானஞ் செய்து தர்ப்பணஞ் செய்தவர்கள் இருபத்தொரு குலங்களைத் திருப்தி செய்விப்பார்கள். மார்கழி மாசத்தில் சுக்கில பக்ஷத்திலாவது கிருஷ்ண பக்ஷத்திலாவது பிதுருக்களை உத்தேசித்து அச் சிவகங்கைக் கரையில் சிராத்தஞ் செய்பவர்கள் ஏழு குலங்களைத் தாரணஞ் செய்விப்பார்கள். சந்திர சூரியர்களுடைய கிரஹண காலங்களிலும், திருவாதிரை நக்ஷத்திரத்திலும் ஸ்நானஞ் செய்து சிராத்தம் புரிபவர்கள், கதியற்றவர்களாய்ப் பசியாலும் தாகத்தாலும் வருந்துகிறவர்களான தமது குல பிதுருக்களைப் பிரமகற்பம் வரையில் நித்திய திருப்தர்களாகச் செய்வார்கள். அப் புண்ணிய தடாகக்கரையில் பிராமண போஜனஞ் செய்து வைப்பவர்கள் தமது வம்சங்களுடன் சிவசாயுஜ்ஜியத்தை யடைவார்கள்.


பரமானந்த கூபம் சிவசத்தி வடிவம். அதிலே சுக்கிர வாரம் நவமி என்பவைகளிலே ஸ்நானஞ் செய்வது விசேஷம். ஐப்பசிமாச சுக்கிலபக்ஷநவமி, மாசிமாச சுக்கிலபக்ஷ சதுர்த்தசி, சூரியகிரஹணம், சந்திர கிரஹணம் என்பவைகளிலே ஸ்நானஞ் செய்வது மகாவிசேஷம். பரமானந்த கூபத்திலே ஐப்பசி மாசம் சுக்கில பக்ஷ நவமியிலே ஸ்நானஞ் செய்து அன்று முதல் ஒரு வருஷகாலம் இடைவிடாது நாடோறும் அத்தீர்த்தத்தில் ஓர் உழுந்தளவு உட்கொண்டு வருவது உத்தமோத்தம புண்ணியம்.


ஸ்ரீ மார்கண்டேயர் கோயில் | Markandeya Temple

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த (என்றும் பதினாறு)


திருமணல்மேடு ஸ்ரீ மார்கண்டேயர் கோயில் திருகடையூர் அருகே உள்ளது. இது முற்றிலும் ஒரு சைவ திருதலம் ஆகும். இந்த கோவில் திருமணல்மேடு என அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமத்தில் திருகடையூரிலிருந்து 0.5.km தென்மேற்கில் அமைந்துள்ளது.


இங்கே அவரது பெற்றோர் ஒரு ஆண் குழந்தை வரம் வேண்டி பக்தியுடன் தங்களை அர்ப்பணித்து பிரார்த்தனை மற்றும் சிறப்பு சிவ பூஜைகள் செய்தனர். அதன் பலனாக சிவன் என்றும் பதினாறு வயது மார்கண்டேயரை தந்தருளினார். இந்த தலத்தில் ஸ்ரீ மார்கண்டேயர் சிவ பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்து என்றும் பதினாறு என்று சொல்லும் சிரஞ்சிவியின் அடையாளமாக விளங்கினார்.


இந்த கோவிலில், ஸ்ரீ மார்கண்டேயர் சிவபெருமான் முன் மூலவராய் அமர்ந்து பக்தர்களுக்கு நீண்ட வளமான வாழ்க்கை அமைய ஆசீர்வதிக்கிறார். ஸ்ரீ மார்கண்டேயரை ஒரு உண்மையான பக்தன் என்று சிவபெருமான் குறிப்பிட்டார். இதனால் இந்த கோயில் தனி முக்கியத்துவத்தை கொண்டுள்ளது.


திருகடையூர் வந்து இறைவன் ஸ்ரீ அமிர்தகடேஸ்வர் மற்றும் ஸ்ரீ அபிராமியை வளமான வாழ்க்கை பெற பிரார்த்தனை செய்யும் பக்தர்கள் கூட ஒரு முழு வளமான வாழ்க்கை மற்றும் அவர்கள் குடும்பத்தின் நலனுக்காக இந்த ஸ்ரீ மார்கண்டேயர் கோவிலுக்கும் வந்து தரிசித்து வழிபட வேண்டும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் கோவில் ஆச்சாரியர்கள் தமிழ் மாதம் (மீனா மாசம்) பங்குனியில் அசுவதி நக்ஷத்திர நாளிள் ஒரு முக்கியமான பூஜா செய்வார்கள்.


அன்று தான் சிவபெருமான் தனது பக்தன் ஸ்ரீ மார்கண்டேயரை ஒரு கடம் கங்கை நீர் கொண்டு புனிதபடுத்தி ஆசிர்வதி த்ததாக கூறப்படுகிறது. இங்கு பகவானுக்கு பூஜைகள் செய்ய விரும்பும் பக்தர்கள் ஸ்வாமி அம்பாளுக்கு திருகல்யாணம் செய்வித்து சிறப்பு ஹோமம் செய்து வழி பட்டால் கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. திருமணமாகாத மக்களுக்காக ஸ்வாமிஅம்பாளுக்கு திருகல்யாணம் செய்வித்து சிறப்பு ஹோமம் செய்து வழி பட்டாலும் அவர்களுக்கு விரைவில் திருமணம்கைக்கூடும் எனவும் நம்பப்படுகிறது.


பஞ்சக்ஷர ஹோமம் என்று ஒரு சிறப்பு ஹோமமும், சங்காபிஷேகமும் இத்திருதலத்தில் செய்து வழிபட்டால் நோயற்ற வாழ்வு வாழ கிடைக்கும் என ஐதிகம்.


இந்த ஸ்ரீ மார்கண்டேயர் கோவிலிலுள்ள ஸ்ரீ மாஹாமேரு (மரகதம்) சம்ப்ரொக்ஷனத்தை மறவாமல்பக்தர்கள் பார்வையிட வேண்டுகிறோம்.



Sri Thenthiruvalavai Swamy koil Sivan Temple | தென் திருவாலவாய் திருக்கோயில்

தென் திருவாலவாய் திருக்கோயில் , தெற்கு மாசி வீதி , மதுரை :


மதுரையில் உள்ள சிவனின் ஸ்தலங்களில் இது அக்னித் தலம் இந்த தென் திருவாலவாய் கோயில். சிவனுக்கும் , மீனாட்சிக்கும் தனித்தனி கோயில் கட்டப்பட்டுள்ளது. சகல பிணிகள் நீக்கும் ஸ்தலம். தலவிருட்சமாக ஆலமரம் உள்ளது. சுவாமியின் பெயர் சொக்கநாதர் / திருவாலவாயர். மதுரை நகரின் பரபரப்பான சாலைகளில் ஒன்றான தெற்குமாசி வீதியில் சாலை முகப்பிலேயே வடக்கு நோக்கி அமைந்துள்ளது .


இவ்வழியே போகும்போது இக்கோயில் பார்த்திருப்போம் ஆனால் உள்ளே சென்று திருவாலவாயரை தரிசித்தது இல்லை . சமீபத்தில் இக்கோயில் குறித்து மதுரையிலேயே பஞ்ச பூத ஸ்தலங்கள் உள்ளதென்றும் அதில் ஒன்று தென் திருவாலவாய் கோயில் என்றதும் இன்று நேரே சொக்கநாதரிடம் சரணடைந்தேன் . திருவிளையாடற் புராணக்கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது. திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற தலம்.

தலபெருமை:

அது என்ன தென்திருவாலவாய் : பண்டைய காலத்தில் திருவிளையாடல் புராணத்தில் மதுரைக்கு வழிகாட்டிய படலம் உண்டு. ஒரு காலத்தில் கடல் பொங்கி மதுரை மாநகரமே எல்லைகள் எல்லாம் தெரியாமல் குறுகிப்போய், மதுரை நகரின் எல்லை எதுவென்ற‌ே தெரியாமல் போனது. அப்படி கடல் பொங்கி குறுகிய மதுரையை முந்தைய அளவிற்கே மீண்டும் அமைக்க விரும்பிய சேகர பாண்டிய மன்னன் சிவ பெருமானிடம் வேண்டுகிறான். அப்போது சிவபெருமான் ஆலவாய் என்றழைக்கப்படும் ஒரு பெரிய பாம்பை வீசி போடுகிறார். போட்டு விட்டு அந்த பாம்பு மதுரைய‌ையே ஊரின் முழுக்க வட்டமடித்து காட்டுகிறது. அப்போது தென்திருவாலவாய் கோயில் இருக்கும் இடத்தில்தான் அந்த பாம்புடைய வாயும், வாலும் ஒன்று சேர்ந்தது. அதனால்தான் இந்த கோயிலும் தெற்கு திசையில் உள்ளது. அதனால் தென்திருவாலவாய் என்று பொருள்படுகிறது. ஆலவாய் என்ற பாம்பு, தெற்கு திசை எல்லாம் சேர்ந்து தென் திரு ஆலவாய் என்று பெயர் வந்தது.

அஸ்வத்தபிரதட்சணம் : இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது. ‌மேலும் நீண்ட ஆயுள் வேண்டுபவர்கள் இத்தலத்துக்கு வந்து இந்த அஸ்வத்தபிரதட்சணம் அதாவது 108 முறை வலம் வந்து வணங்குகின்றனர். இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வதும் ஏராளமாக நடக்கிறது. அவர்களே சதாபிசேகமும் (80) செய்து நல்ல ஆயுளை அடைகின்றனர்.


மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் பழைய சொக்கநாதரை வழிபட்டால் செல்வம் செழிக்கும். இம்மையில் நன்மை தருவாரை வணங்கினால் பதவி கிடைக்கும், தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. தவிர இந்த நான்கு ‌‌கோயில்களுக்கும் நடுவில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டால் இந்நான்கும் கிடைக்கும். இங்குள்ள மூர்த்தி மதுரையில் உள்ள தலங்களில் அளவில் பெரியவர்.


எமன் வழிபட்ட தலம் : மனிதனுக்கு மரணத்தை விடக் கொடிய பகைவனும் இல்லை. அந்த மரணத் துயரை மாற்றும் வைத்தியனை விடச் சிறந்த நண்பனும் இல்லை. இத்தகைய வைத்தியநாதப்பெருமான் எழுந்தருளிக் காலன் வருங்கால் காட்சி கொடுக்கக் காத்திருக்கும் திருத்த‌லமே தென் திருவாலவாய் ஆகும். தனக்கு நோய் நொடி வந்து உயிருக்கு பங்கம் வருமோ எனும் பயம் எல்லோர் உயிரையும் எடுக்கும் எமனுக்கே வந்து விடுகிறது. சிவபெருமானை வணங்க அவரும் காட்சி தருகிறார். அப்போது தென்திருவாலவாய் க‌ோயிலுக்கு சென்று வழிபட்டு அந்த திருநீற்றை பூசு., இனி உனக்கு மரணபயமே கிடையாது என்கிறார். எமனும் வந்து வழிபட்டு தன் மரணபயம் நீங்கப் பெற்றான். அத்தகையை சிறப்பு வாய்ந்த தலம் இது.

தல வரலாறு:

மதுரை மாநகரில் சைவ சமயமும் சமண சமயமும் தீவிரமாக இருந்த சமயம். அப்போது மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் கூன்பாண்டியன். அவர் சைவ சமயத்தை சேர்ந்தவன். ஆனால் தீடீரென்று சமண சமயத்திற்கு மாறிவிடுகிறான். அவன் மனைவி மங்கையர்க்கரசி சைவ சமயத்தை சார்ந்தவள். மிகவும் தீவிர பற்றுள்ளவள். கணவனின் திடீர் மாற்றம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அதனால் சிவபெருமானிடம் சென்று மனமுருக அழுது வேண்டுகிறாள். அப்போது சிவபெருமான் கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் தருகிறார். உடம்பு பூராவும் உஷ்ணத்தால் பாதிக்கப்படும் மிகவும் கொடிய நோய் அது. கூன்பாண்டியனால் அந்த நோயை தாங்க முடியவில்லை. அப்போது சமணர்கள் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்க்கின்றனர். நோய் குணமாகவில்லை. அப்போது மங்கையர்க்கரசியின் கனவில் சிவபெருமான் தோன்றி தென்திருவாலவாய் கோயிலுக்கு சென்று ஞானசம்பந்தரால் திருநீற்றுப்பதிகம் பாடி அந்த சுவாமிக்கு அனைத்து அபிசேக அர்ச்சனைகளும் ‌செய்து அந்த திருநீற்ற‌ை எடுத்து உன் கணவனான பாண்டிய மன்னன் மீது பூசி விட்டால் அந்த வெப்பு நோய் தீர்ந்து விடும் என்று கூறுகிறார். உடனே அதுபடியே செய்ய அந்த வெப்பு நோய் தீர்ந்து விடுகிறது.
கூன்பாண்டியன் சிவபெருமானின் இறையருளை முழுமையாக உணர்ந்து தன் அங்கமெல்லாம் ஒரு கணம் ஆடிப்போய் அவரின் கருணைக்கு தலைவணங்கி சமணத்திலிருந்து மீண்டும் சைவ சமயத்திற்கு வந்து சிவதொண்டு புரியலானார் என வரலாறு கூறுகிறது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: தெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில் இது. இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் அக்னி தலம் ஆகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது.


Maps Location : Sri Thenthiruvalavai Swamy koil Sivan Temple

Thiru Aappudayar Temple | திருஆப்புடையார் திருக்கோயில், செல்லூர், மதுரை

திருவாப்புடையார் கோயில் , செல்லூர் , மதுரை :

மூலவர்: ஆப்புடையார்
பிறப்பெயர்: கீலகேசுவரர்
அம்மன்: குறவங் குழலம்மை
பிறப்பெயர்: சுகந்த குந்தளாம்பிகை
தலமரம்: கொன்றை
தீர்த்தம்: ரிஷப தீர்த்தம் வைகை நதி
பெருமை: சுயம்பு


சிறப்பு:
1.மதுரையில் உள்ள பஞ்சபூத சிவஸ்தலங்களில், நீருக்குரிய திருத்தலம் (ஜலஸ்தலம்).
2. தேவார பாடல் பெற்ற திருத்தலம்.
பதிகம்: தேவாரம்
பாடியவர்: திருஞானசம்பந்தர்
ஊர்: செல்லூர் மதுரை
புராண பெயர்: ஆப்பனூர்


இத்தனை ஆண்டுகளில் இந்த கோயிலுக்குச் செல்லாமல் ஏன் இருந்தேன் . எப்படி தெரியாமல் போனது !! எல்லாம் இறைவன் செயல் ... அவன் அழைக்கும் வரை காத்திருந்தேன் போல... மிகவும் பழமையான் ஆலயம் .. இறைவன் சுயம்புலிங்கம். பாண்டிநாட்டு 14 ஸ்தலங்களில் இதுவும் ஒன்று . திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது.


பக்தனை குபேரனாக்கிய திருவாப்புடையார் கோவில் : 
தன்னை வழிபட்டு வந்த பக்தன் செய்த தவறையும் மன்னித்து, அவனையே குபேரனாக்கிப் பெருமை சேர்த்த திருவாப்புடையார் கோவில், மதுரை மாநகரின் செல்லூர் பகுதியில் அமைந்திருக்கிறது. 

தல வரலாறு : 
சோழாந்தக மன்னன் என்பவன் மிகச்சிறந்த சிவபக்தனாக இருந்தான். அவன் எப்போதும் சிவனை வழிபாடு செய்த பின்புதான் சாப்பிடுவான். ஒரு முறை அவன், தனது அமைச்சர் மற்றும் படைவீரர்களுடன் அருகிலிருந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அப்போது, அழகிய மான் ஒன்று அவன் கண்ணில் பட்டது. உடனே அவன், அந்த மானை விரட்டிக் கொண்டு நடுக்காட்டிற்குள் சென்று விட்டான். அந்த மான் அவனது பிடியில் சிக்காமல் காட்டிற்குள் சென்று மறைந்து விட்டது. 

மானை விரட்டிச் சென்ற மன்னன் களைப்பால் அவதியுற்றான். அப்படியே அந்தக் காட்டிற்குள் சோர்ந்து போய் அமர்ந்து விட்டான். அவன் பின்னால் சென்ற பாதுகாப்பு வீரர்கள், மன்னனின் சோர்வு நீங்க ஏதாவது சாப்பிடும்படி சொன்னார்கள். ஆனால் மன்னன், ‘சிவனுக்கு வழிபாடு செய்த பின்பே சாப்பிடுவேன்’ என்று சொல்லி மறுத்து விட்டான். 

நடுக்காட்டில் இறைவனை வழிபட வேண்டும் என்றால், சிவலிங்கத்திற்கு எங்கே போவது? மன்னனுடன் வந்த அமைச்சர், மன்னனை சாப்பிட வைப்பதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்தார். அந்தக் காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து, அதைத் தரையில் ஆப்பு போன்று அடித்து வைத்தார். 

பின்னர் அவர் மன்னனிடம் அந்த மரத்துண்டைக் காட்டி, ‘அந்தச் சுயம்புலிங்கத்தை வழிபட்டுவிட்டுத் தாங்கள் சாப்பிடலாம்’ என்று சொல்ல, சோர்வுடன் இருந்த மன்னன், அந்த ஆப்பைச் சிவலிங்கம் என நினைத்து வணங்கி விட்டு சாப்பிட்டான். அவனுக்குச் சோர்வு நீங்கிய பிறகு, தான் வணங்கியது சிவலிங்கம் அல்ல, அது ஆப்பு என்று தெரிந்தது. 

அதை நினைத்து வருந்திய மன்னன், ‘இறைவா! நான் இதுவரை உன்னை வழிபட்டு வந்தது உண்மையானால், நான் வணங்கிய இந்த ஆப்பில் இறைவனாக இருந்து அருள் புரிய வேண்டும்’ என்று மனமுருக வேண்டினான். மன்னனின் பக்தியில் மகிழ்ந்த இறைவன், அந்த ஆப்பிலேயே இறைவனாகத் தோன்றினார். ஆப்பில் எழுந்தவர் என்பதால் அவருக்கு ‘ஆப்புடையார்’ எனும் பெயர் ஏற்பட்டது. அந்த ஊரும் ‘ஆப்பனூர்’ என்றானது. 

குபேரனான பக்தன் : 
பிரம்மனின் வழியில் வந்த புண்ணியசேனன் என்கிற சிவபக்தன், தான் பல கோடி செல்வத்திற்கு உரிய வராக வேண்டும் என்று நினைத்து, இந்தக் கோவிலுக்கு வந்து கடும் தவம் இருந்து வந்தான். அவனுடைய தவத்தில் மகிழ்ந்த ஆப்புடையார், சுகந்த குந்தளாம்பிகையுடன் அவன் முன்பாகத் தோன்றினார். 

புண்ணியசேனன் தன் முன்பாகத் தோன்றிய இறைவனிடம், தன்னைப் பெரும் செல்வமுடையவராக்க வேண்டுமென்று வேண்டினான். இறைவனும் அவனைப் பெரும் செல்வமுடையவனாக ஆக்கினார். பெரும் செல்வம் கிடைத்தவுடன், அவனிடம் ‘தான்’ எனும் ஆணவமும் சேர்ந்து கொண்டது. அந்த ஆணவத்தின் காரணமாக அவன், இறைவனின் அருகிலிருந்த அம்பிகையின் அழகில் மயங்கினான். 

அதனை அறிந்த அம்பிகை அவனுடைய உயிரைப் பறித்தார். தன்னுடைய பக்தன் தெரியாமல் செய்த தவறை மன்னித்து, அவனை மீண்டும் உயிர்ப்பிக்க உதவும்படி அம்பிகையிடம் சொன்னார். அம்பிகையும் அதற்குச் சம்மதிக்க, இறைவன் அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தருளினார். இறைவனின் கருணையால் உயிர் பெற்ற அவன், தனது தவறுக்கு இருவரிடமும் மன்னிப்பு வேண்டினான். 

அவனை மன்னித்த ஆப்புடையார், அவனுக்குக் ‘குபேரன்’ என்று புதுப்பெயரிட்டுப் புதிய வாழ்வு தந்தார். மேலும் பெரும் செல்வத்துடன் வடக்கு திசையைக் காத்து வரும் பணியை அவனுக்கு வழங்கிப் பெருமை சேர்த்தார். தன்னுடைய பக்தன் தவறு செய்த போதும், அவனை மன்னித்து, அவனுக்குப் பெரும்பணி கொடுத்த பெருமை இறைவனுக்கும் கிடைத்தது. 

இந்தக் கோவிலில் மூலவரான ஆப்புடையார் சுயம்புலிங்கமாகக் கிழக்கு நோக்கிப் பார்த்த நிலையிலும், அம்மனான சுகந்த குந்தளாம்பிகையும் கிழக்கு நோக்கிப் பார்த்த நிலையிலும் இருக்கின்றனர். ஆலய வளாகத்தில் விநாயகர், முருகன், நடராஜர், காசி விசுவநாதர், மீனாட்சி ஆகியோரது சிலைகளும், நவக்கிரக சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

வழிபாட்டுப் பலன்கள் : 
• இத்தலத்து இறைவனுக்கு ஒரு நெய்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் அது ஆயிரம் பசுக்களைத் தானம் செய்ததால் கிடைக்கும் பலனுக்கு இணையானதாகும். 
• இத்தலத்து இறைவனை இளநீர் கொண்டு நீராட்டி வழிபட்டால், அது நூறு அசுவமேத வேள்வி செய்வதால் கிடைக்கும் பலனைத் தரக்கூடியது. 
• தாங்கள் செய்த தவறுகளால் அனைத்தையும் இழந்து வறுமைக்குள்ளானவர்கள், தங்களது தவறுகளை உணர்ந்து, இங்கு வந்து இறைவனை வழிபட்டால், அவர்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவார்கள். 
• இக்கோவிலில் இருக்கும் முருகப்பெருமானை செவ்வாய் தோஷமுடையவர்கள் வழிபட்டால், அவர்களுடைய தோஷம் நீங்கிச் சிறந்த பலன் கிடைக்கப் பெறுவார்கள். 
• இக்கோவிலில் இருக்கும் இறைவியான சுகந்த குந்தளாம்பிகையை வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகும் பலனைப் பெறுவார்கள். 

இறைவனின் சிறப்பு : 
இந்தக் கோவில் மூலவரான சுயம்புலிங்கம் சிறியதாக இருப்பினும், இவரது பெருமை உயர்ந்தது என்கின்றனர். மலைகளில் மேருவைப் போலவும், பசுக்களுள் காமதேனுவைப் போலவும், விண்மீன்களுக்கிடையே சந்திரனைப் போலவும், ஒளியுடைய பொருட்களுள் சூரியனைப் போலவும், கொடையாளிகளுள் மேகத்தைப் போலவும், புருஷர்களுள் விஷ்ணுவைப் போலவும், இது போன்று எவையெல்லாம் சிறப்புடையதோ, அதே போல் இங்குள்ள இறைவனான ஆப்புடையார் மற்ற சுயம்புலிங்கங்களை விடச் சிறப்பு மிக்கவர் என்றும், இவரை வணங்கினால், அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று இக்கோவிலுக்கான தலபுராணம் கூறுகிறது. 

* சோழாந்தகனின் மரபு வழியில் வந்த சுகுணபாண்டியன் என்பவனது ஆட்சியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்போது இக்கோவில் அர்ச்சகர், நெல்லுக்குப் பதிலாக, வைகை ஆற்று மணலைக் கொண்டு சமைத்தார். அப்போது அந்த மணல் அன்னமாக மாறியது என்றும், அதனால் இத்தல இறைவனுக்கு ‘அன்னவிநோதன்’ என்கிற பெயர் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. 
* தன்னை வணங்கி வந்த பக்தன் தவறு செய்த போதும், அவனைத் திருத்தி அவனுக்குக் குபேர வாழ்வு அளித்ததால் இத்தலத்து இறைவனைக் கருணை மிகுந்தவன் என்றும் சொல்கின்றனர். 
அமைவிடம் : 

மதுரை மாநகரில் செல்லூர் பகுதியில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்லூர் செல்லும் அனைத்து நகரப்பேருந்துகளிலும் செல்ல முடியும். கோரிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் சிறிது தூரம் நடந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம். 






13 Tirthas in one well | ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள்

ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் உள்ள அதிசயம்! பித்ரு சாபம் நீக்கும் அற்புத திருத்தலம்!

மனிதர்கள் வாழ்வில் எல்லாவிதமான இன்பங்களையும். பேறுகளையும் அடைய விடாமல் தடுத்து நிறுத்துவது முன்னோர்கள் சாபம் எனப்படும் பித்ரு சாபம்தான். அப்படிப்பட்ட பித்ரு சாபங்களை நீக்கும் திருத்தலமாக திருப்பூந்துருத்தி திருத்தலம் அமைந்துள்ளது. இது சிறப்பு மிக்க சிவாலயங்களில் ஒன்று. இங்கு புஷ்பவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் சவுந்தரிய நாயகி ஆகும்.

திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும். இந்த ஆலயத்தில் ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் சங்கமித்த நிகழ்வு நடந்திருக்கிறது. அதற்கு ஒரு புராணக் கதை இருக்கிறது. ஒருமுறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக்கொண்டிருந்தனர். "ஆடி அமாவாசை அன்று, வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும்; பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் இது யாரால் சாத்தியமாகும்" என்பதாக அவர்களின் பேச்சு இருந்தது.

அப்போது அங்கிருந்த காசிப முனிவர், "ஏன் முடியாது?!. நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பித்ரு தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்" என்றார். பின்னர் அவர் ஈசனை நினைத்து தவம் இருந்தார். பல சிவ தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார்.

அங்கும் தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய ஈசன், ஆடி அமாவாசை அன்று காசிபருக்கு, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராக திருக்காட்சி கொடுத்தார். மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. காசிபர் அந்த புனித நீரில் நீராடி, ஈசனையும், அம்பாளையும் அந்த நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன் காரணமாக அவருக்கு ஈசனுடன் ஐக்கியமாகும் முக்தி நிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.

காசிப தீர்த்தம், இத்தலத்தில் சோமாஸ்கந்த மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில், தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது. இந்தத் தீர்த்தத்தின் அருகில் ஆதி விநாயகர், சம்பந்தர், அப்பர், பரவை மற்றும் சங்கிலி நாச்சியார் சமேத சுந்தரர் ஆகியோர் உள்ளனர். இந்த ஆலயத்தில் அமாவாசை தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. அதிலும் ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்; செல்வ வளம் பெருகும்; தடைகள் அகலும்; தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம்.

ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது. அன்றைய தினம் காசிப தீர்த்தத்தில் நீராடினால் 13 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய முழு பலனும் கிடைக்கும். அதே போல் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை காலங்களிலும் இந்த தீர்த்தத்தில் நீராடலாம்.

இக்கோவிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுர வாசல் வழியே உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தி மண்டபம் மட்டும் உள்ளன. நந்தி மண்டபத்திலுள்ள பெரிய நந்தி சற்றே பள்ளத்தில் இறைவன் சன்னிதிக்கு நேராக இல்லாமல் விலகியுள்ளது. வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சன்னிதி உள்ளது. இரண்டாவது உள்வாசலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம் காணப்படுகின்றன. இங்கும் நந்தி சன்னிதியை விட்டு விலகியவாறு உள்ளது.

சுவாமி சன்னிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபமும், அடுத்து நடராச சபையும் உள்ளது. உள் பிரகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சன்னிதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தென்கயிலையும், வடபுறத்தில் வடகயிலையுமாகிய கோவில்கள் விளங்குகின்றன. மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மூலவர் புஷ்பவன நாதர் எழுந்தருளியுள்ளார்.

கோஷ்ட மூர்த்தங்களில் வீணாதர தட்சிணாமூர்த்தி திருமேனியும், மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரரும் இருக்கின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்

ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்கள்

மிகவும் சுவாரசியமான - இந்த முக்கிய கோவில்களுக்கு இடையில் பொதுவானது என்னவென்று நீங்கள் யூகிக்க முடியுமா?...


1. கேதார்நாத்.
2. காளஹஸ்தி.
3. ஏகம்பரநாதன்- காஞ்சி.
4. திருமதி.
5. திருவானைகாவல்.
6. சிதம்பரம் நடராஜர்.
7. இராமேஸ்வரம்.
8. கலேஸ்வரம் என்-இந்தியா.

இவைஅனைத்தும் வடகோடி இமயமலை முதல் தென்கோடி இராமேஸ்வரம் வரை ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்கள்.

இது உண்மையில் எப்படி பல ஆண்டுகளுக்கு முன்பு அமைந்தது!. என்பது எம்பெருமான் ஈசனே!..அறிவார்.

இவை அனைத்தும் 79 ° தீர்க்கரேகையிலேயே அமைந்துள்ளன.

இந்த கோயில்களில் உள்ள இடைவெளி பலமாநிலங்களை கடந்து பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரங்கள் எப்படி இந்த துல்லியமான இடங்களை ஜி.பி.எஸ் இல்லாமல் அல்லது அத்தகைய சிம்மாசனம் போன்றவற்றை கொண்டு வந்தார்கள்.

என்பது ஆச்சரியமானதும் ஆகும்.


1. கேதார்நாத் 79.0669 °
2.காளஹஸ்தி 79.7037 °
3. ஏகம்பரநாதன்-காஞ்சி 79.7036 °
4. திருவாரமலை 79.0747 °
5. திருவண்ணாவலை 78.7108`
6. சிதம்பரம் நடராஜ 79.6954 °
7. இராமேஸ்வரம் 79.3129 °
8. காலேஷ்வரம் என்-இந்தியா 79.9067

அனைத்தும் ஒரேநேர்கோட்டில் அமையபெற்றுள்ளது.

தமிழர்கள் மதம்
1. 280 பழைமையான சிவன் கோயில்களில் *274 சிவன் கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.*
2. 108 திவ்யதேசங்களில் *96 வைணவக்கோயில்கள்* இருப்பது தமிழ்நாட்டில்.
3. சைவம் வளர்த்த *63 நாயன்மாரும் பிறந்தது தமிழ்நாட்டில்.*
4. வைணவம் வளர்த்த *12 ஆழ்வார்களும்* பிறந்தது தமிழ்நாட்டில்.
5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் *சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்.*
6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான *திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்.*
7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில்.
9. பதிணென் சித்தர்களும்* வாழ்ந்து சமாதியானது தமிழகத்தில்.
10. உலகின் முதல் சிவன்கோவில் *திரு உத்திரகோசமங்கை* இருப்பது தமிழகத்தில்
11. அது மட்டுமா *பழந்தமிழர்களின் ஐந்திணை கடவுள்கள் அனைத்தும் இந்து மத கடவுளே..,*

அவற்றுள் பிற மத கடவுள்கள் இடம் பெற வில்லை.

*குறிஞ்சி➡முருகன்*
முல்லை👉🏻 திருமால்
*மருதம் ➡ இந்திரன்*
நெய்தல் 👉🏻வருண்ன்
*பாலை➡கொற்றவை*

*தமிழகம் ஆன்மீக பூமி, சித்தர்களின் பூமி, சிவனடியார்களின் பூமி*


உத்தரகோசமங்கை | Uthirakosamangai Temple

உலகிலேயே முதன் முதலில் தோன்றிய கோவில் என போற்றி புகழப்படும் சிவபெருமான் வீற்றிருக்கும் புனித தலங்களில் ஒன்றான உத்திரகோசமங்கை.

ஆண்டவனின் அடி முடி எப்படி அறிய முடியாததோ அப்படித்தான் இந்தக் கோவிலின் பெருமையும், சிறப்பும்.
  1. திருவாரூரில் பிறந்தால் முக்தி,
  2. காசியில் இறந்தால் முக்தி.
  3. அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்பார்கள்.
  4. இங்கே உத்தர கோச மங்கை மண்ணை மிதித்தாலே முக்தி.
ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை 
ஆர் அறிவார் இவர் அகலமும் நீளமும்
பேர் அறியாத பெருஞ் சுடர் ஒன்று அதன்
வேர் அறியாமல் விளம்பு கின்றேனே…

இதுவே உலகிலேயே முதன் முதலில் தோன்றிய சிவன் கோவில் என நம்பப்படுகிறது.

ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது, இதிலிருந்தே இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.

சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும்.

உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை. மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.

இத்தல மூலவர் ‘மங்களநாதர்’ சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர். இங்கு மூன்று மூர்த்தங்கள் மங்களேச்சுவரர், மங்களேசுவரி, ஆடல்வல்லான், மூர்த்தியும் இங்கே ( நடராசர்) மரகதப் பச்சை, தீர்த்தமும் இங்கே பச்சை, விருட்சமும் இங்கே பச்சை. என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்.

கோவிலின் தொன்மை நம்மை வியக்க வைக்கிறது, மகாபாரதப்போர் 5100 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது. (கிமு 3100) அப்போதுதான் பரீஷீத்து மகராசன் காலத்தில் கலிகாலம் பிறந்தது. அந்தக் காலத்தில் இந்தக் கோவில் இருந்திருக்கிறது.

அதற்கும் முந்தியது இராமாயணக் காலம் இலங்கேசுவரன் இராவணன் இங்கே வந்து வணங்கிச் சென்றிருக்கிறான்.. இங்குள்ள மங்களேச்சுவரர் மண்டோதரிக்கு அருளியவர். சுவாமி சன்னதியின் சுவற்றில் மண்டோதரி பெயர் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத் தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி. இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.

பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள். அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள் மேலும் ராவணன்–மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது. இங்குள்ள அர்ச்சகர் கூற்றுப் படி இராவணனுக்கும், மண்டோதரிக்கும் நடந்த திருமணமே மங்களேச்சுவரர் சன்னதியில் தான் நடந்ததாம். மங்களேச்சுவரரே அதை முன்னின்று நடத்தியதாகவும் நம்பப்படுகிறது.

இராவணனைப் போல சிவ பக்தனைப் பார்க்கவே முடியாது. இந்த ஊர் மங்களேசுவர ராகிய சிவ பெருமான் இராவணன் கையில் பால சிவனாகத் தவழ்ந்த கதையும் ஒன்று உண்டு. ஆக அவன் காலத்திலும் இந்தக் கோவில் இருந்திருக்கிறது. வலை வீசி விளையாண்ட படலம் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று கேட்பதை விட ஏ.பி.நாகராசனின் திருவிளையாடல் சினிமாப் படம் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்டால் உங்களுக்கு நன்றாக விளங்கும். அதில் வரும் கடைசிக் கதைதான் இந்த வலைவீசி விளையாண்ட படலம். அது நிகழ்ந்த இடம் வேறெங்கும் இல்லை…

இங்கே தான்... இங்கே இப்போது கோவில் வாசல் உள்ள இடத்தில் தான கடல் இருந்தது. இப்போது அதே கடல் பின் வாங்கிப் பின்வாங்கி ஏர்வாடிப் பக்கம் போய்விட்டது இங்குதான் சிவபெருமான் வலைவாணனாக உருவெடுத்து வந்து சுறாவை அடக்கினார்.

அவர் மணந்த கொண்ட மீனவப் பெண்தான் மங்களேசுவரி… இப்போது நமக்கு அருள் பாலிக்கும் அம்மன். அவளுக்கு இறைவன் ஆனந்த தாண்டவத்தை அறையில் ஆடிக் காட்டினார். பிரணவ மந்திரத்தின் பெருளை உபதேசமும் செய்தார். உத்திரம் என்பது உபதேசம். கோசம் என்பது இரகசியம் அதாவது பிரணவ மந்திரம். மங்கைக்கு உபதேசித்ததால் இந்த இடம் உத்தர கோசமங்கை ஆனது. இதுதான் கோவில் உருவான வரலாறு.

கோவில் அமைப்பு

முதல் பிரகாரத்தின் வாயு மூலையில் தனது தேவியருடன் முருகப்பெருமான் நின்ற கோலத்திலும், இரண்டாம் பிரகாரத்தின் வாயு மூலையில் ஆறு திருமுகம், பன்னிரு கைகளுடன் இரு தேவியர் சூழ, மயில் மீது அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.

ஆலயத்தின் முகப்பில் இரு கோபுரங்கள் உள்ளன. வலதுபுறம் உள்ள கோபுரம் ஏழு நிலைகளுடன் எழிலாக தோற்றம் கொண்டுள்ளது. மேலும் பொதுவாக எந்தச் சிவாலயங்களிலும் பூக்களைச் சார்த்தி வழிபடும் போது சாபம் பெற்ற ஒரு பூவை மட்டும் ஒதுக்கி விடுவார்கள்…

அதுதான் தாழம் பூ.
நான் முகன் முடி கண்டதாய் பொய் சொன்ன அதே பூ, நான் முகனுக்கு வழிபாடு அற்றுப் போனது போல் சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும் உரிமையை இழந்த அதே பூ இங்கு மட்டும் தாழம் பூ சாத்தும் வழக்கம் அற்றுப் போகமல் இன்றும் தொடர்கிறது,

பொய் உரைத்தோர்களையும் மங்களேச்சுவரர் மன்னிப்பார் என்பதைக் காட்ட மட்டும் அல்ல,
பிரமனும் பெருமாளும் அடி முடி தேடியது எந்த யுகம் அதற்கும் முன்னே இந்தக் கோவில் இருந்திருக்கிறது என அதன் தொன்மையை காட்டவும்தான். இடதுபுறம் உள்ள கோபுரம். மொட்டையாக காணப்படுகிறது.

நடராசருக்கு வருடம் ஒரு முறை மட்டுமே இங்கு அபிஷேகம் செய்யப்படும்.அன்று மட்டும் அவரைக்களைந்த திருக் கோலத்தில் தரிசிக்கலாம். அதுதான் மார்கழித் திங்கள் அன்று வரும் திருவாதிரை மீதி நாட்களில் பூரா அவர் சந்தனக் காப்பிட்ட கோலத்தில் தான் இருப்பார். மார்கழி மாத திருவாதிரை க்கு முதல் நாள் பழைய சந்தனம் களையப் படும். 32 வகை அபிஷேகங்கள் அதி அமர்க்களமாக நடக்கும். அன்று இரவே புதிய சந்தனம் சாத்தப் படும்.

ஆண்டு முழுக்க ஆடல் வல்லான் திரு மேனியில் அப்பி இருந்த சந்தனம். களையப் பட்ட பின் அதைப் பெற பக்தர்களிடம் ஆவலும் போட்டாப் போட்டியும் அதிகம். எங்கும் போலவே இங்கும் போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்…! இந்தச் சந்தனம் மருத்துவக் குணம் கொண்டது. அனைத்து நோய்களையும் தீர்க்க்க வல்லது என பக்தர்கள் நம்புகின்றார்கள்.
பொதுவாக ஆலயங்களுக்குச் சென்றால் ஒரு நாள் ஒருமுறை சென்று வணங்கிவிட்டு வந்து விடுவோம்.

ஆனால் ஒரே நாளில் மூன்று வேளையும் சென்று தரிசித்து பலனை அடையும் கோவிலாக உத்திரகோசமங்கை திருத்தலம் உள்ளது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.

இத்தலத்திற்கு எப்படி செல்வது....

மதுரை - இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில்; பரமக்குடி, சத்திரக்குடி முதலியவற்றைத் தாண்டி, (இராமநாதபுரத்திற்கு 10 கி.மீ. முன்பாகவே) வலப்புறமாக பிரிந்து செல்லும் தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் சென்று, உத்தரகோசமங்கை இருப்புப்பாதை சந்திக் கடவைத் (Railway level crossing) தாண்டி, 7-கி.மீ. சென்றால் இத்தலத்தையடையலாம். சாலை பிரியுமிடத்தில் கோயில் பெயர்ப் பலகையுள்ளது. கோயில் வரை வாகனங்கள் செல்லும்.









Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...