Thiru Aappudayar Temple | திருஆப்புடையார் திருக்கோயில், செல்லூர், மதுரை

திருவாப்புடையார் கோயில் , செல்லூர் , மதுரை :

மூலவர்: ஆப்புடையார்
பிறப்பெயர்: கீலகேசுவரர்
அம்மன்: குறவங் குழலம்மை
பிறப்பெயர்: சுகந்த குந்தளாம்பிகை
தலமரம்: கொன்றை
தீர்த்தம்: ரிஷப தீர்த்தம் வைகை நதி
பெருமை: சுயம்பு


சிறப்பு:
1.மதுரையில் உள்ள பஞ்சபூத சிவஸ்தலங்களில், நீருக்குரிய திருத்தலம் (ஜலஸ்தலம்).
2. தேவார பாடல் பெற்ற திருத்தலம்.
பதிகம்: தேவாரம்
பாடியவர்: திருஞானசம்பந்தர்
ஊர்: செல்லூர் மதுரை
புராண பெயர்: ஆப்பனூர்


இத்தனை ஆண்டுகளில் இந்த கோயிலுக்குச் செல்லாமல் ஏன் இருந்தேன் . எப்படி தெரியாமல் போனது !! எல்லாம் இறைவன் செயல் ... அவன் அழைக்கும் வரை காத்திருந்தேன் போல... மிகவும் பழமையான் ஆலயம் .. இறைவன் சுயம்புலிங்கம். பாண்டிநாட்டு 14 ஸ்தலங்களில் இதுவும் ஒன்று . திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது.


பக்தனை குபேரனாக்கிய திருவாப்புடையார் கோவில் : 
தன்னை வழிபட்டு வந்த பக்தன் செய்த தவறையும் மன்னித்து, அவனையே குபேரனாக்கிப் பெருமை சேர்த்த திருவாப்புடையார் கோவில், மதுரை மாநகரின் செல்லூர் பகுதியில் அமைந்திருக்கிறது. 

தல வரலாறு : 
சோழாந்தக மன்னன் என்பவன் மிகச்சிறந்த சிவபக்தனாக இருந்தான். அவன் எப்போதும் சிவனை வழிபாடு செய்த பின்புதான் சாப்பிடுவான். ஒரு முறை அவன், தனது அமைச்சர் மற்றும் படைவீரர்களுடன் அருகிலிருந்த காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். அப்போது, அழகிய மான் ஒன்று அவன் கண்ணில் பட்டது. உடனே அவன், அந்த மானை விரட்டிக் கொண்டு நடுக்காட்டிற்குள் சென்று விட்டான். அந்த மான் அவனது பிடியில் சிக்காமல் காட்டிற்குள் சென்று மறைந்து விட்டது. 

மானை விரட்டிச் சென்ற மன்னன் களைப்பால் அவதியுற்றான். அப்படியே அந்தக் காட்டிற்குள் சோர்ந்து போய் அமர்ந்து விட்டான். அவன் பின்னால் சென்ற பாதுகாப்பு வீரர்கள், மன்னனின் சோர்வு நீங்க ஏதாவது சாப்பிடும்படி சொன்னார்கள். ஆனால் மன்னன், ‘சிவனுக்கு வழிபாடு செய்த பின்பே சாப்பிடுவேன்’ என்று சொல்லி மறுத்து விட்டான். 

நடுக்காட்டில் இறைவனை வழிபட வேண்டும் என்றால், சிவலிங்கத்திற்கு எங்கே போவது? மன்னனுடன் வந்த அமைச்சர், மன்னனை சாப்பிட வைப்பதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்தார். அந்தக் காட்டில் கிடைத்த மரத்துண்டு ஒன்றை எடுத்து, அதைத் தரையில் ஆப்பு போன்று அடித்து வைத்தார். 

பின்னர் அவர் மன்னனிடம் அந்த மரத்துண்டைக் காட்டி, ‘அந்தச் சுயம்புலிங்கத்தை வழிபட்டுவிட்டுத் தாங்கள் சாப்பிடலாம்’ என்று சொல்ல, சோர்வுடன் இருந்த மன்னன், அந்த ஆப்பைச் சிவலிங்கம் என நினைத்து வணங்கி விட்டு சாப்பிட்டான். அவனுக்குச் சோர்வு நீங்கிய பிறகு, தான் வணங்கியது சிவலிங்கம் அல்ல, அது ஆப்பு என்று தெரிந்தது. 

அதை நினைத்து வருந்திய மன்னன், ‘இறைவா! நான் இதுவரை உன்னை வழிபட்டு வந்தது உண்மையானால், நான் வணங்கிய இந்த ஆப்பில் இறைவனாக இருந்து அருள் புரிய வேண்டும்’ என்று மனமுருக வேண்டினான். மன்னனின் பக்தியில் மகிழ்ந்த இறைவன், அந்த ஆப்பிலேயே இறைவனாகத் தோன்றினார். ஆப்பில் எழுந்தவர் என்பதால் அவருக்கு ‘ஆப்புடையார்’ எனும் பெயர் ஏற்பட்டது. அந்த ஊரும் ‘ஆப்பனூர்’ என்றானது. 

குபேரனான பக்தன் : 
பிரம்மனின் வழியில் வந்த புண்ணியசேனன் என்கிற சிவபக்தன், தான் பல கோடி செல்வத்திற்கு உரிய வராக வேண்டும் என்று நினைத்து, இந்தக் கோவிலுக்கு வந்து கடும் தவம் இருந்து வந்தான். அவனுடைய தவத்தில் மகிழ்ந்த ஆப்புடையார், சுகந்த குந்தளாம்பிகையுடன் அவன் முன்பாகத் தோன்றினார். 

புண்ணியசேனன் தன் முன்பாகத் தோன்றிய இறைவனிடம், தன்னைப் பெரும் செல்வமுடையவராக்க வேண்டுமென்று வேண்டினான். இறைவனும் அவனைப் பெரும் செல்வமுடையவனாக ஆக்கினார். பெரும் செல்வம் கிடைத்தவுடன், அவனிடம் ‘தான்’ எனும் ஆணவமும் சேர்ந்து கொண்டது. அந்த ஆணவத்தின் காரணமாக அவன், இறைவனின் அருகிலிருந்த அம்பிகையின் அழகில் மயங்கினான். 

அதனை அறிந்த அம்பிகை அவனுடைய உயிரைப் பறித்தார். தன்னுடைய பக்தன் தெரியாமல் செய்த தவறை மன்னித்து, அவனை மீண்டும் உயிர்ப்பிக்க உதவும்படி அம்பிகையிடம் சொன்னார். அம்பிகையும் அதற்குச் சம்மதிக்க, இறைவன் அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தருளினார். இறைவனின் கருணையால் உயிர் பெற்ற அவன், தனது தவறுக்கு இருவரிடமும் மன்னிப்பு வேண்டினான். 

அவனை மன்னித்த ஆப்புடையார், அவனுக்குக் ‘குபேரன்’ என்று புதுப்பெயரிட்டுப் புதிய வாழ்வு தந்தார். மேலும் பெரும் செல்வத்துடன் வடக்கு திசையைக் காத்து வரும் பணியை அவனுக்கு வழங்கிப் பெருமை சேர்த்தார். தன்னுடைய பக்தன் தவறு செய்த போதும், அவனை மன்னித்து, அவனுக்குப் பெரும்பணி கொடுத்த பெருமை இறைவனுக்கும் கிடைத்தது. 

இந்தக் கோவிலில் மூலவரான ஆப்புடையார் சுயம்புலிங்கமாகக் கிழக்கு நோக்கிப் பார்த்த நிலையிலும், அம்மனான சுகந்த குந்தளாம்பிகையும் கிழக்கு நோக்கிப் பார்த்த நிலையிலும் இருக்கின்றனர். ஆலய வளாகத்தில் விநாயகர், முருகன், நடராஜர், காசி விசுவநாதர், மீனாட்சி ஆகியோரது சிலைகளும், நவக்கிரக சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

வழிபாட்டுப் பலன்கள் : 
• இத்தலத்து இறைவனுக்கு ஒரு நெய்விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் அது ஆயிரம் பசுக்களைத் தானம் செய்ததால் கிடைக்கும் பலனுக்கு இணையானதாகும். 
• இத்தலத்து இறைவனை இளநீர் கொண்டு நீராட்டி வழிபட்டால், அது நூறு அசுவமேத வேள்வி செய்வதால் கிடைக்கும் பலனைத் தரக்கூடியது. 
• தாங்கள் செய்த தவறுகளால் அனைத்தையும் இழந்து வறுமைக்குள்ளானவர்கள், தங்களது தவறுகளை உணர்ந்து, இங்கு வந்து இறைவனை வழிபட்டால், அவர்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெறுவார்கள். 
• இக்கோவிலில் இருக்கும் முருகப்பெருமானை செவ்வாய் தோஷமுடையவர்கள் வழிபட்டால், அவர்களுடைய தோஷம் நீங்கிச் சிறந்த பலன் கிடைக்கப் பெறுவார்கள். 
• இக்கோவிலில் இருக்கும் இறைவியான சுகந்த குந்தளாம்பிகையை வழிபடுபவர்களுக்குத் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணமாகும் பலனைப் பெறுவார்கள். 

இறைவனின் சிறப்பு : 
இந்தக் கோவில் மூலவரான சுயம்புலிங்கம் சிறியதாக இருப்பினும், இவரது பெருமை உயர்ந்தது என்கின்றனர். மலைகளில் மேருவைப் போலவும், பசுக்களுள் காமதேனுவைப் போலவும், விண்மீன்களுக்கிடையே சந்திரனைப் போலவும், ஒளியுடைய பொருட்களுள் சூரியனைப் போலவும், கொடையாளிகளுள் மேகத்தைப் போலவும், புருஷர்களுள் விஷ்ணுவைப் போலவும், இது போன்று எவையெல்லாம் சிறப்புடையதோ, அதே போல் இங்குள்ள இறைவனான ஆப்புடையார் மற்ற சுயம்புலிங்கங்களை விடச் சிறப்பு மிக்கவர் என்றும், இவரை வணங்கினால், அனைத்துத் தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்று இக்கோவிலுக்கான தலபுராணம் கூறுகிறது. 

* சோழாந்தகனின் மரபு வழியில் வந்த சுகுணபாண்டியன் என்பவனது ஆட்சியில் கடுமையான பஞ்சம் நிலவியது. அப்போது இக்கோவில் அர்ச்சகர், நெல்லுக்குப் பதிலாக, வைகை ஆற்று மணலைக் கொண்டு சமைத்தார். அப்போது அந்த மணல் அன்னமாக மாறியது என்றும், அதனால் இத்தல இறைவனுக்கு ‘அன்னவிநோதன்’ என்கிற பெயர் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. 
* தன்னை வணங்கி வந்த பக்தன் தவறு செய்த போதும், அவனைத் திருத்தி அவனுக்குக் குபேர வாழ்வு அளித்ததால் இத்தலத்து இறைவனைக் கருணை மிகுந்தவன் என்றும் சொல்கின்றனர். 
அமைவிடம் : 

மதுரை மாநகரில் செல்லூர் பகுதியில் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்லூர் செல்லும் அனைத்து நகரப்பேருந்துகளிலும் செல்ல முடியும். கோரிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிச் சிறிது தூரம் நடந்தும் இத்தலத்திற்குச் செல்லலாம். 






No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...