Sri Thenthiruvalavai Swamy koil Sivan Temple | தென் திருவாலவாய் திருக்கோயில்

தென் திருவாலவாய் திருக்கோயில் , தெற்கு மாசி வீதி , மதுரை :


மதுரையில் உள்ள சிவனின் ஸ்தலங்களில் இது அக்னித் தலம் இந்த தென் திருவாலவாய் கோயில். சிவனுக்கும் , மீனாட்சிக்கும் தனித்தனி கோயில் கட்டப்பட்டுள்ளது. சகல பிணிகள் நீக்கும் ஸ்தலம். தலவிருட்சமாக ஆலமரம் உள்ளது. சுவாமியின் பெயர் சொக்கநாதர் / திருவாலவாயர். மதுரை நகரின் பரபரப்பான சாலைகளில் ஒன்றான தெற்குமாசி வீதியில் சாலை முகப்பிலேயே வடக்கு நோக்கி அமைந்துள்ளது .


இவ்வழியே போகும்போது இக்கோயில் பார்த்திருப்போம் ஆனால் உள்ளே சென்று திருவாலவாயரை தரிசித்தது இல்லை . சமீபத்தில் இக்கோயில் குறித்து மதுரையிலேயே பஞ்ச பூத ஸ்தலங்கள் உள்ளதென்றும் அதில் ஒன்று தென் திருவாலவாய் கோயில் என்றதும் இன்று நேரே சொக்கநாதரிடம் சரணடைந்தேன் . திருவிளையாடற் புராணக்கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது. திருநீற்றுப்பதிகம் பாடப்பெற்ற தலம்.

தலபெருமை:

அது என்ன தென்திருவாலவாய் : பண்டைய காலத்தில் திருவிளையாடல் புராணத்தில் மதுரைக்கு வழிகாட்டிய படலம் உண்டு. ஒரு காலத்தில் கடல் பொங்கி மதுரை மாநகரமே எல்லைகள் எல்லாம் தெரியாமல் குறுகிப்போய், மதுரை நகரின் எல்லை எதுவென்ற‌ே தெரியாமல் போனது. அப்படி கடல் பொங்கி குறுகிய மதுரையை முந்தைய அளவிற்கே மீண்டும் அமைக்க விரும்பிய சேகர பாண்டிய மன்னன் சிவ பெருமானிடம் வேண்டுகிறான். அப்போது சிவபெருமான் ஆலவாய் என்றழைக்கப்படும் ஒரு பெரிய பாம்பை வீசி போடுகிறார். போட்டு விட்டு அந்த பாம்பு மதுரைய‌ையே ஊரின் முழுக்க வட்டமடித்து காட்டுகிறது. அப்போது தென்திருவாலவாய் கோயில் இருக்கும் இடத்தில்தான் அந்த பாம்புடைய வாயும், வாலும் ஒன்று சேர்ந்தது. அதனால்தான் இந்த கோயிலும் தெற்கு திசையில் உள்ளது. அதனால் தென்திருவாலவாய் என்று பொருள்படுகிறது. ஆலவாய் என்ற பாம்பு, தெற்கு திசை எல்லாம் சேர்ந்து தென் திரு ஆலவாய் என்று பெயர் வந்தது.

அஸ்வத்தபிரதட்சணம் : இக்கோயிலில் உள்ள அரசமரத்தை 108 முறை வலம் வந்து திருவாலவாய சுவாமியை நினைத்து உள்ளம் உருகி வேண்டி நின்றால், மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் கூட குணமடைந்து உடல்நலம் பெறுகிற அதிசயம் இத்தலத்தில் நடக்கிறது. ‌மேலும் நீண்ட ஆயுள் வேண்டுபவர்கள் இத்தலத்துக்கு வந்து இந்த அஸ்வத்தபிரதட்சணம் அதாவது 108 முறை வலம் வந்து வணங்குகின்றனர். இத்தலத்தில் 60ம் கல்யாணம் செய்வதும் ஏராளமாக நடக்கிறது. அவர்களே சதாபிசேகமும் (80) செய்து நல்ல ஆயுளை அடைகின்றனர்.


மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் பழைய சொக்கநாதரை வழிபட்டால் செல்வம் செழிக்கும். இம்மையில் நன்மை தருவாரை வணங்கினால் பதவி கிடைக்கும், தென்திருவாலவாய சுவாமியை வணங்கினால் மரண துன்பம் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன. தவிர இந்த நான்கு ‌‌கோயில்களுக்கும் நடுவில் உள்ள மீனாட்சி சுந்தரேசுவரரை வழிபட்டால் இந்நான்கும் கிடைக்கும். இங்குள்ள மூர்த்தி மதுரையில் உள்ள தலங்களில் அளவில் பெரியவர்.


எமன் வழிபட்ட தலம் : மனிதனுக்கு மரணத்தை விடக் கொடிய பகைவனும் இல்லை. அந்த மரணத் துயரை மாற்றும் வைத்தியனை விடச் சிறந்த நண்பனும் இல்லை. இத்தகைய வைத்தியநாதப்பெருமான் எழுந்தருளிக் காலன் வருங்கால் காட்சி கொடுக்கக் காத்திருக்கும் திருத்த‌லமே தென் திருவாலவாய் ஆகும். தனக்கு நோய் நொடி வந்து உயிருக்கு பங்கம் வருமோ எனும் பயம் எல்லோர் உயிரையும் எடுக்கும் எமனுக்கே வந்து விடுகிறது. சிவபெருமானை வணங்க அவரும் காட்சி தருகிறார். அப்போது தென்திருவாலவாய் க‌ோயிலுக்கு சென்று வழிபட்டு அந்த திருநீற்றை பூசு., இனி உனக்கு மரணபயமே கிடையாது என்கிறார். எமனும் வந்து வழிபட்டு தன் மரணபயம் நீங்கப் பெற்றான். அத்தகையை சிறப்பு வாய்ந்த தலம் இது.

தல வரலாறு:

மதுரை மாநகரில் சைவ சமயமும் சமண சமயமும் தீவிரமாக இருந்த சமயம். அப்போது மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் கூன்பாண்டியன். அவர் சைவ சமயத்தை சேர்ந்தவன். ஆனால் தீடீரென்று சமண சமயத்திற்கு மாறிவிடுகிறான். அவன் மனைவி மங்கையர்க்கரசி சைவ சமயத்தை சார்ந்தவள். மிகவும் தீவிர பற்றுள்ளவள். கணவனின் திடீர் மாற்றம் அவளுக்கு மிகுந்த வருத்தத்தை தந்தது. அதனால் சிவபெருமானிடம் சென்று மனமுருக அழுது வேண்டுகிறாள். அப்போது சிவபெருமான் கூன்பாண்டியனுக்கு வெப்பு நோய் தருகிறார். உடம்பு பூராவும் உஷ்ணத்தால் பாதிக்கப்படும் மிகவும் கொடிய நோய் அது. கூன்பாண்டியனால் அந்த நோயை தாங்க முடியவில்லை. அப்போது சமணர்கள் எவ்வளவோ வைத்தியம் செய்து பார்க்கின்றனர். நோய் குணமாகவில்லை. அப்போது மங்கையர்க்கரசியின் கனவில் சிவபெருமான் தோன்றி தென்திருவாலவாய் கோயிலுக்கு சென்று ஞானசம்பந்தரால் திருநீற்றுப்பதிகம் பாடி அந்த சுவாமிக்கு அனைத்து அபிசேக அர்ச்சனைகளும் ‌செய்து அந்த திருநீற்ற‌ை எடுத்து உன் கணவனான பாண்டிய மன்னன் மீது பூசி விட்டால் அந்த வெப்பு நோய் தீர்ந்து விடும் என்று கூறுகிறார். உடனே அதுபடியே செய்ய அந்த வெப்பு நோய் தீர்ந்து விடுகிறது.
கூன்பாண்டியன் சிவபெருமானின் இறையருளை முழுமையாக உணர்ந்து தன் அங்கமெல்லாம் ஒரு கணம் ஆடிப்போய் அவரின் கருணைக்கு தலைவணங்கி சமணத்திலிருந்து மீண்டும் சைவ சமயத்திற்கு வந்து சிவதொண்டு புரியலானார் என வரலாறு கூறுகிறது.


சிறப்பம்சம்:

அதிசயத்தின் அடிப்படையில்: தெற்கு திசைக்குத் தலைவனாகிய எமன் வழிபட்ட கோயில் இது. இக்கோயில் மதுரையில் உள்ள பஞ்ச பூத தலங்களில் அக்னி தலம் ஆகும். திருவிளையாடற் புராணக் கதைகளில் ஒன்றான மதுரைக்கு எல்லை கட்டிய படலம் நிகழப்பெற்ற கோயில் இது.


Maps Location : Sri Thenthiruvalavai Swamy koil Sivan Temple

கருத்துகள் இல்லை:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...