திருவாதவூர் கோயில்

நான் கோயிலுக்கு உள்ளே நுழையும் போது இடதுபுறம் ஒரு கிணறு போன்ற தோற்றம் கொண்ட ஒரு தெப்பக்குளமும், வலது பக்கத்தில் ஒரு பெரிய உயரமான கல் மண்டபமும் உள்ள பெரிய வெளிப் பிரகாரமும், அதற்கு அடுத்து இருந்த இரண்டாம் பிரகாரத்தில் இடது பக்கத்தில் பிரகாரத்தின் சுவரின் நடுவே இருந்த ஒரு வாயில் அம்மன் சன்னதி செல்லும் பாதை என்ற அறிவிப்புடன் இருந்ததையும் பார்க்க முடிந்தது.

கொஞ்சம் படிகள் ஏறிச் சென்று தான் சிவன் சன்னதி அடைய முடியும் என்பதைச் சொல்லும் கல் படிக்கட்டுகள் இருந்தன. கோயிலில் மனித நடமாட்டம் இருப்பதாக தெரியவில்லை. பணியாளர்களும் கூட யாரும் இல்லை என்று தான் தோன்றுகிறது. 

விஸ்தீரமான பிரகாரத்தில் கல்தளம் எங்கும் வெளிச்சம் மற்றும் வெயிலையும் அமைதியையும் தனிமையையும் பரப்பி காவலுக்கு வைத்து விட்டுத் தான் பணியாளர்கள் அருகில் எங்கோ சென்றிருந்தனர் போலும். வெகுகாலம் அதே இடத்தில் அசைவின்றி இருந்ததால் இறுகிப் போயிருந்த அந்தப்படிக்கட்டுகளில் ஏறி சுவாமி சன்னதிக்கு உள்ளே நுழைந்த போது, அத்தனை நேரம் பழகிய வெயிலுடனான நட்பை சட்டென முறிக்க மணமின்றி என் கண்கள் தயங்குகையில், பிரகாரத்தின் வெளிச்சத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கொஞ்சம் இருளாக இருப்பது போலத் தோன்றிய சுவாமி சன்னதி என் கண்களின் மீது விசனம் கொண்டு மேலும் இருளைப் போர்த்திக்கொண்டு விட்டது.

பிறகு என் கண்கள் அந்த சன்னதியில் இருந்த இருளோடு பழகத் துவங்கிய போது தான் சுவாமி சன்னதி நிதானமாக தன்னைப் புலப்படுத்தியது. அப்போது என் கண்களுக்குப் புலப்பட்ட கருவறையில் கம்பீரமாக வீற்றிருந்த சிவலிங்கத் திருமேனியின் அழகைக் கண்டு உற்சாகம் கொண்டது மனது. அந்த சிவலிங்கத் திருமேனிக்குப் பின்புறம் ஐந்தாறு துண்டுகளாக இருந்த கண்ணாடியை ஒரே தகரத்தில் அல்லது தட்டில் இணைத்து அதன் முன் ஏற்றி வைக்கப் பட்டிருந்த அகல் விளக்கு எண் திசைகளிலும் பிரகாசமான ஒளியைப் பரப்பியதில் கருவறையில் அழகு பிரகாசம் கொண்டது.

சன்னதியில் குருக்கள் கூட இல்லாமல் போனதும் கூட நல்லது தான். சிவனோடு நாம் பேசுவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதாக எண்ணம் கொண்டது மனது. புதிதாக நான் பார்த்த அந்தக் கோயில் மற்றும் அதன் அழகு குறித்த மகிழ்ச்சி பரவசம் எல்லாவற்றையும் தாண்டி, சன்னதியில் யாருமற்ற தனிமையில் எங்கோ என் மனதின் ஓரத்தில் இருந்த எனக்குப் பிடிக்காத ஆனாலும் வேறுவழியின்றி நான் பார்த்து வந்த என் பஞ்சாலை வேலைக்குப் பதிலாக ஏதாவதொரு நல்ல வேலை வேண்டும் என்று ஆவல், ஆனால் அது நாள் வரை அது கிடைக்கவில்லை என்பதான என் ஆற்றாமையை என் மனக்குறையை இத்தலத்து இறைவனிடம் சொல்லி அழலாம் (சொல்ல வேண்டும் என்று தான் முதலில் தோன்றியது. பிறகு தான் வந்தது அழலாம் என்ற எண்ணம்) என்று கண்களை மூடிக்கொண்டு, பிரார்த்தனை செய்து கொண்டு  (வெளியே கேட்காதபடி அழுதபடி)

நான் இருந்த போது ஏதோ மெல்லிய சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண்களைத் திறந்து பார்த்தால், வெளியே இருந்த வெயிலோ காற்றோ தான் சத்தம் கொடுத்தது என்று நினைக்கும்படி ஆளரவமற்று வெறுமையாய் இருந்தது சன்னதி.

அப்போது பிரபஞ்சம் முழுவதும் ஓசையின்றி போனதோ அல்லது என் காதுகளில் தான் ஏதும் கோளாறோ என்று நான் நினைக்கும் படி அங்கு நிலவிய அதீதமான அமைதி எனக்கு அச்சமூட்டுவதாக இருந்தது.  ஆனால் அந்த நிலை வெகுநேரம் நீடிக்கவில்லை. தாள முடியாத அந்த அமைதியைக் கலைத்து மென்மையாக மிகவும் மென்மையாக யாரோ மூச்சு விடுவது போல ஒலி கேட்டது. என்னைத் தவிர அருகில் வேறு யாரும் இல்லாதபோது எங்கிருந்து வருகிறது இந்த மூச்சுச் சத்தம் என்று தெரியாமல் நான் திடுக்கிட்டு யார் என்று தெரியவில்லையே என்று நினைக்கையில், அது நந்தி சிலையில் இருந்து தான் வருகிறதோ என்று எனக்குத் தோன்றியது. அது உண்மை தான் என்று நினைக்கும் படியும் இருந்தது.

பயத்துடனும் பரபரப்புடனும் அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்த என் கண்களில் தட்டுப்பட்டது எதிரே உலோகத் திருமேனி வடிவில் இருந்த நடராஜர் சிலை. அந்த சிலை கூட அசைந்தது போலவும், அதிலும் நான் வரும் போது பார்த்தது போல இல்லாமல் இப்போது தன் கால்களை மாற்றி ஆடியிருப்பது போலவும் தோன்றியவுடன், பயத்தில் ஈசுவரனைப் பார்த்தேன். அந்த மூச்சுக் காற்று அந்த அருஉருவத் திருமேனியில் இருந்து தான் வருகிறதோ என்று நான் நினைக்கும் படி கருவறையில் லிங்கத் திருமேனிக்கு அருகில் இருந்த சரவிளக்கில் இருந்த தீபம் அந்த மூச்சுக் காற்றில் இலேசாக அசைவது போலத் தெரிந்தது.

மனம் அச்சமடைந்த நிலையில், ஓடு ஓடு உடனே இந்த இடத்தை விட்டு ஓடு என்று மனதுக்குள் ஒரு குரல் கேட்டது. இறைவன் உயிரோடு இருப்பது போல் தோன்றுகிறது எனவே உடனே வெளியே வா என்று மனம் சொல்கையில், இன்னும் ஒரு குரல் நல்லது தானே, இறைவனை நேரில் பார்க்கக் கிடைக்கும் வாய்ப்பை நழுவ விடாதே என்று சொல்கையில், எனக்குப் புரிந்தது. கல்திருமேனியின் அசைவு அல்லது அசைந்ததான என் பிரம்மையையே என்னால் தாங்க முடியவில்லை எனில், இறைவனே நேரில் தோன்றினால் அந்த தீட்சன்யத்தை பார்க்கக்கூடிய அல்லது தாங்கக்கூடிய சக்தி எனக்கு இல்லை என்பது புரிந்தது‌. 

அதனால் தான் கண்டவர் விண்டதில்லை. விண்டவர் கண்டதில்லை என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது என்று அந்த படபடப்பிலும் எனக்குத் தோன்றியது. அவசரம் அவசரமாக நான் சன்னதியை விட்டு வெளியேற நினைத்த போது ஆபத்பாந்தவன் போல கோயில் குருக்கள் உள்ளே நுழையு , அதுவரை என்னை அச்சமூட்டி மூச்சுத் திணறும்படி செய்த அந்த அமைதி , மறைத்துக் கொண்டு இருந்த மேகங்கள் நகர்ந்து வழிவிட சூரியன் வெளிப்படுவது போல அல்லது கற்பூரம் காற்றில் கரைந்து போல கரைந்து தான் போனது போலும்.
( இந்த அனுபவத்தை ஒரு கவிதையாக எழுதினேன். அது காலச்சுவடு இதழில் வெளிவந்தது. அதனை இணைத்து உள்ளேன்.)

ஸ்தல வரலாறு அல்லது ஸ்தல புராணம் என்பது பற்றி எல்லாம் தெரியாமல், திருவாதவூர் கோயிலிற்குச் சென்ற நான் அந்த ஊரின் கோயிலின் பின்னணி தெரிந்த பிறகு இப்படி கதைகள் அல்லது சரித்திர பின்னணி உடைய அழகிய பெரிய கோயில்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் (சைவ வைணவ பேதமின்றி) ஊர் ஊராகச் சென்று கோயில் கோயிலாகப் பார்க்கத் தொடங்கி, பின்னாளில், அப்படி பிரசித்தி பெற்ற ஏராளமான சரித்திரப் பின்னணி கொண்ட ஒரு பெரிய சிவாலயத்தில் ஒரு திருக்கோயில் செயல் அலுவலராக நான் பணியில் சேர்ந்ததும் நிகழ்ந்தது.

நான் திருவாதவூர் கோயிலுக்கு முதன் முதலாக வந்த போது, எனது பிரார்த்தனையை வெறுமனே மனதுக்குள் சொல்லிவிட்டுப் போகாமல், சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்து அருளுவதினி என்று வாய்விட்டு அழத் தோன்றியதற்குக் காரணம் மாணிக்கவாசகர் பிறந்த அந்த மண்ணை நான் மிதித்ததாலும், அந்த மண்ணின் தாக்கத்தாலும் தான் என்பது தானே உண்மை. 

வாதவூரான் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன்.



No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...