சிதம்பரத்திலே பத்துத் தீர்த்தங்கள் உள்ளன.
அவை: -
1. சிவ கங்கை - இது கனகசபைக்கு வடக்கே உள்ளது.
2. குய்ய தீர்த்தம் - இது திருக்கோயிலுக்கு வடகிழக்கே உள்ள சமுத்திரத்திற் பாசமறுத்த துறை.
3. புலிமடு - இது திருக்கோயிலுக்குத் தெற்கே உள்ளது.
4. வியாக்கிரபாத தீர்த்தம் - இது திருக்கோயிலுக்கு மேற்கே, திருப்புலீச்சுரத்துக்கு எதிரே உள்ளது. இது இளமைநாயனார் குளம் எனவும் பெயர் பெறும்.
5. அனந்த தீர்த்தம் - இது திருக்கோயிலுக்கு மேற்கே திருவனந்தேச்சுரத்துக்கு முன் உள்ளது.
6. நாகசேரி - இது திருவனந்த்தேச்சுரத்துக்கு மேற்ௐஏ உள்ளது.
7. பிரம தீர்த்தம் - இது திருக்கோயிலுக்கு வடமேற்கே திருக்களாஞ்சேரியில் உள்ளது.
8. சிவப்பிரியை - இது திருக்கோயிலுக்கு வடக்கே பிரமசாமுண்டி கோயிலுக்கு முன்னே உள்ளது.
9. திருப்பாற் கடல் - இது சிவப்பிரியைக்குத் தென்கிழக்கே உள்ளது.
10. பரமானந்த கூபம் - இது கனகசபைக்குக் கிழக்கே உள்ளது.
சிவகங்கை சிவவடிவம். அது கோடி ஜன்மார்ஜிதமான பாவ சமூகங்களைத் தனது மகாத்மிய புண்ணிய சிரவணத்தினாற் போக்க வல்லமையுள்ளது. அச்சிவகங்கையின் தென்கரையில் சிவபெருமான் ஆநந்தத்தாண்டவம் செய்துவருகின்றார். அத்தீர்த்தம் உலகின் கண்ணுள்ள எல்லாப் புனித தீர்த்தங்களிலும் மிகப் புனிதமுடையது.
புண்ணியத்தை விருத்திசெய்து வீடளித்தற்குப் பெரிய காரணமானது. தங்கமயமான பங்கய மலர்ந்து எங்கும் மணம் வீசும் அத்தீர்த்தத்தில் பக்தியில்லாது, விளையாட்டாகவாயினும் அருந்தல் குளித்தல் ஸ்நான முதலியவைகள் செய்தவரைப் பார்த்த எமனுடைய ஹிருதயம் நடுங்கும். அவர்களுடைய வரவை நினைத்துச் சிவலோகம் விசாலத்தை அபேக்ஷிக்கும்.
புண்ணியம் நிறைந்த அத்தீர்த்தத்தில் ஒருமுறை ஸ்நானஞ் செய்தவன் பிறகு எத்தலத்தில் எவ்விதமா யிருப்பினும் சிவலோகத்தை யடைவான். அதில் ஸ்நானஞ்செய்து, சிற்றம்பலத்தில் நர்த்தனஞ் செய்யும் சிவபெருமானைத் தரிசித்துச் சிவ பஞ்சாக்ஷரத்தை ஆயிரத்தெட்டு உரு ஜெபித்தவன் சகல பாவங்களினின்றும் விடுபட்டு சிவரூபத்தை யடைவான். மேஷ சங்கரமணத்தில் ஸ்நானஞ் செய்தவர்கள் உடனே மகா பாவங்களினின்றும் விடுபடுவார்கள்.
ஆனிமாசப் பிரவேசத்திலும், அந்தமாசத்திய கிருஷ்ணபக்ஷ அஷ்டமியிலும் ஸ்நாநஞ் செய்தவர்கள் அளவிறந்த சிவ புண்ணியங்களை அடைவார்கள். துலா மாசத்தில் உத்திர நக்ஷத்த்ரத்தில் ஸ்நானஞ் செய்தவர்கள் ஜனன மரணத்தினின்றும் நீங்குவார்கள். தை மாசத்தில் புஷ்ய நக்ஷத்திரத்தில் ஸ்நானஞ் செய்தவர்கள் தேவர்கட்கெல்லாம் தலைவராவார்கள். பங்குனி மாசத்தில் உத்திர நக்ஷத்திரத்தில் ஸ்நானஞ் செய்தவர்கள் சிவபெருமானது சாரூப்பியத்தை யடைவார்கள். சுக்கிரவாரத்தில் ஸ்நானம் பண்ணினவர்களின் புண்ணியவிசேஷத்தைச் சொல்ல முடியாது.
மாசிமாசம் கிருஷ்ணபக்ஷம் அஷ்டமியில் ஸ்நானஞ் செய்தவர்கள் பிதுர் குலங்களில் நூறு குலங்களை மோக்ஷத்திற் சேர்ப்பார்கள். ஆவணி மாசத்தில் ஸ்நானஞ் செய்து தர்ப்பணஞ் செய்தவர்கள் இருபத்தொரு குலங்களைத் திருப்தி செய்விப்பார்கள். மார்கழி மாசத்தில் சுக்கில பக்ஷத்திலாவது கிருஷ்ண பக்ஷத்திலாவது பிதுருக்களை உத்தேசித்து அச் சிவகங்கைக் கரையில் சிராத்தஞ் செய்பவர்கள் ஏழு குலங்களைத் தாரணஞ் செய்விப்பார்கள். சந்திர சூரியர்களுடைய கிரஹண காலங்களிலும், திருவாதிரை நக்ஷத்திரத்திலும் ஸ்நானஞ் செய்து சிராத்தம் புரிபவர்கள், கதியற்றவர்களாய்ப் பசியாலும் தாகத்தாலும் வருந்துகிறவர்களான தமது குல பிதுருக்களைப் பிரமகற்பம் வரையில் நித்திய திருப்தர்களாகச் செய்வார்கள். அப் புண்ணிய தடாகக்கரையில் பிராமண போஜனஞ் செய்து வைப்பவர்கள் தமது வம்சங்களுடன் சிவசாயுஜ்ஜியத்தை யடைவார்கள்.
No comments:
Post a Comment