Showing posts with label Kerala. Show all posts
Showing posts with label Kerala. Show all posts

Mahadevashtami Annadanam ceyyunkal. | மஹாதேவாஷ்டமி அன்னதானம் செய்யுங்கள்.

கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமியை, மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் அழைப்பர். இந்த நாளில், அன்னதானம் செய்வது விசேஷம். இந்த அன்னதானத்தை, சிவபார்வதியே வந்து ஏற்பதாக ஐதீகம்.
இந்நாளில், அன்னதானம் செய்யக் காரணம் என்ன?

பத்மாசுரனும், அவனது தம்பி தாரகாசுரனும், தேவர்களுக்கு மிகவும் கொடுமை செய்தனர். அவர்களை அழிக்க, சிவன் முடிவெடுத்து, தன், நெற்றிக்கண்ணில் இருந்து, முருகனை உருவாக்கினார். முருகன், தாரகாசுரனை அழித்து, பத்மாசுரனை அடக்கி, சேவலாகவும், மயிலாகவும் மாற்றி விட்டார். நியாயத்துக்காக செய்த கொலையானாலும், பாவம் வந்து சேரும். 

அந்தப் பாவத்திற்கு பரிகாரம் தான், அன்னதானம். சிவன், தன் மகன் முருகனுக்கு ஏற்பட்ட இந்த பாவ தோஷத்தை நீக்க, மானிட வடிவெடுத்து, பூலோகம் வந்து, எல்லாருக்கும் அன்னதானம் செய்தார். அவர் அன்னதானம் செய்த இடம், கேரளாவிலுள்ள வைக்கம் என்ற ஊர். இதை, அவ்வூரிலுள்ள மகாதேவர் கோவில் வரலாறு கூறுகிறது.

இப்போதும், கார்த்திகை அஷ்டமியை ஒட்டி, இங்கு, 11 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. இதை, 'வைக்கத்தஷ்டமி' என்பர். இந்த தினத்தில், இங்கு, ஏராளமான பக்தர்கள் அன்னதானம் செய்கின்றனர். இந்த தானத்தை ஏற்க, சிவனே வருவதாக ஐதீகம் என்பதால், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அன்னதானம் செய்ய முடியும். அதுபோல், சாப்பிட வருவோரும், சிவனோடு அமர்ந்து சாப்பிடுகிறோம் என்ற, பரவச நிலையை அடைகின்றனர். மேலும், சிவன் பைரவராக உருவெடுத்து அந்தகாசுரன் என்ற அரக்கனை அழித்ததால், இங்கு, பைரவர் வழிபாடும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இரண்யாட்சன் என்ற அசுரனின் மகன் அந்தகாசுரன். இவன், திருமால், பிரம்மா முதலான தெய்வங்களால் கூட, அழிவு வரக் கூடாது என்ற வரத்தை, சிவனிடம் பெற்றான். இந்த வரம் காரணமாக, தேவர்களை அடிமைப்படுத்தி துன்புறுத்தி வந்தான். 'தேவர்களே... என்னை நீங்கள் அழிக்க முடியாதபடி வரம் பெற்றுள்ளேன். என் சேனைகளை நீங்கள் அழித்தால், அவர்கள், எங்கள் குலகுரு சுக்ராச்சாரியாரின் மந்திர சக்தியால், உயிர் பெற்று விடுவர். 

அதனால், தோல்வியை ஒப்புக் கொண்டு, பெண்களைப் போல உருவத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த உத்தரவை மீறினால், உங்களைக் கொன்று விடுவேன்...' என்று மிரட்டினான். இதனால், தேவர்கள் பயந்து, தங்கள் உருவத்தை பெண் உருவாக மாற்றிக் கொண்டனர். இந்நிலையிலிருந்து மீள, சிவனை சரணடைந்தனர் தேவர்கள்.தான் கொடுத்த வரத்தை, தவறாகப் பயன்படுத்திய அந்தகாசுரனின் ஆணவத்தை அடக்க முடிவெடுத்த சிவன், தன்னில் இருந்து தோன்றிய பைரவரை அழைத்து, 'பைரவா... நீ சென்று, அந்தகாசுரனின் ஆணவத்தை அடக்கி வா...' என்றார்.

வந்திருப்பது சிவஅம்சம் பொருந்தியவர் என்பதை அறியாத அந்தகாசுரன், பைரவருடன் போரிட்டான். அழிந்து போன அசுரப்படைகளை, சுக்ராச்சாரியார், தன் மந்திர சக்தியால் காப்பாற்றி விட்டார். உடனே, சிவன், சுக்ராச்சாரியாரை விழுங்கி, வயிற்றில் அடக்கிக் கொண்டார். இதன் பின், பைரவர், அந்தகாசுரனை, ஒரு சூலத்தில் குத்தி, உயர்த்திப் பிடித்து, அவனது, ரத்தம் வழியும் வரை காத்திருந்தார். ஒடுங்கிப் போன அந்தகாசுரன், தன்னை விடுவிக்கும்படி கெஞ்சினான். பைரவரும் அவனை விடுவித்தார். அவன் சிவநாமம் சொன்னவன் என்பதால், உயிர் பிழைத்தான்.

எதிரிகளால் தொல்லை இருந்தால், தேய்பிறை அஷ்டமி நாட்களில், பைரவருக்கு வடைமாலை, செவ்வரளி அல்லது எலுமிச்சை மாலையை, ராகு காலத்தில் சாத்தினால், எதிரிகளின் தொல்லை, நீங்கும் என்பர்.

கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியன்று, பைரவரை வணங்குவதுடன், அன்னதானமும் செய்தால், நாம் படும் கஷ்டங்களின் அளவு குறையும். பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும். கேரளா வைக்கம் மகாதேவர் திருக்கோயில்.

மஹாதேவாஷ்டமி 



Vadakanatha Temple is located in Thrissur district of Kerala. | கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வடக்கநாதர்திருக்கோயில்.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது வடக்கநாதர்திருக்கோயில் . 

அமர்நாத் பனிலிங்கம் பனியால் ஆனது போல் இந்த லிங்கம் முழுக்க முழுக்க நெய்யால் உருவானது . 12 அடி உயரமும் 25 அடி அகலமும் கொண்ட இந்த நெய் லிங்கம் கல்லை போல் கெட்டியாக இறுகி உள்ளது.

நெய் எப்போதாவது உருகி வெளிப்பட்டாலும் அதிசயமாக உருகி மறைந்து விடுகிறது . இங்குள்ள மூலவருக்கு நெய்யினால் அபிஷேகம் செய்கின்றனர். மூலவருக்கு பன்னீர் சந்தனம் போன்றவற்றை அபிஷேகம் செய்தாலும் இதற்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இங்குள்ள தீபத்தின் வெப்பமோ வேறு எந்த சூடோ இந்த நெய்யை உருக்கி விடுவதில்லை .பூச்சிகளாலும் இதற்கு பாதிப்பு ஏற்படுவதில்லை .

இந்த லிங்கத்தை பாதுகாக்க பெரிய கவசத்தை அணிவித்திருக்கிரார்கள் . இங்கு உள்ள நந்தீஸ்வரர் தனி சந்நிதியில் விலகி இருக்கிறார் . மேலும் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய பயன்படுத்திய வாசுகி என்கிற பாம்பு இங்கு வாயிலில் கோயில் மணியாக இருக்கிறது. இதை அர்ச்சகர் மட்டும் பிரதோஷ காலங்களில் பூஜையின் போது அடிப்பார். பக்தர்கள் யாரும் தொட அனுமதி இல்லை. இத்தலம் காசிக்கு நிகரான தலம் என்று கூறப்படுகிறது . இங்குள்ள வடக்கு நாதரை தரிசித்தால் காசிநாதரை தரிசித்த பலன் கிடைக்கும் .

ஆதி சங்கரரின் பெற்றோரான சிவகுருவும் ஆர்யாம்பாளும் இந்த தலத்திற்கு வந்து வேண்டிய பிறகு தான் சங்கரர் அவதரித்தார். இத்தலத்தின் புராணப்படி இங்கு ஈசனுக்கும் அர்ஜுனனுக்கும் விற்போர் நடந்ததாகவும் அதில் அர்ஜுனனின் ஒரு அம்பு ஈசனின் தலையில் பட்டு ரத்தம் வழிந்ததால் தேவ மருத்துவர் தன்வந்த்ரி அவர் தலையில் நெய்யால் தடவி குணப்படுத்தியதாகவும் கூறுகிறார்கள் .

பரசுராமரே இங்கு வழி பட்டதாக சொல்கிறார்கள் . இங்கு லிங்கத்தின் மேல் அபிஷேகம் செய்யப்பட்ட நெய்யை பிராசாதமாக தருகி றார்கள் . இது நாட்பட்ட வியாதியையும் மலட்டுத் தன்மையையும் சரிப்படுத்துகிறது. இரவு 8 மணிக்கு நடைபெரும் திருக்காப்பு பூஜையை தினமும் 41 நாட்கள் தொடர்ந்து தரிசித்தால் நினைத்த காரியம் கைகூடும் .

பல ஆண்டுகளாக நெய்யால் அபிஷேகம் செய்யப்பட்டு அந்த நெய்யே லிங்கமாக சுமார் நான்கு அடிக்கு உறைந்திருக்கிறது . இன்றும் நூற்றுக்கணக்கான விளக்குகள் இருந்தாலும் லிங்கம் உருகாமல் இருப்பது அற்புதம். 
ஓம் சிவாய நம:

Sree Vadakkumnathan Temple, Thrissur, Kerala.
அருள்மிகு ஶ்ரீ வடக்கும்நாதன் சிவாலயம், திருச்சூர், கேரளா.



கேரளாவில் உள்ள மீன்குளத்தியம்மன் கோவில்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரை குளத்தில் புனித நீராடிய பக்தர் ஒருவர், 'தாயே மீனாட்சி... குலதெய்வமான நீயே எங்களை கைவிட்டால், நாங்கள் எங்கு போவோம்... பஞ்சத்தின் காரணமாக, சொந்த ஊரைவிட்டு வெளியேறிய எங்களை, இன்னும் எங்கெல்லாம் அனுப்பப் போகிறாய்... எங்கு போனாலும், நீயே எனக்கு துணை...' என்று அம்பிகையிடம் முறையிட்டபடியே குளத்தில் மூழ்கினார். அப்போது, பக்தரின் கையில், சிறு கல் ஒன்று அகப்பட்டது.

அதை எடுத்தவர், 'தடுக்கி விழுந்தவனுக்கு ஊன்றுகோல் கிடைத்தது போல, என் கையில் கிடைத்திருக்கும் இக்கல்லையே, நீயாக எண்ணி என்னுடன் எடுத்துச் செல்கிறேன்...' என்றபடி, அக்கல்லை பயபக்தியுடன் எடுத்துச் சென்றார்.

பக்தர் மற்றும் அவரை சார்ந்தோரின் பயணம், அங்கிருந்து கேரளாவை நோக்கி தொடர்ந்தது. தோப்புகளும், குளங்களும் நிறைந்த பச்சைப் பசேலென்ற பூமி, அவர்களை வரவேற்றது. மீனாட்சி அம்மனை வணங்கி அவ்விடத்திலேயே தங்கி, தங்கள் குல தொழிலான வைர வியாபாரத்தை துவக்கினர்.

வியாபாரத்திற்காக வெளியூர் செல்லும் போதெல்லாம், மதுரையிலிருந்து தான் எடுத்து வந்திருந்த கல்லை, மீனாட்சியாக கருதி, சுமந்து செல்லும் பக்தர், அப்படியே மதுரைக்கும் சென்று அம்மனை தரிசித்து வந்தார்.

காலங்கள் கடந்தன; வியாபாரம் பெருகியது. முதுமையால் பக்தரால் வெளியூர் பயணம் செல்லவோ, மீனாட்சியை தரிசிக்கவோ முடியவில்லை. ஆனாலும், ஒருநாள், மீனாட்சியம்மை கல்லோடு, ஒரு பனை ஓலைக் குடையையும் தூக்கிக் கொண்டு, வெளியூருக்கு பயணித்தார், பக்தர். வழியில், குளக்கரையில், தன் மூட்டை முடிச்சுகளையும், அவற்றின் மீது, பனை ஓலை குடையையும் வைத்தார்.

அங்கே, மாடு மேய்த்துக் கொண்டிருந்த இரு சிறுவர்களை கூப்பிட்டு, தன் பொருட்களை பார்த்துக் கொள்ள சொல்லி, குளத்தில் இறங்கி நீராடியவர், 'தாயே மீனாட்சி... உன்னை தேடி வரும் இந்த அடியவனுக்கு, உடல் பலத்தை குறைத்து விட்டாயே... நீயாவது என்னை தேடி வரக்கூடாதா...' என்றபடியே நீராடி, கரையேறினார்.

குடையையும், பயண மூட்டையையும் தூக்க முயன்றார்; முடியவில்லை. அதனால், குடையின் அடியில் இருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்தார். மீனாட்சி கல் மட்டும் மலை போல் கனத்து, நகர மறுத்தது.

மனம் பதறிய பக்தர், 'தாயே... வேதங்கள் உட்பட முனிவர்களும், தேவர்களும் உன்னை தேடி அலையும் போது, என்னை நீ தேடி வரக்கூடாதா என்றதால், என்னை சோதிக்கிறாயா...' என, புலம்பியவர், காரணத்தை அறிய, பிரபல ஜோதிடரிடம் சென்று, நடந்ததையெல்லாம் சொன்னார்.

அவர் சோழிகளை உருட்டிப் பார்த்து, 'ஐயா... உங்களுடைய தூய்மையான பக்திக்காக, அன்னை மீனாட்சியே உங்களை தேடி வந்து விட்டாள். நீங்கள் வைத்திருக்கும் கல்லிலும், குடையிலும் எழுந்தருளியுள்ளாள். இனி, நீங்கள் மதுரை செல்ல வேண்டாம். இங்கேயே கோவில் கட்டி, அவளை வழிபடுங்கள். இங்குள்ள மற்றவர்களும், அவளை தொழுது, அருள் பெறட்டும்...' என்றார்.

அப்படி கட்டப்பட்ட கோவில் தான், கேரளாவில் உள்ள மீன்குளத்தியம்மன் கோவில். மீன்கள் துள்ளி விளையாடும் குளக்கரையில் எழுந்தருளியிருப்பதால், இப்பெயர் அமைந்தது. அடியாரின் துயர் தீர்க்க, அன்னையே எழுந்தருளிய அற்புதமான திருத்தலம் இது.

பாலக்காட்டிலிருந்து, 20 கி.மீ., தொலைவில் பல்லசேனா என்ற இடத்தில், இக்கோவில் உள்ளது. தேடி வந்து அருள் செய்த அன்னை, நமக்கும் அருள் புரிய வேண்டுவோம்!




Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

அகஸ்தியர் மலையில் தான் தாமிரபரணி, நெய்யாறு, கரமணை போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன. சுமார் 2,500 அரியவகை மூலிகைச் செடிகள், மரங்கள் நிறைந்த யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட பூகோளப் பகுதி இது. அகஸ்தியர் இந்த மலையில் தவம் இருந்ததாக புராணம் சொல்கிறது. தென்னிந்தியாவின் அபாயகரமான மிகக் கடுமையான ட்ரெக்கிங் பாதைகளில் இதுவும் ஒன்று. சுமார் 6150 உயரம் ஏறி இறங்கினால், 56 கிலோமீட்டர் தொலைவு. பாதைகள் அபாயகரமானவை, செங்குத்தானவை!

அகஸ்தியர் மலை நீங்கள் நினைத்தவுடனே அகஸ்தியர் சிகரத்துக்குச் சென்றுவிட முடியாது. ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை அகஸ்தியர் மலைக்குச் செல்ல அனுமதி அளிக்கிறது கேரள வனத்துறை. அகஸ்தியர் மலையில் ட்ரெக்கிங் செல்வதற்கு நாள் ஒன்றுக்கு 100 பேருக்கு மட்டுமே அனுமதி. தலைக்கு 1100 ரூபாய் கட்டணம். சீஸன் இல்லாத நாள்களில் ஐந்து பேர்கொண்ட குழுவுக்கு 7,500 ரூபாய் கட்டணம். மலை ஏற ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஓர் அடையாள அட்டை அவசியம்.

Click here how to book agathiyar malai Trek Booing.

அகஸ்தியர் மலை திருவனந்தபுரத்திலிருந்து போனக்காடு செக்போஸ்ட், 60 கி.மீ தொலைவில் உள்ளது. உணவை பார்சல் வாங்கிக்கொள்ளுங்கள். செல்லும் பாதை எங்கும் அருவிகள் உள்ளதால், ஆனந்தக் குளியல் போட்டுக்கொள்ளலாம். மதுபாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தால் பறிமுதல் செய்துவிடுவார்கள். கடுமையான மலைப்பாதை என்பதால், 14 வயது குறைந்தவர்களுக்கு அனுமதியில்லை.

Video link are available below. please see below.

அகஸ்தியர் மலை செல்வது எப்படி?
பெண்களுக்கு அனுமதியில்லை. உங்களை அறியாமலேயே பயமும் தொற்றிக்கொள்ளும். பாம்புகள், பூச்சிகள் ஏராளம். அட்டைப்பூச்சி அபாயமும் உள்ளது. அகஸ்தியர் சிகரம்தான் ஆனைமுடிக்கு அடுத்தபடியாக தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம். இந்த மலையின் கிழக்குப் பகுதியில் உற்பத்தியாகித்தான், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை வளங்கொழிக்கச் செய்கிறது பொருநை நதி.

அகஸ்தியர் மலை அருவிகள்
நீண்ட தொலைவு ட்ரெக்கிங் பயணம் என்பதால், குழுவைவிட்டு பிரிந்துவிடக் கூடாது. சத்தம் எழுப்பாமல் வரிசையாகக் நடந்து செல்ல வேண்டும். முதல் நாள் 12 கிலோமீட்டர் தொலைவு நடந்து அதிரி மலையில் உள்ள கேம்ப்பில் தங்கலாம். திகில் படங்களில் வரும் பங்களா போன்று பழைமையான கட்டடம் ஒன்று அங்கே உள்ளது. இடிந்து சிதிலமடைந்து கிடக்கும் அந்தக் கட்டடத்தில் தங்க முடியாது. அதன் அருகில் அமைக்கப்பட்டுள்ள குடில்களில் தங்கிக்கொள்ளலாம். உங்களுடன் வனத்துறை ஊழியர் ஒருவரும் வழிகாட்டியும் வருவார்கள். உங்களுக்குத் தேவையான உணவுகளை அவர்களே சமைத்துத் தருவார்கள். வயிற்றுக்கு பங்கம் ஏற்படுத்தாத வகையில் கஞ்சி, பயறு என கேரள உணவு கிடைக்கும். நடந்த அலுப்புக்கு உணவு அமிர்தமாக இருக்கும்.

அகஸ்தியர் மலை ட்ரெக்கிங்
வனத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் சீதோஷ்ண நிலை மாறலாம். அதனால், நீங்கள் நினைத்த மாதிரி ட்ரெக்கிங்கை குறிப்பிட்ட நாளுக்குள் முடித்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்படலாம். மழை பெய்தால் ட்ரெக்கிங்கை தள்ளிவைத்துவிடுவார்கள். மூன்று நாள்கள் திட்டமிட்டுச் சென்றால், ஒரு வாரம் கழித்தே அகஸ்தியர் மலையை அடைந்தவர்களும் உண்டு. அகஸ்தியர் மலையை நோக்கிச் செல்கையில் செங்குத்தான பாதைகளில் கயிற்றைப் பிடித்து ஏறி செல்ல வேண்டும். சிலர், `திரும்பிப் போய்விடலாம்' என்றுகூட சொல்லாம். உறுதியுள்ளவர்கள் மட்டுமே அகஸ்தியர் மலையின் உச்சியை அடைய முடியும். எங்கும் பனிமூட்டமாகவே இருக்கும். வனத்துறையினர் ஆங்காங்கே மஞ்சள் வண்ணத்தில் பாறைகளில் அம்புகுறி வரைந்துள்ளனர். அவைதான் உங்களுக்கு வழிகாட்டி.

அனுபவம் வாய்ந்தவர்தான் குழுவின் தலைவராக இருப்பார். ஓநாய் கூட்டம் எப்படி இயங்குகிறதோ, அப்படிதான் ட்ரெக்கிங் குழுவும் இயங்க வேண்டும். குழுவின் முன்னால் யார் நடக்க வேண்டும், பின்னால் யார் வர வேண்டும் போன்ற பாதுகாப்புத் தகவல்களை குழுத் தலைவர் வழங்குவார். வேகமாக நடப்பவர்கள், மெதுவாக நடப்பவர்கள் என அனைவரையும் கணித்து அதற்கேற்றார்போல் குழு இயங்க வேண்டும். உயரம் செல்லச் செல்ல காற்றின் வேகம் அதிகரிக்கும்போது, சர்வஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கயிறுகளைப் பயன்படுத்திதான் பாறைகளில் செங்குத்தாக ஏறவேண்டியது இருக்கும். அகஸ்தியர் மலை ட்ரெக்கிங்கின் மிகவும் த்ரில்லிங்கான பகுதி இது.

வழுக்குப்பாறையிலிருந்து அரை மணி நேரம் நடந்தால், உங்களை குறுமுனி வரவேற்பார். உடன் சிவபெருமானும். `தென்னிந்தியாவின் உயரமான சிகரங்களில் ஒன்றின் மீது நின்றுகொண்டிருக்கிறோம்' என்ற பெருமை உங்களுக்குள் எழும்.

Nilgiri Biosphere, சுந்தரவனக் காடுகள்போல யுனெஸ்கோவின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது அவசியம். சென்னையிலிருந்து செல்பவர்கள் திருவனந்தபுரத்துக்கு ரயிலில் சென்று அங்கிருந்து போனகாடு செக்போஸ்டுக்கு வாகனம் எடுத்துக்கொள்ளலாம். வாகனத்தில் செல்பவர்கள் தென்காசி வழியாக நெடுமங்காடு சென்று அங்கிருந்து போனகாடு செல்ல முடியும். 10 பேர் அடங்கிய குழுவாக மலையேற்றம் செய்வது உகந்தது. மருந்துகள், மாத்திரைகள் கொண்டுசெல்ல மறந்துவிட வேண்டாம்.

மிகவும் ரிஸ்க் நிறைந்த வனத்துக்குள் செல்கிறீர்கள்... பாதுகாப்பு முக்கியம்.




How to go Agathyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலை Part 2

நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் பொதிகை மலையின் உச்சியில் 6150 அடி உயரத்தில் தவமிருக்கும் அகத்தியரை வழிபட முண்டந்துறை, பாபநாசம், பாணதீர்த்தம் அருவியின் மேற்பகுதி வழியாக இஞ்சிக்குழி, கண்ணிகட்டி, பூங்குளம் வழியாக பக்தர்கள் சென்று வந்தனர். 

இந்த வழித்தடத்தில் பக்தர்கள் சென்று வர கடந்த 1998ம் ஆண்டு தமிழக வனத்துறை அனுமதி மறுத்து விட்டது. சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2009ல் தமிழக வனத் துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல நிரந்தரமாக அனுமதி மறுத்ததுடன், கேரளா வழியாக அகத்திய மலைக்கு செல்ல அறிவுறுத்தியது. 

Click Here  How to book trekking to go agathiyar malai

இதையடுத்து கேரள வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி வழியாக சூழலியல் சுற்றுலாவாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை அகத்தியர் மலைக்கு பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்குகின்றனர். இதற்காக கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர் காவு பிடிபி நகரிலுள்ள வனத்துறை அலுவலகத்தில் அகஸ்தியர் கூடம் செல்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் இருந்து நெடுமங்காடு - விதுரா - போனகாடு பஸ்சில் பயணிக்கலாம். காலை 6 மணி முதல் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இல்லாவிடில் நெடுமங்காடு சென்று அங்கிருந்தும் போனக்காடு செல்லலாம். பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூர பயணத்தில் வன இலாகா அலுவலகத்தை அடையலாம். 

போனக்காட்டிலுள்ள வனத்துறை சோதனை மையத்தில் அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்றால் போனக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடம் வரும். தனியாக யாரையும் இங்கு மலையேற அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு குழுவாகவே அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டியுடன் மூன்று நாள் பொதிகை மலை நடைப்பயணம் தொடங்கும்.

முதல் அரைமணி நேரப்பயணத்தில் முதலில் விநாயகர் கோயிலை அடையலாம். அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் கரமனையாறு என்ற இடத்தை அடையலாம். பகலையே இரவு போல் காட்டும் அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது. இந்த வழித்தடத்தில் சுமார் 6 மணி நேரம் நடந்து சென்றால் அதிருமலை எஸ்டேட் என்ற இடம் நம்மை வரவேற்கும்.


அங்கு கேரள வனத்துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்க வைக்கப்படுவர். மறுநாள் காலை குறு முனிவரின் வழிபாட்டுக்கு கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, அதிருமலையின் காவல் தெய்வத்தை வணங்கி விட்டு மீண்டும் நடைபயணம் தொடங்குகிறது. சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடையலாம். அங்கு சிறிது நேரம் ஓய்வு, அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு மீண்டும் நடைபயணம் தொடர்ந்தால் 15 நிமிடத்தில் தமிழக வனப்பகுதி எல்லையான சங்கு முத்திரை என்ற இடம் வரவேற்கும். 

இது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் இப்பெயர். கேரளத்தினர் இப் பகுதியை பொங்காலைப்பாறை என்று கூறுகின்றனர். (கேரளத்தவர்கள் இங்கு வந்து பொங்கலிட்டு, அகத்தியரை வழிபடுவதால் இந்த இடம் பொங்காலைப்பாறை என்றழைக்கப்படுகிறது.

இச்சங்கு முத்திரை வனப்பகுதியின் மற்றொரு புறம் உள்ள கிடுகிடு பள்ளத்தாக்கில் வற்றாத ஜீவநதியான பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி உற்பத்தியாகும் ‘பூங்குளம்’ என்ற சுனை தெரியும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு ஜீவநாடியாக விளங்கும் அகத்தியர் தந்த தாமிரபரணியின் பிறப்பிடத்தை கண் குளிர தரிசித்து வணங்கி விட்டு பொதிகை மலை பயணத்தை தொடர வேண்டும். 

செங்குத்தான பகுதியில் மலையில் கட்டப்பட்டுள்ள கயிறு மற்றும் இரும்புக் கயிறுகளை (ரோப்) பிடித்துக் கொண்டு (ஒருபுறம் கால் இடறினால் கிடுகிடு பள்ளத்தில் விழ நேரிடும்) கவனத்துடன் ஏறிச் சென்றால் கடல்மட்டத்தில் இருந்து சுமார் 6350 அடி உயரமுடைய பொதிகை மலை சிகரத்தை அடையலாம்.



அங்கு அகத்தியரைப் போலவே குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறுமுனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையை தரிசிக்கும்போது, சிரமப்பட்டு மலை ஏறிவந்த எண்ணங்கள் எல்லாம் மறந்து, இந்த தரிசனத்துக்குத்தானா இப்பிறவி எடுத்தோம் என்ற பரவச நிலை பக்தர்களுக்கு ஏற்படும்.

ஆனைமலைத் தொடரின் ஒரு பகுதியாகவும், மகேந்திரகிரி மலை, முண்டந்துறை வனப்பகுதியின் தலையைப் போலவும் விளங்கும் பொதிகை மலை உச்சியில் திடீர், திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுங்கச் செய்யும் பலத்த குளிர்காற்றும், சில நேரம் மழையும், சாரலும் பெய்யும். மனம் நிறைந்த ஆனந்த அனுபவத்துடன் அகத்தியருக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபாடு செய்த பின் மீண்டும் பயணம் தொடங்குகிறது. 

மலை ஏற்றத்தைப் போலவே மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, மூன்று மணி நேரம் நடந்தால் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடையலாம். அங்கு உணவருந்தி விட்டு, சிறிது நேர ஓய்வுக்குப் பின் இரவு 7 மணிக்கு கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும். அன்று இரவும் அங்கேயே தங்கி விட்டு, மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு சுமார் 5 மணி நேரம் நடந்தால் போனக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பொதிகை மலை பயணம் நிறைவு பெறும்.

இந்த மூன்று நாள் பயணத்தின்போதும் சுத்தமான காற்று, மூலிகை கலந்த நீர், இவையெல்லாம் விட செல்போன் தொந்தரவே இல்லாமல் பார்க்கும் இடங்கள் எல்லாம் பசுமை நிறைந்து மனதைக் கவரும். உடலும், உள்ளமும் புத்துணர்வு பெறும். ஒவ்வொரு ஆண்டும் தமிழ் முனியை தரிசிக்க ஜனவரி முதல் ஏப்ரல் வரை அனுமதி வழங்கப்படுகிறது. ஆன்லைனிலும் இதற்கான அனுமதியைபெறலாம். இந்த ஆண்டிற்கான டூரில் பொதிகை மலைசெல்ல விரும்புகிறவர்கள் 1100 செலுத்தி கேரள வனத்துறையில் பதிவு செய்யலாம் என கேரள வனத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான முன்பதிவு வரும் 8ம் தேதிகாலை 11 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக உள்ள இணைய தளத்திலோ அல்லது வட்டியூர் காவுவனத்துறை அலுவலகத்திலோ பதிவு செய்து சென்று வரலாம். 10 நபர்கள் அடங்கிய குழுவாகவும் சென்றுவர அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. பதிவு செய்பவர்கள் கண்டிப்பாக போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். இதே அடையாள அட்டையைத்தான் பயணத்தின்போதும் வைத்திருக்க வேண்டும். அற்புதங்கள் நிறைந்த, அரிய பொக்கிஷங்களை காணக்கிடைக்கும் ஒரு புதிய பயண அனுபவத்தை பெற விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் பொதிகைக்கு கிளம்பி விடலாம்.

உயிரினங்களின் வகைகள்

6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது, பொதிகை மலை. இதில் அகத்திய மலையின் உயரம் 1868 மீட்டர் (சுமார் 6150 அடி). நீரிலும், நிலத்திலும் வாழும் உயிரினங்கள் தமிழ்நாட்டில் 76 உள்ளன. ஆனால் பொதிகை மலையில் 121 உள்ளன. 27 வகை மீன், 9 வகை தவளைகள் பொதிகையில் மட்டுமே காணப்படுகின்றன. 177 வகை ஊர்வனவற்றில் 157 வகைகள் பொதிகை மலையில் மட்டும் உள்ளன. அதிலும் 39 வகை இங்கு மட்டுமே வாழ்கின்றன. கரும்பு, சோளம், கம்பு, ராகி போன்ற உணவு தானியங்கள் 260ல் 60க்கு மூலவித்து இங்குள்ளது. நாமறிந்த மீன் வகை 165. ஆனால் பொதிகையில் வசிப்பதோ 218.

நுண்ணுயிர் முதல் மந்தி வரை

புவிப்பரப்பில் முதலில் தோன்றிய நுண்ணுயிர் முதல் மனிதனுக்கு முந்தைய மந்தி வரை பொதிகையில் உள்ளன. இந்த பிரபஞ்சத்தில் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பெருவெடிப்பில் விழுந்த சிறு துண்டாகிய பூமி 500 கோடி வருடங்களுக்கு முன் குளிர்ச்சியடைந்து பூமியானது. அதில் 300 கோடி வருடங்களுக்கு முன்பு உயிர்த்தோற்றம் உண்டானது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். பூமி குளிர்ந்து ஒருவித வடிவத்துக்கு வந்து உயிர்கள் உருவான காலத்திலேயே பொதிகை மலையும் தோன்றியிருக்கலாம்.

ரகசிய மூலிகைகள்

பசிக்கவே செய்யாத மூலிகை, நீண்ட ஆயுள் தரும் மூலிகைகள் என பல ரகசிய மூலிகைகள் இங்கு ஏராளமாக வளர்ந்து கிடக்கின்றன. இந்த மூலிகைகளைக் கொண்டுதான் அகஸ்தியர் கடுமையான நோய்களுக்கும் மருந்து கண்டுபிடித்தார் என்று கூறப்படுகிறது.

மூலிகைகளின் மூல ஸ்தானம்

பொதிகை மலைதான், மூலிகைகளின் மூல ஸ்தானம். மூட்டு வலியை போக்கும் பளிங்கு காய், தாமிரத்தை பஸ்பமாக்கும் கல் தாமரை, விஷம் முறிக்கும் கீரிக்கிழங்கு, சர்க்கரை நோயை போக்கும் பொன்கொரண்டி என பல்வேறு மூலிகைகள் பொதிகையில் உள்ளன. 7 வகை பனைகள், 10 ஆண்டுகளில் காய்த்து, காயில் உள்ள விதையால் கர்ப்பப்பை புற்றை அகற்றும் கல்வாழை, பட்டையால் பாம்பின் நஞ்சை இறக்கும் ஞாறவாழை உள்ளிட்ட 7 வகை வாழைகள் இங்கு வளர்கின்றன.

கொழித்துக் கிடக்கும் குலவு, புலவு

உலகில் உள்ள பூக்கும் தாவரங்கள் 5640ல் 2654 வகை இங்கு உள்ளன. 600க்கு மேற்பட்ட மூலிகைகள் இங்கு மட்டுமே வளர்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். வார்னிஷ் தயாரிக்க உதவும் குலவு, விஷக்கடி வீரியத்தை போக்கும் புலவு, சிறுநீர்ப்பை கல்லடைப்பை நீக்கும் சர்க்கரை வேம்பு மற்றும் செருப்படை போன்ற மூலிகைகள் இங்கு கொழித்துக் கிடப்பதாக தகவல்கள் கூறுகின்றன.




பொதிகைமலை...
இந்தப் பெயரைக் கேட்டவுடனே நம் நினைவில் வருவது தாமிரபரணியும், தமிழும், அதைத் தோற்றுவித்த அகத்தியரும் தான்.

புத்தன் சபரிமலை


    கேரளாவில் சபரிமலையை போன்றே பழமையான அமைப்புடன் பதினெட்டு படிகளை உள்ளடக்கி சபரிமலை கோவிலை போன்றே ஆச்சார அனுஷ்டானங்களை பூஜைகளை கடைபிடித்து வரும் புத்தன் சபரிமலை எனும் கோவில் உள்ளது. அங்கு அனைத்து வயது பெண்களும் பதினெட்டு படிகள் வழியே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது, பழமையானது. இங்கும் அடர்ந்த வனப்பிரதேசம் ஒரு காலத்தில் இருந்துள்ளது கொடும் காட்டு விலங்குகள் வாழ்ந்த இந்த புத்தன் சபரிமலையில் முன்னர் பக்தர்கள் அவ்வளவாக சென்றதில்லை சுமார் நூறு வருடங்களாக மட்டுமே இருமுடி கட்டி பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். தற்போது பிரதான சபரிமலை அமைந்துள்ள இதே பத்தனம்தெட்டா மாவட்டத்தில் திருவல்லாவிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் தடியூர் எனும் இடத்தில் மிக புராதான ஆலயமாக பழமை மாறாது காணப்படுகிறது இந்த புத்தன் சபரிமலை அய்யப்பன் ஆலயம்.

பிரதான சபரிமலை கோவிலுக்கு இணையான தெய்வ சக்தி இங்கும் பரந்து விரிந்து வியாபித்துள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலையில் உள்ளது போன்றே அதே வடிவிலான ஐம்பொன்னால் ஆன அய்யப்பன் விக்கிரகம் இங்கும் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள 18 படிகளும் கரும் கற்களால் சபரிமலையில் உள்ளது போன்றே செங்குத்தாக அமையப்பெற்றுள்ளது. இங்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டாலும் இருமுடி கட்டு இல்லாத எவர் ஒருவரும் படிக்கட்டுக்கள் மீது செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இருமுடி கட்டு இல்லாதவர்கள் கோவிலின் வடக்கு பகுதி வழியாக செல்லவே அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையில் பின்பற்றப்படும் பூஜைகளும் வழிபாட்டு முறைகளும் அபிஷேக வகைகளும் குறிப்பாக சந்தனாபிஷேகம், நெய்யபிஷேகம், பூ அபிஷேகம் போன்றவைகள் அப்படியே சற்றும் மாறாது இங்கும் கடைபிடிக்கப் படுகிறது.

சபரிமலையை போன்றே ஒவ்வொரு மலையாள மாதம் ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை பக்தர்கள் இங்கும் அய்யப்பனை வழிபட அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையை போன்றே அப்பமும் அரவணை பாயாசமும் இங்கும் பிரதான பிரசாதங்கள். தை முதல் நாளில் மகர சங்கராந்தியன்று எப்படி சபரிமலையில் மகர விளக்கு காணப்படுகிறதோ அவ்வாறே இங்கும் மகரவிளக்கு தரிசனத்தை பக்தர்கள் காணலாம். எல்லாவற்றையும் விட சபரிமலை தந்தரியாக செயல்படுபவர்களே இங்கும் தந்தரியாக செயல்படுகிறார்கள்.

எல்லா வகைகளிலும் பிரதான சபரிமலைக்கு இணையாக காணப்பட்டு வரும் இந்த புத்தன் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் பிராதான சபரிமலைக்கு மட்டுமே நாங்கள் செல்வோம் என உச்சநீதி மன்றத்தின் உத்தரவை தலைமீது வைத்து கொண்டு பிடிவாதம் பிடித்து செயல்படும் இளம் பெண்களின் எண்ணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. அது உண்மையான பக்தியின் அடையாளமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எனவே பிரதான சபரிமலைக்கு செல்ல முடியாத 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டிக் கொண்டு இந்த புத்தன் சபரிமலை என்று அழைக்கப்படும் அய்யப்பன் கோவிலில் உள்ள புராதான 18 படிக்கட்டுக்கள் வழியே கடந்து சென்று அய்யப்பனை வழிபடலாமே.

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...