Mahadevashtami Annadanam ceyyunkal. | மஹாதேவாஷ்டமி அன்னதானம் செய்யுங்கள்.

கார்த்திகை மாதம், தேய்பிறை அஷ்டமியை, மகாதேவாஷ்டமி என்றும் பைரவாஷ்டமி என்றும் அழைப்பர். இந்த நாளில், அன்னதானம் செய்வது விசேஷம். இந்த அன்னதானத்தை, சிவபார்வதியே வந்து ஏற்பதாக ஐதீகம்.
இந்நாளில், அன்னதானம் செய்யக் காரணம் என்ன?

பத்மாசுரனும், அவனது தம்பி தாரகாசுரனும், தேவர்களுக்கு மிகவும் கொடுமை செய்தனர். அவர்களை அழிக்க, சிவன் முடிவெடுத்து, தன், நெற்றிக்கண்ணில் இருந்து, முருகனை உருவாக்கினார். முருகன், தாரகாசுரனை அழித்து, பத்மாசுரனை அடக்கி, சேவலாகவும், மயிலாகவும் மாற்றி விட்டார். நியாயத்துக்காக செய்த கொலையானாலும், பாவம் வந்து சேரும். 

அந்தப் பாவத்திற்கு பரிகாரம் தான், அன்னதானம். சிவன், தன் மகன் முருகனுக்கு ஏற்பட்ட இந்த பாவ தோஷத்தை நீக்க, மானிட வடிவெடுத்து, பூலோகம் வந்து, எல்லாருக்கும் அன்னதானம் செய்தார். அவர் அன்னதானம் செய்த இடம், கேரளாவிலுள்ள வைக்கம் என்ற ஊர். இதை, அவ்வூரிலுள்ள மகாதேவர் கோவில் வரலாறு கூறுகிறது.

இப்போதும், கார்த்திகை அஷ்டமியை ஒட்டி, இங்கு, 11 நாட்கள் விழா கொண்டாடப்படுகிறது. இதை, 'வைக்கத்தஷ்டமி' என்பர். இந்த தினத்தில், இங்கு, ஏராளமான பக்தர்கள் அன்னதானம் செய்கின்றனர். இந்த தானத்தை ஏற்க, சிவனே வருவதாக ஐதீகம் என்பதால், முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அன்னதானம் செய்ய முடியும். அதுபோல், சாப்பிட வருவோரும், சிவனோடு அமர்ந்து சாப்பிடுகிறோம் என்ற, பரவச நிலையை அடைகின்றனர். மேலும், சிவன் பைரவராக உருவெடுத்து அந்தகாசுரன் என்ற அரக்கனை அழித்ததால், இங்கு, பைரவர் வழிபாடும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இரண்யாட்சன் என்ற அசுரனின் மகன் அந்தகாசுரன். இவன், திருமால், பிரம்மா முதலான தெய்வங்களால் கூட, அழிவு வரக் கூடாது என்ற வரத்தை, சிவனிடம் பெற்றான். இந்த வரம் காரணமாக, தேவர்களை அடிமைப்படுத்தி துன்புறுத்தி வந்தான். 'தேவர்களே... என்னை நீங்கள் அழிக்க முடியாதபடி வரம் பெற்றுள்ளேன். என் சேனைகளை நீங்கள் அழித்தால், அவர்கள், எங்கள் குலகுரு சுக்ராச்சாரியாரின் மந்திர சக்தியால், உயிர் பெற்று விடுவர். 

அதனால், தோல்வியை ஒப்புக் கொண்டு, பெண்களைப் போல உருவத்தை மாற்றிக் கொள்ளுங்கள். இந்த உத்தரவை மீறினால், உங்களைக் கொன்று விடுவேன்...' என்று மிரட்டினான். இதனால், தேவர்கள் பயந்து, தங்கள் உருவத்தை பெண் உருவாக மாற்றிக் கொண்டனர். இந்நிலையிலிருந்து மீள, சிவனை சரணடைந்தனர் தேவர்கள்.தான் கொடுத்த வரத்தை, தவறாகப் பயன்படுத்திய அந்தகாசுரனின் ஆணவத்தை அடக்க முடிவெடுத்த சிவன், தன்னில் இருந்து தோன்றிய பைரவரை அழைத்து, 'பைரவா... நீ சென்று, அந்தகாசுரனின் ஆணவத்தை அடக்கி வா...' என்றார்.

வந்திருப்பது சிவஅம்சம் பொருந்தியவர் என்பதை அறியாத அந்தகாசுரன், பைரவருடன் போரிட்டான். அழிந்து போன அசுரப்படைகளை, சுக்ராச்சாரியார், தன் மந்திர சக்தியால் காப்பாற்றி விட்டார். உடனே, சிவன், சுக்ராச்சாரியாரை விழுங்கி, வயிற்றில் அடக்கிக் கொண்டார். இதன் பின், பைரவர், அந்தகாசுரனை, ஒரு சூலத்தில் குத்தி, உயர்த்திப் பிடித்து, அவனது, ரத்தம் வழியும் வரை காத்திருந்தார். ஒடுங்கிப் போன அந்தகாசுரன், தன்னை விடுவிக்கும்படி கெஞ்சினான். பைரவரும் அவனை விடுவித்தார். அவன் சிவநாமம் சொன்னவன் என்பதால், உயிர் பிழைத்தான்.

எதிரிகளால் தொல்லை இருந்தால், தேய்பிறை அஷ்டமி நாட்களில், பைரவருக்கு வடைமாலை, செவ்வரளி அல்லது எலுமிச்சை மாலையை, ராகு காலத்தில் சாத்தினால், எதிரிகளின் தொல்லை, நீங்கும் என்பர்.

கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியன்று, பைரவரை வணங்குவதுடன், அன்னதானமும் செய்தால், நாம் படும் கஷ்டங்களின் அளவு குறையும். பாதுகாப்பான வாழ்வு கிடைக்கும். கேரளா வைக்கம் மகாதேவர் திருக்கோயில்.

மஹாதேவாஷ்டமி 



No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...