1944, பிப்ரவரி 7ம் தேதி காமாட்சி அம்பாள் கும்பாபிஷேகம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது... மகா பெரியவா, கும்பகோணத்திலிருந்து ஜனவரி 27ஆம் தேதி காஞ்சீபுரம் வந்தடைந்தார்.. கும்பாபிஷேகத்திற்கு சரியாகப் பத்து நாள் இருந்தபோது மகா பெரியவா காமாட்சி கோவிலுக்கு வந்து திருப்பணிகளை மேற்பார்வை செய்து விட்டு , குளக்கரையில் அமர்ந்து அம்பாள் விமானத்தைப் பார்த்தார்...
விஜயநகர சக்கரவர்த்தியாக இருந்த ஹரிஹர மன்னன் சாலிவாகன சகாப்தம் 1 315 இந்த அம்பாள் விமானத்தைத் தங்கத் தகடு வேய்ந்து கும்பாபிஷேகம் செய்ததாக கல்வெட்டும், பட்டயங்களும் தெரிவிக்கின்றன..
1840, விகாரி வருடம் தை மாதம் 10 ம் தேதி புதன்கிழமை காமகோடி பீட 64வது ஆச்சாரியார் கும்பாபிஷேகம் செய்தார்.. அதற்குப் பிறகு சுமார் நூறு வருடங்களாக கும்பாபிஷேகம் நடைபெறாததால் தங்க மூலம் கரைந்து இருந்தது...
பொருளாதார வசதி போதாததால் 1944 கும்பாபிஷேகத்தில் செப்பு முலாம் பூசப்பட்டது... இதைக்கண்ட மஹாபெரியவா," நூறு வருடம் கழித்து கும்பாபிஷேகம் செய்கிறோம்.. ஆனால் தங்க விமானம் ஆக இருந்ததை செப்பாகச் செய்யலாமா?" என்று வினவினார்..
செப்புத் தகட்டை எடுத்து தங்க முலாம் பூச எவ்வளவு தங்கம் தேவைப்படும் என்று விசாரித்தார்.. ஒருவாரம் அவகாசம் இருந்ததால் தேவையான தங்கம் வசூல் செய்வது கடினம் என்று அனைவரும் நினைத்தனர்.. தங்கம் எப்படி வரும் என்று ஆர்வமாக மகாபெரியவா யோசித்துக்கொண்டிருந்தார்...
காஞ்சி வந்துவிட்ட மகா பெரியவாவை தரிசிக்க அந்த வழியாக காரில் சென்று கொண்டிருந்தார் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர்.. காமாட்சி அம்பாள் கும்பாபிஷேகத்தின் போது தான் வந்து தரிசிக்க முடியவில்லையே என்று முதலில் காமாட்சி கோயிலுக்கு காரை திருப்பினார்.. அங்கே காஞ்சிமாமுனிவர் இருப்பதைக் கண்டு ஒரே ஆச்சரியம்.. அவரை வணங்கி நின்றார்..
மஹாபெரியவா உடனே, " வா! அம்பாள் திருப்பணிக்கு வைக்கவில்லையே என்று எனக்கு கவலையாக இருக்கிறது.. நீ பாட்டுப் பாடு அதைக்கேட்டு நிம்மதியாவது அடைகிறேன்" என்றதும் விஸ்வநாத ஐயர் மனமுருகி அம்பாள் கீர்த்தனைகளைப் பாடினார்...
மஹாபெரியவா, " இப்போதுதான் மனம் சாந்தம் ஆயிற்று... ம்! உனக்கு,'கனகதாரா ஸ்தவம்' தெரியுமல்லவா? அதைப் பாடேன்" என்றார்..
'ஓரளவுக்குத் தெரியும்.. முழுக்கப் பாடமில்லை."
" இங்கு யாருக்கெல்லாம் தெரியுமா அவர்களும் பாடலாம்... நீயும் பாடு.."என்றார் மகா பெரியவா.. அனைவரும் நெக்குருகி கனகதாரா ஸ்தவம் பாடினார்கள்.. அதற்குப் பிறகு நிகழ்ந்ததுதான் அதிசயம்..
அங்கிருந்த மாதர்கள் அனைவரும் தங்களிடம் இருந்த தங்க நகைகளை கழற்றி பெரியவா முன் இருந்த தட்டில் சமர்ப்பித்து விட்டனர்..
மகா பெரியவா ஆனந்த மேலீட்டால், " பார்த்தாயா! நீ பாடியவுடன் தங்க மழை பொழிந்து விட்டது.. ஆச்சாரியார் வாக்குக்கு இன்றும் அவ்வளவு சக்தி இருக்கிறது.." என்று பாராட்டி பிரசாதம் அருளினார்.. விஸ்வநாத ஐயர், "எல்லாம் பெரியவா அநுக்கிரஹம்.. இது இருந்தால் எதுவும் நடக்கும்." என்று நெகிழ்ந்தார்..
தேவையான பொன் கிடைத்து, ஐந்தே நாளில் தங்க விமானம் தயாராகி, கும்பாபிஷேகம் அமோகமாக நடந்தது.. கும்பாபிஷேக தினத்தன்று மட்டும் காஞ்சி காமாட்சி ஆலயத்தை சுமார் 50 ஆயிரம் பக்தர்கள் தரிசித்தனர்...
No comments:
Post a Comment