உயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி மூச்சு வரை இந்த சுவாசம் நமது உடலின் ஊடே ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னமும் தீர்க்கமாய் சொல்வதானால் இந்த சுவாசம்தான் வாழ்க்கை. இந்த உண்மையை நாம் அறிந்திருக்கும் அளவுக்கு அதை உணரவில்லை என்பதே உண்மை.
ப்ராணன் என்றால் மூச்சு, யாமம் என்றால் ஒழுங்கு செய்தல் ஆகும். யோக நெறியில் நான்காவது படிநிலையாக ப்ராணயாமத்தை பதஞ்சலி முனிவர் அருளியிருக்கிறார். இந்த மூச்சு நமது உடலில் மூன்று கட்டமாய் நிகழ்கிறது.
மூச்சை உள்ளே இழுத்தல், இதனை "பூரகம்" என்கின்றனர்.
மூச்சை உள்ளேநிறுத்துதல், இதனை "கும்பகம்" என்கின்றனர்.
மூச்சை வெளியேற்றுதல், இதனை "ரேசகம்" என்கின்றனர்.
இந்த மூன்று செயல்களும் தொடர்ந்து சீரான தாள கதியில் நம்முடலில் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இந்த மூன்று நிகழ்வுகளின் ஊடே செய்யப் பட்ட பல்வேறு பரிசோதனைகளின் திரளே ப்ராணயாமம் எனப்படும் மூச்சுக் கலை.
நவீன அறிவியலின் படி நமது உடலில் ஒரு நிமிடத்தில் 15 முதல் 20 முறை சுவாசம் நடக்கிறது. உறங்கும் போது இதன் அளவு 10 முதல் 12 ஆக குறைகிறது. ஆழ்நிலை தியானம் போன்றவைகளைச் செய்யும் போது இந்த அளவு இன்னும் பாதியாகக் குறைந்து விடுகிறது.
எல்லாம் சரிதான், இந்த மூச்சு நமது உடலில் எப்படி நடக்கிறது?
மூச்சுக்கலை - சுவாசம் எப்படி நடக்கிறது?
மூச்சுக் கலையின் நுட்பங்களை அலசுவதற்கு முன்னர், மூக்கின் வழியே சென்று வரும் காற்று நமது உடலில் என்னவெல்லாம் செய்கிறது என்பதை அறிவது அவசியம். இந்த அடிப்படைகளை புரிந்து கொண்டால் மட்டுமே மூச்சுக் கலையின் அறிவியலை, அதன் நுட்பத்தை உணர முடியும்.
மூக்கின் வழியே உள் இழுக்கப்படும் காற்றில் உள்ள சிறு துகள்கள் மூக்கின் உட்புறம் இருக்கும் நுண்ணிய ரோமங்களினால் வடிகட்டப்படுகிறது. இந்த நிலையில் மூக்கினுள் இருக்கும் திசுக்கள் காற்றை வெதுவெதுப்பாக்கி குரல்வளை எனும் குழாய் பகுதிக்கு அனுப்புகிறது.
குரல்வளையின் ஊடே செல்லும் காற்று கீழிறங்கி மூச்சுக் குழாய்களுக்குள் செல்கிறது. இந்த மூச்சுக் குழாய்கள் ஆறுகள் பிரிவதைப் போல பல்லாயிரம், பல லட்சம் கிளை குழாய்களாய் பிரிந்து நுரையீரலுக்குள் செல்கிறது.
அதென்ன நுரையீரல்....
நுரையீரல் என்பது நமது மார்பகத்தின் இரண்டு பக்கத்திலும் அமைந்திரும் பெரிய காற்றுப் பைகள் என்று சொல்லலாம். கீழே உள்ள படத்தில் இருக்கும் உறுப்புதான் நுரையீரல்.
இது சுருங்கி விரியும் தன்மையுடைய தசையால் அமையப் பெற்றது இதன் உள்ளே கோடிக் கணக்கான நுண்ணிய காற்றறைகள் உள்ளது. மூச்சுக் குழாய்கள் வழியே செல்லும் காற்றானது இந்த காற்றறைகளில் நிரம்பி சுழன்று கொண்டிருக்கும்.
எல்லாம் சரிதான்!, நுரையீரல் இந்த காற்றை வைத்துக் கொண்டு என்ன செய்கிறது?
இந்த இடத்தில், இதயம் பற்றியும், இரத்த ஓட்டம் பற்றியும் சுருக்கமாய் பார்ப்பது அவசியமாகிறது. நமது உச்சந்தலை முதல், உள்ளங்கால் வரை நீக்கமற நிரம்பியிருக்கும் பல லட்சம் மெல்லிய குழாய்களின் வழியே இரத்தமானது தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்கிறது.
இந்த இரத்தமே நமது உடலின் அத்தனை உறுப்புகளின் இயக்கம் மற்றும் செயல்பாட்டிற்குத் தேவையான ஆற்றலை கொடுக்கிறது. இந்த இரத்த ஓட்டம் முழுவதையும் இதயம் கட்டுப்படுத்துகிறது. அதாவது இதயத்தில் இருந்து கிளம்பி மீண்டும் இதயத்திற்கே வந்து சேரும் வகையில் இரத்த ஓட்டம் அமைந்திருக்கிறது.
தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும் இரத்தமானது உறுப்புகளுக்குத் தேவையான ஜீவ சக்தியை கொடுத்துவிட்டு, அவற்றின் கழிவுகளை சுமந்து கொண்டு இதயத்திற்கு திரும்பி வருகிறது.
கழிவுகளை சுமந்து வரும் இந்த இரத்தத்தை சுத்திகரிக்கும் பொருட்டு நுரையீரலில் உள்ள கோடிக் கணக்கான காற்றுப் பைகளுக்கு மெல்லிய தந்துகி குழாய்களின் மூலம் அனுப்புகிறது.
நுரையீரலில் நாம் முன்னரே பார்த்த நுண்ணிய காற்றுப் பைகளில் இந்த இரத்தம் நிரம்பும் போது நுரையீரலானது, இரத்தத்தில் இருக்கும் கழிவுகளையும், கரியமில வாயுவையும் பிரித்து எடுத்துவிட்டு, காற்றுப் பைகளில் நிரம்பியிருக்கும் காற்றில் உள்ளப்ராண சக்தி எனப்படும் ஆக்சிஜனை இரத்தத்தில் நிரப்பி மீண்டும் இதயத்திற்கு அனுப்புகிறது.
இந்த நிலையில் இரத்தத்தில் கழிவாய் வந்த கரியமில வாயுவை சுமந்து கொண்டு மூச்சுக் காற்று முதலில் சொன்ன சுவாசக் குழாய்களின் வழியே மீண்டு குரல்வளை வழியே மேலேறி மூக்கின் வழியே வெளியேறுகிறது.
காற்றை உள்ளிழுத்தல், உள் நிறுத்துதல், வெளியேற்றுதல் என்கிற இந்த மூன்று நிகழ்வுகளின் பின்னே நமது உடலில் இத்தனை பெரிய வேலை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
மூச்சுக்கலை - சுவாசத்தின் மகத்துவம்!
நமது உடலையும், உயிரையும் பிணைத்திருப்பதும், அவற்றை வளர்த்தெடுப்பதும் சுவாசம் என்றால் அது மிகையில்லை. மனித உடலில் உற்பத்தியாகும் 60-80 விழுக்காடு கழிவுகள் சுவாசத்தின் வழியேதான் வெளியேறுகிறது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திராத தகவல்.
இந்த தகவலை நவீன அறிவியலும் உறுதி செய்கிறது. நமது முன்னோர்கள் அறிவியல் வளராத ஒரு காலகட்டத்தில் சுவாசத்தின் அருமை பெருமைகள் உணர்ந்து தெளிந்து அதனை நெறிப் படுத்தும் ஒரு கலையினை காலம் காலமாய் வளர்த்தெடுத்திருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் ஆச்சர்யமும், பெருமிதமும் கொள்ளக் கூடிய ஒன்று.
பிறந்த கணத்தில் இருந்து கடைசி மூச்சு வரையிலும் தொடர்ச்சியான வினைகளினால் ஆனதே நம் வாழ்க்கை. வினைகளும், அதன் எதிர் வினைகளுமே ஒருவரின் வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கின்றன. இதனை நல்வினை, தீய வினை என பொதுவில் பகுத்தாலும்... இவற்றை உருவாக்குவதும், அதில் உழல்வதும் நமது மனமே!, உடலுக்கு ஆற்றல் தர
ரத்தம் ஓடுவதைப் போல, உள்ளத்துக்கு ஆற்றல் தருகிறவை எண்ணங்கள்.
இந்த எண்ணங்களை இந்திய வேத மரபு சம்ஸ்காரங்கள் என்கிறது. இவற்றை அழிப்பதே ஞானத்தின் உயர்நிலை. இரத்தத்தில் இருக்கும் கழிவுகளை அகற்றி அதை வலுவேற்றுகிற சுவாசம், நமது எண்ணங்களையும் சீர்படுத்தி, தேவயற்றவைகளை அழித்து மனதை மேம்படுத்துகிறதென நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். இதனை "துக்க நிவர்த்தி" என்கின்றனர்.
அமைதியான மன நிலையில் நமது சுவாசம் எத்தகையதாய் இருக்கிறது, அதே நேரத்தில் துக்கம், பதட்டம், கொண்டாட்டம் போன்ற மன நிலைகளில் நமது சுவாசம் எத்தகையதாய் இருக்கிறது என்பதை இதுவரை கவனிக்கா விட்டாலும், இனி கவனித்துப் பாருங்கள்.
ஆம், சுவாசத்தின் துணை கொண்டு நமது எண்ணங்களையும் தூய்மை செய்திட முடியும் என்பதை நமது முன்னோர்கள் நிரூபித்திருக்கின்றனர்.
இந்நேரத்திற்கு உங்களுக்குள் ஒரு கேள்வி வந்திருக்கக் கூடும். அது, மூக்கினால் மட்டும்தான் சுவாசிக்க முடியுமா?, வாயினால் கூட சுவாசிக்கலாமே!, அது பற்றிய தகவல் ஏதும் இருக்கிறதா என்கிற கேள்விகள் வந்திருக்கும்.
மூச்சுக்கலை - வாய்வழி சுவாசம்
நாம் எதை செய்ய வேண்டும் என்பதை அறிந்து கொள்ளவதைப் போலவே, எதை செய்யக் கூடாது என்பதையும் அறிந்து கொண்டோமானால், நம்முடைய பாதி இடர்பாடுகளை எளிதில் களைந்து விட முடியும்.
அந்த வகையில் இன்று வாய்வழி சுவாசம் பற்றி பார்ப்போம்.
மூக்கு வழி சுவாசம் நடக்கும் போது எதற்காக வாய்வழி சுவாசம் என்ற கேள்வி வருவது இயல்பே. சுவாசப் பாதையில் ஏதேனும் நோய்த்தொற்று அல்லது வேறு காரணங்களினால் மூக்கின் வழியே சுவாசிக்க இயலாத சூழலில், அல்லது தவிர்க்கவே இயலாத தருணங்களில் ஒரு மாற்றாக வாய்வழி சுவாசம் அமைந்திருக்கிறது.
மூக்கின் வழியே சுவாசிக்கும் போது உள்ளிழுக்கப் படும் காற்றில் உள்ள தூசுக்கள், மூக்கின் உட்புறம் அமைந்துள்ள நுண்ணிய ரோமங்களினால் வடிகட்டப் படுகிறது. இதற்கு அடுத்த நிலையில் Mucus திசுக்கள் காற்றில் உள்ள உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை தடுத்து விடுகிறது.
இந்த நிலையில் வடிகட்டப்பட்ட காற்றானது, வெதுவெதுப்பாக்கப் பட்டு சுவாச குழாய்களுக்குள் அனுப்பப் படுகிறது.மூக்கின் வழி சுவாசத்தில் காற்றானது இத்தனை தரக்கட்டுப்பாடுளை எதிர்கொள்கிறது. இவ்வாறு அனுப்பப் படும் காற்றானது நுரையீரலை அடையும் போது தூய்மையானதாகவும், செறிவானதாகவும் இருக்கிறது.
ஆனால் வாய்வழி சுவாசத்தில் இவை எதுவும் இல்லாமல், காற்று நேரடியாக சுவாசகுழாய்களில் பாய்கிறது. தூய்மை செய்யப் படாத குளிர்ந்த் காற்று நுரையீரலில் பாயும் போது அங்கே ஒவ்வாமையும், தேவையற்ற தொற்றுகளும் உண்டாகிறது.இதனால் என்ன விளைவுகள் உண்டாகும் என்பதை இன்னேரம் நீங்களே யூகித்திருப்பீர்கள்.
ஆம், நாம் எதிர் கொள்ளும் பற்பல நோய்களுக்கு மூல காரணம் இந்த வாய்வழி சுவாசம்தான். இவை எல்லாம் ஒரே நாளில் வருவதில்லை, ஆண்டாண்டு கால வாய்வழி சுவாசத்தின் விளைவே இந்த நோய்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டுகிறேன்.
நம்மில் கணிசமானவர்கள் வாய்வழி சுவாசக்காரர்கள் என்பது வருத்தமான செய்தி. இதை நாம் உணராமலே செய்து கொண்டிருக்கிறோம். இதை உணர்ந்து வாய் வழி சுவாசத்தை நிறுத்துவது என்பதும் நம் கையில்தான் உள்ளது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே இதை கவனித்து கூறி திருத்தினால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.
உறங்கும் போதும் பலர் வாய்வழி சுவாசத்தையே கொண்டிருக்கிறோம். இதனை தவிர்க்க உறங்கும் போது தலை முன்னால் வந்து கவிழ்ந்த நிலையில் உறங்கப் பழகினால் வாய்வழி சுவாசத்தை எளிதில் தவிர்க்க முடியும். தொடர்ச்சியன வாய் வழி சுவாசத்தினால் மூக்கில் உள்ள நாசி துவாரங்கள் பயன்பாடு இல்லாமல் நோய் தொற்றுக்கு ஆளாகி விடும் வாய்ப்பு இருக்கிறது. இது மேலும் தேவையற்ற துயரங்களையே தரும்.
மூக்கு வழி சுவாசம் உடலுக்கும், உயிருக்கும் புத்துணர்ச்சியைத் தருகிறது. மாறாக வாய்வழி சுவாசம் உடலுக்கும், உயிருக்கும் நோய்களையும், அசதியையுமே கொண்டு தரும் என்பதால் உடனடியாக சுவாச முறையை ஆராய்ந்து நாசி வழி சுவாசத்தினை மேற்கொள்ளுதல் அவசியம்.
மூச்சுக் கலை - குறை சுவாசத்தின் விளைவுகள்!
ஒரு நிமிடத்தில் நாம் சராசரியாக 12 முதல் 14 தடவை மூச்சை உள்ளிழுத்து, உள் நிறுத்தி, வெளியிடுகிறோம். ஒரு முறை மூச்சினை உள்ளே இழுக்கும் போது குறைந்த பட்சம் அரை லிட்டர் காற்று உள்ளிழுக்கப் படுகிறது. இவை எல்லாம் இயல்பு நிலையில் நடை பெறும் மூச்சின் கூறுகள் ஆகும்.
ஒருவரின் உடல் அமைப்பு, உடலின் தேவை, உடலின் செயல்பாடுகளைப் பொறுத்து இந்த அளவு மாறுபடும். உடலமைப்பைப் பொறுத்து நுரையீரலின் கொள்ளளவும், உள்ளிழுக்கப் படும் காற்றின் அளவும் மாறுபடும்.
அடிப்படையில் நம்மில் எவருமே முழுமையான சுவாசம் செய்வதில்லை என்பதுதான் உண்மை. நமது நுரையீரலின் கொள்ளளவில் முப்பது விழுக்காடு மட்டுமே காற்றை உள்ளிழுத்து சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறது ஆய்வுகள். இதனால் என்னவெல்லாம் எதிர் விளைவுகள் உண்டாகிறது என்பதை தெரிந்து கொண்டாலே மூச்சுக் கலையின் மகத்துவத்தை உணரமுடியும்.
குறைவான சுவாசத்தினால் நுரையீரலில் உள்ள காற்றுப் பைகளில் போதுமான அளவு காற்று நிரம்பிட வாய்ப்பில்லாமல் போகிறது. இதன் காரணத்தினால் நுரையீரல் தனது செயல்பாட்டினை முழுமையாக செய்ய முடியாமல் போவதால் இரத்ததில் உள்ள கழிவுகள் முழுமையாக நீக்கப் படாமலும், குறைவான பிராண வாயுவையும் சுமந்து கொண்டு மீண்டும் உடலினுள் பாய்கிறது.
இப்படி கழிவுகளை சுமந்து கொண்டு செல்லும் இரத்தத்தினால், அது உடலில் செய்ய வேண்டிய பணிகளை முழுமையாக செய்ய முடியாமல் போகிறது. இதன் தாக்கம் எல்லா உறுப்புகளின் செயல்பாடுகளிலும் கணிசமான பாதிப்பினை உண்டாக்குகிறது.
இதன் தாக்கம் மூளையின் செயல்பாட்டினை மந்தமாக்குவதில் துவங்குகிறது. நாம் உட் கொள்ளும் உணவை முழுமையாக ஜீரணிக்க முடியாமல், அதில் உள்ள சத்துக்களை பிரித்தெடுப்பதில் குறைபாடுகள் உண்டாகிறது. இதனால் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைவதனால் உடலின் கழிவுகள் வெளியேறாமல் தேங்கி நோய் உண்டாக்குவது வரை நீள்கிறது.
"வெறும் மூச்சுதானே", என நாம் அசட்டையாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு செயலுக்குப் பின்னால் எத்தனை பெரிய பாதிப்புகள் காத்திருக்கிறது என்பதை உணர்த்திட வேண்டியே இத்தனை நீண்ட அறிமுகம் தேவையாகிறது. இந்த பாதிப்புகளை நம் மூச்சினை சீர் படுத்துவதன் மூலம் எளிதில் சரி செய்யும் வாய்ப்பிருக்கிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
இனி மூச்சுக் கலையின் அறிவியல் அதனை கை கொள்ளுதல், மேம்படுத்துதல் போன்றவைகளைப் பற்றி பார்ப்போம்.
அந்த வகையில் முதலில் நாம் எப்படி சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிதல் அவசியம். ஆய்வுகளின் அடிப்படையில் நான்கு விதமான சுவாசத்தினை நாம்
மேற்கொண்டிருக்கிறோம் என பட்டியலிட்டிருக்கின்றனர்.
அவை...
உயர் சுவாசித்தல்
மத்திம சுவாசித்தல்
கீழ் சுவாசித்தல்
முழுமையான சுவாசித்தல்
மூச்சுக் கலை - சுவாசித்தலின் வகைகள்
நமது உடற்கூறானது எலும்புகளின் மீதே கட்டமைக்கப் பட்டிருக்கிறது. எலும்புகளின் மேலே தசைகளும், இரத்த நாளங்கள் விரவி இருப்பதைப் போலவே, எலும்புச் சட்டகத்தின் உள்ளே முக்கியமான உள்ளுறுப்புகள் அமைந்திருக்கின்றன. இந்த எலும்புகள் யாவும் ஒன்றோடு ஒன்று தசைகளினாலும், நரம்புக்ளினாலும் பின்னிப் பிணையப் பட்டிருக்கின்றன.
நுரையீரலின் வெளிச்சுவர், மேலே கழுத்தெலும்புடனும், சுற்றிவர நெஞ்சுக்கூடு மற்றும் விலா எலும்புகளுடனும், கீழ் பகுதி உதரவிதானத்தோடு ஒட்டியிருப்பதைக் காணலாம். நமது நுரையீரல் விரிவடைவதையும், சுருங்குவதையும் இந்த பக்க உறுப்புகளே தீர்மானிக்கின்றன.
நம் நுரையீரலில் காற்று நிரம்புவதைப் பொறுத்து உயர் சுவாசித்தல், மத்திம சுவாசித்தல், கீழ் சுவாசித்தல், முழுமையான சுவாசித்தல் என நான்கு வகையான சுவாச முறைகள் இருப்பதாக பிரித்திருக்கின்றனர். இவற்றில் நாம் எந்த முறையில் சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை அறிய பின் வரும் விளக்கங்கள் உதவும்.
உயர் சுவாசித்தல் என்பதை கழுத்தெலும்பு சுவாசித்தல் எனக் கூறுவர். இந்த முறையில் விலா எலும்புகள், கழுத்தெலும்பு போன்றவைகளை மேலே உயர்த்துவதன் மூலம் நுரையீரலை விரிவடையச் செய்து காற்றினை உள்ளே இழுக்கும் முறை. இந்த முறையில் நிறைய உறுப்புகளை சிரமப் படுத்தி, குறைந்த அளவு காற்றையே நுரையீரலில் நிரப்புகிறோம். இன்னும் குறிப்பாக சொல்வதானால் நுரையீரலின் மேற்பகுதியில் மட்டுமே காற்று நிரம்புகிறது. பயனற்ற இம் முறையை தவிர்த்தல் வேண்டும்.
மத்திம சுவாசித்தல் என்பது விலா எலும்புகளை உயர்த்தி இயக்குவதன் மூலம் நுரையீரலை விரிவடையச் செய்வதாகும். இந்த முறையில் காற்று நுரையீரலின் மேல் மற்றும் மத்திய பகுதியில் மட்டுமே நிரம்பும். இதுவும் அத்தனை சிறப்பான சுவாச முறை இல்லை.
கீழ் சுவாசித்தல் அல்லது ஆழ்ந்த சுவாசித்தல் என்பது முதல் இரண்டு முறைகளை விடவும் மேம்பட்ட ஒன்று. இந்த முறையில் நமது நுரையீரலின் மேல், மத்திய மற்றும் கீழ் பகுதிகளில் காற்று நிரம்புகிறது. இதில் மார்புக் கூடு, உதரவிதானம், விலா எலும்புகள் ஆகியவை ஒத்திசைவுடன் இயங்குவதால் நிகழ்கிறது. சுவாச பயிற்சி செய்யும் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் இந்த நிலையை அடைய வேண்டி பயிற்சிகளை செய்யலாம்.
முழுமையான சுவாசித்தல் அல்லது யோகிகளின் சுவாசித்தல் என்பது சுவாசப் பயிற்சியின் உயர்நிலை. இந்த முறையில் நுரையீரலை முழுமையாக விரிவடையச் செய்வதன் மூலம் அதன் முழுக் கொள்ளளவுக்கு காற்றை நிரப்பி, அதில் இருக்கும் பிராண சக்தியை முழுமையாக பிரித்தெடுத்து இரத்தத்தில் கலக்கச் செய்வதாகும். இது முறையான தொடர் பயிற்சியினால் மட்டுமே சாத்தியமாகும்.
நம்மில் பெரும்பாலானவர்கள் முதல் இரண்டு வகை சுவாசக்காரர்களே! இதை உணர்ந்து சுவாசப் பயிற்சிகளை மேற்கொண்டால் நம் உடலையும், உயிரையும் மேம்படுத்தி நல் வாழ்வு வாழ்ந்திடலாம்.
மூச்சுக் கலை - "சரம் பார்த்தல்"
மூக்கின் இடது நாசிதுவாரத்தின் வழியே நடைபெறும் சுவாசம் இடகலை எனப்படுகிறது. இதற்கு "சந்திரகலை" என்றொரு பெயரும் உண்டு. மூக்கின் வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலை எனப்படுகிறது. இதற்கு "சூரிய கலை" என்றொரு பெயரும் உண்டு.
இரண்டு நாடிகளிலும் ஒருசேர நடக்கும் சுவாசத்திற்கு சுழுமுனை என்று பெயர்.
இதையே சர ஓட்டம் என்பர். இரண்டு ஆட்காட்டி விரல்களையும் மூக்கின் நடுத் தண்டில் பக்கத்திற்கு ஒன்றாக வைத்து இயல்பாய் மூச்சை விட எந்த நாசியில் மூச்சு ஓடுகிறது என்பதை எளிதாய் கண்டறியலாம்.
இந்த சுவாச நடை தொடர் இடைவெளிகளில் மாறும் தன்மை உடையது என சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். அதாவது ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் சூரியகலை அல்லது பிங்கலை அல்லது வலது நாசியில் சுவாசம் நடைபெற வேண்டுமாம். அதைப் போலவே திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் சந்திரகலை அல்லது இடகலை அல்லது இடது நாசியில் சுவாசம் நடை வேண்டுமாம்.
வளர் பிறையில் வரும் வியாழக் கிழமைகளில் இடகலையும், தேய் பிறையில் வரும் வியாழக் கிழமைகளில் பிங்கலை சுவாசமும் நடக்க வேண்டும் என்கின்றனர். இதன்படி சுவாசம் நடைபெற்று வந்தால் உடல் ஆரோக்கியமாய் இருக்குமாம். இதில் ஏதேனும் மாறுதல் வரும் போது உடல்நலம் கெடுகிறது என்கின்றனர் சித்தர் பெருமக்கள்.
திங்கள், புதன், வெள்ளிக் கிழமையில் ஓடவேண்டிய இடகலை சுவாசத்திற்கு பதிலாக பிங் கலை சுவாசம் ஓடினால் முறையே ஜலதோஷம், தலைவலி, கண், காது நோய்கள் உண்டாகுமாம்.
ஞாயிறு, செவ்வாய் மற்றும் சனிக் கிழமைகளில் ஓட வேண்டிய பிங்கலை சுவாசத்திற்கு பதில் இடகலை சுவாசம் ஓடினால் முறையே இருமல், காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு, வயிற்றுப் போக்கு உண்டாகுமாம்.
இதன் அடிப்படையில்தான் வைத்தியர்கள் மருந்தினை தீர்மானிக்கும் முறை கூட இருந்தது. மருத்துவம் என்றில்லாமல் வாழ்வின் பிற செயல்களும் இந்த சர ஓட்டத்தினை வைத்தே தீர்மானிக்கப் பட்டது. இதனையே சரம் பார்த்தல் என கூறுவர். சரம் பார்த்தல் என்பது முற்காலத்தில் ஒரு வாழ்வியல் கூறாகவே இருந்திருக்கிறது. காலவோட்டத்தில் நாம் மறந்தே விட்டோம் என்பது வருத்தமான ஒன்று.
மூச்சுக்கலை - பத்து வகையான காற்று!
நமது உடலில் பத்து விதமான வாயுக்களாய் பிரிந்து நின்று, உடலின் செயல்பாடுகளில் பங்களிப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். இவற்றில் ஏதேனும் ஒன்றின் செயல்பாட்டில் குறைபாடு உண்டானாலும் உடலின் ஆரோக்கியம் கெடும்.
அவை பற்றி சுருக்கமாய் இன்றைய பதிவில் காண்போம்.
பிராணன்
மூலாதாரத்தில் சேர்ந்து, இதயத்தில் நின்று மூக்கின் வழியே சென்று திரும்பி வரும் காற்று பிராணன் எனப்படுகிறது. இது மேல் நோக்கி இயங்கக் கூடியது. மற்ற ஒன்பது வகை காற்றுக்கும் ஆதார காற்று இதுதான்.
அபானன்
இது குதத்தை பற்றி நின்று நமது உடலின் கழிவுகளான மலம்,சிறு நீரை வெளியே தள்ளுகிறது. இது கீழ்நோக்கி இயங்கும் தன்மை உடையது.
வியானன்
நரம்புகளின் ஊடே நின்று உணர்வுகளை கடத்தும் வாயு வியானன் எனப்படுகிறது. மூளையின் கட்டளைகளை உறுப்புகளுக்கும், உணர்வுகளை மூளைக்கும் கொண்டு செல்லும் வாயு இது. இதனை தொழில் காற்று என்றும் கூறுவர்.
உதானன்
நமது நாபிக்கமலத்தில் நின்று, குரல் நான்களை அதிரச் செய்வதன் மூலம் ஒலியை எழுப்பும் காற்று உதானன் எனப்படும்.
சமானன்
நாம் உண்ணும் உனவினை ஜீரணித்து அதில் இருக்கும் சத்துக்களை பிரித்து இரத்தத்திற்கும்,உறுப்புகளுக்கும் தரும் காற்று சமானன் எனப்படும். இதற்கு நிரவல் காற்று என்றொரு பெயரும் உண்டு.
நாகன்
இது நமது உடலில் சேர்ந்த நச்சு உணவை புரட்டி வாய் வழியே வெளியே தள்ளும் காற்று இது. குமட்டல், வாந்தி போன்றவைகளை உருவாக்கிடும் காற்று நாகன் எனப்படுகிறது.
கூர்மன்
இது கண்ணில் நின்று அதன் இயக்கம் மற்றும் செயல்பாடுகளுக்கு துணை புரியும் காற்று.
கிரிதரன்
இது நமது உடலில் நோய் தொற்றை உருவாக்கும் கிருமிகள், தூசி, துரும்பு, மாசு போன்றவைகளை உடம்பில் நுழைய விடாமல் தடுக்கும் காற்று. இதற்கு தும்மல் காற்று என்று பெயர்.
தேவதத்தன்
மூளைக்குச் செல்லும் இரத்தத்தின் அளவு குறைதல்,அல்லது இரத்தத்தில் பிராணவாயுவின் அளவு குறைதல், அல்லது நுரையீரலில் புழங்கிடும் காற்றின் அளவு குறைதல், உடல் உறக்க நிலைக்கு தயாராகும் போது ஏற்படும் காற்று இது. கொட்டாவி, விக்கல் போன்றவை தோன்ற இந்த காற்றே காரணமாகிறது.
தனஞ்செயன்
மேலே சொன்ன ஒன்பது காற்றுகளும் நமது உடலில் இருந்து வெளியேறிய பின்னர் செயல்படும் காற்று இது. நமது உடலில் நுண்ணுயிரிகளைத் தூண்டி உடலை அழுகச் செய்து உடல் உப்பி வெடித்து வெளியேறும் என்கின்றனர். இதனை வீங்கல் காற்று என்றும் அழைப்பர்.
இவற்றை முறையே பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியதந்த மேம்படுத்தி நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்.
மூச்சுக் கலை – “ஹம்ஸம்”
இடது நாசியில் ஓடும் சுவாசம் இடகலை, வலது நாசியில் ஓடும் சுவாசம் பிங்கலை, இரண்டு நாசியிலும் ஒரே நேரத்தில் ஓடுவது சுழுமுணை.. மூச்சை உள்ளே இழுப்பது பூரகம்,
சுவாசித்த காற்றை உள்ளே நிறுத்துவது கும்பகம், அந்த காற்றை வெளியே விடுவது ரேசகம்.
இந்த அடிப்படைகளை மனதில் கொண்டு இனிவரும் தகவல்களை அணுகிட வேண்டுகிறேன்.
மூச்சுக் கலையின் முதல் படி உள்ளே ஓடும் மூச்சினை கவனிப்பதும், உணர்வதுமதான். அந்த வகையின் இன்று எளிய பயிற்சி முறை ஒன்றை பார்ப்போம்.
இந்த பயிற்சியினை முதலில் ஐந்து நிமிடங்கள் என ஆரம்பித்து தினமும் கொஞ்சம் கொஞ்சமாய் நேரத்தை அதிகரிக்கலாம். முப்பது நிமிடங்கள் செய்ய முடிந்தால் நல்லது. வெறும் வயிறுடன் அல்லது உணவு உண்டு இரண்டு மணி நேரம் கழிந்த நிலையில் செய்வது உத்தமம்.
தனிமையான இடத்தில் உடல தளர்வாக இருக்கும் படி அமர்ந்து கொள்ள வேண்டும். முதுகுத் தண்டு நேராய் இருத்தல் அவசியம். பத்மாசனம் அல்லது சுகாசனம் உகந்தது.
இப்போது வெறுமனே மூக்கின் வழியே சுவாசம் உள்ளே சென்று வெளியே வருவதை மட்டும் கவனியுங்கள். மனம் அதன் போக்கில் ஓடும். அதைப் பற்றி கவலை வேண்டாம். சில நாட்களில் மனம் குவியும். எனவே, இயல்பாக சுவாசம் ஓடுவதை மட்டும் கவனித்தால் போதும்.
ஒன்றிரண்டு நாட்கள் தொடர்ந்து செய்திட மனம் அடங்கி, கவனம் சுவாசத்தில் மனம் நிலைக்கும். இந்த நிலையில் சுவாசத்தின் சப்தத்தை உணர ஆரம்பிப்பீர்கள்.
ஆம்!, சுவாசத்திற்கு சப்தம் உண்டு.
இதனை நம் முன்னோர்கள், “சப்தமில்லாத சப்தம்” என்கின்றனர். மூச்சை உள்ளே இழுக்கும் சுவாசம் “ஸம்” என்ற சப்தத்துடன் போவதையும், மூச்சு வெளியேறும் போது அது “ஹம்” என்ற சப்தத்துடன் வெளியேறுவதையும் அவதானிக்கலாம். இதையே “ஹம்ஸம்” எனக் கூறுகின்றனர். “ஸோ”, “ஹம்” என்றும் சொல்வதுண்டு.
இந்த மூச்சில் அதன் சப்தத்தில் தொடர்ந்து லயித்திருக்க பரவச நிலை உண்டாகும். இதனையே செபிக்காத மந்திரம் எனச் சொல்வர். இதனை அஜபா ஜெபம், அஜபா காயத்திரி என்றும் கூறுவர்.
ஔவையார் அருளிய விநாயக அகவலில் அசபை பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றது.
"குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமு"
தொடர்ந்து இந்த பயிற்சியினை செய்து வந்தால் மனம் பரவச நிலையை உணர ஆரம்பிக்கும். கவனம் குவிந்து, மனதின் ஆசாபாசஙள் விலகும். உடலில் புத்துணர்ச்சி தோன்றும். எண்ணம் தீர்க்கமாகும், கண்களில் தீட்சண்யம் மிளிரும்.
குறைந்த பட்சம் மூன்று மாதங்கள் கவனக் குவிப்புடன் மூச்சினை கவனிக்கும் இந்த தொடர் பயிற்சி செய்து வந்தால், சப்தமில்லாத சப்த மந்திரத்தின் மகிமையை உணர ஆரம்பிக்கலாம்.
No comments:
Post a Comment