ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் பெரும் புண்ணியம் என்கிறது சாஸ்திரம். மகாபெரியவரின் நினைவு நாளும் அதே துவாதசி திதியில் வந்திருக்கிறது. எவ்வளவு ஒற்றுமை.
காஞ்சிமகாப் பெரியவர் 1907ம் ஆண்டு, தனது 13ம் வயதில் சந்நியாச வாழ்வை ஏற்றுக் கொண்டார். ஒருவர் சந்நியாச வாழ்வை ஏற்றபின் தாயைப் பார்க்கக் கூடாது என்பது விதி.
அதன்படி மகா பெரியவரும் தன் தாயாரிடம் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. 1932ல் ஆந்திராவில் சித்தூர் அருகிலுள்ள நகரி என்னும் ஊருக்கு பெரியவர் விஜயம் செய்திருந்தார். அப்போது கும்பகோணத்தில் இருந்து ஒரு தந்தி காஞ்சிபுரத்திலுள்ள மடத்து நிர்வாகிக்கு அனுப்பப்பட்டிருந்தது.
அதில் மகா பெரியவரின் தாயாரான மகாலட்சுமி அம்மையார் சிவபதம் அடைந்த செய்தி இடம் பெற்றிருந்தது. தந்தியுடன் சித்தூர் வந்த மடத்தின் நிர்வாகியைக் கண்டதுமே மகா பெரியவர், "கும்பகோணத்தில் இருந்து தந்தி வந்திருக்கிறதா?'' என்று கேட்டார்.
"ஆம் சுவாமி'' என்ற நிர்வாகியிடம் மேற்கொண்டு மகா பெரியவர் அதைப் பற்றிக் கேட்கவில்லை. அப்போது மகா பெரியவருடன் உரையாடிக் கொண்டிருந்த சில பண்டிதர்கள் தந்தியைப் பற்றி அறிய முயன்றனர். சில விநாடி மவுனம் காத்த மகா பெரியவர் அவர்களிடம், "தாயாரின் வியோகத்தைக் (மரணச்செய்தி) கேட்ட சந்நியாசி செய்ய வேண்டியது என்ன?'' என்று கேட்டார்.
தந்தியைப் பார்க்காமலே தன் தாயார் சிவலோக பதவியடைந்ததை மகா பெரியவர் எப்படி அறிந்தார் என்று பண்டிதர்கள் ஆச்சரியப்பட்டனர். ஆனாலும், அதுபற்றி எதுவும் கேட்காமல், மகா பெரியவர் கேட்டதற்கு பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்தனர். உடனே மகா பெரியவர் நகரியில் இருந்து புறப்பட்டு 3 கி.மீ., தூரத்திலுள்ள காட்டுப்பகுதியை அடைந்தார்.
அங்குள்ள அருவியில் நீராடினார். மகா பெரியவரை ஈன்றெடுத்த அந்தத்தாய் அவருக்கு மட்டுமல்ல... தங்களுக்கும் தாயே என்ற உணர்வுடன் பண்டிதர்களும், பக்தர்களும் அங்கு நீராடினர்.
காஞ்சி மகா பெரியவரின் தாயார் மறைந்தது 1932 ஜூன் 14. அன்று ஏகாதசி திதியாக இருந்தது. ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் பெரும் புண்ணியம் என்கிறது சாஸ்திரம். மகாபெரியவரின் நினைவு நாளும் அதே துவாதசி திதியில் வந்திருக்கிறது. எவ்வளவு ஒற்றுமை பாருங்கள்...
மகாபெரியவரையும், அந்த தெய்வமகனைப் பெற்ற தெய்வத்தாயையும் மனதார வணங்குவோமா!
No comments:
Post a Comment