வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில்

அன்று பொன்னிறமான நெற்கதிர் அலங்காரம். அதில் அந்த மண்டபமே காணப் பொன்மண்டபமாக மாற்றியிருந்தது. பொன்னுக்கு நடுவில் மற்றொரு பொன்னாக அழகர் வீற்றிருந்தார். அழகர் தரிசனம் காண எண்ணிலடங்கா மக்கள் கூடிவிட்டனர். கூட்டம் எல்லை மீறுகிறது மக்கள் பக்தியிலும் மகிழ்ச்சியிலும் குதூகலிக்கிறார்கள். வெற்றுக் கூச்சல்கள்தானா அல்லது உள்ளார்ந்த அர்ப்பணிப்பு இவர்களுக்கு உள்ளதா என்று சோதிக்கப் பெருமாள் திருவுளம் கொண்டார் போலும்... மண்டபத்தில் தீ பற்றியது. காய்ந்த கதிர்கள் சடசடவெனப் பற்றிக் கொள்ளக் கேட்க வேண்டுமா... மொத்த மண்டபமும் தீப்பிழம்பின் பிடிக்குக் கணத்தில் மாறிவிட்டது.

அரசர் முதற்கொண்டு அங்கு கூடியிருந்த அனைவரும் திகைத்தனர். இதுகாறும், 'கோவிந்தோ... அழகா' என்று சிலிர்த்தவர்கள் இப்போது செய்வதறியாது திகைத்தனர். அப்போது அங்கு ஒரு மனிதர் தீக்குள் பாய்ந்தார். பெருமாளைத் தன் கரங்களால் அள்ளி எடுத்தார். தீ அவர் முதுகில் படரத் தொடங்கியது. ஆனால், அது பற்றிய அக்கறை இன்றிப் பெருமாளைத் தூக்கிக்கொண்டு வெளியே மணல்வெளியில் பாய்ந்தார். மக்களும் மன்னரும் ஓடிவந்து பார்த்தனர். அந்த மனிதர் கீழே கிடக்கிறார். அவர் மார்பில் சாய்ந்து அழகரும் கிடக்கிறார். அவர் மேனியில் பற்றிய தீ மணல் வெளியில் புரண்டதால் அணைந்திருந்தது. பிற அர்ச்சகர்கள் ஓடிவந்து பெருமாளை வாங்கினர். அந்த மனிதரின் தீப்புண்களுக்கு மருந்திட்டனர். மன்னன் ஓடிவந்து அவர் அடிகளைப் பணிந்தார்.

"ஐயா, தாங்கள் யார்... இந்த உற்சவத்தில் முதல் மரியாதை பெறுபவன் நான். ஆனால், அந்தக் கொடுங்காட்சியை வேடிக்கை பார்க்கதான் என்னால் முடிந்தது. ஆனால் தாங்களோ துணிந்து தீயில் பாய்ந்து அப்பனின் திருமேனியை அள்ளி வந்துவிட்டீர்கள். உங்கள் மேனியில் தீ பற்றிய போது என் மேனியில் வெட்கம் பற்றியது. காக்க முடியாதவனுக்கு எதற்கு மாலைகள்... மரியாதைகள்... பரிவட்டங்கள்... இனி இந்த உற்சவத்தில் உங்களுக்குதான் முதல் மரியாதை தரப்பட வேண்டும் என்று உத்தரவிடுகிறேன்" என்று உணர்ச்சி வசப்பட்டுப் பேசினான் மன்னன்.

வண்டியூர் வீரராகவப் பெருமாள்
"மன்னா, நான் இந்த வீரராகவப் பெருமாள் கோயிலில் சாதாரண அர்ச்சகர். என் பெயர் அமுதார். வீரராகவப் பெருமாளின் வீட்டுக்கு அல்லவா அழகர் விருந்துக்கு எழுந்தருள்கிறார். வந்த விருந்தினரைக் காக்கவேண்டிய பொறுப்பு அந்தப் பெருமாளுக்கு உள்ளதல்லவா... அவன் என்னுள் புகுந்து இந்தச் செயலைச் செய்தான் என்றுதான் எண்ணுகிறேன். உலகில் அம்புக்கு என்றும் பெருமை இல்லை. எய்தவனுக்குதான் பெருமை. அப்படி என்னை எய்தவன் இந்த வீரராகவப் பெருமாள் அல்லவா... எனவே, அழகர் உற்சவத்தில் தாங்கள் தருவதாகச் சொன்ன முதல் மரியாதையை இனி அந்த வீரராகவப் பெருமாளுக்கே சமர்ப்பிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்" என்று தம்மைத் தாழ்த்தி இறைவனை உணர்த்தினார் அமுதார். தன் உயிரையே தியாகம் செய்ய முன்வந்தவர் என்பதால் அவர் அதன்பிறகு 'தியாகம் செய்த அமுதார்' என்றே வழங்கப்பட்டார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த அற்புதம் நிகழ்ந்த தலம் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயில். இன்றும் இந்தப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் 'தியாகம் செய்த அமுதார்' உற்சவம் 15 நாள்கள் இங்கு நடைபெறுகிறது. ஆபத்துக்காலத்தில் இந்த பெருமாள் கோயிலுக்கு நாடிவந்து வேண்டினால் அவர் ஓடிவந்து காப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாயிற்று.
அழகர் சித்திரை உற்சவத்தின் போது இங்கு வந்து வையாழி சேவை கண்டருள்கிறார்.

இந்த அற்புதமான திருக்கோயிலில் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்றாலும் இதை முறையாக விரிவுபடுத்திக் கட்டியவர் சொக்கப்பநாயக்கர் என்கிறது வரலாறு. இங்கு கருவறையில் பெருமாள் பூதேவி ஸ்ரீதேவி தாயாருடன் சேவைசாதிக்கிறார். திருவாச்சியோடு ஆதி சேஷன் குடைப்பிடிக்க இங்கு பெருமாள் கருணாமூர்த்தியாகக் காட்சி கொடுக்கிறார். பெருமாளின் திருக்காட்சியைக் கண்ட மாத்திரத்தில் மனம் லேசாகி சிலிர்ப்பும் மகிழ்வும் உண்டாகிறது. கவலைகள் தீர்க்கும் அற்புதத் திருக்காட்சியை தரிசித்துப் பின் தாயாரை தரிசிக்கச் சென்றால் அங்கு கருணை பொழியும் திருமுகத்தோடு காட்சி தருகிறார்.

இங்கு அருளும் தாயாருக்கு கனகவல்லி என்று திருநாமம். கனகம் என்றால் தங்கம். இங்கு வந்து வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் வறுமையை நீக்கி செல்வ வளம் அருள்பவள் இந்தத் தாயார் என்பது ஐதீகம். அதிலும் வெள்ளிக்கிழமை அன்று இந்தக் கோயிலுக்கு வந்து வேண்டிக்கொள்ளும் பக்தர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றித் தருகிறாள் தாயார் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயத்தில் பெருமாள் நின்ற கிடந்த அமர்ந்த திருக்கோலங்களில் காட்சியருள்கிறார். மூலவர் வீரராகவப் பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்க ஸ்ரீரங்கநாதரார் கிடந்த கோலத்திலும் யோக நரசிம்மராக அமர்ந்த கோலத்திலும் பெருமாள் காட்சி அருள்கிறார். எனவே இங்கு வந்து பெருமாளை வேண்டிக்கொள்வதென்பது மிகவும் விசேஷம் என்கிறார்கள் பக்தர்கள்

இங்குள்ள ரங்கநாதப் பெருமாளுக்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கின்றன. அதேபோன்று பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் வீரராகவப் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெறும். இங்கு ஆண்டாள், சிறிய திருவடி, பெரிய திருவடி, மணவாள மாமுனிகள், யோக நரசிம்மரோடு கூடிய சக்கரத் தாழ்வார் ஆகியோரும் சந்நிதி கொண்டருள்கிறார்கள். புத்திர பாக்கியம், திருமண வரம், தொழிலில் அபிவிருத்தி ஆகியன வேண்டி இங்கு வருபவர்கள் அவற்றை விரைவில் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று அழகர் இங்கு எழுந்தருளும் வைபவம். அழகர் மதுரைக்கு வருகிறார் என்றாலே அது வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலுக்கு வருவதைத் தான் குறிக்கும். இங்கிருந்துதான் அழகர் சேஷ வாகனத்தில் எழுந்தருளி தேனூர் மண்டபத்தை அடைவார். அப்போது இந்த ஆலயத்தில் லட்சக் கணக்கான மக்கள் கூடி தரிசனம் செய்வார்கள்.

மதுரை செல்லும் பக்தர்கள் அழகர் கோயிலுக்குச் செல்லும் முன்பாக வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். வாழ்வில் திருவருளும் குருவளும் நிறைந்து விளங்கும்.





No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasthyarko...