ஒரே நாளில் ஆயிரம் பிறை!
ஒரு வயதான தம்பதி, காஞ்சி மகாபெரியவரை தரிசிக்க வந்தார்கள். அவர்கள் மனதில் ஒரு சந்தேகம். அதை சுவாமியிடம் தெரிவித்தார்கள்.
'சுவாமி! எங்களுக்கு எண்பது வயது பூர்த்தியாகி விட்டது. சதாபிஷேகம் செய்துகொள்ளுங்கள் என எங்கள் பிள்ளைகள் மூன்று பேரும் எங்களை ஓயாமல் வற்புறுத்துகிறார்கள். ஆனால் எங்களுக்குத் தான் மனம் ஒப்பவில்லை.
'சுவாமிகள் பரிவோடு கேட்டார்: 'ஏன் ஒப்பவில்லை?'
''சதாபிஷேக அழைப்பிதழில் ஆயிரம் பிறை கண்டவர் என்று போடுவார்கள் இல்லையா? நாங்கள் அப்படி ஆயிரம் பிறை காணவில்லையே? சிலர் தவறாமல் மூன்றாம் பிறையைப் பார்க்கிறார்கள். அவர்கள் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாமோ என்னவோ! ஆனால் ஆயிரம் பிறையைப் பார்க்காத நாங்கள் 'ஆயிரம் பிறை கண்டவர்கள்' என்று போட்டுக் கொள்வது சரியாக இராதே! அப்படிச் செய்வது தப்பில்லையா?''
அவர்களுடைய வெகுளித்தனமான.. ஆனால் விவாதபூர்வமான பேச்சைக் கேட்டு சிரித்தார் பெரியவர். அவர்கள் சொல்கிறபடி பார்த்தால் உலகில் யாருமே சதாபிஷேகம் செய்து கொள்ள முடியாதே!
சற்று யோசித்த அவர் சொன்னார்:
'நல்லது. அதைப் பற்றிப் பிறகு பேசுவோம். முதலில் அருகேயுள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் செல்லுங்கள். அங்கே சகஸ்ரலிங்கம் (ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம் பொறிக்கப்பட்ட விக்ரகம்) உண்டு. அதை நமஸ்காரம் செய்துவிட்டு மாலையில் இங்கே வாருங்கள்!''
உடனடியாக அவர்கள் ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குப் போய் சகஸ்ரலிங்கத்தை பக்தியோடு தரிசித்துவிட்டு, பெரியவரைத் தரிசிக்க மறுபடி வந்தார்கள். சுவாமி புன்முறுவலோடு கேட்டார்:
''என்ன.. சகஸ்ர லிங்க தரிசனம் ஆயிற்றா?''
''ஆயிற்று சுவாமி!''
''அப்படியானால் இனிமேல் நீங்கள் சதாபிஷேகம் செய்து கொள்ளலாம்.''
''அது எப்படி?''
'ஒவ்வொரு லிங்கத்தின் சிரசிலும் சந்திரப் பிறை இருப்பதாக ஐதீகம். நீங்கள் சகஸ்ரலிங்கத்தைத் தரிசனம் செய்தபோது அந்தப் பிறைகளையும் சேர்த்து தரிசனம் செய்தீர்கள். எனவே நீங்கள் ஆயிரம் பிறையை தரிசித்து விட்டீர்கள். இனிமேல் சதாபிஷேகம் செய்துகொள்ளத் தடையேதும் இல்லை.
சரிதானே!'' சொல்லிவிட்டுக் கலகலவெனச் சிரித்தார்.
பரமாச்சாரியார். அந்த தம்பதி சதாபிஷேகம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு மனநிறைவுடன் விடைபெற்றனர்.
ஹர ஹர சங்கர!
ஜய ஜய சங்கர !
No comments:
Post a Comment