தர்மபுரி மாவட்டத்தில் அரூர் அருகே அமைந்துள்ளது தீர்த்தமலை. திருவண்ணாமலை செங்கத்திலிருந்து மிக அருகில் உள்ள இந்த மலைமீது தற்போது இளைஞர்களின் பார்வை திரும்பியுள்ளது. டிரெக்கிங் செல்ல விரும்பும் வட தமிழக இளைஞர்கள் இந்த இடத்தைத் தேர்வு செய்கின்றனர். பாண்டிய, சோழ மன்னர்களால் இக்கோவில் ஏழாம் நூற்றாண்டு கட்டப்பட்டதாகும்.
தீர்த்தகிரீஸ்வரர் கோயில்
தீர்த்தமலையின் உச்சியில் அமைந்துள்ளது இந்த தீர்த்தகிரீஸ்வரர் கோயில். இது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும், தெற்கில் சிவபெருமான் வாழும் இடமாகவும் நம்பப்படுகிறது.
தீர்த்தமலை வரலாறு
ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, கம்பீரமாக காட்சியளிக்கும் தீர்த்தமலை கோயில், சோழர் மற்றும் பாண்டியர்களால் கட்டப்பட்டது. இதற்கான பல கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகின்றன.
இந்த கல்வெட்டுக்கள் மூலம் சோழ வம்சத்தின் பெரும் ரகசியங்கள் உலகுக்கு தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
ஆச்சர்யங்கள்
ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்ட ராஜேந்திரச் சோழன் இந்த கோயிலுக்கு அடிக்கடி வருவாராம். அதிலும் அவர் கையாலே சிவபூசை செய்வார் என்றும் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகிறது. இவர் மட்டுமின்றி அந்த கால புலவர் அருணகிரிநாதர் உட்பட பல்வேறு புலவர்பெருமக்கள் வந்து பாடிய தலமாக இது அறியப்படுகிறது.
எப்படி செல்லலாம்
வரலாற்று சிறப்பு மிக்க தீர்த்தமலை திருவண்ணாமலை மற்றும் தர்மபுரிக்கு இடையே அமைந்துள்ளது. கோவை, பெங்களூரு முதலிய இடங்களிலிருந்து வருபவர்கள் தர்மபுரி வழியாகவும், சென்னை, புதுச்சேரி வழி வருபவர்கள் திருவண்ணாமலை வழியாகவும் வந்து சேரலாம்.
முதல் வழி: தர்மபுரி - அரூர் - தீர்த்தமலை
இரண்டாம் வழி : திருவண்ணாமலை - தண்டாரம்பட்டு - தீர்த்தமலை
முதல் வழி
அரூர் வழியாக தர்மபுரியிலிருந்து வருவதற்கு 1.30 மணி நேரங்கள் ஆகலாம். நெடுஞ்சாலை எண் 60A வழியாக அல்லது நெடுஞ்சாலை எண் 777 வழியாகவும் அடையமுடியும். இவ்வழிகள் போக்குவரத்து நெரிசலாக இருக்கும்பட்சத்தில் நெடுஞ்சாலை எண் 60 வழியாக செல்ல தயாராகிக்கொள்ளுங்கள்.
இரண்டாம் வழி
திருவண்ணாமலையிலிருந்து தண்டாரம்பட்டு வழி 65 கிமீ தூரம் ஆகும்.. மாற்றுப்பாதையாக செங்கம் வழியாகவும் செல்லலாம். செங்கத்தில் நிறைய சுற்றுலாத் தளங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தீர்த்தங்கள்
தீர்த்தங்கள் பலவகை உண்டு. இங்குள்ள தீர்த்தங்கள் நம் நோயை குணப்படுத்தும் வல்லமை கொண்டது. அந்த காலத்திலேயே இதை அறிந்திருந்த சோழர்கள் இங்கு கோயிலைக் கட்டி வழிபட்டிருக்கிறார்கள்.
அக்னி தீர்த்தம், கௌரிதீர்த்தம், குமாரா தீர்த்தம், வசிஸ்ட தீர்த்தம், வாயு தீர்த்தம், வருண தீர்த்தம், அனுமன் தீர்த்தம்,ராம தீர்த்தம் என்பவை அவை. இங்கு அகத்தியர் , ராமர் தீர்த்தங்கள் மிகவும் சிறப்பானவையாகும்.
சென்னை - தீர்த்தமலைக்கு செல்லும் வழிகள்
1. சென்னை - திருப்பெரும்புதூர் - காஞ்சிபுரம் - வேலூர் - வாணியம்பாடி வழி தீர்த்தமலை
2. சென்னை - திருப்பெரும்புதூர் - காஞ்சிபுரம் -ஆற்காடு - ஆரணி - செங்கம் - தீர்த்தமலை
3. சென்னை - செங்கல்பட்டு - மேல்மருவத்தூர் - திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை வழி தீர்த்தமலை
அருகாமையிலுள்ள சுற்றுலாத்தலங்கள்
கிளியூர் நீர்வீழ்ச்சி, ஏற்காடு, அண்ணா பூங்கா, பாகோடா பாய்ண்ட், செங்கம், மான் பூங்கா, ஏற்காடு ஏரி என பல்வேறு இடங்கள் இதன் அருகில் பார்ப்பதற்குரிய இடமாக உள்ளது.
மலையேற்றம்
இந்த கோயிலுக்கு செல்லும் மலையேற்றம் நேர்த்தியான படிக்கட்டுகளுடன், அழகாக அமைந்திருக்கும். எனினும் உயரம் உங்களை கீழேத் தள்ள காத்திருக்கும்.கவனமாக செல்லவேண்டும்.
அரைமணி நேர தோராய நடை பயணத்துக்குப் பின் கோயிலை வந்தடையலாம்.
வெயில் தாழ்ந்து பயணம் செல்பவர்கள், கோயில் நடை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரைதான் திறந்திருக்கும் என்பதை கருத்தில்கொண்டு முடிந்தவரை விரைவாக செல்லுங்கள்.
வரலாற்று சிறப்பு மிக்க இந்த திருக்கோயிலுக்கு கர்நாடகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்கதர்கள் வந்து செல்கின்றனர்.
No comments:
Post a Comment