மதுரை புட்டுத் திருவிழா

மதுரையிலுள்ள தெருக்களுக்கு ஆடிவீதி, சித்திரை வீதி, மாசி வீதி என மாதங்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால், ஆவணி மாதத்தைக் கொண்ட வீதிக்கு மட்டும் ஆவணி மூலவீதி என ஒருநட்சத்திரத்தின் பெயரையும் இணைத்து பெயர் சூட்டப் பட்டுள்ளது. இது ஏன் தெரியுமா? ஆவணி மூலம் நட்சத்திர தினம். இந்த உலகத்துக்கு நல்லதோ அல்லது கெடுதலோ செய்யப் போகும் முக்கிய நாளாகும். இந்த நாளில் இருக்கும் சீதோஷ்ணத்தைப் பொறுத்தே உலகின் இயற்கை சூழ்நிலை மாறும். இன்று அதிகாலை சூரிய உதயத்தின் போது, அதை மேகம் மறைத்திருந்தால் கடுமையான மழை பெய்து வெள்ளப்பாதிப்பு ஏற்படும்.


பிரகாசமாக சூரியன் இருந்தால், வெயில் சுட்டெரித்து தண்ணீர் பஞ்சம் வந்து விடும். இதில் எது நடந்தாலும் சிரமம்தான். இதில் இருந்து நம்மைக் காக்கவல்லவர் இறைவன் மட்டுமே. எனவே, அழிக்கும் கடவுளான (நமக்கு ஏற்படும் இடர்பாடுகளை அழிக்கும் கடவுள் ) சிவபெருமானை சரணடைந்து வழிபட்டால், நல்ல சீதோஷ்ண நிலை உண்டாகி உயிர்கள் நலம் பெறும் ஆவணி மூல நாளில் முதியவள் வந்தியம்மைக்கு அருள்புரிய சுந்தரேசுவரர் புட்டுத்தோப்பு சொக்கநாதர் கோயிலுக்கு எழுந்தருள்கிறார். கூலியாளாக வந்து, பிட்டுக்கு மண்சுமக்கும் திருவிளையாடலை நிகழ்த்துகிறார். இந்நாளில், மீனாட்சி சுந்தரேசுவரரை மனதார வணங்கி, அருமையான ஒரு வெப்பதட்பத்தைத் வழங்கவும் குடும்பத்தில் நல்லசூழல் நிலவவும் வேண்டுவர்.


கூலியாக புட்டுப் பணியாரம்:

ஆவணி மூலம் என்பது ஆவணி மாதத்து மூல நட்சத்திரத்திர நாளில் சிவ பெருமானைப் போற்றி எடுக்கப்படும் விழாவாகும். மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமான் ஆடிய 64 திருவிளையாடல்களில் ஆவணிமூல நாளிலே ஆடிய திருவிளையாடல் மக்களைப் பெரிதும் கவர்ந்ததாகும். ஏழை முதியவள் வந்தியின் பக்தியை உலகிற்கு உணர்த்திட அவளது புட்டு அமுதைக் கூலியாக ஏற்று மண் சுமந்தததும், மாணிக்கவாசகப் பெருமானின் பக்தியை உணர்த்த நரிகளைப் பரிகளாக ஆக்கியதும் ஆவணி மூலத்தில் ஆடிய திருவிளையாடலாகும்.


மண் சுமந்த பெருமான்:

பக்தர்கள் இருவரது பக்திப் பிரவாகத்தைப் போல் வைகையில் வெள்ளம் வரச் செய்கிறார் சிவன். அரிமர்த்தன பாண்டிய மன்னன் வைகை வெள்ளத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ஏதுவாக ஊரினர் அனைவருக்கும், வைகையின் கரையை பலப்படுத்தி உயர்த்தும் பணியில் ஒதுக்கீடு செய்து அறிவிக்கின்றான். தனக்கு ஒதுக்கப்பட்ட பணியைச் செய்து முடிப்பதில் உதவுமாறு வந்தி மூதாட்டி இறைவனிடம் வேண்டுகிறாள். வந்தி மூதாட்டிக்கான வைகையாற்றுக் கரை வரம்புப் பங்கினைத் தாம் அடைப்பதாகக் கூறி கூலியாளாக வந்தபின், அவளிடம் உதிர்ந்த புட்டினைக் கூலியாகப்பெற்றுக் கொள்ள சம்மதிக்கிறான் பெருமான். கூலியாள் வேலையைச் செய்யாது சோம்பேறியாக இருக்க, சொக்கன் பிரம்படிபட்ட திருவிளையாடல் ஆவணி மூலத்திற்குரியது. மதுரையிலே இவ்விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அங்கு இதனைப் புட்டுத் திருவிழா என்று கூறுவர். சிவனுக்குக் கிடைத்த சவுக்கடியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன. பாண்டியமன்னனும் அந்தஅடியை உணர்ந்தான்; தன்பிழையையும் உணர்ந்தான். உலக மக்களுக்கு, தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடியாக உதவ வருவேன் என்றும் உணர்த்த இறைவன் ஆடிய திருவிளையாடல் இது. சுந்தரேசர் கூடை மண்வெட்டியுடன் இந்த விழாநாளில் வைகை ஆற்றிலிருந்து பக்தர்கள் சூழ கோயிலுக்கு எழுந்தருளுவார். திருவிழவைக் காணவரும் பக்தர்களுக்குப் புட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.


அசுர சக்தியும் பக்திப் பெருக்கும்:

சிவபெருமான் மாணிக்கவாசகருக்காக நரிகளைப் பரிகளாக்கித் திருவிளையாடல் புரிந்ததும் இந்த ஆவணி மூலநட்சத்திர நாளே ஆகும். மூல நட்சத்திரத்தின் அதிதேவதை நிருதி என்னும் அசுரன் என்றும் அதனால் அசுரசக்தியின் செல்வாக்கினை சொக்க நாதரின் மேல் ஏற்படும் பக்திஉணர்வின் மூலம் ஒழிக்க வேண்டும் என்று சைவர்கள் கருதுவர்.


நரியைக் குதிரையாக்குதல்:

பாண்டிய மன்னனரிடம் அமைச்சராகப் பணியாற்றியவர் மாணிக்கவாசகர். பணி என்னவோ பாண்டியனிடம்தான் என்றாலும் மனமெல்லாம் அந்த சுந்தரேசுவரரிடம்தான் இருந்தது. அதனால்தான் குதிரைகள் வாங்குவதற்காக மன்னன் கொடுத்த பணத்தைக் கொண்டு கோயிலைக் கட்டி முடித்து விட்டார் அமைச்சரான திருவாதவூரார். இதனை அறிந்த அரிமர்த்தன பாண்டிய மன்னன், அமைச்சர் வாதவூராருக்கு தண்டனை அளித்தான். அரசகட்டளையை மீறியதற்காகவும், கடமை தவறியதற்காகவும், அமைச்சரை சிறையில் அடைத்தும், நெற்றியில் கல்லை வைத்து சூரியனை நோக்க வைத்தும் தண்டித்தான்.

இன்னலிலிருந்து அன்பரை விடுவிப்பதற்காக ஈசனே குதிரைச் சேவகனாக வந்து காட்டிலுள்ள நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டுவந்து சிறையினின்றும் மீட்டது ஆவணி மாத மூலநட்சத்திர தினமாகும். பின்னர் பரிகள் எல்லாம் நரிகளாக மாறி காட்டுக்குள் ஓடிய பின்னர்தான் மாணிக்கவாசகரின் அருமை மன்னனுக்குத் தெரியவந்தது; அவருக்காக குதிரைச் சேவகனாய் வந்தது இறைவன்தான் என்பதை நாட்டுமக்கள் அனைவரும் உணர்ந்து கொண்டனர். மாணிக்கவாசக சுவாமிகளுக்காக சுந்தரேசுவரப் பெருமான் மதுரை மாநகருக்கு எழுந்தருளி அருள்பாலித்த தினம் இதுவாகும்.


வைகையில் வெள்ளம்:

இக்காலத்தில், வைகை நதி பெருக்கெடுத்தது. வைகை ஆற்றின் கரைகளைச் சீர்ப்படுத்தவும், பலப்படுத்தவும், மதுரை மக்களுக்கு பாண்டிய மன்னனால் கட்டளை இடப்பட்டது. பாண்டிய மன்னனின் கட்டளைப்படி கடமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. வைகை ஆற்றின் கரையின் ஒருசிறு பகுதியைப் பலப்படுத்தும் பணிக்கு புட்டு விற்கும் ஏழை மூதாட்டி வந்தி ஆணையிடப்பட்டாள். முதுமையின் காரணமாக, அவளால், தனது பகுதி வேலையைச் செய்யமுடியவில்லை. ஏழை மூதாட்டி மற்றவர் உதவியை நாடினார். தலையில் முண்டாசு மற்றும் கூடை தோளில் மண்வெட்டியுடன் கூலியாள் வடிவில் வந்த சிவபெருமான் உதிர்த்த புட்டை ஊதியமாக ஏற்று, மூதாட்டியின் வேலையைச் செய்ய உடன்பட்டார். உண்டபின், தமது வேலையைச் செய்யச் செல்வதாக வந்தி மூதாட்டியிடம் விடைபெற்று ஆற்றங்கரைக்குச் சென்றார்


பெருமானுக்குப் பிரம்படி:

கூலியாள் தனது வேலையைச் செவ்வனே செய்யாது, ஆற்றங்கரையில் படுத்து ஓய்வு கொள்கிறார். இதை அவதானித்த மேற்பார்வை அதிகாரிகள், கூலியாளை எழுப்பி அவர் வேலையைத் திருந்தச்செய்யுமாறு பணித்தனர். அது பலனளிக்காது போகவே கூலியாளுக்கு தண்டனை வழங்கினர். அத்தண்டனை ஒரு பிரம்படியாக அமைந்தது. சிவனுக்குக் கிடைத்த பிரம்படியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன, பாண்டிய மன்னனும் உணர்ந்தான்; மன்னன் தனது பிழையை உணர்ந்தான். “பிட்டு நேர்பட மண் சுமந்த பெருந்துறைப் பித்தனே” என்று உரிமையோடு தனக்காக அருளிய பெருமானின் பெருமையை திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பதிவு செய்கிறார்.


இச்செயலால் வருந்திய பாண்டிய மன்னன் தான்கொடுத்த தண்டனைகளிலிருந்து வாதவூர்ப் பெருமானை விடுவித்ததுடன், இனி உங்களுக்கே இப்பாண்டி நாடு உரியது என்று சொன்னதுடன் ‘இனிமேல் அடியேன் தங்கள் அடிமை’ என்றும் விண்ணப்பித்தான். எனினும் ‘எனக்குப் பட்டமும் பதவியும் இனிமேற் போதும்ஞ். அடியேனுக்கு அமைச்சர்ப் பதவியிலிருந்து விடுதலை தந்தால் போதும்’ என்று வேண்டிக்கொண்டு பாண்டியனிடம் விடைபெற்று துறவு வாழ்வை ஏற்று மீண்டும் தம்குருநாதரின் அருளாசியை வேண்டி திருப்பெருந் துறைக்குச் சென்றார்.


பட்டம் சூட்டுதல்:

ஆவணி மாதத்தை சிங்க மாதம் என்றும் வேங்கை மாதம் என்றும் சித்தர்கள் பேசுவர். மாதங்களுக்கு எல்லாம் அரசன் என்று பொருள். சூரியன் என்ற கோள் ஆட்சி புரியும் மாதம் இது. ஆவணி மூலம் நட்சத்திரநாள், ஆண்டின் வெப்பதட்பத்தை நிர்ணயிக்கும் முக்கியமான நாள். அன்று காலையில் சூரியன் உதயமாகும் போதே கடும் வெப்பத்தைச் சிந்தினால், அந்த ஆண்டு முழுவதுமே வெயில் கடுமையாக இருக்கும். மேகமூட்டத்துடன் வெப்பம் குறைவாக இருந்தால், சிறப்பான காலநிலை காணப்படும். ஆண்டின் ஆவணிமாதத்தில் இரண்டு மூலநட்சத்திரங்கள் வந்தால், முதல் மூலத்தில், இந்த ஆண்டு திருவிழா நடத்தி முடிக்கப்படுகிறது. இந்நாளில், சுந்தரேசுவரப் பெருமானுக்கு பட்டம் சூட்டி, அவரது கருணையால் வெப்பதட்பம் காலச்சக்கரம் நல்லபடியாக இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்வர்.


நவக்கிரக நாயகன்:

சூரியன் உள்ளிட்ட கிரகங்கள் என்னதான் தங்கள் பணியைச் செய்தாலும், இறைவனுக்கு அவை பணியாளர்கள்தான். அவையனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவை. கிரகங்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க, இறைவனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து, நல்ல சுற்றுச் சூழல் தட்ப வெப்பம் அமைந்திட வேண்டுமென வேண்டிக் கொள்கிறோம்.


திருவிளையாடற்புராண விழா:

நாடெங்கிலும் ஆவணிமூலத் திருவிழா கொண்டாடப்பட்டாலும் மதுரை புட்டுத் திருவிழா குறிப்பிடத்தக்க ஒன்று. இறைவன் அனைத்து உயிர்களிலும் இருந்து அருள்பவன், தொண்டருக்குத் தொண்டராய் இருந்து அருள்பவன், திக்கற்றவர்களுக்குத் துணைவன், என்பதை யெல்லாம் உரைப்பதே திருவிளையாடற் புராணம். வளையற்காரராகவும், மீனவராகவும், விறகு வெட்டியாகவும், இசைப் பாடகராகவும், தாய்ப் பன்றியாகவும், பிறவாகவும் வந்து உலகுயிர்களுக்கு உதவிடும் லீலா வினோதங்களை நினைவூட்டிடும் திருவிழா ஆவணிமூல விழாவாகும்; இவ்விழாவை திருவிளையாடற் புராண விழா என்றும் கூறலாம். இந்த நன்னாளில் ஆலயம் சென்று சிவபெருமானை வழிபட்டு சிறப்புற வேண்டும் என்பதற்காகவே சிறப்பு அபிஷேகம் பூசைகள் நடத்தப் பெறுகின்றன இத்தகைய நிகழ்வுகளில் அனைவரும் தவறாது குடும்பத்துடன் கலந்து கொண்டு எம்பெருமான் திருவருளை பெறுக.


No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...