History of Ashta Kali |அஷ்ட காளிகளின் வரலாறு

அஷ்ட காளிகளின் வரலாறு

(அட்டகாளின் வரலாறு)
முதலில் அட்டகாளிகளின் பெயர்களை தெரிந்து கொள்வோம்.
1.மாரிமுத்தாரம்மன் என்ற (முத்தாரம்மன்,வேம்புலியம்மன்)
2.உஜ்ஜைனி மாகாளி என்ற (மாகாளி)
3.முப்பிடாதி
4.உலகளந்தாள் என்ற (உலகம்மன்)
5.அரியநாச்சி என்ற (அங்கயற்கன்னி)
6.வடக்குவாச்செல்வி என்ற (செண்பகவல்லி,செல்லியம்மன்)
7.சந்தனமாரி என்ற(சடைமாரி,ஆகாசமாரி)
8.காந்தாரி என்ற (படைவீட்டம்மன்)

வரலாறு:
  1. அசுரர் குலத்துபெண் தானாவதி தனக்கொரு ஆண்வாரிசு வேண்டும் என்று பிரம்மனை நோக்கித்தவம் இருந்தாள். தானாவதியின் கடும் தவத்தினை கண்ட பிரம்மன் அவள் முன்தோன்றி, தானாவதி கேட்ட வரத்தைக் கொடுத்தார். வரத்தின் பயனாக தானாவதிக்கு மகனாக தானாசுரன் பிறந்தான். அவன் எருமைத் தலையுடன் இருந்ததால் மகிஷாசுரன் என அழைக்கப்பட்டான்.
  2. வேதங்களையும், அனைத்து கலைகளையும் கற்றுணர்ந்த மகிஷாசுரன், சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தான். மகிஷாசுரனின் தவத்தைக்கண்ட சிவபெருமான் அவன் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்தார். வரங்களைப்பெற்ற மகிஷாசுரன் ஊர்வன, பறப்பன உள்ளிட்ட எந்த இனத்தாலும் எனக்கு மரணம் வரக்கூடாது. பெண் வயிற்றில் பிறக்காத பெண்ணால் மட்டுமே எனக்கு மரணம் நேரவேண்டும் என்று வரம் கேட்டான். அதனைக் கேட்ட சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்றார்.
  3. வரங்களைப் பெற்ற மகிஷாசுரன் தனக்கு மரணம் நேர வாய்ப்பே இல்லை என்ற ஆணவத்தில் தான் ஆண்டு வந்த மகேந்திர கிரிபர்வதம் பகுதியில் தான் எண்ணியபடி ஆட்சி புரிந்தான்.(மகேந்திர கிரிபர்வதம் தற்போதைய மைசூர்) (மகிஷன் ஆண்ட ஊர் என்பதால் மகிஷாஊர் என்று அழைக்கப்பட்டது.
  4. அதுவே மருவி மைசூர் என்றானது)மகிஷாசுரனின் கொடுமைகளை பொறுத்துக்கொள்ள முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். இதனிடையே கயிலாய மலையில் பார்வதிதேவி, விநாயகர், முருகன் சகிதமாக சிவனுடன் இருக்கையில், விநாயகப்பெருமான், அன்னை சக்தியிடம்‘‘தாயே, தந்தை ஏன் கண்களை திறந்தபடி தியானம் செய்தார், தியானம் என்றாலே கண்களை மூடித்தானே செய்யவேண்டும் என்று வினா தொடுத்தார்.’’ அதற்கு பார்வதிதேவி ‘‘தந்தையின் கண் ஒளியினால் தான் அண்ட சராசரங்கள் இயங்குகிறது. அவர் கண்களை மூடினால் அகிலமும் இருட்டாகும்’’ என்றார்.
  5. அப்போது குறுக்கிட்ட முருகன் ‘‘தாயே, அப்படியென்றால் தந்தை ஒரு முறை கண்களை மூடிக்காட்டட்டும் பார்ப்போம்’’ என்றார்.
  6. ‘‘இதை எப்படி தந்தையிடம் கூற, என்று முருக பெருமான் கேட்க, அவரிடம் சொல்ல வேண்டாம், அதை நானே செய்கிறேன் என்று கூறியபடி, பார்வதிதேவி, தியானித்துக் கொண்டிருந்த சிவபெருமானின் கண்களை, தனது கரங்களால் மூடினார். மறுகனமே அகிலமும் இருளில் மூழ்கியது. உடனே சக்தியின் கரங்களை விலக்கிக்கொண்டு கண்ணை திறந்தார் சிவன்.
  7. ‘‘என்ன விளையாட்டு இது’’ சினம் கொண்டார் சிவன். பணிந்தார் பார்வதிதேவி, ‘‘சுவாமி, பிள்ளைகள் கேட்டதற்காகச் செய்தேன். தாங்கள் பொறுத்தருள வேண்டும்’’ என்றார். இந்த செயலுக்காக நீ வருந்தியே ஆக வேண்டும் என்ற சிவன், நாகக்கன்னியின் வயிற்றில் அஷ்டகாளியாக பிறக்க வேண்டும் என்று சபித்தார்.
  8. இந்த சிறிய தவறுக்கு மானிட பிறப்பா, அதுவும் நாகத்தின் வழியாகவா! என்று வருத்தமுற்ற பார்வதி தேவி, அவ்விடத்திலிருந்து எழுந்து நகர முற்பட்டார். அப்போது சிவபெருமான் கடுஞ்சினம் கொண்டு நெற்றிக் கண்ணை திறந்தார். அதிலிருந்து வெளியான தீப்பிழம்புகள் பார்வதிதேவியின் மேனியை எட்டு பிண்டங்களாக்கின. அந்த எட்டு பிண்டங்களையும் கையில் எடுத்துக்கொண்டார் சிவன்.
  9. பாதாளலோகத்தில் நாகக்கன்னி மழலை வரம் வேண்டி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவள் முன்தோன்றிய சிவன், தன்னிடமிருந்த எட்டுப் பிண்டங்களையும் சாப்பிடுமாறு கொடுத்தார். அதை உண்ட நாகக்கன்னியின் வயிற்றில் அது எட்டு முட்டைகளாக உருமாறி வெளிவந்தன. நாகக்கன்னி அந்த எட்டு முட்டைகளையும் அடைகாத்து வந்தாள். 41வதுநாள் ஆடிமாதம் பூரம் நட்சத்திரத்தன்று செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எட்டு முட்டையிலிருந்து எட்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
  10. முதலாவதாக பிறந்தாள் முத்துமாரி என்ற மாரிமுத்தாரம்மன், இவளை முத்தாரம்மன் என்றும் பக்தர்கள் அழைப்பதுண்டு.இரண்டாவதாக பிறந்தாள் பத்திரகாளி. இந்த அம்மையை வீரமனோகரி, வீரம்மன், எல்லைக்காளி, எல்லையம்மன்.
  11. மூன்றாவதாக மூன்று முகத்துடன் பிறந்தாள் முப்பிடாதி (பிடாரி, பிடதி என்றால் தலை என்று பொருள்). மூன்று தலைகள் இருந்ததால்
  12. முப்பிடதி, முப்பிடரி என்று அழைக்கப்பட்டது, இதுவே மருவி முப்பிடாரி என்றும் முப்பிடாதி என்றும் அழைக்கப்படலாயிற்று. இத்தாயவளை முத்தாலம்மன் என்றும் அழைப்பர். மூன்று தலைகள் கொண்ட அம்மன் என்பதாலே மூன்றுதலையம்மனே முத்தலையம்மனாக, முத்தாலம்மனாக அழைக்கப்படலானாள். இந்த அம்மனே பிடாரி அம்மன், எல்லைப்பிடாரி என பல்வேறு நாமங்களில் அழைக்கப்படுகிறாள்.
  13. நான்காவதாக பிறந்தாள் உலகளந்தாள் என்ற உலகமாதா, இவளை உலகநாயகி என்றும் இத்தாயவள் துளிர்க்காத வனத்தில் அமர்ந்ததால் துலுக்கானத்தம்மன் என்றும் இவளை அழைப்பதுண்டு. பொன்னிறத்தில் ஜொலித்ததாலே பொன்னி அம்மன் என்றும் அழைக்கப்பட்டாள்.
  14. ஐந்தாவதாக பிறந்தாள் அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி, அன்னை இவளே நாகாத்தம்மனாகவும், நாகவல்லியாகவும் அழைக்கப்படுகிறாள்.
  15. ஆறாவதாக பிறந்தாள் செண்பகவல்லி என்ற வடக்குவாசல்செல்வி, அன்னை இவள் செல்லியம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த அம்பாளை படை வீரர்கள் வழிபட்டு வந்தனர். இதனால் இத்தாயவளை படைவீட்டம்மன் என்றும் அழைப்பர்.
  16. ஏழாவதாக பிறந்தாள் சந்தனமாரி. இவளே சடைமாரி, ஆகாசமாரி என அழைக்கப்படுகிறாள். எட்டாவதாக பிறந்தாள் காந்தாரி.

மகிஷாசுரமர்த்தினி

நாகலோகத்தில் நாகக்கன்னி பிள்ளைகள் எட்டு பேரையும் அன்போடும், அரவணைப்போடும் வளர்த்து வந்தாள். வளர்ந்து வந்த பிள்ளைகள் கன்னியர் ஆகினர். அம்மா, எங்கள் முகமும் உங்க முகமும் வேறுபட்டு உள்ளதே என்று கேள்வி எழுப்ப, எல்லாம் அந்த சிவனார் செயல் என்றாள் நாகக்கன்னி. உடனே சிவனிடம் எங்களை ஏன், தாயைப் போல் படைக்காமல் மனிதகுல பெண்களாக படைக்க வேண்டும். இந்த நாகலோகத்தில் மனித பிறப்பு எடுத்து என்ன பயனைப் பெறப்போகிறோம்.

அதை அந்த சிவனிடமே கேட்போம் என்று கூறி, அக்காள் தங்கை எட்டு பேரும் சிவலிங்கத்தை வைத்து பூஜித்து சிவனை நோக்கி தவமிருந்தனர். அவர்களின் தவத்தைக்கண்ட சிவன் அவர்கள் முன்தோன்றினார். அஷ்டகாளிகள் சிவனிடம் தங்களின் பிறப்பு குறித்து கேட்க, சிவனும் பதில் கூறினார். மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டு வரும் மகிஷாசுரனை வதம் செய்யவே உங்கள் படைப்பு என்று கூற, முத்தாரம்மன், தங்களின் வேண்டுகோளை ஏற்று மகிஷாசுரனை நாங்கள் அழித்து வந்த பின் எங்கள் எட்டு பேரையும் நீங்கள் மணமுடிக்க வேண்டும் என்றனர். அதற்கு சிவனும் ஒப்புதல் அளித்தார். மேலும் மகிஷாசுரனை அழிக்கும் வகையில் வரங்கள் கேட்க, அவர்களுக்கு அனைத்து வரங்களையும் நல்கினார் சிவபெருமான்.

சாமுண்டீஸ்வரி

சிவபெருமான் ஆணைப்படி மகேந்திரகிரி பர்வதமலைக்கு வருகின்றனர். அஷ்டகாளிகள். மகிஷாசுரன் இடையே யுத்தம் நடக்கிறது. தனித்தனியாக நிற்பதை விட, ஒரு சேர நின்றால் தனது வலிமை அதிகம் என்பதை உணர்ந்து அஷ்டகாளிகள் எட்டு பேரும் ஒரு சேர அமைந்து சாமுண்டீஸ்வரியாக மாறி மகிஷாசுரனை வதம் செய்தனர். இறக்கும் தருவாயில் அரக்கன் மகிஷாசுரன், தாயே என்னை மன்னித்து விடுங்கள். வாழும் வரை மனித குலத்தில் ராஜாவாக இருந்தேன். இனி கானகத்தில் வாழும் உயிரிகளுக்கு ராஜாவான சிங்கமாக மாறி, தாயே உம்மை சுமக்கும் பாக்கியம் தந்தருள வேண்டும் என்றான்.

ஆங்கார ரூபிணியாக இருந்த அன்னை சாமுண்டீஸ்வரி, சாந்த ரூபிணியாக மாறினாள். மகிஷாசுரனை மன்னித்து சிங்கமாக்கி, தனது வாகனமாக்கிக் கொண்டாள். அன்றிலிருந்து அஷ்டகாளிகள் எட்டு பேரும் ஒரு சேர நின்ற கோலத்தில் உள்ள தேவி மகிஷாசூரமர்த்தினி என்ற நாமத்தில் அழைக்கப்பட்டாள். தேவி மகிஷாசூரமர்த்தினி வந்தமர்ந்த இடம் திருத்தணி அருகேயுள்ள மத்தூர்.

அஷ்ட காளியர் பொதிகைமலை வருகை

  1. மகிஷாசுரனை வதம் செய்த பின் சிவபெருமான் தங்களை மண முடிப்பதாக கூறினாரே, ஆகவே, உடனே சிவனை மணம் முடிக்க கயிலாயம் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் எட்டு பேரும் கயிலாயம் வருகிறார்கள். இதையறிந்த சிவன் நந்திதேவரை அழைத்து ரகசியம் கூற, அதன் படியே நந்தி தேவரும் எட்டு வண்டுகளை பிடித்து எட்டு குழந்தைகளாக்கி அஷ்டகாளிகள் வரும் வழியில் படுக்க வைத்திருந்தார். குழந்தைகள் அழுகுரல் கேட்ட அவர்கள் ஆளுக்கொரு குழந்தையை கையில் எடுத்துக்கொண்டு கயிலாயம் வருகிறார்கள்.
  2. சிவபெருமானிடம் தாங்கள் கூறியது போல எங்களை மண முடிக்க வேண்டும் என்கின்றனர். அப்போது சிவபெருமான் நான் உங்களிடம் கூறியது உண்மைதான். ஆனால் நீங்கள் கன்னியர்களாக வரவில்லையே, கையில் குழந்தையோடு அல்லவா வந்திருக்கிறீர்கள் என்றார். அப்படியானால்... என்று ஐயத்துடன் வினா தொடுத்தனர் அஷ்டகாளிகள்.
  3. நீங்கள் பூலோகம் செல்ல வேண்டும். மனித உயிர்களுக்கு அபயம் அளித்து காக்க வேண்டும். உங்களுக்கு எல்லா வரமும் தந்தருள்வேன் என்றார்.
  4. வரங்களை பெற்றவர்கள் அய்யன் சிவபெருமான் ஆசியோடு பூலோகம் புறப்படுகின்றனர். அப்போது முத்தாரம்மன், சிவனிடம் சென்று தனக்கு தனியே ஒரு வரம் வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தப்பை உணர்ந்த பின் மன்னிக்கப்பட வேண்டும் அந்த வகையில் எனக்கு முத்து வரம் வேண்டும் என்று கேட்க, சிவபெருமானும் 108 முத்துக்களை உருவாக்கி, அதை ஓலை பெட்டியில் வைத்து கொடுத்தார்.
  5. முத்துக்கள் சக்தி வாய்ந்தவையா என்று வினா தொடுத்த முத்தாரம்மனிடம், நிச்சயமாக சக்தி வாய்ந்தவை தான் என்றார் சிவபெருமான். அப்படியானால் உங்களிடமே சோதித்து பார்க்கட்டுமா என்றாள் அன்னை. அய்யனும் புன்னகைத்தார். பெட்டியிலிருந்து எடுக்கப்பட்ட முத்துக்களை வாரி சிவபெருமான் மேல் இறைத்தாள் முத்தாரம்மன்.
  6. உச்சிமுதல் உள்ளங்கால் வரை முத்துக்கள் விழுந்து வலியால் வேதனைப்பட்டார் சிவன். அதைக்கண்ட உமாதேவி, அண்ணன் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டாள். அவர், முத்தாரம்மனிடம், நீ போட்டதை, நீயே தான் இறக்கிவிட வேண்டும் என்றார். எப்படி என்ற மறுகேள்வி கேட்ட முத்தாரம்மனிடம், அதற்கான வழிமுறையை சொல்லிக்கொடுத்தார் மகாவிஷ்ணு. அதன்படி தலைவாழை இலையை விரித்து, அதன்மேல் சிவபெருமானை படுக்கவைத்து, சக்தியின் சூலாயுதத்தால் உருவான வேம்பு மரத்தின் (வேப்ப மரம்) இலைகளைவைத்து முத்துவை இறக்கினாள் முத்தாரம்மன்.
  7. சிவபெருமானாலேயே தாங்க முடியவில்லை. மனித உயிர்கள் எப்படி தாங்கிக் கொள்ளும் என்று கருதி மகாவிஷ்ணு அந்த முத்துக்களை வாங்கி, கொப்பரையில் வறுத்து, அதன் வீரியத்தை குறைத்து அதன்பின் முத்தாரம்மனிடம் கொடுத்தார்.
  8. முத்துவரமும், தீராத நோய்களை திருநீற்றால் தீர்த்தருளும் வரமும் பெற்ற முத்தாரம்மன், முத்துக்கள் பெற்றதால் முத்துமாரி என்றும் முத்தாரம்மன் என்றும் அழைக்கப்படலானாள். அஷ்டகாளிகள் அங்கிருந்து பூலோகம் வருகிறார்கள். ஆளுக்கொரு பிள்ளையை கையில் வைத்தவர்கள் அந்த எட்டு பிள்ளைகளையும் ஒன்றாக்கினர். வழியில் கண்டெடுத்த அந்த பிள்ளைக்கு வயிரவன் என்று பெயரிட்டனர். கயிலாய மலையிலிருந்து புறப்பட்டவர்கள் பூலோகத்தின் சொர்க்கபுரியான பொதிகை மலைக்கு வந்தனர்.

முத்துமாரி - முத்தாரம்மன்

  1. (வேம்புலி அம்மன்- கோலவிழியாள் - ஆயிரம் கண்ணுடையாள்)
  2. அஷ்ட காளிகளில் மூத்தவளான முத்துமாரி என்ற முத்தாரம்மன் தான் வந்ததை இவ்வையகம் அறிய வேண்டும் என்றெண்ணி, நெல்லை நகருக்கு வந்தாள். அங்கு வளையல் விற்கும் செட்டியாரிடம் சென்று தனக்கு வளையல் போடும்படி கூற, அவரும் வளையல் போட சம்மதித்தார். இருகைகள் தானே என்று நினைத்தவர் வியந்தார். காரணம் அன்னை முத்தாரம்மன் தனது எட்டு கரங்களையும் நீட்டி வளையல் போட்டுவிடும் படி கூறினாள். செட்டியார் வளையல் அணிவித்துவிட்டு பணம் கேட்டார். அன்னை முத்தாரம்மன் நான் தரவேண்டிய பணத்தை நெல்லை தெற்கு ரதவீதியிலுள்ள மணியக்காரரிடம் வாங்கிக்கொள் என்றார்.
  3. (மணியக்காரர் என்றால் கிராம நிர்வாகி பொறுப்பு வகிப்பவர்)
  4. மறுநாள் நெல்லை நகருக்கு உரிய மணியக்காரரிடம் சென்ற வளையல்காரர் ‘‘மஞ்சள் பொட்டும், மங்கலபட்டும் அணிந்து வந்த மங்கை ஒருத்தி, தனது கைகளுக்கு வளையல் போட சொன்னார். அதற்குரிய பணத்தை உங்களிடம் வாங்கும்படி கூறினார்’’ என்று செட்டியார் கூற, அதைக் கேட்டு வீட்டுக்கு உள்ளேயிருந்து சினம் கொண்டு வந்தாள் மணியக்காரரின் மனைவி, யாரவள் என்று கேட்க, மறுகனமே அவள் நாவில் முத்து வந்தது. பேச முடியாமல் அவதிப்பட்டாள். சிறிது நேரத்தில் மேனியெங்கும் முத்துக்கள் படர அம்மை நோயால் அவதிப்பட்டாள். அஞ்சினார் மணியக்காரர். அன்றைய தினம் அவரது கனவில் தோன்றிய முத்தாரம்மன், தான் யாரென்பதையும், தனக்கு கோயில் கட்டி வழிபட்டால் உன் மனைவிக்கு வந்த பிணிமாறும், இனிவரும் காலம் வளமாகும் என்றுரைத்தாள். அதற்கு தாயே, தங்கள் விருப்பப்படி கோயில் கட்டுகிறேன் என்றுரைத்தார்.
  5. அப்போது முத்தாரம்மன் நெல்லை நகரில் தற்போது கோயில் இருக்கும் இடத்தை சுட்டிக்காட்டி, அங்கு ஒரு வேம்பு செடி முளைவிட்டிருக்கும். அதை நாகம் ஒன்று சுற்றியிருக்கும். நாளை காலை சூரிய உதயத்தின் போது இது நடக்கும். அந்த இடத்தில் எனக்கு கோயில் கட்டு. என்றுரைத்தாள். அதன்படி மணியக்காரர், பண்ணை வீட்டுக்காரர்கள் உதவியுடன் அந்த இடம் தேடி மறுநாள் காலையில் சென்றார். அங்கு அம்மன் கனவில் சொன்னது போலவே, வேம்பு செடியை நல்லபாம்பு ஒன்று சுற்றிநின்றது. அந்த இடத்தில் முத்தாரம்மனுக்கு கோயில் கட்டப்பட்டது. கோயிலில் மூலவர் முத்தாரம்மன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறாள். இவ்விடமிருந்து பல ஊர்களுக்கு அன்னை முத்தாரம்மன் திருவிளையாடல் நடத்தி அவ்வூர்களில் கோயில் கொண்டாள்.
  6. தென்மாவட்டங்களில் முத்தாரம்மன், மாரிமுத்தாரம்மன் என்ற நாமங்களில் வணங்கப்படும் இந்த அம்மனே முத்துமாரி, வேம்புலி அம்மன், கோலவிழி அம்மன், ஆயிரம் கண்ணுடையாள் முதலான நாமங்களில் அழைக்கப்படுகின்றாள். இந்த அம்பாளே வேப்ப மரத்தை புலியாக்கி அந்த புலியை தனது வாகனமாக்கிக் கொண்டாள். வேப்ப மரத்தை புலியாக்கியதாலே இந்த அம்மன் வேம்புலி அம்மன் என்று அழைக்கப்பட்டாள்.

மாகாளி - ராஜகாளி

  1. அஷ்டகாளியரில் இரண்டாவதாக பிறந்தவள் மாகாளி. திருச்சிரலைவாய் (திருச்செந்தூர்)பகுதியில் சூரபத்மனை சுப்ரமணியர் வதம் செய்தபோது, சூரபத்மனின் குருதி இந்த மண்ணில் விழுந்து விடக்கூடாது என்பதால் அந்த குருதியை வாங்கியதால் இந்த மாகாளி. வீரமாகாளி என்று அழைக்கப்படலானாள். திருச்செந்தூரிலிருந்து மீண்டும் பொதிகை மலை செல்ல முற்பட்டாள். வழியில் வீரைவளநாடு (குலசேகரப்பட்டினம்) என்ற பகுதியில் உள்ள கடற்கரையோரம் இருந்த வனச்சோலை வீரமாகாளிக்கு பிடித்து விட அங்கேயே வாசம் செய்தாள்.
  2. தான் இவ்விடம் வந்ததை, இப்பகுதியினர் அறியவேண்டும் என்று எண்ணிய வீரமாகாளி, குழந்தை முதல் குமரி வரையிலான பெண்களுக்கு நோய்களை ஏற்படுத்தினாள்.ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி, அப்பகுதியில் மந்திரத்திலும், மாந்திரீகத்திலும் பெரியவனாக திகழ்ந்த வல்லவராயரை நாடினர். அவர் சோழி போட்டு பார்த்தார். அதில் வந்திருப்பது அஷ்டகாளியர்களில் ஒருவரான மாகாளி என்பது தெரிந்தது. வல்லவராயர், ஊர் பிரமுகர்களிடம் சிலைக்கு வடிவத்தை வரைந்து கொடுத்து ‘‘இந்த உருவில் சிலை செய்து கோயில் எழுப்பி அம்மனுக்கு பூஜை பரிவாரங்கள் செய்து வழிபட்டு வாருங்கள். பிணிகள் அகலும். மணியான வாழ்க்கை ஒளிரும்'' என்றார். அதன்படி ஊரார்கள்கூடி அம்மனுக்கு கோயில் எழுப்பினர்.
  3. பின்னாளில் வீரமாகாளி என்ற உக்கிர பெயரை மாற்ற வேண்டும். அம்மன் சாந்தரூபிணியாக இருக்கவேண்டும் என்பதற்காக வீரமனோகரி என்று பெயர் வைத்து அழைக்கலாயினர். இந்தக்கோயில் திருச்செந்தூரிலிருந்து 11 கி.மீ தூரத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் உள்ளது.முத்தாலம்மன் - முப்பிடாதி அம்மன் - பிடாரி அம்மன்அஷ்ட காளியரில் மூன்றாவதாக மூன்று தலைகளுடன் அவதரித்தவள் முப்பிடாதி. பிடரி என்றால் தலை என்று பொருள். மூன்று தலைகள் இருந்தமையால் முப்பிடரி என்று அழைக்கப்பட்ட இந்த அம்மன் பின்னர் முப்பிடாரி என்று அழைக்கப்படலானார். இதுவே மருவி முப்பிடாதி என அழைக்கப்படலானது.
  4. இந்த சொல்லே தென் மாவட்டத்தில் வழக்கில் உள்ளது. முப்பிடாதி அம்மன் கோயில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் பரவலாக உள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் முப்பிடாதி அம்மனை முத்தாலம்மன் என்று அழைக்கின்றனர். முத்தலையம்மன் என அழைக்கப்பட்டது மருவி முத்தாலம்மன் என்று அழைக்கப்படலாயிற்று.சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் எல்லைப்பிடாரி அம்மனாக அருள் பாலிப்பதும் அன்னை முப்பிடாதி அம்மனே.

துலுக்கானத்து அம்மன் - பென்னி அம்மன் - உலகம்மன்

  1. அஷ்டகாளியரில் நான்காவதாக பிறந்த உலகம்மன். உலகளந்தாள் என்ற உலகமாதா, இவளை உலகநாயகி என்றும் அழைப்பர். இன்றைய சென்னை பல ஆண்டுகளுக்கு முன் கடலோரப் பகுதிகள் மண் மேடாக இருந்தது. புல், இலை, தழை எதுவும் முளைக்காத வனமாக இருந்தது. அந்த வனத்தில் வந்தமர்ந்தாள் இந்த உலகம்மன். எந்த தாவரமும் துளிர்க்காத வனத்தில் வந்தமர்ந்ததாலே துளிர்க்காத வனத்து அம்மன் என்று அழைக்கப்பட்டாள். அதுவே மருவி துலுக்கானத்தம்மன் என்றானது. அம்பாள் பொன்னிற மேனியோடு ஜொலித்ததாலே பொன்னி அம்மன் என்றும் அழைக்கப்பட்டாள்.

நாகாத்தம்மன் - நாகவல்லி - அரியநாச்சி

  1. அஷ்டகாளியரில் ஐந்தாவதாக பிறந்தாள் அரியநாச்சி என்ற அங்கையற்கன்னி, அன்னை இவளே நாகாத்தம்மனாகவும், நாகவல்லியாகவும் அழைக்கப்படுகிறாள். நாகத்தின் வயிற்றிலே பிறந்ததாலும், நாக உடலோடும் மனித பெண் முகத்தோடும் அருட்பாலிக்கும் தாயான இந்த அம்மன் நாகரம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். நாகாத்தம்மன், நாகவல்லி, நாகம்மன், நாகேஸ்வரி ஆகிய நாமங்களில் வணங்கப்படுகிறாள்.

செல்லியம்மன் - செண்பகவல்லியம்மன் - வடக்குவாச்செல்வி

  1. அஷ்டகாளியரில் ஆறாவதாக பிறந்தாள் செண்பகவல்லி என்ற வடக்குவாசல் செல்வி, அன்னை இவள் செல்லியம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். கயிலாயமலையில் சிவபெருமான் வடக்கிலிருந்து தென் முகமாக வீற்றிருக்கிறார். அந்த சிவபெருமானுடைய முகம் பார்க்கும் விதமாக தென் திசையிலிருந்து வடக்கு முகமாக வீற்றிருக்கிறாள். வடக்கு முகமாக வாசல் கொண்ட கோயிலில் அருட்பாலிப்பதால் இந்த அம்மன் வடக்குவாசல் செல்வி என்று அழைக்கப்படுகிறாள். துர்க்கையின் அம்சம் என்பதாலே இந்த அம்பாளை ராகு காலத்தில் வழிபட்டால் பலன்கள் அதிகம் கிட்டுகிறது.

சந்தனமாரி - சடைமாரி - ஆகாசமாரி

  1. அஷ்டகாளியரில் ஏழாவதாக பிறந்தாள் சந்தனமாரி. இவளே சடைமாரி, ஆகாசமாரி என அழைக்கப்படுகிறாள். இந்த அம்மன் சாந்த சொரூபினி அஷ்ட காளியர்கள் எல்லோருமே சிங்கத்தை வாகனமாக்கி வலம் வர, இத்தாயவள் மட்டும் மானை வாகனமாக்கிக் கொண்டவள்.
  2. சந்தன மேனியவள், குளிரச்சியானவள். மழையை பெய்ய வைக்கும் தாயானவள் என்பதால் ஆகாசமாரி என்றும் அழைக்கப்படுகிறாள்.

படைவீட்டம்மன் - காந்தாரி அம்மன்

  1. அஷ்டகாளியரில் எட்டாவதாக பிறந்தாள் காந்தாரி. வீரர்கள் தங்களுக்கு அச்சத்தை போக்கி வீரத்தை நிலைநிறுத்தி அருள் புரிய வேண்டும் என்று அந்தக் காலத்தில் படைவீரர்கள் இந்த அம்மனை வணங்கி வந்தனர். படை வீரர்கள் தங்கியிருக்கும் பகுதியே படை வீடு என்று அழைக்கப்பட்டது.
  2. அந்த படை வீடுகளில் இந்த அம்பாளை வைத்து பூஜித்து வந்தனர். இதனாலே இந்த அம்மன் படைவீட்டம்மன் என்று அழைக்கப்பட்டாள்.ஆங்கார ரூப சக்தியான இவளுக்கு கோபத்தை ஏற்படுத்தி பூஜித்தால் வேகம் கொண்டு எதிரியை வதம் செய்து வேண்டுவோரை காப்பவள்.
  3. மிளகாய் கொண்டு பூஜிக்கும் பூஜையை ஏற்பதாலும் (காந்தல்- எரிச்சல்) கொண்டு அனல் கக்கும் பார்வையுடன் திகழ்வதாலும் இந்த அம்மன் காந்தாரி அம்மன் என்று அழைக்கப்படலானாள். காந்தம் - ஈர்ப்பு என்று இன்னொரு பொருள்படும். அந்த வகையில் இந்த அம்மன் மனமுருக வேண்டுவோருக்கு வேகமாக அருட்கரம் நீட்டுவதாலும் காந்தம் போன்று பக்தர்களை ஈர்க்கும் தன்மையோடு இருப்பதாலும் இந்த அம்மன் காந்தாரி அம்மன் என்று வணங்கப்படுகிறாள்.


No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...