Pandiya Naadu Kudaivarai Kolunticar | பாண்டி நாட்டுப் பழங் குடவரைக் கொழுந்தீசர்

பாண்டி நாட்டுப் பழங் குடவரைக் கொழுந்தீசர்

'சாமி கூப்பிட்டாத் தான் சாமியைப் பாக்க முடியும்' - உண்மை! எத்தனையோ முறை எந்தத்தக் கோயிலுக்கோ போக வேண்டும் என்று நினைக்கிறோம்! முடிவதில்லை. கோயிலுக்குச் சென்றாலும் இறைவனைக் காணும் வாய்ப்பு கிட்டாமல் போய் விடும். கண்டாலும் மனம் ஒன்றி வணங்காமல் நின்று விடுகிறோம்.

சென்ற வாரம் நினைக்காமல் கொள்ளாமல், திடீரென்று ஒரு அழகிய திருக்கோயிலுக்குச் செல்லும் பேறு கிடைத்தது. மரங்கள் சூழ்ந்து இயற்கை எழில் கொஞ்சி நிற்க, அமைதியான அழகான சூழலில், பாண்டியநாட்டின் பழமையான குடவரையில் அமர்ந்திருக்கும் ஈசன் எங்களை வரவழைத்து அருளினார்.

'மூவரை வென்றான்' - இ்ந்த ஊரையோ, இங்கிருக்கும் மொட்டமலை என்ற குன்றில் பாண்டியர் காலக் குடவரைக் கோயில் பற்றியோ நான் கேள்விப் பட்டது கூட இல்லை. அதுவும் வரலாறு, பாரம்பரிய சுற்றுச்சூழல் ஆர்வலரும், சுற்றுலாத்துறை வழிகாட்டியுமான திருமதி வாணி செங்குட்டுவன் அவர்களுடன் சென்று காண்பேன் என்று ஞாயிறன்று நினைக்கக் கூட இல்லை. திடீரென்று இரவில் என் சகோதரி, வாணி இவர்களுடன் இராசபாளையம் அருகிலுள்ள இடங்களைக் காணலாம் என்று திட்டமிட்டு, மறுநாள் திங்கள் காலை கிளம்பி விட்டோம்.

ரோமானியச் சொக்கத்தங்கம் கிடைத்த நத்தம்பட்டியில் கண்டுபிடிக்கப் பட்ட பெருமாள் சிலையையும், தீர்த்தங்காரர் சிலையையும் தேடினோம். கேட்டுப் பார்த்தால் யாருக்கும் தெரியவில்லை. சரி, மூவரை வென்றான் குடவரை செல்லலாம் என்றால், ஊரைத் தாண்டிச் சென்றதை அறியாமல், சற்று சுற்ற வைத்து விட்டார் ஈசன்.

குடவரை என்றாலே மாமல்லபுரம், மண்டகப் பட்டு என்று பல்லவர்களைப் பற்றித் தான் நினைப்போம். ஆனால், கிபி 8ம் நூற்றாண்டில் வட தமிழகத்தில் பல்லவர்கள் பாறைகளைக் குடைந்து குடவரைகளை உருவாக்கிய காலத்தே, பாண்டியர்களும் தென் தமிழகத்தில் அவர்களை விட அதிகமாக குடவரைகளை உருவாக்கி இருக்கிறார்கள். அவற்றில் காலத்தால் முற்பட்ட முற்பட்ட ஒன்றே 'மூவரை வென்றான்' குடவரை.

மேற்குத் தொடர்ச்சி மலை பிண்ணனியில் நிற்க, ஊருக்கு மேற்கே மொட்டமலை. மரங்களுடன் நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலை அருகே, பெரும் பாறையாக நின்றதால் மொட்டமலை என்ற பெயர் போல. அடிவாரத்தில் சரக்கொன்றை, வில்வம், காய்கள் தொங்கிய மாபெரும் இலுப்ப மரம் மற்றும் பல மரங்கள் சூழந்திருக்க, சற்றே படியேறிச் சென்றால் குடவரைக் கோயிலை அடையலாம்.

தற்போது அம்மன் சன்னதி, கால பைரவர், நவக்கிரகம் எல்லாம் சேர்க்கப் பட்டு, அருள்மிகு மரகதவள்ளி அம்பாள் உடனுறை மலைக்கொழுந்தீசுவரர் என்ற பிற்காலத்தில் ஏற்பட்ட பெயருடன் அருள் புரிகிறார் இறைவன்.

கோயிலின் கருவறையும் முன்னேயுள்ள தூண்களுடன் மண்டபமும் பாறையில் குடைந்து உருவாக்கப் பட்டவை. கருவறையில் தாய்ப் பாறையிலேயே செதுக்கப் பட்ட லிங்கத் திருேமேனியாக ஈசன்.

கருவறையின் வலப்புறம் சூரிய சந்திரர் மேலேயிருந்து வணங்க, கால்களை மடக்கி பழமையான கோலத்தில் பிள்ளையார் அமர்ந்திருக்கிறார். தும்பிக்கையின் கீழ்ப்பகுதி, வலது கால்முட்டி சில பகுதிகள் சிதைந்திருக்கின்றன.

கருவறையின் இருபுறமும், செதுக்குவதற்குத் தயார்ப்படுத்திய நிலையில் கோட்டம் உள்ளது. வாயிற் காவலர்களைச் செதுக்குவதற்காக இருக்கலாம்.

கருவறையின் இடப்புறத்தில் மயிலுடன் முருகர். மேற்புறம் சூரிய சந்திரர். அடுத்து சற்றே உள்ளடங்கிய நிலையில் குமரன் சக்தி வேலும், வச்சிரப் படையும் பின்னிரு கரங்கள் தாங்க, நீண்ட மகுடம், நெற்றிப் பட்டை, வட்டக் காதணி, தோள் மாலை, தோள்அணி, கையணிகள், கழுத்தணிகள், அபய வரத கரங்களுடன் அழகுற நிற்கிறார். இடுப்பில் வரிசையான அணிகளுடன், பாதம் வரை நீண்ட ஆடை, பாதணிகள். ஆடையின் கச்சைகள் இருபுறமும் அழகுறத் தொங்குகின்றன. பின்னால்பாம்பை வாயில் ஏந்திய மயில். இறகில் கண்கள் தெரிய நீண்ட தோகை. அழகோ அழகு.

குமரனை அடுத்து, தெற்கு நோக்கி ஆடல்வல்லான் சிவகாமி காண, உயிர்களுக்கு அருள் வழங்க ஆனந்த தாண்டவம் புரிந்து கொண்டிருக்கிறார். மேற்புறத்தில் சுடர்களுடன் திருவாச்சி. சடாமகுடத்துடன் விரிசடையில் வலதுபுறம் வானிலிருந்து இறங்கும் வணங்கிய நிலையில் கங்கை, இடப்புறத்தில் பிறை நிலவு. உடுக்கையும், தீயும், வலது, இடது பின்கரங்களில் ஏந்தி, அபய கரத்துடன், தூக்கிய திருவடியைப் பற்றிக்கொள் என்று காட்டி, ஆணவமாகிய முயலகன் மேல் நின்று, அகிலமெல்லாம் இயங்க ஆடிக் கொண்டிருக்கிறார்.

ஆடையென்னவோ புலித்தோல் அரையாடை தான். ஆடும் வேகத்தில் கச்சைகள் முடிந்தும், நீண்டும் பறந்து கொண்டிருக்கின்றன. ஓரத்தில் கரை, குஞ்சம் போன்ற அமைப்பு வேறு! உலகை ஆளும் ஈசனுக்கேற்றவாறு பார்த்துப் பார்த்து வடித்திருக்கிறார் சிற்பி. அதைக் காணவொட்டாமல், ஒரு சாதாரண துண்டைப் போர்த்தும் மடமையை என்னவென்று சொல்ல!

வலத்தோளின் பின்புறம் படமெடுக்கும் நாகம், தோள் மாலை, கழுத்தணி, கையணி, இடையணி, காலணி, உடலமைப்பு, நாபி, கால்முட்டி எல்லாம படு் நேர்த்தி. அம்மையும் அவள் பங்கிற்குப் பேரழகுடன் நிற்கிறாள்.
குடவரைகளில் அம்மை காண ஆனந்த நடனம் புரியும் சிற்பம் வேறெங்கும் இல்லாத சிறப்பாகும்.

சதுரமும், எட்டுப் பட்டையுடன் அமைந்த தூண்கள், அமர்ந்தும், நின்றும் அழகிய அரும்பமைப்பில் காட்சி தரும் சிங்கங்கள், தாமரை நடுவே அன்னம் எல்லாம் அவசியம் கண்டு மகிழ வேண்டும்.

தூண்கள் வரை மட்டுமே பழைய குடவரை. முன்னால் மண்டபமாக சற்று விரித்து மூடப்பட்டதால் சற்று வெளிச்சமின்றி உள்ளது.

மலை மேலே அர்ச்சுனன் அம்பால் உருவாக்கிய சுனையிலிருந்து, தண்ணீர் மண்டபத்திற்குள் சில ஆண்டுகள் முன்வரை வந்து கொண்டிருந்ததாம். அதில் தான் ஈசனுக்குத் திருமுழுக்கு செய்யப் படுமாம்.

வெளியே பாண்டியர் கால நந்தி அமர்ந்திருக்கிறார். முன் மண்டபம், மரகதவள்ளி அம்மன் சன்னதி, கால பைரவர் சன்னதி எல்லாம் பிற்கால இணைப்பாகும்.

திருக் குறுங்குடியில் இருக்கும் பெண்களை வைத்தே அமைத்த யானை, குதிரை சிற்பங்கள் உண்டு. அவற்றைப் போல ஓவியமாக அம்மன் சன்னதியில் வரைந்திருக்கிறார்கள். மூன்று பழைய கல்வெட்டுகளும் எடுத்து வைக்கப் பட்டுள்ளது.

அமைதியாக அய்யனை வணங்கி, சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் அமைத்த கலைச் செல்வங்களை வியந்து பார்த்து, மஞ்சள் மலர்களுடன் சரக்கொன்றை, உயர்ந்து நின்ற இலுப்பை, வில்வம் மற்றும் பல மரங்கள் நிறைந்த அழகிய சூழ்நிலையில் அமர்ந்து, மனமே நிறைந்திருந்தது.

மலையைச் சுற்றி சற்று தூரம் சென்றால் மலை மேல் தாமரைக் கொடிகளுடன் திருவோட்டுக் கேணி உள்ளது. திருவோடு போன்ற வடிவத்தில் வழுவழுப்பாக இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம். அருகே இருக்கும் குழிகள், கேணிக்குள் இருக்கும் படிகள் பல காலமாக மலையில் அறிவர்களோ, முனிவர்களோ வாழ்ந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றியது.

அனுமன் இலங்கைக்கு எடுத்துச் சென்ற சஞ்சீவி மலையின் ஒரு பகுதி இங்கு விழுந்ததாகவும், மூலிகைகள் நிறைந்திருப்தாகவும் உள்ளூர் மக்கள் கூறுகிறார்கள். மேலும் மலையின் மேல் உள்ள சுனையை அர்ச்சுனன் இங்கிருந்த சித்தர்களுக்காக அம்பினால் உருவாக்கினான், முன்னால் ஓடும் நதியின் பெயர் அர்ச்சுனா நதி. இவையெல்லாம் காலங்காலமாக இராமாயணம், மகாபாரதக் கதைகளில் மக்கள் மனம் திளைத்திருந்ததைக் காட்டுகின்றன. பல ஊர்களிலும் சஞ்சீவி மலை, பஞ்சபாண்டவர் படுக்கை, குகைகளைக் காணலாம்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடவரை அமைக்கத் தகுதியான பாறை என்று தேடி வந்து, அறிந்து அமைத்திருக்கிறார்கள். எத்தனையோ திருக்கோயில்கள் அமைப்பதற்குக் கூட இங்கிருந்து கற்கள் சென்றிருக்கலாம். ஆனால் அப்பொழுதெல்லாம் இயற்கையைச் சிதைக்கவில்லை.

அன்று தகுதியான சிறந்த கற்கள் என்று அற்புதமான கலைப் படைப்பை உருவாக்கினார்கள்!்ஆனால் இன்றோ! மலையையே சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள்! மலையின் அடிவாரப் பகுதியில் - ஐஸ்க்ரீமை சிறு கரண்டியால் எப்படி எடுப்போம் - அது போல் மலையை வழித்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மலையை, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான குடவரையைக் காப்பாற்ற வேண்டாமா!

'மூவரை வென்றான்' விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர். மதுரையிலிருந்து கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருவில்லிப்புத்தூர், நத்தம் பட்டிக்கு முன்னதாக, மேற்கில் உள்ளது. விருதுநகரிலிருந்து திருவில்லிப்புத்தூர் செல்லும் வழியில், அழகாபுரியிலிருந்து மேற்கு நோக்கிப் பிரியும் பாதையில் சுமார் நான்கு கிமீ தொலைவில் உள்ளது.

ஊரின் பெயர் வரலாறு, கதையுடன் கூடிய காரணப் பெயர் ஆகும். கிபி 17ம்நூற்றாண்டின் இறுதியில் மதுரை அரசி ராணி மங்கம்மா, வீரமல்லன் என்ற வீரனுக்கு, அவனது வீரத்தை மெச்சி மானியமாக இக்கிராமத்தை அளித்தார். வீரமல்லனுக்கு அருகிலிருந்த நத்தம்பட்டி ஜமீன்தாருடன் தண்ணீர்ப் பிரச்னையால் பகைமை உண்டானது. அருகிருக்கும் தேவதானம்பட்டி, சாப்டூர் ஜமீன்தார்களும் நத்தம்பட்டி ஜமீனுக்கு உதவிக்கு வந்தனர். வீரமல்லன் 'ஒருவரை மூவர் எதிர்ப்பது முறையன்று. 

மூன்று படைகளும் சேர்ந்து மூன்று நாழிகை நேரத்திற்குள் தன்னை வீழ்த்த வேண்டும். முடியிவிடில் தானே வென்றதாக ஒப்புக் கொள்ள வேண்டும்' என்று கூற, அவர்களும் ஒப்புக் கொண்டனர். புத்திசாலியான வீரமல்லன் போர் துவங்கியவுடன் நீர் நிறைந்திருந்த கண்மாய்களின் கரைகளை உடைத்து விடுகிறான். கிராமத்தைச் சுற்றிலும் நீர் சூழ, ஜமீன் படைகளால் வெள்ளத்தைக் கடக்க முடியவில்லை. மூன்று நாழிகை கடந்ததால் வீரமல்லனை வெற்றி பெற்றான். தன் புத்தியால் மூவரை வென்றதால் ஊரும் 'மூவரை வென்றான்' ஆகியது. வீரமல்லனை கிராம மக்கள் குலதெய்வமாக வழிபட்டனர் என்று கதை போகிறது.

அருகில் இருப்பவர்களாவது அவசியம் சென்று காணுங்கள். குற்றாலம் செல்லும் வழியில் தான் உள்ளது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,