ஒரு சமயம் கிருஷ்ணன் துவாரகையில் இருந்த சமயம் காற்றில் நறுமணம் மிதந்து வருவதை உணர்ந்தார். அது சவுகந்தி என்ற மலரின் மணம். அவ்வகை மலர் குபேரனின் அழகாபுரி நந்தவனத்தில் மட்டுமே இருப்பது அவருக்குத் தெரியும்.
அந்த சூழ்நிலையில் அவருக்கு தன் வாகனமான கருடனின் மீதும், தன் ஆயுதமான சக்கரத்தின் மீதும் கவனம் சென்றது. அவைகள் இரண்டும் நீண்டகாலமாகவே ஆணவம் கொண்டு ஆர்பாட்டம் செய்து வந்தன. பரமாத்வையே ஏற்றிச்செல்வதால் தானே உயர்ந்தவன் என்று கருடன் நினைத்தது.
அதைப்போலவே சக்ராயுதமும் தான் இல்லையென்றால் பரமாத்மாவே செயல்பட முடியாது. என்னால்தான் பலரும் பரமாத்மாவைக் கண்டு அஞ்சுகிறார்கள் என்ற கர்வத்துடன் இருந்தது. கிருஷ்ணனுக்கு இவர்களின் தம்பட்டமும் கர்வமும் தெரிந்தே இருந்தது.
தக்க சமயத்தில் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டி பொறுமையுடன் சகித்துக் கொண்டிருந்தார். இப்போது அவருக்கு அந்த சமயம் கிட்டிவிட்டது. இதைத்தான் நேரம் வருவது என்பார்கள். இப்போவெல்லாம் ஆட்டம் போடத்தாண்டா செய்வே.
உனக்கும் ஒரு நேரம் வரும் பாரு, என சாதாரண மனிதர்களான நாம் பேசிக் கொள்வது போல, தெய்வத்தை சுமக்கும் கருடனுக்கும், தெய்வமே சுமக்கும் சக்கரத்தானுக்கும் கெட்ட நேரம் வந்தது. கிருஷ்ணன் கருடனை அழைத்து, கருடனே! குபேரனின் அழகாபுரி நந்தவனத்தில் சவுகந்திகா மலர் உள்ளது. அதனை இங்கு கொண்டு வா என்று கூறினார்.
அதைக்கேட்டதும், இவ்வளவுதானா, ஒரே நொடியில் பறித்து வருகிறேன், என்று ஆர்ப்பரித்த கருடன், வேகமாகப் பறந்து அழகாபுரியிலுள்ள நந்தவனத்திற்கு சென்றது. அங்கு ஏராளமான மலர்கள் மலர்ந்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது. கருடன் அம்மலர்களை ஒவ்வொன்றாகப் பறித்துக் கொண்டிருந்தது.
அந்த சமயம் அனுமன் அங்கு வந்தான். யாரோ மலர்கள் கொய்வதைக் கண்டு, யார் மலர் பறிப்பது? என்ற அதட்டலுடன் கருடன் அருகில் வந்தான். கருடனும் அலட்சியமாக, என்னையே தெரியவில்லையா உனக்கு? நான் என்ன சாதாரண ஆளா? நான்தான் கருடன். பரமாத்மாவின் வாகனம், என்றது.
கருடனா? யார் அந்த பரமாத்மா? எனக்கு பரமாத்மாவையே தெரியாதே! இது குபேரனின் தோட்டம். இங்கு யாரும் மலர்களை பறிக்கக்கூடாது. போ, போ என அனுமன் விரட்டினான். ஓ! என்னையே விரட்டுகிறாயா? பரமாத்மாதான் இந்த மலர்களைக் கொண்டு வரச் சொன்னார். அவரின் கட்டளையை நிறைவேற்ற வேண்டியது என் கடமை.
பரமாத்மா துவாரகையில் தான் இருக்கிறார், என்றது கருடன். இதோ பார்! நீ யாராக இருந்தாலும் கவலையில்லை. மரியாதையாக வெளியே போ, என மேலும் அதட்டினான் அனுமன். என்னையே விரட்டுகிறாயா? என் வலிமையைப் பார் என்று கருடன் கோபத்துடன் அனுமனைத் தாக்க முயன்றது.
ஆனால் அனுமனோ, கருடனைப் பிடித்து இறுக்கி, தன் அக்குளுள் இறுக்கிக் கொண்டான். கருடன் எவ்வளவோ முயன்றும் தன்னை விடுவித்துக் கொள்ள இயலவில்லை. அதற்கு மூச்சுத் திணறியது. என்னை விட்டுவிடு. பரமாத்மா சொன்னதால்தான் நான் வந்தேன் என்று கதறியது. சரி. உன்னை கிருஷ்ணன்தானே அனுப்பினார்.
அந்த கிருஷ்ணனையே கேட்கிறேன். வா போகலாம் என்று சொல்லியபடி துவாரகையை நோக்கி புறப்பட்டது. அனுமன் துவாரகைக்குள் நுழையும்போது, மக்கள் அதன் தோற்றத்தைக்கண்டு பயந்தனர். அதனால் என்ன துன்பம் நேரிடுமோ என அஞ்சியவாறு கிருஷ்ணனிடம் சென்று சொல்லி முறையிட்டனர். கிருஷ்ணனுக்கு வருவது யாரென்று தெரியுமாதலால் மக்களிடம் அவர், கவலைப்படாதீர்கள்.
சக்கராயுதத்தை அனுப்பி அவனை கொன்று விடுகிறேன் என ஆறுதல் கூறினான். சக்ராயுதத்தை அழைத்து, நீ சென்று நகரில் புகுந்த குரங்கு முகமும், மனித உடலும் கொண்ட ஒருவன் ஊருக்குள் வருகிறான். அவன் கையில், கருடன் சிக்கித் தவிக்கிறான். அந்த வித்தியாசமான வடிவம் கொண்டவனை அழித்துவிட்டு கருடனை மீட்டு வா என்று ஆணையிட்டார்.
சக்கராயுதமும் மகா ஆவேசத்துடன் சுழன்று சென்றது. அனுமன் அருகில் சென்றதும், அதன் அக்குளில் கருடன் சிக்கி உயிர்போகும் நிலையில் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தது. கருடனும், நல்ல நேரத்தில் வந்தாய். என்னை காப்பாற்று என சக்கராயுதத்தை கெஞ்சியது.ஆனால் அனுமன் மனதிற்குள் ராமநாமத்தை உச்சரித்துக் கொண்டே, சீறிவரும் சக்கராயுதத்தை பிடித்து தன்னுடைய இன்னொரு அக்குளுள் இடுக்கி வைத்தது. சக்கராயுதமும் பிடியில் திணறியபடி, நான் கிருஷ்ணரின் ஆயுதம்.
என்னை விட்டுவிடு என கெஞ்சியது.அட நீயும் கிருஷ்ணனின் ஆள்தானா? எனக்கு தெரிந்தது ராமன் மட்டுமே. அவரைவிட சக்தி வாய்ந்தவர் எவருமில்லை. நீங்கள் கூறும் அந்த கிருஷ்ணனை பார்க்கலாம் என்றபடி பிடியை மேலும் இறுக்கினான். அனுமனின் பிடியில் சிக்கிய சக்கராயுதமும், கருடனும் இதுவரை கொண்டிருந்த ஆணவத்தை விட்டன. அனுமன் கிருஷ்ணன் முன் சென்றான். அவனுக்கு கிருஷ்ணன் யாரென்று தெரியவில்லை.நீ யார், என்றான்.
அதற்கு மேல் சோதிக்க விரும்பாத கிருஷ்ணன் அனுமனின் பார்வையில் ராமனாக காட்சி தந்தார். பிரபோ! தங்கள் தரிசனத்திற்காகத்தானே காத்து கிடந்தேன் என்று மகிழ்ச்சி பொங்க கூறி வணங்கினான் அனுமன்.கிருஷ்ணனும் வாழ்த்தி, வாயு மைந்தா! உன் அக்குளுள் ஏதோ வைத்திருக்கிறாயே. அது என்ன? என்று கேட்டார். பிரபோ! தங்களுக்கு சவுகந்திகா மலர் வேண்டுமானால் என்னிடம் சொல்லியிருக்கலாமே! உங்கள் வாகனம் கருடனாம்! தோட்டத்தில் புகுந்து நாசம் செய்து கொண்டிருந்தது. அதனால் அதனை பிடித்து வைத்துக் கொண்டேன்.
தங்களைக் கண்டு முறையிட வந்து கொண்டிருக்கும் போது என்னை வழிமறித்து வம்பு செய்தது இந்த சின்ன சக்கரம். அதனால் அதையும் பிடித்து அக்குளுள் வைத்தேன், என கூறினான். ஆஞ்சநேயா! பாவம் அவர்களை விட்டு விடு என கிருஷ்ணன் கூற, அனுமன் அவர்களை அக்குளில் இருந்து விடுவித்தான். கருடனும் சக்கரமும் தலை குனிந்தபடியே, மாதவா! எங்களை மன்னித்தருள்க. எங்கள் ஆணவம் அழிந்தது என வேண்டினர். கிருஷ்ணரும் புன்னகை புரிந்தார்.
சர்வம் விஷ்ணு மயம்.
No comments:
Post a Comment