பாலாலயம் என்றால் என்ன விளக்கம்
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆலயங்களில் கும்பாபிஷேகம் செய்வது வழக்கம். ஒருசில ஆலயங்களில் புனரமைப்பு பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்வார்கள். இவற்றை முறையே ஜீர்ணோத்தாரண மஹாகும்பாபிஷேகம், புனருத்தாரண மஹாகும்பாபிஷேகம் என்றும் அழைப்பார்கள். இந்த வகையிலான கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்னர் ஆலயத்தில் உள்ள மூர்த்தங்களின் சாந்நித்யத்தை அத்திப்பலகையில் உருவம் வரைந்து அதன் மீதோ அல்லது உற்சவர் விக்கிரகத்தின் மீதோ மாற்றுவார்கள்.
அதாவது மூலஸ்தானத்தில் உள்ள தெய்வங்களின் சக்தியை அந்த தெய்வத்தின் உருவம் வரையப்பட்ட அத்திப்பலகையின் மீது மாற்றி அந்தப்பலகையை ஆலய வளாகத்திற்குள் குடில் அமைத்து அங்கே வைத்து நித்தியப்படி பூஜையை தவறாமல் செய்து வருவார்கள். அதன்பிறகு மூலஸ்தானத்திற்குள் புனரமைப்பு பணிகளைச் செய்வதற்கு பணியாட்கள் உள்ளே செல்வார்கள். இவ்வாறு ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தெய்வங்களின் சாந்நித்யத்தை அத்திப்பலகையின் மீதோ,
உற்சவ விக்கிரகங்களின் மீதோ மாற்றுகின்ற நிகழ்வினை பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம் என்று சொல்வார்கள். பாலாலயம் செய்யப்பட்டுள்ள ஆலயத்தில் மூலவர் சந்நதியில் பூஜை எதுவும் நடைபெறாது. தனியாக ஒரு குடிலில் சாந்நித்யம் பெற்ற அத்திப்பலகையையோ அல்லது உற்சவர் விக்ரகத்தையோ வைத்து நித்யப்படி பூஜைகளையும், தீபாராதனைகளையும் செய்வார்கள். கும்பாபிஷேகம் செய்யும்போது இந்த அத்திப்பலகையில் உள்ள சாந்நித்யத்தை யாகசாலையில் வைக்கப்பட்டிருக்கும் கும்ப கலசங்களில் மாற்றுவார்கள்.
யாகசாலையில் பூஜிக்கப்பட்ட கும்ப கலசங்களில் உள்ள நீரை மூலவர் மற்றும் இதர தெய்வங்களின் சிலைகளின் மீது அபிஷேகம் செய்யும்போது அந்தச் சிலைகள் மீண்டும் சாந்நித்யம் பெறும். பாலாலயம் என்கிற நிகழ்வும் ஒரு சிறிய அளவிலான கும்பாபிஷேகத்தைப் போலவே நடைபெறு.ம் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளின் மீதான சாந்நித்யத்தை வேறு வடிவிற்கு மாற்றும் நிகழ்வுதான் பாலாலயம் அல்லது பாலஸ்தாபனம்.
Kumbabhishekam |
No comments:
Post a Comment