Madurai Meenakshi Amman Kovil Story | மதுரை மீனாஷி அம்மன் கோவில் கதை

மதுரை மீனாஷி அம்மன் கோவில் கதை


பல ஆண்டுகளுக்கு முன்னால் மாலிக்கபூர் மதுரையை நோக்கிப் படையெடுத்தான். வரும் வழியெங்கும் இரத்தம், கொலை, கொள்ளை, பலாத்காரம், பெண்களை சிறைப்படுத்துதல். நிறுத்தாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. கோவில்களை இடித்தான், முடியாதவற்றில் மூர்த்தியை மட்டுமாவது இடிப்பான். பல கோவில்களில் மூர்த்தியை எப்படியாவது காப்பாற்றிவிடுவார்கள் நம் மக்கள்.

இப்படியாக துவங்கியது தான் கல் திரை.

கர்பக்ருஹதிர்க்கு முன்னால் ஒரு சுவரை எழுப்பி அதற்கு முன் ஒரு மூர்த்தியை பிரதிஷ்டை செய்துவிடுவார்கள். ஆக்கிரமிப்பாளன் வருவான். இதுதான் மூர்த்தி என்று நினைத்து இடிப்பான்.

இதை கேள்விப்பட்டனர் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலை சேர்ந்த 5 சிவாச்சாரியார்கள், எப்படியாவது நமது கோவிலை காப்பாற்ற வேண்டும், சுவாமி மீது ஒரு மிலேச்சன் கை வைக்க விடக்கூடாது என்று தங்களுக்குள் சபதம் செய்து கொண்டார்கள்.

தாம் செய்யும் காரியத்தை நேரம் வரும் வரை யாருக்கும் சொல்வதில்லை என்று சத்தியம் செய்தார்கள். சுவாமிக்கு அபிஷேகமெல்லாம் செய்து முடித்து, கண்ணில் நீருடன், மீண்டும் உன்னை எப்போது காண்போம் சர்வேசா, சுந்தரேசா என்று கதறியபடியே கல் திரை எழுப்பினார்கள்.

வெளியே மூர்த்தியை பிரதிஷ்டை செய்தார்கள். அசலைப்போலவே நகை, விளக்கு, மாலை, எல்லாம் ஏற்பாடு செய்தார்கள். வந்தான் மாலிக்கபூர். ஆயிரக்கணக்கான பேரை கொன்றான்.

பல ஆயிரம் பேரை மதம் மாற்றினான். மாட்டு கறியை வாயில் திணித்தான். விக்ரஹத்தை இடித்தான். செல்வங்களை எல்லாம் கொள்ளை கொண்டு போனான்.

அதன் பின் 48 ஆண்டுகள் கோவிலில் பூஜை இல்லை. தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே, மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் 48 ஆண்டுகள் பூஜை கிடையாது. கோவிலே பாழாக இருந்தது. அதன் பின் விஜயநகர சாம்ராஜ்யம் துவங்கியது.

முகலாயர்களை துவம்சம் செய்தார்கள். எல்லா கோவில்களையும் புனருத்தாரணம் செய்தார்கள். அப்போது மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலிலும் வேலையை ஆரம்பித்தார்கள். அங்கே இடிந்து கிடந்தது சிவலிங்கம். அம்பாளை காணோம். சரி வேறு ஒரு சிலையை செய்ய சொல்லி உத்தரவு கொடுப்போம் என்று சொன்னார்கள்.

அப்போது தள்ளாத வயதான ஒருசிவாச்சாரியார் வந்தார். புது விக்ரஹமெல்லாம் வேண்டாம். சுவாமி பத்திரமாக இருக்கிறார் என்றார். என்ன சொல்கிறீர்கள். இதோ இடித்து விட்டு போயிருக்கிறார்களே என்றனர். இல்லை, இல்லை, இது மூல விக்ரஹமில்லை என்று சொல்லி நடந்ததை சொன்னார்.

சத்தியம் செய்த 5 பேரில் 4 பேர் இறந்து விட்டார்கள். காலம் வரும்வரை எப்படியாவது நான் இதை சொல்லிவிட்டு சாக வேண்டும் என்று உயிரை கையில் பிடித்துகொண்டு இருக்கிறேன் என்று சொல்லி தாளாத துக்கத்துடனும் மனதில் இருந்த பாரம் இறங்கியதில், நல்லது நடக்கிறதே என்று சந்தோஷத்துடனும் அழுதுகொண்டே சொன்னார்.

உடனடியாக அந்த மூர்த்தி இருந்த இடத்தின் பின்னே உள்ள சுவற்றை இடிக்க ஆரம்பித்தார்கள். முழுவதும் இடித்து உள்ளே சென்று பார்த்தால். உள்ளே 48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாமல், விளக்கு எரிந்து கொண்டிருந்தது. சுவாமியின் மீது சாற்றிய சந்தன கலபம் ஈரமாக இருந்தது. பூக்கள் வாடாமல் இருந்தன. கர்பக்ருஹத்தில் உள்ளே இருந்து வரும் அந்த வாசம் அப்படியே இருந்தது!

48 ஆண்டுகள் கழித்து எந்த பூஜையும் இல்லாத நிலையில் உள்ளே அனைத்தும் மூடும்போது இருந்தபடியே இருந்தது. திளைத்தனர் பக்தியில் அனைவரும். அனைத்து சோக நிழல்களும் பறந்தன. ஊரே திருவிழா கோலம் பூண்டது இந்த அதிசயத்தை காண. மீதும் புது பொலிவுடன் கோவில் திறக்கப்பட்டது.

இன்றும் அந்த கோவிலுக்கு போனால் உடைக்கப்பட்ட சிவலிங்கம் ஒரு ஓரமாக துர்க்கை அம்மன் எதிரில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் அங்கு ஒரு பலகையில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.



No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...