நீங்கள் பாக்கியசாலியாக இருந்தால் இந்தப் பக்கம் கண்ணில் படும்
*********************************
1952ம் ஆண்டு பிப்.23ல் நடந்த மகாசிவாராத்திரியன்று, காஞ்சி மகாபெரியவர் மயிலாடுதுறையை அடுத்த நாகங்குடி கிராமத்தில் 23.2.1952ல் தங்கி இருந்தார். அங்கு பக்தர்கள் மத்தியில் பரமசிவன் மகிமை குறித்து அவர் பேசியது எல்லாரையும் கவர்ந்தது. பெரியவருடன் 40 ஆண்டுகள் கைங்கர்யம் செய்த குமரேசன், புத்தகம் ஒன்றில் இருந்த இது குறித்து கூறினார். உருக்கப்பட்ட நெய் நிறமற்றதாக இருக்கும். அதே நெய் குளிர்ந்தவுடன் வேறொரு நிறத்தை அடையும்.
கடவுளும் உருவமற்ற நிலையில் இருப்பதாக சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் அவரே பக்தர்களின் உள்ளத்தில் அன்பு பூரணமாகும் போது பக்திக்கு கட்டுப்பட்டு உருவம் தாங்கி வருகிறார். விஷ்ணு போல சிவன் அவதரிக்காவிட்டாலும், அநேகமான மோகன ரூபங்களை எடுத்து நம்மைக் காக்கிறார்.
ஆபரணம் ஏதும் அணியாமல் இயற்கையழகுடன் பிட்சாடன மூர்த்தியாக கோலம் கொண்டார். ஒருபுறம் அழகே வடிவெடுத்தது போல சுந்தரேஸ்வரராக
காட்சியளிக்கிறார். பக்தர்களின் பயம் போக்கி அபயம் தரும் விதத்தில் பைரவ மூர்த்தியாக விளங்குகிறார். வீரத்தை சிறப்பிக்கும் விதத்தில் வீரபத்திரராக அருள்பாலிக்கிறார்.
தேவர்கள் விரும்பிய ஆனந்தத்தை அளிக்கும் விதத்தில் சித்சபையில் நடனமாடுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக ஞானத்தை அருளும் தெய்வமாக தட்சிணாமூர்த்தியாக மவுன நிலையில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கிறார். இப்படியாக 64 திருக்கோலங்களில் சிவன் அருள்பாலிக்கிறார்.
சர்வேஸ்வரனே உலகை படைக்கும் போது பிரம்மா என்றும், காக்கும் போது விஷ்ணு என்றும், சம்ஹாரமாக தன்னுள் அடக்கும் போது சிவன் என்றும் மூன்று விதங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்த மூன்று மூர்த்திகளில் பரமசிவனே கருணை மிக்கவராக கருத வேண்டியிருக்கிறது. பாவம் புரிந்தவன், புண்ணியம் செய்தவன், ஞானி, அஞ்ஞானி என்று உயிர்களை பாகுபாடு இல்லாமல் சம்ஹார காலத்தில் அனைவருக்கும் ஓய்வு அளித்து சுக துக்கத்தில் இருந்து சிறிது காலம் ஓய்வு அளித்து கருணை புரிகிறார். ஆகவே சிவனே கருணை வள்ளல். தாயுமானவர் சிவனை "அம்மையப்பா' என்று அன்புடன் அழைக்கிறார்.
உயிர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் சிவனை போற்றி வழிபடும் நாளே சிவராத்திரி. நம் அன்புக்கு கட்டுப்பட்டு உருவத்திற்கும் அருவத்திற்கும் இடையில் பரமசிவன் லிங்கோத்பவ மூர்த்தியாக நள்ளிரவில் விஸ்வரூபம் எடுத்த நன்னாளே சிவராத்திரி. சிவனின் முடியைக் காண விரும்பிய பிரம்மா அன்னப் பறவையாக உருவெடுத்து ஆகாயத்தில் பறந்தார். விஷ்ணுவோ பன்றி வடிவில் பாதாளத்தை அடைந்தார்.
இருவராலும் அவரைத் தரிசிக்க முடியவில்லை. ஜோதி வடிவில் இருந்து வெளிப்பட்ட இந்த லிங்கோத்பவ மூர்த்தியை கோவில் பிரகாரத்தில் தரிசிக்கலாம். ஜோதி வடிவமான இறைவன் லிங்கமாக வெளிப்பட்ட புனிதமான நாளே சிவராத்திரி. இந்த நாளில் தூக்கம் தவிர்த்து சிவ நாமங்களை ஜெபித்து சிவனைத் தரிசிப்போம். அவரது பூரண அருளுக்குப் பாத்திரராவோம். மகாபெரியவர் பரமசிவன் மஹிமை குறித்து பேசியதை அறிந்து கொண்ட நாமெல்லாம் பாக்கியசாலிகள் தானே!
மஹா சிவராத்திரியன்று சிவாலயங்களில் அனைவரும் கேட்கும் வகையில் இதைப்படியுங்கள்...
ஹர ஹர சங்கர !
ஜெய ஜெய சங்கர !
No comments:
Post a Comment