Madurai Famous Chithirai Thiruvizha | உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிறப்பு

உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் சிறப்பு


உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் குரு மூலமாக உபதேசம் பெற்று, இறைவனின் அருள்பெற வேண்டும் என்று வேதங்கள் கூறுகின்றது. அவ்வாறு உபதேசம் பெற இயலாதவர்கள், “சாம்பவி தீஷை” என்று சொல்லக்கூடிய இறைவன், இறைவி இருவரும் ஒரு சேர திருவீதி உலா வரும்பொழுது தரிசித்தால் அவர்களுக்கு இறைவனே குருவாக இருந்து உபதேசம் அளிக்கிறார் என்பது இங்கு ஐதீகம்.

அனைத்து ஆன்மாக்களுக்கும் உய்வு பெற ஏற்பட்டதே இந்த “இறைவன் இறைவி திருவீதி உலா”.

எங்கும் நிரம்பிய செம்பொருளாகிய இறைவன் அருளுருக் கொண்டு 64 திருவிளையாடல்களைச் செய்தருளியதும், ‘பூலோக கயிலாயம்’ என அழைக்கப்படுவதுமான மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் 12 தமிழ் மாதங்களிலும் திருவிழா நடைபெறும்.

இவ்விழாக்களில் சித்திரை மாதம் நடைபெறும் “திருக்கல்யாணம்” உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது.

மதுரை மாநகரில் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெறும்.

முதல் நாள் திருவிழா – வழக்கம்போல காலை கொடியேற்றத்துடன் தொடங்கி, இரவு சுவாமியும், பிரியாவிடை அம்மனும், கேட்டதைத் தரும் கற்பக விருட்ச வாகனத்திலும், மீனாட்சி அம்மன் சிம்ம வாகனத்திலும் நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவர். நகர் சோதனைக்காக இவ்வாறு வலம் வருவதாக இங்கு மரபு.


இரண்டாம் நாள் திருவிழா – சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், அம்மன் அன்ன வாகனத்திலும் வீதி உலா வருவர். இறைவன் ஐம்பூதங்களையும் அடக்கி தன் ஆணை வழி செலுத்துபவன் என்பதை இவ்வாகனம் உணர்த்துகிறது.

மூன்றாம் நாள் திருவிழா – இரவில் சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் உலா வருவர். வேண்டுவோர் வேண்டுவனவற்றை வழங்கவே மீனாட்சி அம்மன் காமதேனு வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

நான்காம் நாள் திருவிழா – காலையில் சுவாமியும், பிரியாவிடை அம்மனும் மீனாட்சி கோயிலில் இருந்து புறப்பட்டு வில்லாபுரத்தில் உள்ள பாவக்காய் மண்டபத்தில் தங்குவர். இரவில் தங்கப்பல்லக்கில் ஒய்யாரமாக கோயிலுக்கு வருவர்.

ஐந்தாம் நாள் திருவிழா - சுவாமியும், அம்மனும் குதிரை வாகனத்தில் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சி. அடியவர்களின் குறைகளை விரைவாக களைவதற்காக வேகமாக செல்லக்கூடிய குதிரையில் எழுந்தருளுவதாக ஐதீகம்.

ஆறாம் நாள் திருவிழா - ஞானசம்பந்தர் சமணர்களுடன் வாதிட்டு வென்ற நிகழ்ச்சி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டு, பாடல்கள் பாடி லீலை நிகழ்த்தப்பெறும். அதன் பிறகு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெறும்.


ஏழாம் நாள் திருவிழா – இறைவன் அதிகார நந்தி மீதும், அம்மன் யாளி வாகனம் மீதும் பவனி வருவர். இறைவன் பிரதோஷ வழிபாட்டை மக்களுக்கு உணர்த்தும் பொருட்டு இவ்வாகனத்தில்
எழுந்தருளுவதாக ஐதீகம்.

எட்டாம் நாள் விழா – இரவு மீனாட்சி பட்டாபிஷேகம், அம்மன் சந்நதி ஆறுகால் மண்டபத்தில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் அம்மனுக்கு மச்ச முத்திரை, இடப முத்திரை முதலிய அணிகலன்களால் அலங்காரம் செய்யப்படும். கழுத்தில் அக்காலத்திய பாண்டிய மன்னர்கள் அணியும் வேப்பம்பூ மாலை அணிவிக்கப்படும். மீனாட்சி அம்மனுக்கு கிரீடம் சாற்றப்படும். கோயில் தக்கார் மீனாட்சி அம்மனிடம் இருந்து செங்கோல் பெற்று, சகல விருதுகளுடன் சுவாமி சந்நதி இரண்டாம் பிராகாரம் சுற்றி வந்து மீண்டும் மீனாட்சியம்மன் திருக்கரத்தில் செங்கோலைச் சமர்ப்பிப்பார். சித்திரை மாதம் முடிசூட்டப்பட்டதன் முதல் ஆடி மாதம்வரை அம்மன் ஆட்சி செய்வதாகக் கருதப்படுகிறது. பின்னர் ஆவணி மாதம் சுந்தரேஸ்வரருக்கு(சுவாமி) பட்டாபிஷேகம் செய்யப்பட்டு, பங்குனிவரை சுந்தரேஸ்வரர் ஆட்சி செய்வதாகக் கருதப்படுகிறது.


ஒன்பதாம் நாள் விழா– அன்று மாலை அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை அம்மன் மூவரும் இந்திர விமானத்தில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வருவர். அப்போது மீனாட்சி அம்மன் திக்விஜயம் நடைபெறும். மீனாட்சி அம்மன் மலையத்துவசன் காஞ்சமாலைக்கு அக்னியில் இருந்து தோன்றிய மகள். பிறக்கும் போதே, மூன்று மார்பகங்களோடு பிறக்கிறாள். அதைக் கண்டு பெற்றோர் கவலையுறும் போது அசரீரி, ‘தனக்கு ஏற்ற துணையை அவள் பார்க்கும்போது சரியாகி விடும்’ எனக் கூறுகிறது. மீனாட்சி அம்மன் மூன்று மார்பகங்களோடு இருக்கும் சிலையை இன்றும் புது மண்டபத்தில் காணலாம். மலையத்துவசன் காலத்திற்கு பிறகு, மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் முடிந்து, மதுரையின் அரசியான பின்னர், ஈழேரு உலகத்தையும் ஆட்சி செய்ய நினைக்கிறாள். எட்டு திக்குக்கும் அதிபதிகளான அஷ்டதிக் பாலர்களை வென்று, தனக்கு அடிபணியச் செய்கிறாள்.




இந்நிகழ்ச்சி வடக்குமாசி வீதி, கீழமாசி வீதி சந்திப்பில் இருக்கும் லாலா ஸ்ரீரெங்க சத்திர மண்டபத்தில் நடைபெறும். அந்நிகழ்ச்சியின் போது, இரண்டு பட்டர் வீட்டு ஆண் குழந்தைகளுக்கு அம்பாள், சுவாமி வேஷம் போட்டு, நிகழ்ச்சியை நடத்துவார்கள். அதன்படி, கிழக்கில்(கீழமாசி வீதி) இந்திரனையும், அக்னி மூலையில்(தெற்குமாசி வீதிகளில் சந்திப்பில் விளக்குத்தூண் அருகில்) அக்னியையும், தெற்கில் (தெற்குமாசி வீதியில்) எமனையும்,நிருதிதிசையில்(தெற்குமாசிமேலமாசிவீதி சந்திப்பு) நிருதியையும், மேற்கில்(மேலமாசி வீதி) வருணனையும், வாயு திசையில்(வடக்கு மாசி வீதி) வாயுவையும், வடக்கில்(வடக்கு மாசி வீதி) குபேரனையும், ஈசானி திசையில்(வடக்குமாசி வீதி, கிழக்கு மாசி வீதி சந்திப்பு) ஈசனையும் வெற்றி கொள்கிறாள். பின்னர் நந்திதேவரையும் வெல்கிறாள். ஈசான்ய மூலையில் சுவாமியை(சிவனை) காண்கிறாள். சுவாமியை கண்டவுடன், மீனாட்சியின் மூன்றாவது ஸ்தனம் மறைந்து விடுகிறது. அவள் சுவாமியை பார்த்து, வெட்கப்படுகிறாள். இந்நிகழ்ச்சியில் ஈசனுடன் அவள் மாலை மாற்றிக்கொள்வாள். இந்த காட்சி கண்களுக்கு விருந்து படைக்கிறது

பத்தாம் நாள் விழா– அன்று காலை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் ரிஷப லக்னத்தில் நடைபெறும். முன்னதாக சுவாமி, பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் மூவரும் வெள்ளி சிம்மாசனத்தில் அதிகாலையில் அழகர்சாமி நாயுடு, சூறாவளி சுப்பையர், கல்யாண சுந்தர முதலியார் மண்டபப்படிகளில் எழுந்தருளி, நான்கு சித்திரை வீதிகள் சுற்றி வந்து, முத்துராமைய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாடி, பின்னர் திருக்கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளுவர். திருப்பரங்குன்றத்தில் உள்ள சடங்கு கந்தரும், பவளக்கனிவாய்ப் பெருமாளும் திருக்கல்யாணத்திற்காக எழுந்தருளுவர். மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான கல்யாண மண்டபத்திற்கு சுவாமி, பிரியாவிடை, மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளுவர்.


திருக்கல்யாணத்தன்று மட்டும் சுவாமிக்கு திருஷ்டி பொட்டு வைக்கப்படும். இந்நிகழ்ச்சியில் குலசேகர பட்டர் வழிச் சிவாச்சாரியார் சுந்தரேஸ்வரராகவும், உக்கிரபாண்டிய பட்டர் வழிச் சிவாச்சாரியார் மீனாட்சியாகவும் வேடம் பூண்டு கல்யாணத்தை நடத்துவர். மீனாட்சி அம்மன் சார்பாக உள்ள சிவாச்சாரியார் சுவாமிக்கு பாதபூஜை செய்வார். பின்னர், காப்பு கட்டிய பட்டர் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாஜனம், பஞ்சகவ்யம், கலசபூஜைகள் செய்வார். கலசபூஜையில் விநாயகர், பிரம்மா, மகாவிஷ்ணு, சோமன், உமாமகேஸ்வரி தங்குவதாக ஐதீகம். பின்னர், பாலிய பூஜை, ஹோமம், மாங்கல்ய பூஜை போன்றவை நடைபெறும். பின்னர், சுவாமி, பிரியாவிடை, அம்பாளுக்கு காப்புக் கட்டுதல் நடைபெறும். சுவாமி, அம்பாள் 3 முறை மாலை மாற்றிக் கொள்வர். தொடர்ந்து திருமண சடங்குகள் நடைபெறும்.

கல்யாணத்திற்கு பின்னர், உபச்சார தீபாராதனை முடிந்து, பழைய கல்யாண மண்டபத்திற்கு சுவாமி, பிரியாவிடை, மீனாட்சி அம்மன் எழுந்தருளுவர். திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மணமக்களுக்குத் திருமாங்கல்யம், பட்டுத்துணிகள், பணம் முதலியவற்றை மொய்யாக வழங்குவர். திருமணத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு கோயில் சார்பாக அன்னதானம் வழங்கப்படும். அன்று இரவு 7 மணிக்கு ஆனந்தராயர் பூப்பல்லக்கில் சுவாமி, பிரியாவிடை, மீனாட்சி அம்மன் எழுந்தருளி, நான்கு மாசி வீதிகளில் வலம் வருவர்.

பதினோராம் நாள் விழா– அதிகாலை 4.30 மணியில் இருந்து 5 மணிக்குள் சுவாமி, பிரியாவிடை பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சின்னத் தேரிலும் மேஷ லக்னத்தில் எழுந்தருளுவர். ஜாதி, மத பேதமின்றி ஊர்கூடி பக்தர்கள் ‘சம்போ ஹர, ஹர மகாதேவா’ என கோஷம் எழுப்பி தேருக்கு வடம் பிடிப்பர். மேள, தாளங்கள் முழங்க தேர் மாசி வீதிகளை சுற்றி வரும். தேரில் சுவாமி பவனி வரும்போது சம்ஹார கோலத்தில் வருவார். அப்போது, சுவாமிக்கு கிரீடம் அணிவிக்கப்பட மாட்டாது.


மதியம் 3 மணிக்கு சுவாமிக்கு கிரீடம் அணிவிக்கப்படும். இன்று இரவு மட்டும் தான் ஒரே சப்த வர்ண சப்பரத்தில் சுவாமி, பிரியாவிடை மற்றும் மீனாட்சி அம்மன் மூவரும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வருவர். இந்த வலம் வருதலை காண்பவர்களுக்கு ஏழு ஜென்ம பாவம் போகும் என்பது ஐதீகம்.


பனிரெண்டாம் நாள் விழா– நிறைவு நாளில் இந்திரன் சாப விமோசனம் பெற்ற திருவிளையாடர் புராண நிகழ்ச்சி நடைபெறும். அதன் பின்னர் உச்சி காலத்தில் கொடியிறக்கித் தீர்த்தத் திருவிழாவுடன் விழா நிறைவடையும். அன்று இரவு 7 மணிக்கு சுவாமி, பிரியாவிடை ரிஷப வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி, நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் புரிவர். இரவு 9 மணிக்கு மீனாட்சி கல்யாணத்திற்கு வந்திருந்த திருப்பரங்குன்றம் சடங்குக் கந்தரும், பவளக்கனிவாய் பெருமாளும் விடைபெற்றுக் கொண்டு, திருப்பரங்குன்றம் செல்வர்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,