ராமனின் தரிசனம் கிடைக்க வழி செய்வதாக வாக்களியுங்கள்

இலங்கைக்கு பாலம் கட்ட முடிவெடுத்த ராமர். வானரங்களை அழைத்து, மலைகளில் உள்ள பாறைகளை வெட்டி எடுத்து வர கட்டளையிட்டார். வானரங்களும் அவ்வாறே பெயர்த்து வந்து சேர்த்தன. கடலில் பாலம் கட்டுவதற்கான பணியை நளன், நீலன் என்னும் இருவரிடம் ராமர் ஒப்படைத்தார். 

வானரங்களில் பலசாலியான அனுமன் வடக்கு நோக்கி பயணித்து ஒரு மலையை அடைந்தார். அடியோடு அதைப் பெயர்க்க முயற்சித்தார். ஆனால், அசைக்க முடியவில்லை. அப்போது அந்த மலை,“ஆஞ்சநேயரே! எனக்கு சத்தியத்தின் வடிவமான ராமனின் தரிசனம் கிடைக்க வழி செய்வதாக வாக்களியுங்கள். இப்போதே நானாகவே வந்துவிடுகிறேன்,” என்றார். ஆஞ்சநேயரும் அவ்வாறே வாக்களித்தார். 

மகிழ்ச்சியுடன் ஆஞ்சநேயர் கையில் மலை அமர்ந்து கொள்ள, அணை கட்டும் இடம் நோக்கிப் புறப்பட்டார். பிருந்தாவனம் பகுதிக்கு மேலாக ஆஞ்சநேயர் வந்த சமயத்தில், அணை கட்டும் பணி முழுமையாக முடிந்து விட்டது. எனவே, ஆஞ்சநேயர் மலையை ஒரு இடத்தில் வைத்து விட்டார். வருத்தம் கொண்ட அந்த மலை, “கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் செல்கிறீர்களே! இது தான் ராமனின் தொண்டர் செய்யும் வேலையா?” என்று வருத்தமும் கோபமும் கலந்து கேட்டது.

ஆஞ்சநேயரின் பாடு திண்டாட்டமாகி விட்டது. இருந்தாலும் அதனிடம்,“வருந்த வேண்டாம். நிச்சயம் ராமனிடம் உன் அன்பை எடுத்துச் சொல்லி முறையிடுகிறேன். கருணைக்கடலான அவர் உன்னை ஏற்று தரிசனம் அளிப்பார்” என்று சொல்லி விடை பெற்றார். சேதுக்கரையில் இருந்த ராமரிடம், மலைக்கு தான் அளித்த வாக்குறுதி பற்றி தெரிவித்தார்.“ஆஞ்சநேயா! கவலை வேண்டாம். 

பிருந்தாவன பகுதியிலேயே அந்த மலை இருக்கட்டும். துவாபர யுகத்தில் நான் கிருஷ்ணராக அவதரிக்க இருக்கிறேன். அப்போது அதற்கு தரிசனம் தருவதோடு, என் கையில் தாங்கிக் கொண்டு நிற்கவும் செய்வேன். உடனே அந்த மலையிடம் போய் இதை தெரிவித்து விட்டு வா!” என்றார் ராமர். துவாபரயுகத்தில் கோகுலத்தில் கிருஷ்ணராக அவதரித்தார் ராமர். 

ஒரு சமயம் கோகுலவாசிகள் வழக்கமாக செய்யும் இந்திர பூஜையை நடத்த மறந்தனர். இதனால் கோபம் கொண்ட இந்திரன் பெருமழை பொழியச் செய்தான். பசுக்களை பாதுகாக்க முடியாமல் கோகுலவாசிகள் திண்டாடினர். அனுமனால் வைக்கப்பட்ட மலை ‘கோவர்த்தனகிரி’ என்ற பெயருடன் விளங்கியது. அந்த மலையை கிருஷ்ணர் தன் சுண்டு விரலால் குடை போல தாங்கிப் பிடித்தார். தொடர்ந்து ஏழுநாட்கள் மழை பொழிய பசுக்களும், கோபாலர்களும் மலையின் அடியில் பாதுகாப்பாக நின்றனர். மாருதி அளித்த வாக்குறுதியால் தான், தனக்கு இப்படியொரு தெய்வீக சம்பந்தம் கிடைத்ததை உணர்ந்த மலை மகிழ்ச்சிக்கடலில் திளைத்தது



No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...