சீதையைக் காணாமல் பரிதவித்த ராமன் அவளைத் தேடித் தேடி நொந்தான். எங்கே போயிருப்பாள், யார் செய்த சதி இது என்று எதுவும் புரியாமல் குழம்பிய அவன், தன் விழிகளில் சீதையைத் தேக்கியதால், தேடிய இடமெல்லாம் அவளே நிறைந்திருப்பது போன்ற பிரமை. அது தந்த ஏமாற்றத்தைத் தாங்கியபடி தளர் நடை பயின்றான். உடன் இளவல், அவனுக்கும் மேலான வேதனை, மர்மம் விலகா குழப்பம்... அதோ, அங்கே யார் தரையில் படுத்திருப்பது? அசைய முயன்றும் முடியாத முயற்சிகளினூடே முனகலும், அரற்றலுமாக, மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கியபடி திணறிக்கொண்டிருப்பவர் யார்? ராமன், தன் இயல்பான கருணைப் பெருக்கத்தோடு அந்த நபரிடம் ஓடோடிச் சென்றான். என்னவோர் அதிர்ச்சி! அங்கே வீழ்ந்துகிடந்தவர், தன் தந்தையாரின் இனிய நண்பர், ஜடாயு! பட்சிகளின் பேரரசனாக விளங்கி, தசாத சக்கரவர்த்திக்கே பல உதவிகள் புரிந்தவர்.
தசரதன் மரணமடைந்த செய்தி கேட்டதும் ‘என்னுயிரும் என்னைவிட்டு நீங்காதோ’ என்று அழுது நண்பனின் இழப்பை வருந்தித் தெரிவித்தவர். தசரதரும் தான் வெறும் உடல்தானென்றும், ஜடாயுவே தன் உயிர் எனவும் நட்பு மேலிட சொல்லி மகிழ்ந்திருக்கிறார். ‘உயிர் கிடக்க உடலை விசும்பேற்றினார் உணர்விறந்த கூற்றினாரே’ என்று தசரதனின் நட்பு மனநிலையை கம்பர் விவரிக்கிறார். உள்ளமும், உடலும் துடிக்க அப்படியே மண்டியிட்டு அவரைத் தன் இரு கரங்களாலும் தாங்கிக்கொண்டான் ராமன். ‘‘என்னாயிற்று, ஐயனே, எப்படி ஆயிற்று இந்தக் கோலம்...’’ என்று கதறினான்.
அவனை ஆசுவாசப்படுத்திய ஜடாயு, அவன் மனைவி சீதையை ராவணன் தன் புஷ்பகவிமானம் மூலம் கடத்திச் செல்வதைத் தான் பார்த்ததையும், அவனிடமிருந்து அவளை மீட்க தன்னாலியன்ற எல்லா முயற்சிகளையும் செய்ததாகவும், ஆனால் அசுர வலிமை மிக்க ராவணன் தன் சிறகுகளை வெட்டி வீழ்த்தி, தப்பித்துச் சென்றுவிட்டான் என்றும் தகவல் சொன்னார். கண்களிலிருந்து நீர் கரகரவெனப் பெருகியது ராமனுக்கு. ‘‘உன் சீதை உத்தமி. என்னை ராவணன் வீழ்த்தியபோது, ‘‘ஐயா, என் பொருட்டு தாங்கள் உயிர் தரித்திருக்க வேண்டும்; என் ராமன், என்னைத் தேடி இந்த வழியாக வரக்கூடும். அப்போது அவரிடம் தாங்கள் என் நிலைமையைச் சொல்ல வேண்டும்; என்னைக் கடத்திச் செல்லும் கயவன் யார் என்பதையும் தெரிவிக்க வேண்டும்,’’ என்று தன்னுடைய துயர் மிகு நிலையிலும் என்னிடம் வேண்டிக்கொண்டாள்.
அவள் தர்ம பத்தினி என்பதால், நீயும் என் மகன் போன்றவன் என்பதால், என்னிடமிருந்து இன்னும் உயிர் பிரியாமல் இருக்கிறது. போ ரகுராமா, அந்த ராவணனை வதம் செய்; அவனிடமிருந்து உன் மனைவியை மீட்டுக்கொள்,’’ என்று ஜடாயு மேலும் சொன்னபோது, அப்படியே அவரை ஆரத் தழுவிக்கொண்டான் ராமன். அருகில் உடல் குலுங்க அழுதபடி நின்றிருந்தான் லட்சுமணன். தன் கடமை முடிந்த நிறைவில் விழி மூடினார் ஜடாயு. தன் தந்தைக்கு ஒப்பான அவருக்கு இறுதிக் கடன் நிறைவேற்றி அவருக்கு தன் நன்றியை தெரிவித்தான் ராமன். தன் தந்தையார் தசரதனுக்கு மூத்த மகன் என்ற பொறுப்பில் நீத்தார் கடன் நிறைவேற்ற முடியாத பாவியாகிவிட்ட தன் மன வெதும்பலை ஜடாயுவுக்கு செய்து முடித்து, ஓரளவு ஆறுதல் அடைந்தான் ராமன்.
ஆனால், இதுபோன்ற ஈமச் சடங்குகளை மேற்கொள்ளும் ஒருவன், உடன் மனைவியிருக்க, தம்பதி சமேதராகத்தான் செய்ய வேண்டும் என்று விதி இருக்கிறதே; இப்போது சீதையில்லையே, இந்நிலையில் யாரை தன் மனைவியாக வரிப்பது என்ற குழப்பமும் எழுந்தது. ராமன், மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்பதால், பூமிதேவி, தான் அந்த ஸ்தானத்தை நிரப்புவதாக முன்வந்தாள். அருகிலிருந்த ஒரு புஷ்கரணியிலிருந்து மேலெழுந்த அவள் அருகிலிருக்க, ராமன் ஜடாயுவுக்கான இறுதிக் கடன்களை நிறைவேற்றினான். புன்னை மரத்தடியில் அவ்வாறு அவன் கடன் நிறைவேற்றியதன் சாட்சியாக இன்றும் அந்த மரம் தல விருட்சமாகத் திகழ்கிறது.
‘சிந்தையாலும் வேறொரு மாதரைத் தொடேன்’ என்ற தன் உறுதிப்பாட்டை சற்றே, தளர்த்திக்கொண்டான் ராமன். ஜடாயுவுக்குத் தன்னால்தான் மோட்சகதி கிட்ட வேண்டும் என்ற சூழ்நிலை நிர்ப்பந்தம் நெருக்கியபோது, இப்படி சமரசம் செய்துகொள்வதில் தவறில்லை என்றே அவன் நினைத்தான்; அப்படியே செய்யவும் செய்தான். காஞ்சிபுரத்துக்கு அருகே உள்ள திருப் புட்குழி திவ்ய தேசத்திலும் ஜடாயுவுக்கு ராமன் இறுதிக் கைங்கர்யங்களைச் செய்தான் என்ற தலபுராணக் குறிப்பு இருந்தாலும், திருப்புள்ளபூதங்குடியைப் பொறுத்தவரை, பூமிதேவியுடன் அந்த சாங்கியங்களை அவன் அனுசரித்தான் என்ற வகையில் சற்றே மாறுபட்டிருக்கிறது.
வெறும் உணர்வு பூர்வமாக, ஜடாயுவின் உயிர்தியாகத்தை மெச்சும் வழியாக மட்டும் ராமன் இந்தக் கடமையைச் செய்யவில்லை. அந்தத் தியாகத்தை சந்தர்ப்பம் நேரும்போதெல்லாம் பிறரிடம் எடுத்தியம்பவும் செய்தான். கம்பர், யுத்தகாண்டத்தில், ஜானகிக்கு, ராமன் மானசீகமாக துணை நிற்கிறான் என்கிறார்.
‘சரண் எனக்கு யார்கொல் என்று சானகி அழுது
சாம்ப
அரண் உனக்கு ஆவேன், வஞ்சி, அஞ்சல் என்று
அருளின் எய்தி
முரண் உடைக்கொடியோன் கொல்ல, மொய்
அமர் முடித்து தெய்வ
மரணம் என்தாதை பெற்றது என்வயின் வழக்கு
அன்று ஆமோ’
என்பது அப்பாடல். ‘என்னை யார் காப்பார்கள்?’ என்று ஜானகி வருந்தி நிற்க, ‘நானிருக்கிறேன். நான் உன்னைக் காப்பேன். உன்னைக் காக்க ராவணனுடன் போரிட்டு தெய்வ மரணம் அடைந்த என் தந்தை போன்ற ஜடாயுவின் அற்புதப் பண்பினை நானும் மேற்கொள்வேன். ஆகவே அஞ்சாதே,’ என்று மானசீகமாக அவளுக்கு ஆறுதல் அளிக்கிறான் ராமன். இப்படி, தன் தந்தைக்கு நிகரான ஜடாயுவுக்கு அந்திமக் கிரியைகளை நிறைவேற்றிய ராமன், பிறகு இத்தலத்தில் ஓய்வு கொண்டான். ஏற்கெனவே சீதையைப் பிரிந்த துக்கம், இப்போது ஜடாயுவை இழந்துவிட்ட சோகம் எல்லாமாகச் சேர்ந்து அவனை மிகவும் களைப்படைய வைத்திருக்கும் போலிருக்கிறது. ஆகவே இந்த புள்ளபூதங்குடியில் ஓய்வெடுத்துக்கொண்டான்.
No comments:
Post a Comment