வைணவ ஸம்ப்ரதாயத்தில், கருத்மான் என்னும் பக்ஷிகளுக்குள் ராஜனாகப் போற்றப்படும் கருடாழ்வாரை எம்பெருமானின் பெரிய திருவடி என்றும், ஹநுமானை சிறிய திருவடி என்றும் கூறுவதுண்டு.
இவர்களுக்குள் யார் பெரியவர் யார் சிறியவர் என்று குறிப்பதற்கான காரணங்கள் எதனால் ஏற்பட்டவை என்று விளங்குவதில்லை. மிகவும் ஸ்ரேஷ்டமான திவ்ய கைங்கர்யர்கள் இருவருக்குள் பெரிய /சிறிய போன்ற பேதம் தேவை தானா?
நாமறிந்த வரையில், ராமாயணத்தில் இருவருமே திவ்ய பாத்திரர்கள். வயதினிலே பெரியவர் யார், சிறியவர் யார் என கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள். நித்ய சிரஞ்ஜீவியான அனுமனுக்கு வயது என்பது கிடையாது.
இருவரும் எம்பெருமானுடைய கைங்கர்யத்தில் ஒருவருக்கொருவர் சளைக்காதவர்கள். எம்பெருமானும் இவர்களுடைய கைங்கர்யத்தை பேதமின்றி அனுபவித்தவன். ஒரு சமயம், ஒருவர் பூமியில் வலம் வருவதையும், இன்னொருவர் உயர்ந்த வானத்தில் பறப்பதையும் காரணமாகக் கொண்டு, இந்தச் சிறிய /பெரிய திருவடி பேதம் உண்டானதோ?
எப்போதும் உயர்ந்த வானத்தில் பறந்து கொண்டிருக்கும் கருடனை பெரிய திருவடி என்றும், எம்பிரான் ராமனுடன், வானத்தை விடத் உயரம் தாழ்ந்த பகுதிகளான நிலம், கடல், மலைகளில் தொடர்ந்து கூட இருந்ததனால், ஹநுமானைச் சிறிய திருவடி என்றும் குறிக்கின்றார்களா.
கருடன் பறந்திடும் உயரத்திற்கு ஈடாக பறக்கும் வல்லமை கொண்டவன் ஹனுமான். இருவருமே சூரியனின் எல்லை வரை பறந்து சென்றவர்கள். நம்முடைய தமிழ்க் காவியங்களை நோக்கும் கால், இருவருமே திருவடி என்று மட்டுமே, பெரிய /சிறிய என்ற அடைமொழிகளோ பேதமோ இல்லாமலேயே அழைக்கப் பெறுகிறார்கள்.
திருவடி கடல் கடந்து இலங்கை புக்கு' - திருவடியான ஹனுமான் கடலைக் கடந்து இலங்கை புகுந்தான் என்று சொல்வார்கள் . சிறிய என்ற பதத்தை அநுமானைக் குறித்திடும் போதில் கம்பன் பிரயோகிக்க வில்லை.
'திருவடியின் சிறகின் கீழே' என்றும் 'திருவடியை மேற்கொண்டு பொய்கைக் கரையிலே வந்து யானைக்கு அருள் செய்து' என்று வியாகியனங்களில் கருடாழ்வார் பற்றிய குறிப்புக்களும் காணப் பெறுகின்றன.
அருளிச் செயல் என்னும் திவ்ய பிரபந்தம் பொதுவாகக் கருடனை 'பறவை ஏறு பரம புருடா', என்னும் வகையில் 'பறவை' என்றே குறிக்கின்றது.
முக்கியமாக கருடனுக்கும் அனுமனுக்கும் பெரிய / சிறிய என்ற பேதத்தை விலக்கி, அந்தந்த புராண சம்பவத்திற்கு ஏற்ற வகையில், 'அர்த்தாத் பிரகரணாத் லிங்காத் ஒளசித்யாத் அர்த்த நிர்ணய:' - சமயத்திற்கு ஏற்ப கருடனா அனுமனா என்று அர்த்தம் அறிந்து,
இருவரையும் பெரிய/சிறிய என்ற பேதம் அகற்றி, திருவடி என்றே குறிப்பது, ஸ்ரேஷ்டமானது என்பது அடியேனின் கருத்து.
No comments:
Post a Comment