வாக்கை விட கடமையே பெரிது

கோகுலத்தில் யசோதையின் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வந்த மாயக்கண்ணனின் அட்டகாசத்தை கோபியர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவர்கள் வீடுகளில் கண்ணன் செய்யும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லாமல் போய்க் கொண்டிருந்தது. உறியில் உள்ள வெண்ணெயைத் திருடுவது, தயிரைக் குடித்துவிடுவது என்று அட்டகாசம் செய்துகொண்டிருந்தான். அவனுடைய தொல்லைகளைக் குறித்து யசோதையிடம் முறையிட்டும் ஒன்றும் பயன் இல்லை.


வந்திருப்பவன் பகவான் என்பதை அறியாத அந்த கோபியர்கள், எப்படியாவது கண்ணனின் அட்டகாசத்துக்கு முடிவு கட்ட நினைத்தனர். ஆனால், அவன் வருவதும் போவதும் அவர்களுக்குத் தெரியாத நிலை. எனவே அவர்கள் கண்ணனை கையும் களவுமாகப் பிடிக்கவேண்டி ஒரு தந்திரம் செய்தனர்.


உறிகளில் மணிகளைக் கட்டிவிட்டால் - வெண்ணெய்ச் சட்டியை அவன் உறியிலிருந்து எடுக்கும்போது, மணி ஓசை எழுப்பும் அல்லவா? அப்போது திருட்டுக் கண்ணனை கையும் களவுமாகப் பிடித்துவிடலாமே!


இந்த யோசனையை அனைத்து கோபியர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர். உடனே செயலிலும் இறங்கிவிட்டனர். அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் உள்ள உறிகளில் மணிகளைக் கட்டி அலங்கரித்தனர். பின்னர் பரீட்சை செய்தும் பார்த்தனர். உறி சிறிது அசைந்தாலும் மணிகள் ஓசை எழுப்பின. 'இனி கவலையில்லை. திருடனைப் பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் அவர்களுடைய அன்றாட வேலைகளில் மூழ்கிவிட்டனர்.


வழக்கம்போலவே கோபியர்களுக்குத் தெரியாமல் அவர்களில் ஒருத்தியின் வீட்டுக்குச் சென்றான் கண்ணன். வெண்ணெயைத் திருட ஆவலாக உள்ளே நுழைந்த கண்ணன், உறிகளில் மணிகள் கட்டி இருப்பதைப் பார்த்து திகைத்துப் போனான். பகவானின் அம்சமான அவனுக்கு உறிகளில் மணிகள் கட்டப்பட்டு இருப்பதன் காரணம் புரிந்துவிட்டது. தன்னைக் கையும் களவுமாகப் பிடிக்கவே இந்த ஏற்பாடு என்பதைப் புரிந்துகொண்டான். இந்த தர்மசங்கடமான நிலையில் இருந்து தப்பிக்கவும் வேண்டும்; வேண்டுமட்டும் வெண்ணெயும் திருடித் தின்னவேண்டும் என்று நினைத்த கண்ணன் என்ன செய்வது என்று யோசித்தான். முடிவாக ஒரு வழியையும் கண்டுபிடித்தான்.


"மணிகளே! நீங்கள் என்னுடன் ஒத்துழைக்க வேண்டும். உறியிலிருந்து வெண்ணெய்ச் சட்டியை நான் எடுக்கும் போது, நீங்கள் நாக்கைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டும். ஓசை எழுப்பி என்னைக் காட்டிக் கொடுத்து விடக்கூடாது. இதை நீங்கள் செய்தால், உங்கள் உதவியை நான் என்றுமே மறக்கமாட்டேன்" என்று மணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தான் கண்ணன்.

சாதாரண மனிதனின் வேண்டுகோளா என்ன? உலகளந்த மாயவனின் வேண்டுகோள் அல்லவா..! மணிகள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, நாவை அடக்கி நிசப்தமாக இருந்து ஒத்துழைப்பதாக வாக்கும் கொடுத்து உறுதி அளித்தன. கண்ணனுக்கு ஒரே மகிழ்ச்சி! மெல்ல உறியிலிருந்து வெண்ணெய்ச் சட்டியை எடுத்தான். மணிகள் நிசப்தமாக இருந்தன. வெண்ணெயை எடுத்துக்கொண்டு கீழே இறங்கியும்விட்டான் கண்ணன். மணிகள் தன்னுடைய வேண்டுகோளை ஏற்று நிசப்தமாக இருந்ததில் அவனுக்குக் கொள்ளை மகிழ்ச்சி. ஆனால், பாவம், அந்த மகிழ்ச்சி நிலைக்கவில்லை.


வெண்ணெய்ச் சட்டியில் இருந்த வெண்ணையை எடுத்து உண்ணத் துவங்கிய சமயம் எல்லா மணிகளும் ஒரே சமயத்தில் ஒலி எழுப்பின! ஒலியைக் கேட்ட கோபியர்கள் ஓடோடி வந்து, கண்ணனைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டனர்! கண்ணன் அதிர்ச்சி அடைந்தான். "காட்டி கொடுக்க மாட்டோம் என்று உறுதி கொடுத்துவிட்டு, நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டீர்களே..." என்று தன் அழகிய கண்களை விரித்து மணிகளைப் பார்த்து பரிதாபமாகக் கேட்டான்.


"பிரபு! தாங்கள் சொல்லியபடி தாங்கள் உறியிலிருந்து வெண்ணெய்ச் சட்டியை எடுத்தபோது நாங்கள் ஒலி எழுப்பினோமா...? இல்லையே! தாங்கள் உண்ணத் துவங்கிய போதுதானே ஒலி எழுப்பினோம்... பகவானுக்கு நிவேதனம் நடைபெறும்போது நாங்கள் ஒலி எழுப்பாமல் எப்படி இருக்க முடியும்? தங்களுக்கு நிவேதனம் நடக்கும்போது நாங்கள் ஒலிக்காமல் இருந்தால், எங்களுடைய கடமையில் இருந்து தவறியவர்கள் ஆகிவிடுவோமே" என்றன.


மணிகளின் விளக்கத்தைக் கேட்டு பகவான் சிரித்தான். 'ஆம்; பகவானுக்குக் கொடுத்த வாக்குறுதியைவிட பகவத் காரியமே உயர்வு!' என்று மணிகள் மூலம் உணர்த்திய சிரிப்பு அது.


ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,