கோபால்சாமிமலை குடவரைக் கோவில்

**கோபால்சாமி திருக்கோவில் தங்கம் போல் ஜொலிக்கும் மோதக மலைமேல் அமைந்துள்ளது.**


இந்த மலையை நெருங்கினால் அதன் பளபளப்பும், வசீகரமும் நம் நெஞ்சை அள்ளும். அதுதான் மோதகம் என்றழைக்கப்படும் கோபால்சாமி மலை. இந்த மலை தங்கம் போலவே தோற்றம் அளிப்பதால், தங்கமலை எனவும் அழைக்கின்றனர். இது ஒரு காலத்தில் ' மோதக மலைக்கோவில்’ என்றழைக்கப்பட்டது.


சுமார் 400 வருடங்களுக்கு முன்பு திருமங்கலத்திலிருந்து தெற்கே 20 கி.மீ. தொலைவில் "மோதகம் " என்ற ஊரில் இருக்கும் ஒரு குன்றின் மேல் கட்டப்பட்டுள்ளது இந்த கோபால்சாமி மலைக்குடவரைக் கோவில். இன்றைக்கு மோதகம் என்றழைக்கப்பட்ட அந்த ஊர் இல்லை.


முழுக்க முழுக்க கருங்கல்லால் ஆன மண்டபங்கள், அவற்றைத் தாங்கும் பிரமாண்ட தூண்கள், அதில் திருமாலின் பல்வேறு அவதாரங்களை விளக்கும் சிற்பங்கள் என அனைத்தையும் ஒரே ஒரு செங்குத்துப் பாறை போன்ற ஒரு குன்றில், குன்றைக் குடைந்து அடிவாரத்தில் அரங்கநாதருக்கு ஒரு குடவரைக் கோயிலும், குன்றின் மேல் கோபால் சாமிக்கு ஒரு கோவில் என இரு வகையானக் கோயில்களைக் அக்காலத்தில் கட்டியிருக்கிறார்கள்.

இந்த கோபால்சாமி மலைக்கோயில் கட்டப்பட்டுள்ள செங்குத்துக் குன்று இரண்டாகப் பிரிந்து, அதில் கருடன் கை கூப்பி வணங்கியது போன்ற ஒரு சிலை மாதிரியான அமைப்புத் தூரத்தில் இருந்து பார்க்கும்போது தெரிகிறது .


உண்மையில் இது கருடன் சிலையுமல்ல! யாரும் இதை செதுக்கியதும் இல்லை! கருடன் தன் முதுகில் கோபால் சாமியை வைத்துக் கொண்டு வணங்கியது போல, தானாகவே காற்றின் போக்கால் இயற்கையாகவே தனிப்பகுதியாக தோற்றமளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது இந்த கோபால்சாமி மலைப்பாறை. கருடன் தன் முதுகில் கோபால் சாமியை வைத்துக் கொண்டு வணங்கியது போல, உள்ள இந்த பாறையின் அமைப்பு பதிவிடப்பட்டுள்ள புகைப்படம் எடுக்கப்பட்ட கோணத்தில் பார்த்தால் மட்டுமே நன்கு தெரியும்.


இந்த கோபால்சாமி மலைக்கோயில் கட்டப்பட்டுள்ள செங்குத்தான குன்று போன்ற மலைமீது ஏறிச் சென்றால் தியான அமைப்புடன் கட்டப்பட்ட கோபால்சாமி மலைக்கோயில் நம்மை வரவேற்கிறது. இடை இடையே சிலர் தங்கள் பங்களிப்பாக சில மண்டபங்களை அற்புதமாக உருவாக்கி கொடுத்துள்ளனர்.


இந்த கோவிலில் வழக்கம்போல பாறைகளை எப்படி எதை வைத்துப் பிளந்தார்கள்? எப்படி கீழிருந்து மேலே கொண்டு சென்றார்கள் போன்ற. வியப்புகளையெல்லாம் தாண்டி, அதிசயிக்க வைக்கும் ஒரு விசயம் Nature ventilation by air circulation. என்ற அமைப்பாகும். அதாவது இயற்கையின் துணை கொண்டு அமைக்கப்பட்ட காற்றோட்டம் வரும் வகையில் கட்டப்பட்டுள்ள அமைப்பு.


மலை உச்சியில் உள்ள கோபால் சாமி சந்நிதி மிக அதிகம் புழுக்கம் கொண்ட, மிகக்குறுகிய இடத்தில் அமைந்துள்ளது. இந்த கோபால் சாமி சந்நிதி உள்ள இடத்தில் 400 வருடங்களுக்கு முன்னர் இயற்கையான முறையில் ஒரே கல்லை குடைந்து உருவாக்கப்பட்ட ஜன்னல் வழியே "ஜில்'லென்று வரும் காற்று நம்மை வருடும் வகையில் உருவாக்கியிருப்பது "காற்றோட்ட அறிவியலின் உச்சம்" நிறைந்த கட்டிட கலை அமைப்பாகும். ஒரே கல்லை குடைந்து உருவாக்கப்பட்ட இந்த ஜன்னல் அமைப்பு நம் வியப்பிற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் இருப்பதுடன் அறிவியலால்கூட. விளக்க முடியாத வகையிலும் உள்ளது.


மேல் மூலஸ்தானத்தில் ஸ்ரீரங்கநாதர் என்ற கோபால்சாமி மூலவராக காட்சித் தருகிறார். மூலஸ்தானத்தை சுற்றி மகாவிஷ்ணுவின் தசாவதாரம் ஓவியங்கள் உண்டு. மூலஸ்தானத்தில் இருந்து குடைவரை வாசல் வரை சங்கரய்யர் என்பவர் மலையை குடைந்து உருவாக்கி உள்ளார்.


இதற்கும் மேலே ஒருவர் மட்டும் செல்லும் அளவில், வட்டவடிவமாக துவாரம் அமைத்து கட்டியுள்ளனர்.அதன் மேல், கல்தூண் ஒன்று விளக்கேற்ற அமைக்கப்பட்டுள்ளது.
இங்கே பரத்வாஜ ரிஷி என்பவர் தங்கி தபசு செய்துள்ளார். பெரியாழ்வாரின் அபிமான ஸ்தலமாகவும் இம்மலைக்கோயில் உள்ளது. இங்குள்ள மண்டபங்களில் கோவர்த்தனகிரி என்ற மண்டபத்தை சங்கரய்யரும், பொதுமக்களும் யாசகம் எடுத்துக் கட்டியுள்ளனர்.


இந்த கோபால்சாமி மலையில்

புனித கிணறு ஒன்று உள்ளது.
-----------------------------------------------------
வெங்கட்ராம நாயக்கர் என்பவர் இக்கோயிலுக்காக பல கிணறுகள் வெட்டியும் தண்ணீரே இல்லாமல் இருந்துள்ளது

தற்போதுள்ள இந்த ஆலய தீர்த்த கிணற்றை தோண்டும் போது, இதிலும் தண்ணீர் கிடைக்கா விட்டால் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது என வெங்கட்ராம நாயக்கரும், அவரது மனைவியும் கிணற்றுக்குள் இருந்துள்ளனர். அன்றிரவு அவர்களது கனவில் பகவான் தோன்றி, "இவ்விடத்தில் இன்னும் கொஞ்சம் தோண்டினால் காசியில் இருக்கும் கங்கை நீரையே தருகிறேன்' என்று கூற, அதன்படி, வெங்கட்ராம நாயக்கரும், அவரது மனைவியும் அந்த இடத்தில் மேலும் தோண்டியவுடன் கங்கை நீர் ஊற்றாக கிடைத்தது என்கின்றனர். இன்றும் இந்த கிணற்று நீரை புனிதமாக மக்கள் போற்றுகின்றனர்.


ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்கள் :
--------------------------------------------------------------------
சொர்ணகிரி என்றழைக்கப்படும் இக்கோயிலின் தெய்வமாகிய தங்கமலையானுக்கு சித்ரா பவுர்ணமி, வைகாசி பவுர்ணமி, புரட்டாசி ஐந்து வார கருடசேவை, நவராத்திரி, விஜயதசமி, திருக்கார்த்திகை ஏகாதசியன்று விசேஷ திருவிழா நடக்கிறது.திருக்கார்த்திகையன்று மலை உச்சியில் தீபம் ஏற்றுகின்றனர்.

இந்த கோபால்சாமி மலை குடவரைக் கோவில் மலை உச்சியில் கட்டப்பட்டுள்ள மண்டப பிரகாரத்தில் இருந்து பார்த்தால் நீண்ட தொலைவிலுள்ள கிராமங்களையும் சுற்றியுள்ள இயற்கை காட்சிகளை நேரம் போவதே தெரியாமல் ரசிக்கலாம்.


திருக்கோவில் இருப்பிடம் :
---------------------------------------------
திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் செல்லும் வழியில், டி கல்லுப்பட்டியை அடுத்து மோதகம் சுப்புலாபுரம் என்ற ஊர் அமைந்துள்ளது. இங்கிருந்து 2 கி.மீ., தூரத்தில் நடந்து அல்லது வாகனத்தில் சென்றால் இம்மலைக்கோயிலை அடையலாம்.




No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...