ஆஞ்சநேயர் சிரஞ்சீவி ஆன கதை

சிரஞ்ஜீவியான ஆஞ்சநேயர் - சீதா தேவி கொடுத்த வரம்

ஆஞ்சநேயரின் கனவில், அவருடைய மூதாதையர் மிகுந்த வருத்தத்துடன் காட்சியளித் தார்கள். ஆஞ்சநேயருக்கு இந்த கனவிற்கான காரணம் புரியவில்லை.

அவா் வசிஷ்டரின் மகனிடம் போய், கனவைச் சொல்லி அதற்கு விளக்கம் கேட்டார். அதற்கு வசிஷ்டரின் மகன், “ஆஞ்சநேயா! உன் முன்னோர்களுக்குப் பசி எடுத்திருக்கும். ஆகையால், உன் முன்னோர்களுக்கு நினைவு க்கடன் செலுத்தி, அவர்களுக்கு ஏதாவது கொடு!” என்றார்.

ஆஞ்சநேயரும் அதன்படியே செய்தார். ஆனால், முன்னோர்கள் மறுபடியும் கனவில் வந்து வருத்தமுடன் காட்சி தந்தனர்.

இந்த முறை ஆஞ்சநேயர் உண்மையை உணர்ந்து கொண்டார். “ஆஞ்சநேயா! நீ பொறுப்பாக எங்களுக்குப் பிண்டம் அளிக்கி றாய். ஆனால், உனக்குப்பின் இவ்வாறு, எங்களுக்கு யார் செய்வார்கள்?”என அவர்கள் வருந்துவதாக ஆஞ்சநேயருக்குப் புலப்பட்டது.

அவருடைய கவலையையும் அதற்கான காரணத்தையும் அறிந்த அன்னை சீதாதேவி, “ஆஞ்சநேயா வருந்தாதே. கிஷ்கிந்தைக்குச் செல். பெண் பார்த்து அழைத்து வா. நான் திருமணம் செய்து வைக்கிறேன்.அப்புறம் என்ன? உன் சந்ததியால், முன்னோர்களுக்கு உண்டான சிராத்த கடமைகளை செய்வார்கள் என்றார்.

அதன்படியே கிஷ்கிந்தைக்குச் சென்ற அனுமன், சுக்ரீவனிடம் விவரத்தைச் சொன்னார். சுக்ரீவன், கிஷ்கிந்தைக்கு தெற்கே உள்ள கீச்சட் என்ற நாட்டின் அரசகுமாரியான சிலிம்பா என்பவளைப் பற்றிக் கூறி, அவளை மணம் முடிக்க முயற்சி செய்யும்படி அறிவுறுத்தினார்.

அனுமனும் உடனே அந்த நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். அவரை சிலிம்பாவிடம் அழைத்துச் சென்றார்கள் அரண்மனைக் காவலர்கள். அனுமன் அவளிடம் தான் வந்த விஷயத்தைச் சொன்னார்.அவரை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்த சிலிம்பா, அவரைப்பற்றி ய தகவல்களையெல்லாம் அவர் மூலமாகவே கேட்டுத் தெரிந்து கொண்டாள். பின்னர், “காதல் தத்துவத்தைப் பற்றி எவ்வளவு தெரியும்? ஒரு முத்து மாலைக்கு நான் ஆசைப் பட்டால், அதை எப்படிக் கொண்டு வந்து கொடுப்பீர்கள்? கோபம் கொண்டு நான் சாப்பிட மறுத்தால், என்ன செய்வீர்கள்?” என்றெல்லாம், கேள்வி மேல் கேள்விகளை அடுக்கினாள்.

ஆஞ்சநேயர் இந்த கேள்விகளுக்கு பதில் கொடுத்தார் .‘‘காதல் தத்துவம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அதை சுக்ரீவனிடத்தில் கேட்டால், அவன் காதல் தத்துவத்தைச் சொல்லிக் கொடுத்து விடுவான். அடுத்து முத்துமாலை வேண்டுமென்றால், அன்னை சீதா தேவியிடம் கேட்டு வாங்கிக் கொடுத்து விடுவேன். மூன்றாவதாக, நீ கோபப்பட்டு உண்ணாமல் இருந்தால், நானே இரும்பு போன்ற என் விரல்களால் உனக்கு ஊட்டிவிடுவேன். ஆகையால் கால தாமதம் செய்யாதே! அயோத்தியில் சீதாதேவி உன்னை வரவேற்கத் தயாராக இருக்கிறார் என்றார்.

சிலிம்பாவோ ஒரு சிரிப்பை உதிர்த்து விட்டு, “உனக்குக் காதலைப்பற்றி ஒன்றுமே தெரிய வில்லை. போய் சுக்கிரீவனை அனுப்பு!”என அவமானப்படுத்தினாள்.

அதனால் கோபம் கொண்ட அனுமன், ஆவேசத்துடன் சிலிம்பாவை நோக்கி முன்னேறினார். அதற்குள்ளாக, சிலிம்பாவின் வீரர்கள் அனும னைப் பிடித்து கட்டிப்போட்டார்கள்.

“இந்தக் குரங்கைச் சும்மா விடக்கூடாது. இதன் வாலில் பன்னிரண்டு அங்குலம் மட்டும் வெட்டிவிட்டு, தூக்கியெறிந்துவிடுங்கள்!” என உத்தரவிட்டாள் சிலிம்பா.அதே விநாடியில் அனுமன் ராமனைத் தியானிக்க, அவரைக் கட்டியிருந்த கட்டுக்கள் தளர்ந்தன; உடம்பு இமயம் போல் பிரம்மாண்டமாக வளர்ந்தது. அப்படியே தாவிய அனுமன் சிலிம்பாவின் தலைமுடியைப் பற்றியபடி, ஆகாயத்தில் எழுந்து பறக்கத் தொடங்கிவிட்டார்.

அந்த நேரம், “அட! ஆஞ்சநேயரின் பிரம்மசர்ய விரதம் முடியப் போகிறது” என்று பேசியபடியே அஷ்டதிக் பாலர்கள், ஆஞ்சநேயரை நெருங்கி, “ ஆஞ்சநேயா நீங்கள் கொண்டுசெல்லும் பெண்ணைப் பார்க்க விரும்புகிறோம் நாங்கள்” என்று கூறினார்கள்.
பெருங்குரல் எடுத்து ஆஞ்சநேயர் ஒரு முழக்கமிட, அனைவருமாகப் பயந்து மேகக் கூட்டங்களில் போய் மறைந்தார்கள்.

சிலிம்பா கெஞ்சினாள். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினாள். ஆஞ்சநேயரின் பிடி தளரவே இல்லை. அதிவேகமாக ஆஞ்சநேயர் போய்க் கொண்டிருந்த போது, கீழே துங்க பத்ரா நதியில் சுக்ரீவன் தன் மனைவிகளுடன் நீராடிக் கொண்டிருந்தது, ஆஞ்சநேயரின் பார்வையில் பட்டது.அவ்வளவுதான். சிலிம்பாவை ஆகாயத்திலிருந்து சுக்ரீவனின் தோள்களில் விழும்படியாக உதறிவிட்டு, முன்பைவிட வேகமாகப் பறந்து போகத் தொடங்கினார்.

அயோத்திக்கு வெறுங்கையுடன் திரும்பிய அனுமனைப் பார்த்து சீதாதேவி வியந்தார். “குழந்தாய்! ஆஞ்சநேயா! என்ன ஆயிற்று? பெண் எங்கே?” எனக் கேட்டார்.

ஆஞ்சநேயர் தலையைக் குனிந்தபடியே, “தாயே! அவள் என்னை ஏற்கவில்லை. அதனால் அவளைத் தூக்கி வந்து, சுக்ரீவனுக்கு கொடுத்துவிட்டேன். பரந்து விரிந்த உலகில் தெய்வம் எனக்கு மட்டும் மிகவும் குறுகிய இதயத்தைக் கொடுத்திருக்கிறது.
அதில் நீங்களும் ராமசந்திரமூர்த்தியும்
முழுவதுமாக நிறைந்து இருக்கிறீர்கள். அங்கே வேறு யாரும் இருக்க இடமில்லை” எனக் கூறியவர், அன்னையை வணங்கி ஒரு வரம் கேட்டார்:

“அன்னையே! பித்ருக்களின் கடனை அடைப்ப தற்காக, நான் எப்போதும் சிரஞ்ஜீவியாக வாழ்ந்து, முன்னோர்களுக்கு உண்டான சிராத்தாதி கர்மாக்களை செய்யும்படி, தாங்கள் எனக்கு ஆசி வழங்க வேண்டும்”.

சீதாதேவி புன்முறுவல் பூத்து, “ஆஞ்சநேயா! உன் விருப்பப்படியே நடக்கும்”என ஆசி வழங்கினார். அதைக் கேட்டு மகிழ்ந்த ஆஞ்சநேயா் கைகளை உயரே தூக்கியபடி “ஜெய் சீதாராம்” என முழங்கினார்..

ஸ்ரீ ராம ஜெய ராம ஜெய ஜெய ராமா !





No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...