மதுரையிலுள்ள பஞ்சபூத சிவஸ்தல ஆகாயத்திற்குரிய தலமான "சிம்மக்கல் சொக்கநாதர் திருக்கோயில்" (வட திருஆலவாய்) பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.
மூலவர்: ஆதி சொக்கநாதர்
அம்மன்: மீனாட்சி
தலமரம்: கடம்ப மரம்
தீர்த்தம்: வைகை ஆறு
சிறப்பு:
1. மதுரையில் உள்ள பஞ்சபூத சிவஸ்தலங்களில் ஆகாயத்திற்குரிய திருத்தலம் (வான் தலம்)
2. செல்வத்தின் அதிபதியான குபேரன் பூஜித்த திருத்தலம்
3. நவக்கிரகங்களுள் ஒருவரான புத பகவானுக்குரிய திருத்தலம்
காட்சி கண்டவர்: சங்ககால புலவரான இடைக்காடர்
பயண வழிகாட்டல்:
1. மதுரையிலுள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தலவரலாறு:
மதுரையை ஆண்ட குசேல பாண்டியன் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான். மன்னனின் அறிவாற்றலை கேள்வியுற்று அவனைக் காண இடைக்காடர் என்ற புலவர் வந்தார். இவர் சங்ககால புலவர்களில் ஒருவரான கபிலரின் நட்பிற்கு பாத்திரமானவர். இடைக்காடரின் அறிவாற்றலை கண்ட மன்னன் பொறாமைக் கொண்டான். அவரை சரிவர உபசரிக்கவில்லை. மன்னனின் செயலால் வேதனை அடைந்த புலவர், அருகிலிருந்த சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானிடம் முறையிட்டு வேண்டினார். தணியாத கோபத்துடன் வடக்கு திசை நோக்கி பயணமானார். பக்தனின் துயர் துடைக்க திருவுளம் கொண்ட அண்ணல், துணைவி உமையாளுடன் வடக்கு திசை நோக்கி பயணமானார். வைகை ஆற்றின் அருகில் புலவரைக் கண்டு அமைதி அடையுமாறுக் கூறினார். மறுநாள் காலை அண்ணலும் அன்னையும் ஆலயத்தில் இல்லாததைக் கண்ட அர்ச்சகர் அதிர்ச்சி அடைந்தார். மன்னனிடம் விரைந்து சென்று முறையிட்டார். ஆலயம் மட்டுமல்லாது மதுரையே பொலிவிழந்து காணப்பட்டது. தவறை உணர்த்த மன்னன் சிவபெருமானிடம் மன்னிப்பு வேண்டினான். அப்போது அசரீரி ஒலித்தது. புலவருக்கு அருள்புரிய தான் வடக்கு திசை சென்றதை கூறியது. தற்போது வைகை நதியின் தென் கரையில் இருப்பதாகவும் உரைத்தது. மன்னனும் மக்களும் அசரீரி உரைத்த இடத்திற்கு சென்று பார்த்தனர். கடம்பமரங்கள் நிறைந்த வனத்தில் சுயம்புவாய் எழுந்தருளி இருந்த சொக்கநாதரைக் கண்டனர். பிற்காலத்தில் திருக்கோயில் அமைத்தனர்.
தலபெருமை:
1. மூலவர் சங்க காலம் தொட்டு மதுரையில் உறைகிறார். இவருக்கு சொக்கநாதர், பழைய சொக்கநாதர் என்ற திருநாமங்களும் உண்டு.
2. தான் பாதுகாக்கும் செல்வம் மென்மேலும் பெறுக வடக்கு திசை காவலனாக குபேரன் பூஜித்த திருத்தலம்.
3. ஆதி காலத்திலிருந்தே புதபகவானுக்குரிய திருத்தலமாக திகழ்கிறது.
No comments:
Post a Comment