பிறந்த கிழமை வழிபாட்டு தெய்வம்

நிறைந்த பயன் பெற அவரவர் பிறந்த கிழமையன்று திருமலை வேங்கடவனை வழிபடுவது ஆகும். அது பற்றிய குறிப்புகள்.


‘மனித பிறவி எடுத்த அனைவரும் தங்களால் இயன்ற அளவு புண்ணிய காரியங்களை செய்து நற்பலன்களை சேர்த்து வைப்பது அவசியம். அந்த புண்ணிய பலன்கள், மனிதன் தனது உடலை விட்டு உயிர் வடிவமாக அண்டவெளிக்கு செல்லும்போது துணையாக வருகின்றன. அந்த பயண சமயத்தில் கட்டை விரல் அளவுள்ள சூட்சும வடிவத்தில் உயிர் இயங்குவதோடு, தன்னுடைய பூவுலக வாழ்நாளில் செய்த நல்ல காரியங்களின் பலனை வலது கரத்திலும், தீய காரியங்களின் பலனை இடது கரத்திலும் எடுத்து செல்வதாக ஐதீகம். அந்த உயிரின் மறுபிறவியை தீர்மானிக்கும் காரணிகளாகவும் அவை இருக்கின்றன..’ என்று சப்தரிஷிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் எவ்வளவு தானதர்மங்கள், புண்ணிய காரியங்கள் செய்ய முடியுமோ அந்த அளவிற்கு உடலாலும், உள்ளத்தாலும் செய்வது அவசியம். அதனால் இந்த கலியுக பிறவியிலேயே இறைவனது அருளைப்பெற இயலும் என்று கூறிய மஹரிஷிகள் இறைவனை வழிபட்டு நன்மைகளை பெறுவதற்கு பல்வேறு வழிகளை காட்டியுள்ளனர். அவற்றில் ஒன்று அவரவர் பிறந்த கிழமையன்று திருமலை வேங்கடவனை வழிபடுவது ஆகும். அது பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

#திங்கட்கிழமை பிறந்தவர்கள்

வார நாட்களில் திங்கட்கிழமையன்று பிறந்தவர்கள், நவக்கிரகங்களில் மனோகாரகன் எனப்படும் சந்திரன் ஆதிக்கம் பெற்றவர்களாவர். திங்கட்கிழமைகளில் சந்திர ஓரையான காலை 6 மணியளவில் திருமலையானுக்கு நடைபெறும் ‘விஷேச பூஜையில்’ அவர்கள் கலந்து கொள்வதன் வாயிலாக மனம் மகிழும் வாழ்க்கை அமையப்பெறும்.

#செவ்வாய்கிழமை பிறந்தவர்கள்

நவக்கிரஹங்களில் ‘மங்களன்’ என்று போற்றப்படும் செவ்வாய் ஆதிக்கம் பெற்ற செவ்வாய்கிழமை பிறந்தவர்கள் வேங்கடவனின் ‘அஷ்டதள பாதபத்ம ஆராதனம்’ என்ற அர்ச்சனையில் கலந்து கொள்வது சிறப்பானது. ‘மங்களகாரகனான’ செவ்வாய் ஓரையில் நடக்கும் அந்த வைபவமானது நன்மைகளை தரக்கூடியது.

#புதன்கிழமை பிறந்தவர்கள்

கல்வியை தரும் புதனின் ஆதிக்கம் பெற்ற புதன்கிழமையன்று திருமலையப்பனுக்கு தங்கவாயிலுக்கு முன்னர் ‘ஸகஸ்ர கலச அபிஷேகம்’ காலை 6 மணிக்கு நடைபெறும். புதன் ஓரையில் நடக்கும் அந்த வைபவத்தில் புதனன்று பிறந்தவர்கள் கலந்து கொண்டு பெரும் பயன் அடையலாம்.

#வியாழக்கிழமை பிறந்தவர்கள்

வேங்கடேஸ்வர ஸ்வாமிக்கு வியாழக்கிழமைகளில் காலை 6 மணிக்கு ‘திருப்பாவாடை சேவை’ நடைபெறும். அந்த சமயங்களில் பெருமாளின் ஆபரணங்களை அகற்றிய நிலையில் அவரது ‘நேத்ர தரிசனத்தை’ நம்மால் பெற இயலும்.

குருவாரமான வியாழக்கிழமைகளில் பிறந்தவர்கள் மேற்கண்ட சேவையில் கலந்து கொண்டு ‘குரு ஓரை’ காலத்தில் தரிசனம் செய்வது பாக்கியமாகும்.

#வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள்

சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் திருமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்து கொள்ளவேண்டும்.

அதன் பிறகு கிடைக்கும் ‘நிஜ பாத தரிசனத்தையும்’ பெறுவது மிகவும் அவசியமானது. அதன் மூலம் சகல நன்மைகளையும் அவர்கள் பெறுவார்கள்.

#சனி மற்றும் #ஞாயிறன்று பிறந்தவர்கள்

திருமலை வேங்கடவனுக்கு சனி மற்றும் ஞாயிறுகளில் அதிகாலையில் நடக்கும் ‘சகஸ்ர நாம அர்ச்சனையிலும்’, அதற்கு பிறகு நடக்கும் ‘சாற்றுமுறை’ வைபவத்திலும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும். அதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியான வாழ்வை பெறுவார்கள்.

ஞாயிறு: கண்ணுக்குத் தென்படும் கடவுளான சூரியனை வணங்க ஏதுவான நாள். ‘ஆதித்ய ஹிருதயம்’ என்ற சுலோகத்தைச் சொல்லி வணங்க வேண்டும்.

திங்கள்: சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல்களைக் கொண்டு அம்பிகையையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது.

செவ்வாய்: முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று, ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் நினைத்தது நடக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். கந்தசஷ்டி கவசம் படிப்பதும் நன்மை தரும்.

புதன்: பெருமாளை சேவிப்பதற்கு ஏற்ற தினம். துளசி மாடத்திற்கு பூஜை செய்ய உகந்த நாள். விஷ்ணு சஹஸ்ரநாமம், நாலாயிர திவ்யபிரபந்தம் ஆகிய பாடல்களைப் பாராயணம் செய்தால் வாழ்வில் வளம் சேரும்.

வியாழன்: நாம் குருவாக எண்ணும் மகான்களைப் போற்றுவதற்கு உகந்த நாள். சாயிபாபா, ராகவேந்திரர், ராமானுஜர், காஞ்சி பெரியவர் போன்ற மகான்களை ஆராதனை செய்யலாம். பகவத்கீதையைப் பொருள் புரிந்து படிப்பது நலன்களைப் பெற்றுத்தரும்.

வெள்ளி: மகாலட்சுமி வழிபாடு நன்மைதரும். கோ-பூஜை செய்வது, பஞ்சமுக குத்துவிளக்கை ஏற்றி வைத்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அம்பிகையின் ஆலயங்களை தரிசிப்பது நன்மை தரும். மகாலட்சுமி ஸ்தோத்ரம், மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம், அன்னபூர்ணா அஷ்டகம் ஆகியவற்றைப் படிப்பதும் நல்லது.

சனி: ஆஞ்சநேயர், கருடாழ்வார், நந்திகேஸ்வரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என இறைவனுக்குத் தொண்டு செய்து இறைநிலை அடைந்த அடியவர்களை வணங்குவதற்கு சிறப்பான நாள். ராமாயணம், மகாபாரதம், சுந்தரகாண்டம், பெரியபுராணம் முதலான நூல்களைப் படித்தறியவும் இது ஏற்ற தினங்கள் ஆகும்.

விநாயகப்பெருமானை எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும் வணங்கலாம். நினைத்தவுடன் நம் மனக்கண் முன் தோன்றுபவர் விநாயகர்



No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...