ஏகாதசி அன்று பகவான் கண்ணன்


ஒரு முறை அஞ்ஞாத வாசத்தில் பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசித்த பொழுது, ஏகாதசி அன்று

“பகவான் கண்ணன் நீண்ட நாட்களாக வரவேயில்லையே!.. அவனுக்கு பிடித்த பால் பாயசத்தை செய்து ஏகாதசியான இன்று நைவேத்யம் செய்வோம் “என்று குந்தி தேவி சுவையான பால் பாயசத்தை செய்து தான் வழிபடும் ஶ்ரீ கிருஷ்ண விக்ரஹத்திற்கு நைவேத்யம் செய்ய முற்படும் பொழுது, அங்கு ப்ரத்யக்‌ஷமாக ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா குடிலின் வாயிலில் நின்று “அத்தை” என்று கூப்பிட, குந்தி தேவி அந்த பாயச பாத்திரத்தை அப்படியே கீழே வைத்துவிட்டு “ என் கண்ணா,மணிவண்ணா வா”என்று அன்போடு வரவேற்றார்.


உடனே கண்ணன்,”அத்தை பார்த்தாயா.. நீ என்னை நினைத்து பாயசம் வைத்தவுடன் வந்துவிட்டேன்.. பாயசத்தை விட உன் அன்பு என்னை இழுத்து வந்துவிட்டது” என்றான். குந்தி தேவி ஶ்ரீ கிருஷ்ணன் கையைப் பிடித்து அமர வைத்து, “ஒரே நிமிடம் கிருஷ்ணா.. உனக்காக செய்த பால் பாயசத்தை கொண்டுவருகிறேன்” என்று கூற “எங்கே அனைவரும் “என கண்ணன் கேட்க, அதற்கு குந்திதேவி.


“கண்ணா அவரவர் வேலைகளுக்கு சென்றிருக்கிறார்கள்” என்றதும் ஶ்ரீ கிருஷ்ணன், “ பாவம் அரண்மனையில் இருக்க வேண்டியவர்கள்.. காட்டில்.. “என்று பெருமூச்சு விட்டு,”இது இன்னும் சில காலம் தான்.. எல்லாம் மாறும்” என்றவுடன் கண்ணீருடன் குந்தி தேவி, “ கண்ணா கர்ம வினையை அனுபவிக்கிறோம் இருப்பினும் அகில லோக நாயகன் நீ உனக்கு தெரியாதா எப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்று..நீ எங்களுடன் இருப்பதே அரண்மனை வாழ்க்கை வாழ்வதுபோல் இங்கும் சந்தோஷமாக நாங்கள் இருக்கிறோம்.... எதோ பேசி பாயசத்தை மறந்துவிட்டேன்.. இதோ ஒரு நிமிடம்” என்று சிறிய அண்டா போன்ற மண்பாத்திரதை உள்ளே கொண்டுசென்று, பாதி பாயசத்தை தனக்கும், தன் புதல்வர்களுக்கும், திரெளபதிக்கும் எடுத்து வைத்துவிட்டு மீதியை கண்ணனுக்கு எடுத்து வந்தார் குந்தி தேவி.

ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மா புன் சிரிப்புடன் அதை வாங்கி சுவைத்து குடித்து முடித்து “ஆஹா என்ன சுவை.. அத்தை உன் கைவண்ணமே என்றும் சுவைதான்.. எனக்கு இன்னும் இதே அளவு வேண்டும்” எனக் கேட்க, தாய் என்கிற சாதாரண மானுட புத்தியால் குந்தி தேவி செய்வதறியாமல் உள்ளே சென்று வேறு வழியில்லாமல் அதை எடுத்து மனதில் “புதல்வர்களுக்கு பாயசம் இல்லையே”என்று நினைத்துக் கொண்டே கண்ணனிடம் கொடுத்தாள்.. அதை வாங்கிய பரமாத்மா, “ கொடு” என்று வேகமாக வாங்கி குடித்துவிட்டு, “இப்போதுதான் திருப்தியானேன்” என்று கூறி மேலும் பல விஷயங்களை பேசிவிட்டு வெளியே சென்று மறைந்துவிட்டான்...

குந்திதேவி ஶ்ரீ கிருஷ்ண விக்ரஹத்திடம் சென்று “கண்ணா ஒரு துளி பாயச பிரசாதம் கூட வைக்காமல் சென்று விட்டாயே..நான் எதேனும் தவறு செய்து விட்டேனா மாதவா” என்று நினைத்துக்கொண்டிருந்த பொழுது உடனே தாமதிக்காமல் அசரீரி கண்ணன் குரலில் வந்தது “அத்தை நீ எனக்கு பிடிக்கும் என்றுதானே பாயசம் செய்தாய். அதனால்தான் அவ்வளவு பாயசத்தையும் குடித்தேன்..என்னுடையவர்களான உங்கள் 7 பேரையும் விடுவேனா..உள்ளே சென்று பார்...நான் சாப்பிட்ட அதே பாத்திரத்திலும், தனியாக பீமனுக்கும் சேர்த்து வைத்திருக்கிறேன்.. என் பிரசாதம் கிடைக்க நீங்கள் அனைவரும் பல ஜென்மத்தில் பாக்கியம் செய்திருக்கிறீர்கள். இதுவும் என் லீலைதான்“

இதைக்கேட்ட குந்தி தேவி ஆனந்தக் கண்ணீருடன் “பகவானே சாதாரண மனுஷியாக உன்னிடம் பாயசத்தை மறைத்து, நீ உலகிற்கே தாயாக இருக்கும் பொழுது, தாய் நான்தான் என்ற மமதையில் தவறு செய்துவிட்டேன்.. என்னை மன்னித்துவிடு என்று கூறி, உள்ளே சென்று பாயசத்தை எடுத்து “கிருஷ்ணா” என்று பருகினாள். பிறகு பஞ்ச பாண்டவர்களுக்கும் கொடுத்தாள்.. பீமனுக்கு ஒரே சந்தோஷம் “நமோ கிருஷ்ண.. நமோ கிருஷ்ண..” என்று கூறி தனி அண்டா பாயசத்தை ருசித்து சாப்பிட்டான்.

நமெக்கெல்லாம் ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மாதான் தாயும் தந்தையும். இந்த மிகவும் கடுமையான சோதனைக் காலத்தை மாற்றுவான், நம்மை வாழவைப்பான் என்ற நம்பிக்கையில் ஶ்ரீ கிருஷ்ண நாமத்தை தொடர்ந்து ஸ்மரணம் செய்வோம்.


ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !



No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...