உடம்பும் மனசும் தங்கமாக இருந்த ஒருவர் மதுரையில் இருந்தார். ஹோட்டலில் இவருக்கு சர்வர் உத்யோகம். மூன்று வேளை சாப்பாட்டுடன் தினசரி ஒரு ரூபாய் சம்பளம். இது எந்த நாளில் என்று கேட்கலாம். 1960-களில் .
இவர் பணியாற்றிய ஹோட்டல், மீனாட்சி அம்மன் கோயிலுக்குப்பக்கத்தில் தான் இருந்தது. இதனால், மீனாட்சியை தரிசனம் பண்ணிவிட்டுத்தான் வேலையைத் தொடங்குவார். சம்பளப் பணத்தை சேர்த்து வைத்துக்கொண்டு தேவைக்குப் பயன்படுத்திக் கொள்வார்.
இவருக்கு, மீனாட்சியை மிக அருகில் பார்க்க வேண்டும் என்று ஆசை. ஆனால், யாராக இருந்தாலும் தூர நிறுத்திவிடும் ஆகம சாஸ்திரப்படி, அதில் எவ்வளவு அருகே நின்று சேவிக்க முடியுமோ அங்கே நின்று சேவித்தார்.
பரமபக்தரான இவரது பக்திக்குத் தீனி போடுவது போல, 1963-ல் மீனாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் ஆரம்பமாயின. நாள் நெருங்க நெருங்க வைதீக கட்டுப்பாடுகள் அதிகமாகி, இவரால் மீனாட்சியை அருகில் தரிசிக்க முடியவில்லை.
இத்தனைக்கும் தன் சம்பளப் பணத்தை, கும்பாபிஷேக நிதிக்கு காணிக்கையாகக் கொடுத்துவிட்டார். இவருக்கு இன்னொரு விருப்பமும் இருந்தது. அது, காஞ்சிப் பெரியவரைத் தரிசிப்பது என்கிற விருப்பம்.
மதுரையில் இருந்து காஞ்சிபுரத்துக்குப் போய் பெரியவரை தரிசித்துவிட்டு வரகாலமும்இடம்தரவில்லை; பொருளாதாரமும் இடம் தரவில்லை. ஆகையால் அந்த ஏக்கம் மனதில் அப்படியே இருந்தநிலையில், காஞ்சிப் பெரியவர் தலைமையில்தான் கும்பாபிஷேகம் நடக்கப் போகிறது எனும் செய்தி அவரை எட்டியது.அவருக்குள் ஒரே சந்தோஷம்!!
ஒரு கல்லில் இரு மாங்காய் என்பார்களே! அப்படி கும்பாபிஷேகத்தையும் பார்த்து பெரியவரையும் தரிசனம் பண்ணப்போவதில் மனது ரமித்து திளைக்கத் தொடங்கிவிட்டது. ஆனால், நாள் நெருங்க நெருங்க கட்டுப்பாடுகள் அதிகமாகி தனவான்களுக்கு முதலிடமும், வெகு ஜனத்துக்கு முடிந்த இடமும் என்று மாறிப்போனது.
இப்படி மாறிப்போவதுதான் கலியுக தர்மம். இதை தவறு என்றும் வாதிக்கலாம், தவிர்க்க முடியாத தீமை என்றும் கூறலாம். எது எப்படியோ நம்முடைய சர்வர் சுந்தரத்துக்கு (சுந்தரம் என்பதுதான் அவர் பெயர்), கும்பாபிஷேக நாளைக்கு முதல் நாளே மிகவும் துக்கமாகிவிட்டது.
பெரியவரைப் பார்ப்பதும் கும்பாபிஷேகத்தைப் பார்ப்பதும், தன் வரையில் அசாத்தியம் என்பது விளங்கிவிட்டது. மாசி வீதிகளில் ஏதாவது ஒரு வீட்டு மாடிக்குப் போய் நின்றுகொண்டு பார்க்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை.
இந்த நிலையில், முதல் நாளே கோயிலுக்குச் சென்றவர் பொற்றாமரை குளத்தை ஒட்டி பல பேர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து இவரும் அங்கேயே உட்கார்ந்து விட்டார். விடிய விடிய கோயிலும் திறந்திருந்ததால், யாரும் வெளியே துரத்தவில்லை.
ஆனால், குளத்தங்கரையில் உட்கார்ந்து என்ன புண்ணியம்வேண்டுமானால் ஒரு முழுக்கு போடலாம் (அப்போது முழுக்கு போடுமளவு ஜலம் இருந்தது. குளிக்கும் வழக்கமும் இருந்தது). எனவே, கும்பாபிஷேக வேளையில் முழுக்கு போட்ட நிலையில் அங்கிருந்து ஒரு மூலையில் நின்று கண்ணுக்குத் தெரியும் தெற்கு கோபுரத்தை முடிந்த மட்டும் பார்ப்போம்.
வேறு வழிதான் இல்லையே என்று மனக் கவலையோடு அவர் இருந்துவிட, அவரைப் போலவே பலர் அப்படி அங்கிருந்ததுதான்ஆச்சரியம்! அதில் பல பாட்டிகளும், வைதீக பிராம்மணர்களும் அடக்கம்.
அழுக்கு உடையோடு, பார்க்கவே அவர்களிடம் தரித்திரம் பளிச்சிடும் நிலை. இந்த கும்பாபிஷேக தரிசனமும், கூடவே குருவின் தரிசனமும் கிடைத்தால் விமோசனம் கிடைத்துவிட்டதாகப் பொருள். ஆனால், கிடைக்க வேண்டுமே! அப்போது தான் அங்கே அந்த அதிசயம் நடக்கத் தொடங்கியது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் பொற்றாமரைக் குளக்கரையில், விடியும் போது நடக்கவிருக்கும் கும்பாபிஷேக வைபவத்தைக் காண்பதற்காக சாமான்யப்பட்ட ஜனங்கள் காத்திருந்த நிலையில், நள்ளிரவைக் கடந்துவிட்ட விடியற்காலை வேளையில் அங்கே சற்றும் எதிர்பாராதவிதமாக மகாபெரியவர் வந்துவிட்டார். அவரோடு மடத்தைச் சேர்ந்த அவரது தொண்டரடிப் பொடிகள் சிலர்.
எந்த ஆர்ப்பாட்டமும் படாடோபமும் இன்றி நடந்த இந்தச் சம்பவம் அங்குள்ளோரை வியப்பில் ஆழ்த்திவிட்டது. அதிலும் நமது சர்வர் சுந்தரத்துக்கு தன் கண்ணையே நம்பமுடியவில்லை. காஞ்சிக்குப் போய் தரிசனம் செய்ய நினைத்தவர், அவர் இருக்கும் குளத்தங்கரைக்கே வந்துவிட்டார் என்றால், அதை சட்டென்று நம்பத்தான் முடியுமா என்ன?
ஒரு ஆச்சரியம் என்னவென்றால், கோயிலைச் சார்ந்த எவருக்கும் பெரியவர் இப்படி வந்துவிட்டதே தெரியாது. அப்போது கோயில் நிர்வாகத் தலைவராக இருந்தவர் மறைந்தமுன்னாள்அமைச்சர் பழனிவேல் ராஜனின் தந்தை பி.டி. ராஜன். அவர் தலைமையில்தான் அந்த கும்பாபிஷேகத்துக்கு எல்லா மடாதிபதிகளையும் அழைத்திருந்தார்.
அதில் பரமாச்சார்யாரும் ஒருவர். ஒரு மடாதிபதி மட்டும், கும்பாபிஷேகத்தில் தனக்கான முக்கியத்துவம் குறைந்து போகுமோ என்று கவலைப்பட்டிருக்கிறார். அவர் அப்படி கவலைப்பட்டது மகாபெரியவர்கவனத்துக்கும் சென்றது. ஆனால் பெரியவரோ, ‘தனக்கு எந்தவித முக்கியத்துவமும் தேவையில்லை.
நடக்க இருப்பது ஒரு தேவ காரியம். அதில் குறையில்லாத போக்கு இருக்க வேண்டுமே அன்றி, என் போன்றவர்களில் யார் பெரியவர் சிறியவர் என்று கவனித்து அதன்படி நடப்பதெல்லாம் கூடாது’ என்று கூறிவிட்டார்.
கூறிவிட்டதோடு கோயிலில் எவருக்கும் சிரமம் தராதபடி, ஒரு பக்தன் தன் வீட்டை விட்டு காலார நடந்து கோயிலுக்கு வருவதுபோல வந்தும் சேர்ந்து விட்டார். அப்படி வந்தவரைத்தான் சுந்தரம் போன்றவர்கள் கண் குளிர தரிசனம் செய்தனர். காலிலும் விழுந்தனர். தூரப் போகவும், விலகிப் போகவும் சொல்ல ஒருவருமில்லை. பெரியவரும் அவர்களோடு சகஜமாய்பேசஆரம்பித்துவிட்டார். சுந்தரத்திடம் என்ன உத்யோகம் என்று கேட்கவும், தயங்கிய சுந்தரம் தானொரு ஹோட்டல் சர்வர் என்று கூறியிருக்கிறார். பெரியவரிடம் உடனே உற்சாகம்!
அடடே… பசியாத்தற உத்யோகமா? பலே… உற்சாகமா பிரியத்தோட பண்ணு. நாம படற பாட்டுக்கு திருப்தி உடனடியா கிடைக்கறது இந்த உத்யோகத்துல தான்” என்று கூறவும் சுந்தரத்துக்கு சிலிர்த்து விட்டது. அதைவிட சர்வர் என்னும் பதத்தை மிக அருமையாக பசியாத்தற உத்யோகமா என்று பெரியவர் மொழி பெயர்த்ததில், ஒரு தனி மதிப்பு அதன்மேல் அந்த நொடிஏற்பட்டதுசுந்தரத்துக்கு.
பெரியவர் இப்படி குளத்தங்கரையில் சகஜமாய் அமர்ந்துபேசிக்கொண்டிருப்பது மிகத் தாமதமாய் பி.டி. ராஜனுக்கு தெரியவரவும் ஆடிப் போய்விட்டார். மற்ற மடாதிபதிகள் எல்லாம் அவர்களுக்கான வாசல் வழியாக மேளதாளம் முழங்க வந்து இறங்கிவிட்ட நிலையில், பெரியவரைக் காணவில்லையே என்னும் கேள்விக்குப் பதிலாக அவர் வந்துவிட்டார் என்று தெரியவும், பி.டி. ராஜனுக்கு பெரியவரைச் சந்தித்தபோது தான்சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. உடனேயே ஓடினார்.
குளத்தங்கரையில் பெரியவரை பூர்ண கும்பத்துடன் தரிசனம் செய்து கும்பாபிஷேக கோபுரம் நோக்கி அழைத்துச் செல்லத் தொடங்கினார். அந்த நொடி வரை அவரோடு தங்களை மறந்து கலந்து கிடந்த சுந்தரம் போன்றவர்களுக்கெல்லாம் திகைப்பு! பெரியவரோ அவர்களுக்கும் ஜாடை காட்டி பின்தொடரச் சொன்னார்.
அவர்களும்பின் தொடர்ந்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நடுவில் பெரியவருக்கு மட்டும் பாதை கிடைத்தது. ஆனால், அவ்வளவு இடங்களிலும் பெரியவர் தான் நின்று பின்னால் திரும்பிப் பார்ப்பார். பஞ்சப் பராரிகளான நமக்கெல்லாம் எங்கே தரிசனம் கிடைக்கப் போகிறது என்கிற அவநம்பிக்கையில் இருந்த அந்தக் கூட்டத்தவர்கள் கண்ணில் பட, அவர்களை முன்னால் போகச் சொல்லி பின் பெரியவர் தொடர்ந்தார்.
அதிகாரிகளால் எதுவும் செய்ய முடிய வில்லை. ஆயிரக்கணக்கில் டொனேஷன் தந்தவர்களுக்கும், பெரிய அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் வழிவிட்டே பழகியவர்கள், அன்று பெரியவரால் சாமான்யர்களுக்கும் வழிவிட்டனர். அதில் ஒரு பாட்டிக்கு தொண்ணூறு வயது. தடுமாறி மேலே கோயில் கூரைமேல் ஏற முடியாமல் சிரமப்பட, பெரியவர் தன் சகாக்களில் ஒருவரைப் பார்த்திட, ஓடிப்போய் பாட்டிக்குக் கை கொடுத்தார் அவர்.
அவர்களுக்கோ, பெரியவரால் தங்கள் வரையில் கைலாசத்திலும் வைகுண்டத்திலுமே இடம் கிடைத்துவிட்ட ஒரு நிறைவு. ‘ஹரஹர மகா தேவ’ என்று உற்சாகமாக கோஷமிடத் தொடங்கிய அவர்கள், ‘ஜெய ஜெய சங்கர ஹரஹர சங்கர’ என்றும் கோஷமிட, அந்த உதயநேரம் ஒரு உத்தம நேரமாக, உத்பாதம் தீர்க்கும் நேரமாக பலர் வரையில் ஆகிவிட்டது.
கோபுரம் முன் பல மடாதிபதிகள் காத்திருந்து, பெரியவரே முன் நிற்க வேண்டினர். தன் முக்கியத்துவம் குறைவுபடும் என்று கருதிய மடாதிபதியால், எதனாலோ நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நிகழ்வுதான் பெரிது எனக் கருதிய பெரியவரோ, ஆத்மார்த்த விருப்பம் கொண்ட ஒரு கூட்டத்தோடு வந்து சேர்ந்து விட்டார்.
கும்பாபிஷேகமும் இனிது ஈடேறியது. சுந்தரத்துக்குள், நடப்பது கனவா நனவா என்கிற கேள்வி. ஆனந்தக் கண்ணீர் அவர் கண்களில் பெருகி ஓடியது. அடி மனதில் இருந்து எழும்பும் பவித்ரமான ஆசைகள் நிச்சயம் ஈடேறும் என்பதை அனுபவப் பூர்வமாகப் புரிந்து கொண்டார்.
No comments:
Post a Comment