மரண தருவாயில் சாய்பாபா | Saibaba at the moment of death

தன் மரணம் விரைவில் நிகழ இருப்பதை அவர் தீர்க்கமாகப் புரிந்து கொண்டார். அதற்கேற்ப தனது வாழ்க்கை முறையையும் அமைத்துக் கொண்டார். தனது நெருங்கிய பக்தர்களில் ஒருவரான “வஜே” என்பவரை அழைத்தார். தன் அருகே அமர்ந்து “ராமவிஜயம்” நூலை முழுவதுமாக உரக்கப்படிக்குமாறு ஆணையிட்டார் .
வஜேயும் அந்நூலைப் படிக்க ஆரம்பித்தார். இரவும் பகலும் விடாமல் படித்துக் கொண்டே இருந்தார் . சாய்பாபாவும் எந்தவொரு சலனமும் இல்லாமல் அதனை மெய்மறுந்து கேட்டு ரசித்து இன்புற்றார் . மூன்றே நாட்களில் இரண்டாவது இராயணத்தைப் படித்து முடித்தார். எனினும் சாய்பாபாவிற்கு அலுப்புத் தட்டவில்லை. தொடர்ந்து படிக்குமாறு பக்தருக்குக் கட்டளையிட்டார். வஜேயும் தொடர்ந்து ராமவிஜேயத்தைப் படித்துக் கொண்டே இருந்தார் .
இப்படி பதினோரு நாட்கள் தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தார். போதும் என்று சாய்பாபா சொல்லாமல் அதனைக் கேட்டு இன்புற்றுக் கொண்டே இருந்தார் . இருப்பினும் வஜேயால் அதற்கு மேல் அந்நூலைப் படிக்க முடியவில்லை. தயக்கத்துடன் சாய்பாபாவிடம், "என்னால் இதற்கு மேல் படிக்க முடியவில்லை சாய்பாபா. ரொம்பவும் களைப்பாக இருக்கிறது" என்று கூறினார்.
அதனைப் புரிந்து கொண்ட சாய்பாபாவும் அத்துடன் படிப்பதை நிறுத்திக் கொள்ள அனுமதித்தார். அவரும் படிப்பதை நிறுத்திக் கொள்ள. அப்புறம் நீண்ட அமைதி காத்தார் சாய்பாபா. பக்தர்களும் வெகு அமைதியுடன் அமர்ந்திருந்தனர். அநேகமாக, கடந்த செப்டம்பர் மாதம் முதல் சாய்பாபா உணவு உட்கொள்வது குறைந்து போயிருந்தது சொல்லப்போனால் முற்றிலும் இல்லாதிருந்தது என்பதே உண்மை. இதனால், சாய்பாபா எழுந்து நடமாட முடியாத நிலையில் இருந்தார். இப்படிப்பட்ட நிலையிலும் தான் சமாதி அடைவதற்கு மூன்று நாட்கள் முன்பு வரை சாய்பாபா பக்தர்களின் வீடுகளுக்குச் சென்று பிச்சை எடுத்து வந்திருக்கிறார்.அவரைப் பக்தர்கள் சிலர் கைத்தாங்கலாக அழைத்துப் போயிருக்கின்றனர் .
இந்நிலையில், பக்தர்களிடம் திடீரென்று அவர் பேசினார்.." நீங்கள் யாரும் மனமுடைய வேண்டாம் கவலைப்படாமல் இருங்கள் "என்றார் சாய்பாபா. அப்புறம் அடியவர்களிடம் ," எனக்கு இந்த மசூதியில் இருப்பது அசெளகர்யமாக உள்ளது. “புட்டியினுடைய தகடிவாடாவுக்கு என்னை எடுத்துச் செல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார் . பின்னர் தனது பக்தர் பூடியைப் பார்த்து ,"ராதாகிருஷ்ணன்கோயிலுக்காக இடம் விடச் சொல்லியிருந்தேனே! அந்த இடத்தில் ஆறடி நீளம் இரண்டடி அகலத்தில் குழி ஒன்றை வெட்டி வையுங்கள் "என்று உத்தரவிட்டார்.
“தகடிவாடா” என்று சாய்பாபா கூறியது ஒரு கல்கட்டிடம் சாய்பாபாவைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்காக அவரது பக்தர் பூடி என்பவரால் எழுப்பப்பட்ட கல்கட்டிடம் அது. அதனை கட்டும்போதே பூடியிடம் சாய்பாபா கூறினார்," அக்கட்டிடத்தின் மத்தியில் சிறிதளவு இடம் வைக்கவும். அதில் ராதாகிருஷ்ணன் ஆலயம் அமைய இருக்கிறது "என்றார். சாய்பாபா இப்படிக் கூறியதன் பொருள் அந்த பக்தருக்கு அப்போது விளங்கவில்லை. இப்போது தெளிவாகியது .
சாய்பாபா மேலும், அங்கு நான் நலமடையப் போகிறேன்" என்று பக்தர்களிடம் கூறினார். இது அர்த்தம் பொதிந்த சூட்சுமமான வார்த்தைகள். இது தான் சாய்பாபா கூறிய கடைசி வார்த்தைகளும் கூட. நலமடையப் போகிறேன் என்றால் அதற்கு அர்த்தம் என்ன?. ஆனால், அதற்கான பொருள் சில பக்தர்களால் மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது . சாய்பாபா தன் கடைசி நிமிடத்தைத்தான் இப்படிக் கூறுகிறார் என்பதை உணர்ந்த அடியவர்கள் திகைத்துப்போய் செய்வதறியாது நின்றனர் .
அது 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் நாள் பிற்பகல். ஒரு மிக முக்கிய கட்டத்தை நோக்கி மாகன் சாய்பாபா நெருங்கிய கொண்டிருந்த வேளை. பயாஜி கோதேயின் மேனியில் சாய்பாபா சாய்ந்திருந்தார்.பக்தர்கள் பெரும் திரளாக அங்கே கூடியிருந்தனர். அத்தனை பேர் முகங்களிலும் சோகம்...சோகம் சாய்பாபாவின் அந்திமக் காலம் நெருங்கிவிட்டதை ஏற்றுக்கொள்ள முடியாத பதற்றம்.
சாய்பாபா.....சாய்பாபா.... என்று அத்தனை பேரும் மனதிற்குள் உருகினர். தனது மேனியில் சாய்ந்திருந்த சாய்பாபாவிடம் சலனம் ஏதுமில்லாமல் இருப்பதை உணர்ந்தார் பயாஜி. சாய்பாபாவிற்கு என்ன ஆயிற்று?சாய்பாபாவின் மூச்சு நின்று போய்விட்டதை அவர் பூரணமாக உணர்ந்து கொண்டார். உள்ளம் பதறியது. இதயம் அவருக்கு பலமாக அடித்துக் கொண்டது. சிறிது தண்ணீர் கொண்டுவரும்படிக் கூறினார் பயாஜி.
நானாசாகேப் பதற்றத்துடன் தண்ணீர் கொண்டுவந்து சாய்பாபாவின் வாயில் மெல்ல ஊற்றினார் .அது வெளியே வடிந்து விழுந்தது. "ஓ... தேவா !" என்று கூக்குரலுடன் கதறினார் நானாசாகேப்.உடனே சட்டென்று கண்களைத் திறந்த சாய்பாபா, "ஆ!" என்றார். அல்லது அப்படி கூறியதுபோலத் தோன்றியது. அனைத்தும் நொடிப்பொழுது நேரமே. சாய்பாபா மரணத்தைத் தழுவிக்கொண்டார் .
இந்தச் செய்தி காட்டும் தீ போலப் பரவியது. பக்தர்கள் அங்கு திரளத் தொடங்கினர். "சாய்பாபா... சாய்பாபா... என்ற கதறல் ஒலி அந்தக் கிரமத்தை உலுக்கியது. துக்கத்தை அடக்க முடியாத பக்தர்கள் சிலர் தெருவில் உருண்டு புரண்டு அழுதனர். சில பேர் உணர்ச்சிப் பெருக்கில் மயக்கமடையவும் செய்தனர். திடமனதை உடைய பக்தர்கள் சிலரோ ,சாய்பாபாவின் பொன் மொழிகளையும், அவரது பஜனைப் பாடல்களையும் மனமுருகிப் பாடினார்கள்.
மனித உடலுக்கு மரணம் உண்டு ஆனால் ஆன்மாவிற்கு? அழிவே கிடையாது. அதிலும், கடவுளாக, மகானாக இருந்த சாய்பாபாவிற்கு அழிவே கிடையாது.


No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...