பகவான் வராஹரின் அவதார தினம்
நாள்: 06-02-XXXX
கதை சுருக்கம்.....
முதன்முதலில் தோன்றிய அசுரன் ஹிரண்யாக்ஷன் பூமியை கர்ப்போதகம் எனும் சமுத்திரத்தில் மூழ்கடித்தான். பூமியைக் காப்பதற்காக பகவான் வராஹ அவதாரமெடுத்து அசுரனை தம் கோரைப் பற்களால் கிழித்துக் கொன்றார்
வராஹரின் தோற்றம்
பிரம்மதேவரின் கட்டளையை ஏற்றுக் கொண்டு மனு பேசினார்: “தேவர்களின் தலைவரே, எனக்கும் எனது சந்ததியினருக்கும் உரிய இருப்பிடத்தை அருள்கூர்ந்து கூறுவீராக. மேலும், கர்போதகக் கடலினுள் மூழ்கியுள்ள பூமியை வெளிக்கொணர தயைகூர்ந்து முயற்சிப்பீராக.”
இதைக் கேட்ட பிரம்மா பூமியை வெளியில் எடுக்கும் பணி குறித்து நீண்ட நேரம் சிந்தித்தார். அப்போது திடீரென அவரது நாசித் துவாரத்திலிருந்து ஒரு சிறிய பன்றி வெளிவந்தது. அஃது ஒரு கட்டைவிரலின் மேற்பகுதியைவிட மிகச் சிறியதாக இருந்தது. ஆனால் அவ்வுருவம் பிரம்மதேவரின் கண்னெதிரே மிகப்பெரிய யானையைப் போன்ற அற்புத உருவாக மாறியது.
அதைக் கண்ட பிரம்மதேவரும் முனிவர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அதிசயிக்கத்தக்க அவ்வுருவம் பகவான் விஷ்ணுதானே என அவர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தபொழுது, பகவான் வராஹர் பலத்த குரலில் கர்ஜனை செய்தார். எல்லா திசைகளிலும் எதிரொலித்த அவ்வொலி அவர்களுக்குப் புத்துணர்ச்சி கொடுத்தது.
வராஹர் பூமியை மீட்டல்
பகவான் வராஹரின் மங்களகரமான ஒலியைக் கேட்டு ஜனலோகம், தபலோகம், ஸத்யலோகம் போன்றவற்றில் வாழும் மாமுனிவர்கள் வேதங்களில் இருந்து மங்களகரமான மந்திரங்களை ஓதினர்.
தம் பக்தர்களின் அப்பிரார்த்தனைகளை ஏற்றுக்கொண்ட பகவான் வராஹர் வானில் வாலை வேகமாகச் சுழற்றியபடி பறந்தார். அவரது அடர்ந்த உரோமங்கள் அலை பாய்ந்தன, அவரது பார்வை ஒளி வீசியது. மின்னுகின்ற தந்தங்களினாலும் காலடிக் குளம்புகளினாலும் அவர் வான் மேகங்களைச் சிதறடித்தார். எந்நிலையிலும் உன்னதமான பகவான், தம் மோப்பத்தால் பூமியைத் தேடினார். அவரது பார்வை தம்மை பிரார்த்தித்துக் கொண்டிருந்த அந்தணர்கள்மேல் சென்றது. அதன்பின் அவர் கர்போதகக் கடலினுள் புகுந்தார். அவரது வேகத்தைத் தாங்கமாட்டாது கடலானது இரண்டாகப் பிளந்தது.
பகவான் அம்புபோல கூர்மையாக இருந்த தமது காலடிக் குளம்புகளால் அக்கடலைக் கிழித்துச்சென்று, ஆழங்காணவே முடியாத அதன் ஆழத்தைச் சென்றடைந்தார். அங்கு, அனைத்து உயிர்களின் உறைவிடமான பூமியைக் கண்ட பகவான், அதை தம் தந்தங்களினால் மிக எளிதாக தூக்கிக் கொண்டு மேலே வந்தார். அங்கு தம்முடன் யுத்தத்திற்கு வந்த ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனை சிங்கம் ஒன்று யானையைக் கொல்வதுபோல் நீருக்குள்ளேயே கொன்றார். அவரது நாவிலும் கன்னங்களிலும் இரத்தக்கறை படிந்திருந்தது. அவரது தெய்வீகத் திருமேனியை வைத்து இவரே முழுமுதற் கடவுள் என நன்கறிந்துகொண்ட பிரம்மதேவர் உள்ளிட்ட தேவர்கள் அவரை இருகரம் கூப்பி வேத மந்திரங்களால் துதித்தனர்.
முனிவர்களின் பிரார்த்தனை
முனிவர்கள் பின்வருமாறு பிரார்த்தனை செய்தனர்: “வேள்விகளின் நாயகனே, அனைத்து வெற்றியும் புகழும் உமக்கே. பூமியைக் காப்பதற்காக தாங்கள் இவ்வாறு அற்புத வராஹ வடிவில் அவதரித்திருக்கிறீர்கள். உமது திருவுருவத்தை துராத்மாக்களால் காண முடியாது. வேதங்களின் வடிவம் நீரே. உமது உடலின் உரோமங்கள் தர்ப்பை புற்களாகும். உமது விழிகளோ தூய வெண்ணெய் போன்றவை. காயத்ரி மந்திரம் உமது தோலாகும். நான்கு பாதங்களும் நான்கு வகை பலன்தரும் செயல்களாகும். (இதைப் போலவே பகவானின் பல்வேறு அங்க உறுப்புகள் பல்வேறு யாகப் பொருட்களாக வர்ணிக்கப்படுகின்றன.) உமது நாக்கு, நாசித்துளைகள், செவிகள், வயிறு, வாய், தொண்டைக் குழல் ஆகியவை வேள்விக்கு பயன்படும் பல்வேறு பாத்திரங்களாகும். மேலும், எதையெல்லாம் நீர் மெல்லுகிறீரோ அவை அக்னிஹோத்ரமாகும்.”
அதனைத் தொடர்ந்து, பகவானின் பல்வேறு இதர அங்கங்கள் வேள்வியின் பல்வேறு அம்சங்களாக வர்ணிக்கப்பட்டன. முனிவர்கள் மேலும் தொடர்ந்தனர்: “எல்லாவித பிரார்த்தனைகளாலும் வேத மந்திரங்களாலும் வேள்விப் பொருட்களாலும் வணங்கப்படுபவர் நீரே. சூட்சுமமான அல்லது ஸ்தூலமான பௌதிக மாசுகளிலிருந்து தூய்மை பெற்ற மனதினாலேயே உம்மை உணர முடியும். பக்தித் தொண்டிற்கான ஞானத்தின் பரம ஆன்மீக குருவே, உமக்கு எமது வந்தனங்கள்.
“யானைத் தனது துதிக்கையால் தாமரை மலரைத் தூக்கிக் கொண்டு நீரிலிருந்து வெளிவருவதுபோல், நீர் உமது தந்தங்களினால் பூமியைத் தூக்கியிருப்பது எழில்மிக்கதாக விளங்குகிறது. அசையும், அசையாத அனைத்து உயிர்களுக்கும் உறைவிடமாகத் திகழும் இப்பூமியானது அன்னை என்றால், நீரே பரம தந்தையாவீர். அன்னை பூமியுடன் சேர்ந்து நாங்கள் எங்களின் மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்குச் செலுத்துகிறோம். முழுமுதற் கடவுளான உம்மைத் தவிர வேறு யார் நீரினுள் இருந்த பூமியை மீட்டிருக்க முடியும்? இஃது ஒன்றும் உமக்கு அதிசயமானதல்ல. ஏனென்றால், இவ்வற்புத பிரபஞ்சப் படைப்பு உமது சக்தியினாலன்றோ சாத்தியமானது!
“பரம புருஷ பகவானே, ஐயத்திற்கு இடமின்றி நாங்கள் அனைவரும் ஜன லோகம், தப லோகம், ஸத்ய லோகம் எனும் புண்ணிய லோகங்களைச் சேர்ந்தவர்களாயினும், நீங்கள் உங்களது உன்னத தோள்களைக்குலுக்குவதால், உங்களது பிடரி மயிரிலிருந்து தெறிக்கும் மின்னுகின்ற நீர் முத்துக்கள் எங்கள் மீது தெறித்து எங்களைப் புனிதப்படுத்துகின்றன. உமது அற்புதச் செயல்களுக்கு எல்லையே இல்லை. உமது லீலைகளின் உன்னத தன்மையை அறிவதாலேயே கட்டுண்ட வாழ்விலிருந்து ஒருவர் விடுதலை பெற முடியும். உங்கள் கருணையை வேண்டி நாங்கள் பிரார்த்திக்கிறோம்.”
மாமுனிவர்களால் துதிக்கப்பட்டபின் பகவான் வராஹர் பூமியை அதற்குரிய இடத்தில் சேர்த்துவிட்டு தமது வைகுண்டத்திற்குச் சென்றடைந்தார். பகவான் வராஹரைப் பற்றிய இந்த மங்களகரமான சரித்திரத்தை பக்தித் தொண்டின் உணர்வோடு எடுத்துக் கூறினாலும், கூறக் கேட்டாலும் அனைவரின் உள்ளங்களிலும் வீற்றிருக்கும் பகவான் அதனால் மிக்க மகிழ்ச்சியடைவார். இதுபோன்ற உன்னத அன்புத் தொண்டில் ஈடுபடுவதன் மூலம் ஒருவன் உயர்ந்த நிறைவான நிலையை எய்துகிறான். முழுமுதற் கடவுளின் லீலைகளைப் பற்றி விவரிக்கும் அவரது அமிர்தம் போன்ற சரிதத்தினை காதால் பருகுவதால் உலகியல் துன்பங்களிலிருந்து ஒருவர் பூரணமாக விடுபடுவர். இவ்வாறு மைத்ரேயர் விதுரரிடம் விவரித்தார்.
No comments:
Post a Comment