உடம்பை பத்திரமாக வைத்துக்கொள் உலகில் நீ வசிக்கும் இடம் அது ஒன்றுதான் என்று ஆங்கில பழமொழி ஒன்று உண்டு. ஏனென்றால் உடம்பு தான் இந்த உலகில் நாம் வசிக்க இறைவனால் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய மூலதனம்.ஒரு வாகனத்தை வைத்திருப்பவர் அதை சுத்தமாக துடைத்து பளிச்சென்று வைத்திருப்பதன் மூலமும் அந்த வாகனத்தை செப்பனிட்டு கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதன் மூலமும் அதை பயன் படுத்துபவரின் மதிப்பை நாம் தன்னால் அறியலாம். அதைப்போல தான் இந்த உடம்பும் இதை பாதுகாத்து வைத்திருப்பவர் இதன் மதிப்பை உணர்ந்தவராவார்.அன்றாடம் எழுவதில் இருந்து உறங்குவது வரைக்கும் இந்த உடம்புக்கு என்று சில நியமங்கள் இருக்கின்றன.அந்த நியமங்களை கடை பிடிக்கும் பொழுது உள்ளே இருக்கும் ஆத்மாவின் தன்மையானது தெய்வத்தைப் போல பலருக்கு தோற்றமளிக்கும்.
நியமங்கள் என்றால் உடலைப் பராமரிப்பது மட்டுமல்ல அவ்வுடலை கோவில் போல பாதுகாப்பதாகும். எழுவதற்கு பேசுவதற்கு நடப்பதற்கு உண்பதற்கு உறங்குவதற்கு எல்லாவற்றிலும் நியமம் என்பது உண்டு உடலுக்கு. உடலை இயக்கும் ஒரு சக்தி ஆன்மா.அந்த ஆன்மாவை இயக்கும் மூன்று சக்திகள் மனம் புத்தி சுபாவம்.ஆக இந்த மூன்றும் அடங்கிய ஒரு சக்தி ஆத்மா.
மனம் நல்ல எண்ணங்களால் நிறைந்திருக்கும் பொழுதும், புத்தியானது சுறுசுறுப்பாக இயங்கும் பொழுதும், சுபாவம் தன்னால் ஆற்றலுடையதாக மாறி விடுகின்றது.ஆக்கப்பூர்வமான எண்ணங்களை மனதில் நினைப்பது ஒரு விதம் என்றாலும் அதை ஊக்கமுடன் செயல்படுத்துவதுதான் புத்தியின் ஆற்றலாகும்.சுபாவத்தை பொறுத்தவரை நீங்கள் எதை பழக்கமாக ஆக்கிக் கொள்கின்றீர்களோ அதுவே உங்களது சுபாவமாக மாறுகின்றது.உதாரணமாக காலையில் எழும்பொழுது கண்கள் மலர் மலர்வதைப் போல மென்மையாக திறக்க வேண்டும் .எண்ணங்கள் மிகவும் சுபமானதாக எழுந்தவுடன் தன்னைப்பற்றி உயர்ந்த நோக்கம் உடையதாக இருக்க வேண்டும். அந்த நோக்கம் தனது உடலில் மெய்ப்பொருளான ஆன்மாவை நினைவு கூறுவதாக இருக்க வேண்டும். உதாரணமாக காலையில் எழுந்தவுடன் நான் வலிமைமிக்க ஆத்மா என்று நினைவு செய்ய வேண்டும்.மேலும் அனைவரின் அன்புக்கு பாத்திரமான ஆத்மா என்பதை நினைவு கூற வேண்டும்.அன்புக் கடலான தந்தை ஈசனின் குழந்தை என்பதை நினைவு கூர்ந்து மகிழவேண்டும்.இதெல்லாம் மலர்கள் மலர்வதைப் போல மிகவும் அமைதியாக சுகமாக தன்னுடைய சுய நினைவில் நிலைத்திருந்து நினைவு செய்ய வேண்டும்.பிறகு நமது 32 பற்களும் விக்ரமாதித்தனின் தங்க பதுமைகள் போல, நாவை மகா விஷ்ணு படுத்திருக்கும் ஐந்து தலை பாம்பை போல பாதுகாக்க வேண்டும். கண்களை கருடாழ்வாரின் கண்களைப் போல பிறரின் நல்லதை மட்டுமே காண வேண்டும்.
சிந்தனை என்பது சதா தந்தை ஈசனின் முன்னால் இருக்கும் நந்தி தேவரை போல உலக நன்மையின் பொருட்டு இருக்க வேண்டும்.பேச்சு ஹனுமனை போல இருக்க வேண்டும்.நடத்தை இராமரைப் போலவும், செயல் கிருஷ்ணரை போல விவேகம் நிறைந்ததாக இருக்க வேண்டும். மனம் அன்னை சரஸ்வதியை போலவும், புத்தி விநாயகரை போலவும் மற்றும் சர்வ கர்மேந்திரியங்களும் முப்பத்து முக்கோடி தேவர்களின் தெய்வீக குணங்களை தனக்குள் அடக்கியதாக இருக்க வேண்டும். காலைக் கடன்களை முடிக்கும் பொழுது ஆன்மாவாகிய நான் வசிக்கும் இந்த கோவிலிலிருந்து சகல வியாதிகளும் சகல துன்பங்களும் சகல பிரச்சனைகளும் நீங்கி செல்கின்றன என்று நினைக்கவேண்டும். பல் துலக்கும் போது நான் ஆத்மா இந்த வாயிலிருந்து என்னுடைய வார்த்தைகள் தெய்வ வாக்காகவே வெளி வருகின்றன என்னுடைய வார்த்தைகள் அனைத்தும் பிறருக்காக ஆசீர்வாதத்தை வழங்குவதாக வருகின்றன என்று நினைத்தவாறே பல் துலக்கவேண்டும்.
பிறகு, ஸ்நானம் செய்யும் போது ஆத்மாவாகிய நான் வசிக்கும் இந்த கோவிலுக்கு கும்பாபிஷேகம் ஆகின்றது தந்தை ஈசனின் ஜோதியாகிய கிரணங்களில் இருந்து வரும் ஞான கங்கையில் நான் புனித நீராடுகின்றேன் என்று எண்ணி மகிழ்ந்தவாறு ஸ்நானம் செய்யவேண்டும்.நீர் அருந்தும் போது இது இறைவனால் தரப்பட்ட புனித தீர்த்தம் என்று மகிழ்ச்சியுடன் தந்தை ஈசனின் நினைவில் அதை அருந்த வேண்டும் அப்பொழுது உடல் சார்ந்த பிரச்சினைகளும் மனம் சார்ந்த பிரச்சனைகளும் தன்னால் விலகிவிடும். உணவு அருந்தும் போது எந்த வித வீண் சிந்தனையும் இல்லாமல் இறைவனுடைய நினைவில் மிக அமைதியாக இறைவனால் தரப்பட்ட பிரசாதம் என்று மகிழ்ச்சியுடன் உண்ணவேண்டும். அப்பொழுது அந்த உணவானது உங்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்து உங்கள் மன சோர்வை அகற்றி உங்கள் வாழ்வை முன்னேற்றத்தில் கொண்டு செல்வதற்கு மிகப்பெரிய தொண்டாற்றும்.
இப்படி தினமும் அன்றாட கடமைகளை நாம் செய்வதால் நம்முடைய உடல் ஒரு கோவில் போல ஆகி அது இறைவனை பிரத்யட்சப்படுத்தும். நம்முடைய ஆன்மாவானது கோவில் என்ற உடலில் வாழும் ஒரு தெய்வீக மூர்த்தி போல ஆகிவிடும். கூடவே உடற்பயிற்சிக்காக சிறிது நேரம் ஒதுக்குவது உடலை ஒரு கட்டுக் கோப்பான கோவிலாக வைப்பதற்கு உதவும். தினமும் இவ்வாறு நமது உடலை ஒரு கோவில் போல மாற்றி நாம் ஒரு வாழும் தெய்வீக மூர்த்தியாகி மாறி இறைவனின் பதத்தை அடைவதே முக்தி.நல்லது.ராஜயோக தியானம் இலவசமாக கற்க அருகிலுள்ள பிரம்மா குமாரிகள் நிலையத்தை அணுகி உடலை ஒரு கோவிலாக மாற்றி தெய்வீகமான வாழ்வை வாழ்வோம்.
No comments:
Post a Comment