ஸந்தாத்ரே நமஹ

ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார். “இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். “இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன். அடுத்தபடியாக, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன். அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை. “தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான் இனிப்பாக உள்ளது.

இனி எனக்கு வெறும் பாலும் வேண்டாம், வெறும் சர்க்கரையும் வேண்டாம். சர்க்கரை கலந்த பாலை மட்டும் தாருங்கள்!” என்றான் மகன் சிறு கதைகளைச் சொல்லிப் பெரிய தத்துவங் களை விளக்குவதில் வல்லவர் பராசர பட்டர்.

இக்கதையைச் சொன்ன பராசர பட்டர், “திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் வெறும் பால் போன்றவை. மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் வெறும் சர்க்கரை போன்றவை.

ஆனால், மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும். எப்படிச் சர்க்கரை கலந்த பாலைக் குடித்த சிறுவன், வெறும் பாலையும் வெறும் சர்க்கரையையும் விரும்புவதில்லையோ, அவ்வாறே நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை!” என்று கதைக்குப் பின் உள்ள தத்துவதை விளக்கினார்.

மேலும், “நரசிம்மர் சேராதவற்றை எல்லாம் சேர்ப்பவர். மனிதனையும் மிருகத்தையும் இணைக்க முடியுமா? பகலையும் இரவையும் இணைக்க முடியுமா? பூமியையும் வானத்தையும் இணைக்க முடியுமா?

வீட்டின் உள்புறத்தையும் வெளிப்புறத்தையும் இணைக்க முடியுமா? உயிருள்ள பொருளையும் உயிரற்ற பொருளையும் இணைக்க முடியுமா? கருணையையும் கோபத்தையும் இணைக்க முடியுமா?

இவை அனைத்தையும் இணைத்தவர் நரசிம்மர். சிங்கம், மனிதன் இரண்டும் கலந்த நரசிம்ம வடிவில் தோன்றி மனிதனையும் மிருகத்தையும் சேர்த்தார். பகலும் இரவும் இணையும் பொழுதான சந்தியாகாலத்தில் தோன்றிப் பகலையும் இரவையும் சேர்த்தார்.

தனது மடியில் வைத்து இரணியனை வதம் செய்த நரசிம்மர், தன் மடியில் பூமியையும் வானையும் ஒன்றாகச் சேர்த்தார். வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் இணைக்கும் நிலைப்படியில் வைத்து இரணியனை வதைத்ததால், வீட்டின் உள்புறம், வெளிப்புறம் இரண்டையும் நிலைப்படியில் சேர்த்தார்.

நகத்தை வெட்டினால் வளர்வதால் அதற்கு உயிர் இருப்பதாகவும் கொள்ளலாம், அதை வெட்டினா லும் வலிக்காததால் உயிர் இல்லாததாகவும் கொள்ளலாம். தன் நகங்களால் கீறி இரணியனைக் கொன்று, உயிருள்ள பொருள், உயிரற்ற பொருள் இரண்டையும் சேர்த்தார் நரசிம்மர்.

சிங்கம் எப்படி யானையோடு போர் புரிந்து கொண்டே, தன் சிங்கக்குட்டிக்குப் பாலும் ஊட்டுமோ, அதுபோல் நரசிம்மர் இரணியனைக் கோபத்துடன் வதம் செய்து கொண்டே, தன் குழந்தையான பிரகலாதனிடம் கருணையையும் காட்டி அருள்புரிந்தார்.

இப்படிக்கருணை, கோபம் என்ற இரண்டு குணங்களையும் ஒரே நேரத்தில் சேர்த்துக் காட்டினார் நரசிம்மர்!” என்று விளக்கினார் பட்டர். ‘தாதா’ என்றால் சேர்ப்பவர் என்று பொருள். சேராத பொருள்களை எல்லாம் சேர்ப்பவராக நரசிம்மர் விளங்குவதால், ‘ஸந்தாதா’ என்று அழைக்கப்படுகிறார். “ஸந்தாத்ரே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்வில் பிரிந்து போன சொந்தங்களும், செல்வங்களும் மீண்டும் வந்து சேரும் படியும், இணைந்த உறவுகள் பிரியாதிருக்கும் படியும் நரசிம்மர் அருள்புரிவார்.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,