சபரிமலை பெரிய பாதையின் மகத்துவம்

சபரிமலை ஏறிச்செல்ல பாரம்பரியமாக மூன்று வழிகள் உண்டு - எருமேலிப் பாதை. வண்டிப்பெரியார் பாதை மற்றும் சாலக்காயம் பாதை.

பெரும்பாலானான ஐயப்பன்மார்கள், பெருவழி, பெரிய பாதை எனப்படும் எருமேலி வழியையே தேர்ந்தெத்து பயணிப்பார்கள். பெரியபாதை எனப்படும் வனப்பகுதியே ஐயப்பன் தன் யாத்திரைக்காக சென்ற வழி, எனவே அவ்வழியே சென்றாலே யாத்திரை பூர்த்தியாகும் என்று பழமலைக்காரர்கள் கூறுவர். இன்னும் ஒருபடி மேலே போய், பெரிய பாதையில் சென்று பதினெட்டாம்படி ஏறினால் மட்டுமே அது சபரியாத்திரையாகக் கணக்கில் கொள்ளப்படும் என்று கூறும் பழமைக்காரர்களும் உண்டு.

ஸாக்ஷாத் பகவான் மணிகண்டன் தன் மனித அவதார காலத்தில் பரிவார கணங்கள் சூழ தங்கிச் சென்ற பாதையாதலால், பெரிய பாதையில் ஒவ்வொரு கல்லுக்கும் கூட மஹத்துவம் உண்டு. பண்டைய வழக்கப்படி இந்த பெரிய பாதையில் ஒவ்வொரு முக்கியமான கேந்த்ரங்களிலும் இருமுடியை இறக்கி வைத்து, அங்குள்ள பூதகணங்களுக்கும், தேவதைகளுக்கும் பூஜைகள் நடத்திய பிறகே புறப்படும் வழக்கம் இருந்தது.

ஒவ்வொரு குன்றும் ஒரு கோட்டை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கோட்டையும் ஒரு ஆம்னாய தேவதையின் காவலில் இருக்கிறது. இதனால் தான் அந்தந்த தேவதையை வணங்கி உத்தரவு பெற்று அங்கிருந்து யாத்திரையை தொடர வேண்டும். அவர்களின் காவலை மீறிச் சென்றால் தேவதைகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற காரணத்தாலேயே பண்டைய குருஸ்வாமிகள் இரவில் யாத்திரை செய்வதை அனுமதிப்பதில்லை. (இன்றும் அந்த விதி பொருந்தும்)
1. எருமேலி
2. பேரூர் தோடு
3. காளைகட்டி
4. அழுதை
5. அழுதை நதி
6. கல்லிடுங்குன்னு
7. இஞ்சிப்பாறை - உடும்பாறை
8. முக்குழி
9. கரிவலாம் தோடு
10. கரிமலை
11. வலியானை வட்டம்
12.செரியானை வட்டம்
13. பம்பா நதி
ஒவ்வொரு கேந்த்ரத்தின் முக்கியத்துவத்தையும் காண்போம் :

1. எருமேலி
அத்தனை பக்தர்களும் கூடும் இடம் எருமேலி. மஹிஷியை கொன்று வீசிய இடம் - மஹிஷிமாரிகா வனம் என்ற பண்டைய புராணங்கள் போற்றும் இடம். பின்னர் எருமைக்கொல்லியாகி எருமேலியாகி உள்ளது. முதலில் பேட்டை சாஸ்தாவை வணங்க வேண்டும். ஐயப்பன் போருக்கு வனம் புகுந்ததை நினைவு படுத்தும் முகமாக பேட்டை துள்ளல் நடைபெறுகிறது. 

எருமேலியில் மேற்கு பகுதியில் கிராத ரூபத்தில் சாஸ்தா ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். இங்கு கிராத சாஸ்தாவை த்யானித்து, அவரிடம் உத்தரவு பெற்று வனயாத்திரையை துவக்க வேண்டும். அதன் முன்பு குருஸ்வாமியை விழுந்து வணங்கி தக்ஷிணை தந்து நல்லபடியாக பகவானின் பூங்காவனத்துள் அழைத்துச் செல்லும்படி வேண்ட வேண்டும். மசூதிக்கு சென்று வணங்கும் வழக்கம் பண்டைய வழக்கம் இல்லை. (முன்பிருந்த வாபுரக் கோஷ்டமும் இப்போது காணப்படவில்லை... எனவே) கோட்டைப்படியில் மஹாகணபதியையும் பேட்டை சாஸ்தாவின் ஆலயத்திலேயே சிவபூதமான வாபுரனையும் மானசீகமாக வணங்கி வனத்துள் செல்ல வேண்டும்.

2. பேரூர் தோடு
தோடு என்றால் நீர்நிலை. பெரியபாதையின் முதல் தாவளம் - தங்குமிடமும் இதுதான். இங்கிருந்து தான் ஐயப்பனின் உண்மையான பூங்காவனம் துவங்குகிறது. முறையான விரதம் இல்லாதவர்கள், இங்கு நுழைய முற்படாமல் இருப்பதே நலம்.

பண்டைய காலத்தில் வெளிச்சப்பாடின் உத்தரவு பெற்றால் மட்டுமே பெரியபாதைக்குள் நுழைய முடியும். கொட்டாரக்கரை ஹரிஹரய்யர் காலத்துக்கு முன்பு வரை, வெளிச்சப்பாடு விபூதி ப்ரஸாதம் தந்தால் மேற்கொண்டு யாத்திரையை தொடரலாம். அல்லாமல் அவர் இருமுடியை வாங்கி வைத்துக் கொண்டாரானால் வீட்டுக்கு திரும்பி விட வேண்டியது தான். யாத்திரைக்கு அனுமதியில்லாத பக்தர்கள் யாத்திரைக்கு வரும் ஐயப்பன்மார்களை, பேரூர் தோட்டில் வணங்கி விடைபெறுவர்.

வனதேவதைகளும், பூதகணங்களும், வன்மிருகங்களும் - இந்த விரத மகிமைக்கு மட்டுமே கட்டுப்பட்டு பக்தரை தொந்தரவு செய்யாமல் இருக்கிறார்கள்.

3. காளைகட்டி
காளைகட்டி ஆஸ்ரமம் என்றே இந்த இடத்துக்குப் பெயர். பலரும் சிவபெருமான் நந்தியைக் கட்டி வைத்த இடம் என்று கூறுவதுண்டு; ஆனால் அது சரியல்ல; (நந்தியென்ற உயர் சிவ கணத்தை கட்டி வைக்க வேண்டுமா? ஓடிப்போக அவர் என்ன நம் வீட்டு காளையா?)
உண்மை என்னவென்றால், இந்த இடத்தின் அதிஷ்டான தேவதை நந்திகேச்வரன்; சைவ தர்ம சுரக்ஷிதனான சாஸ்தாவின் கணங்களில் அவரும் ஒருவர். எனவே அவரை வணங்கி அவரது அனுமதியுடன் யாத்திரையை தொடர வேண்டும்.

4, 5. அழுதையும் அழுதை நதியும்
”பந்தள பூபபாலன் கருணா வருணாலயன் அலஸையில் விலஸும் ஈசன்” என்று ஐயப்பன் போற்றப்படுகிறான். அலஸா என்று அழைக்கப்பட்ட நதியே இன்றைய அழுதை நதி.

பம்பையின் ஒரு கிளை நதியான அழுதையில் ஸ்நாநம் செய்து அழுதை மலையை ஏறிக் கடக்க வேண்டும். அழுதையில் முழுகிக் கல்லை எடுத்துக் கொண்டு மடியில் காப்பாற்றி வைப்பது வழக்கம்.

அழுதை ஸ்னானம் செய்து இருமுடியை தலையில் வைக்கும் முன்பு குருநாதரை வணங்கி தக்ஷிணை கொடுத்து நமஸ்கரிக்க வேண்டும்.

6. கல்லிடும்குன்று
கல்- இடும் - குன்னு என்றால் கல்லை இடும் குன்று. அழுதை நதியில் எடுத்த கல்லை விடுக்கும் இடம் இது தான். அழுதா மலையை ஏறி முடித்த பின்னர் மேட்டுப் பகுதியில் கற்களை விடுக்கிறார்கள். நன்மைக்கும் தீமைக்குமான நெடும் போராட்டத்தில் நம்மாலான பங்காக தீமையை அழிக்க ஒரு முயற்சியாக இது கருதப்படுகிறது.

பண்டைய காலங்களில் ஆத்ரேய கோத்ரத்தை சேர்ந்தவர்கள் இங்கு சிறப்பாக பூஜைகள் நடத்தி லீலாவதிக்கு ஆராதனை செய்யும் வழக்கம் இருந்தது. (இப்போது அப்படி எதுவும் நடப்பதில்லை)

7. உடும்பாறை இஞ்சிப்பாறை
அழுதாமேட்டை தாண்டி வடக்குப்பக்கம் சென்றால் வருவது உடும்பாறைக் கோட்டை. இங்கு சிலர் இரவில் தங்குவதும் உண்டு. இங்கு ஸ்ரீ பூதநாதரின் ஸாந்நித்யம் நிலை பெற்றிருப்பது கண்கூடு. ஸமஸ்த பூத கணங்கள் சூழ இங்கு அவர் வ்யாக்ரபாதன் என்ற பெயரில் இங்கு வசிக்கிறார். இரவு நேரங்களில் பூதத்தானின் சங்கிலி சத்தமும் கேட்பதுண்டு.

ஸ்ரீபூதநாதருக்கென விசேஷமான ஓர் பாறையும் அங்கே பகவானுக்கென விசேஷமாக ஆழி பூஜையும் நடத்துவது மரபு. இந்த ஆழியின் சாம்பலே ப்ரசாதமாக வழங்கப்பட்டது (மரங்களையும் தேங்காயையும் கொண்டே ஆழி நடத்துவது பண்டைய வழக்கம் இது பொதுவாகக் காணப்படும் கற்பூர ஆழியிலிருந்து மாறுபட்டது.) பார்வதீபுரம் வெங்கடீச்வர ஐயர் காலம் வரை தடங்கலின்றி நடைபெற்ற ஆழி பின்னர் பல காரணங்களால் தடைபட்டு பூதப்பாண்டி ஸ்ரீ ராமநாத வாத்யாரின் காலத்தில் வலியானைவட்டத்தில் தொடர்கிறது.
(பெரியபாதையை பெரிதும் மாற்றி அமைத்த காரணத்தால் சென்றமுறை வழக்கமான பாறையையும் காண முடியவில்லை)

இங்கே பூதநாதரை வணங்கி பானகம் நைவேத்யம் செய்வது வழக்கம்.
இங்கிருந்து சற்றே அருகில் அமைந்திருப்பது இஞ்சிப்பாறைக் கோட்டை. இங்கு சாந்நித்யம் கொண்டிருப்பது தேவி. (த்வரிதா தேவி என்றும் கொள்வதுண்டு)

8 முக்குழி 
இறக்கத்தின் முடிவாக வந்து சேரும் இடம் முக்குழி. சிலர் அழுதை மலை ஏறாமலே அரையக்குடி வழியாக சுற்றி முக்குழி வந்து சேர்வதும் உண்டு. (கல்லிடும்குன்னும், உடும்பாறையும் காணாத காரணத்தால் இது இரண்டாம் பட்சமே என்று கூறுவோரும் உண்டு)

இங்கு பத்ரகாளியின் சாந்நித்யம் உண்டு. இங்கு தேவிக்கு குங்குமார்ச்சனை நடத்தி குருதி படைக்கும் வழக்கமும் உண்டு. இப்போது நல்லதொரு கோவிலும் அமைந்துள்ளது.

இங்கிருந்து ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் நடந்து கொண்டே இருந்தால் அடையுமிடம் கரிவலம் தோடு.

9. கரிவலம் தோடு
கரி என்றால் யானை. யானைகள் தண்ணீர் அருந்த வலம் வரும் பகுதியே கரிவலம் தோடு. புதுச்சேரி ஆற்றைக் கடந்து அடையும் இடம். இது சற்றே இளைப்பாறுவதற்க்குரிய இடம் மட்டுமேயன்றி தங்குவதற்குரிய இடம் அல்ல.
பயமுறுத்தும் கரிமலைக்கு கொஞ்சம் தயார் படுத்திக் கொள்ள உதவுமிடம் இது.

பண்டைய குருமார்கள் யாரும் கரிவலந்தோட்டில் இரவு நேரம் தங்க அனுமதிப்பதில்லை. (இன்று பலரும் அங்கே தாவளம் போடுகிறார்கள்; அது சரியல்ல)

10. கரிமலை
யானைகளின் சரணாலயமாக அறியப்படுவது கரிமலை; கரிமலை ஏறுவதற்கு முன்பு அடிவாரத்திலுள்ள கணபதிக்கல்லை வணங்கிச் செல்லுதல் வேண்டும். கரிமலையின் அதிஷ்டான தேவதை பகவதியாதலால் அடிவாரத்திலேயே வனமஹாகாளியின் சாந்நித்யமும் உள்ளதாக கூறப்படுவதுண்டு. சிலர் ஒரு குறிப்பிட்ட கல்லில் காளி ஸஹஸ்ரநாமத்தால் ஆராதிப்பதும் உண்டு.

நெடுங்குத்தாக நிற்கும் கரிமலை ஏழு அடுக்குகளைக் கொண்டது. பக்தர்களின் விரத பலத்தையும் ப்ரம்மச்சர்ய பலத்தையும் சோதிக்கும் இடம் கரிமலை என்று நம்பப்படுகிறது. மேலும் அவரவர் மனத்தின் உண்மைகளை வெளிக்கொணரும் இடமாகவும் இது இருப்பது கண்கூடு. மேலும் இது ஸத்ய பீடமாதலால் அனாவசியமான பேச்சுக்களையோ சண்டை சச்சரவுகளையோ அடியோடு தவிர்க்க வேண்டும். கரிமலை உச்சியில் வைத்து சொல்லும் ஒவ்வொன்றும் சத்தியமாகும். இங்கே அவரவர் குருமார்களை வணங்கி நல்வாக்குகளை ஆசிகளாக பெற்று உய்யுதல் நலம்.

கரிமலை நாதனையும் வணங்கி நாழிக்கிணற்று நீரைப் பருகி சற்றே இளைப்பாறி கரிமலை இறங்க வேண்டும். கரிமலை ஏற்றமும் இறக்கமும் ஒரு மனிதனை ஸ்புடம் போடக்கூடிய தன்மை கொண்டது. அதுவரை சரணம் கூப்பிடாதவனையும் சரணம் சொல்ல வைக்கும் வல்லமை அதற்கு உண்டு. முறையாக விரதம் இருந்து கரிமலை ஏறி இறங்குபவனிடம் பகவான் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து அவனது துன்பத்தைத் துடைத்துச் செல்கிறான் என்பது பண்டைய பக்தர்களின் அனுபவம்.

11, 12, 13. வலியானை வட்டம், செறியானை வட்டம் - பம்பை
பம்பை என்று இன்று குறிப்பிடப்படும் பகுதி உண்மையான பம்பையல்ல ! இதுவும் பம்பையாறுதான் என்றாலும், வண்டிகள் மிகவும் பெருகிய பிற்காலத்தில் உருவானதுதான் இன்று நாம் காணும் பம்பா கணபதி ஆலயம் அமைந்துள்ள பம்பைப்பகுதி. 

பண்டைய காலத்தில் வெலியானைவட்டத்தையொட்டி அமைந்துள்ள பகுதியே பம்பை. கரிமலை உச்சி தொடங்கி பம்பை வரை கருப்பனின் சாந்நித்யம் உள்ளதென்பது பல பக்தர்களின் அனுபவம். அதனால் வலியானை வட்டத்தில் தேங்காயில் கருப்பனை ஆவாஹித்து பூஜிக்கும் வழக்கமும் உண்டு. கரிமலையின் இறக்கத்தின் முடிவே வலியானைவட்டம். இங்கிருக்கும் பம்பை தேவகங்கைக்கு ஸமமானது. 

பகவானின் காலடி பட்ட இந்த புண்ணியபூமிக்கு நிகராக உலகில் வேறெங்கும் காணமுடியாது என்பது ஸத்தியம். பகவான் சாஸ்தாவின் வரவுக்காக சனகாதி ரிஷிகள் தவமியற்றிக் காத்திருந்த இடம். இன்றும் பலப்பல மஹான்களும், ஞானிகளும் கண்ணுக்குத் தெரியாமல் தவம் செய்யும் இடம் இந்த வலியானைவட்டம். இந்த காரணத்தால்தான் பல குருமார்கள் இங்கு தங்கி பூஜைகள், ஹோமங்கள், அன்னதானங்கள், பம்பா ஸத்தி, பம்பா விளக்கு என என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் செய்தார்கள். 

பூதப்பாண்டியாரின் ஆழியும், புனலூர் ஸுப்ரமண்ய ஐயரின் தீவுத் திடலும், நீலகண்ட ஐயரின் மரமும், ஸமூக சாஸ்தா ப்ரீதியும் வலியானைவட்டத்தில் இன்றளவும் பேசப்படுகின்றன.

இங்கு நடத்தப்படும் அன்னதானத்தில் ஐயப்பனே நேரடியாக ஏதாவது ஒரு உருவத்தில் வந்து பங்கு கொள்கிறான் என்ற காரணத்தால், இங்கு அன்னதானத்துக்கு அவ்வளவு முக்கியத்துவம்.

இங்கே எந்த விரிக்கு யார் வந்தாலும் ஐயப்பனே வந்ததாகக் கருதி அன்னதானம் செய்ய வேண்டும். (முன்பெல்லாம் 108 விரிகளுக்குச் சென்று அங்கிருக்கும் அடுப்புச் சாம்பலை சேகரித்து பிரசாதமாக கொண்டு வரும் வழக்கம் இருந்தது)
இங்கே ஸ்னானம் செய்து அனுஷ்டானங்களை முடித்து குருவுக்கு தக்ஷிணை தந்து வணங்கி கட்டெடுத்து யாத்திரையை தொடர வேண்டும்.

பின்னர் சபரி பீடத்தில் அம்பிகையையும், ஐயப்பனையும் வணங்கி, விரதத்தில் ஏதும் குறைகள் இருப்பின் மன்னிக்கும்படி ஸமஸ்தாபராதம் கேட்டு சரங்குத்தியை வணங்கி பதினெட்டாம்படியை அடைய வேண்டும். கடுத்தனௌயும் கருப்பனையும் வண்ங்கி உத்தரவு பெற்று, தேங்காய் உடைத்து ஸத்யமான பதினெண்படிகளில் ஏறுதல் வேண்டும்.

பகவானின் தரிசனம் கண்டு, நெய்யபிஷேகம் முடித்த பின்னர், மீண்டும் குருவுக்கு தக்ஷிணை தந்து அவர் கையால் அந்த பிரசாதத்தை பெறுதல் வேண்டும். பிரசாதத்தை இருமுடியில் வைத்து இருமுடியை சுமந்தபடி கீழே இறங்க வேண்டும்.

முத்ரை மாலையை எக்காரணம் கொண்டும் வழியிலேயே கழற்றலாகாது; பிரசாதங்களை வீட்டில் கொண்டு வைத்து, தீபாராதனை செய்து, மாலையிட்ட குருநாதரை வணங்கி மாலையை அவர் மூலமாகவே கழற்றி, பிரசாதங்களை தானும் ஸ்வீகரித்து வீட்டில் உள்ளவர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

ஐயப்பனின் யாத்திரையில் நியமங்களும் கட்டுப்பாடுகளும் மிகவும் முக்கியம். முறையான சடங்குகளும் ஸம்ப்ரதாயங்களும் நம் பெரியோர் உருவாக்கித் தந்துள்ளார்கள்.

இதை எவ்வளவும் சிரத்தையுடன் முடியுமோ அவ்வளவு நம் சக்திக்கு உட்பட்டு கடைபிடிப்போமாயின் ஐயன் ஐயப்பனின் பேரருள் கட்டாயம் உண்டு என்பதில் ஐயமில்லை.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Agathiyar Malai | Pothigai Malai | Agasthyarkoodam | அகஸ்தியர் மலைய Part 1

Parvathamalai History | பர்வதமலை வரலாறு

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,