உடல் என்னும் ஓட்டை வீடு ஒன்பது வாசல்
மறம் சுவர் மதிள் எடுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம் சுவர் ஓட்டை மாடம் புரளும் போது அறிய மாட்டீர்
அறம் சுவராகி நின்ற அரங்கனார்க்கு ஆள் செய்யாதே
புறம் சுவர் கோலஞ் செய்து புள் கவ்வக் கிடக்கின்றீரே.
'மறம்' - அற வழியில்லாத செயல்கள் எல்லாமே மறம் எனப்படும். காமம், குரோதம், பொறாமை, ஆணவம் எல்லாம் நிறைந்தவனிடம் அணுகவே பயப்படுவார்கள் எல்லோரும்.
'சுவர் மதிள்' - தீய குணங்களையும் பண்புகளையும் ஓர் அரண் போலத் தன்னைச் சுற்றி எழுப்பியுள்ள மனிதனுக்கு நல்லவர்கள் அறிவுரை சொல்லப் போனால், அவர்களை மிரட்டி ஒதுக்குவான்.
ராவணன், மாரீசன், மால்யவான், கும்பகர்ணன், விபீஷணன் எல்லோரும் சொன்ன அறிவுரையை சிறிதும் ஏற்கவில்லை. பாவம், மாரீசனும், கும்ப கர்ணனும் மடிந்தே போனார்கள். மால்யவானும், விபீஷணனும் துரத்தி அனுப்பி வைக்கப்பட்டனர்.
வீர சுந்தர பீம ராயன் என்னும் அரசன், அண்டை நாட்டவர்களோடு போர் புரிந்து, எல்லோருக்கும் எதிரியாகி, தன்னுடைய ஊரைச் சுற்றி, பெரிய மதிள் எழுப்பி, இயற்கைச் சீற்றத்தில், வெளி உதவி எதுவும் கிடைக்காமல் இறந்து போனான்.
'மறுமைக்கே வெறுமை பூண்டு' - ஒருவனுடைய தீய, அறமற்ற செயல்கள் இப்பிறப்பு மட்டும் அல்லாது இறந்த பின்னும் இவனுக்குத் தீராத ஏழ்மையை ஏற்படுத்தும்.
'தாது சாம்யே ஸ்திதா சமர்த்த' - 'இந்த ஆத்மாவின் துணைக்காக உன்னை நினைக்கின்றேன்', என்று எம்பிரானிடம் ஒரு சிறிய விண்ணப்பமே போதுமானது. 'அஹம் ஸ்மாராமி' - என்னை அவன் நினைத்தான் என்ற ஒரே காரணத்திற்கு, பல யுகங்களில் அவன் ஓடி வந்து துணை நிற்பான்.
இப்பிறப்பின் ஏழ்மை இறந்ததும் மடிந்துவிடும். உடலற்றுத் தனித்து விடப்படும் ஆத்மாவுக்கு சாய்ந்து கொள்ளும் சுவரான எம்பிரானின் நினைப்பே இவனுக்கு, பூலோகத்தில் உள்ள போதில் ஏற்படாததால், இறந்த பின்னர் இவனுடைய ஆத்மா ஆதரவற்றுத் திரிந்து கிடக்கும்.
'புறம் சுவர்' - ஆத்மாவையும், முக்கிய அங்கங்களையும் மறைத்துக் காக்கும் உடல் என்னும் நம்முடைய வெளிப் புறச் சுவர். தனக்குள்ளே த்யானிக்கமால், பரமாத்மனைத் தேடிடாமல் வெளி விஷயங்களிலேயே மனதை அலை பாய விடுவதனாலும், இது புறச் சுவர்.
'ஓட்டை மாடம்' - ஒன்பது ஓட்டைகள் கொண்ட வலிமையற்ற ஓலைக் குடிசை தான் நம் உடல். இதை பெரிய மாட மாளிகையாக நினைத்து, போஷாக்களித்துப் பேணிக் காக்கின்றோம். உடலென்னும் ஓட்டை மாடம் இப்போது விழுமோ அப்போது விழுமோ எவர்க்கும் தெரியாது.
'புரளும் போது அறிய மாட்டீர்' - ஆழ்வாருடைய எச்சரிக்கையைக் கேட்டு ஒரு இளைஞன் சொன்னானாம் 'ஆழ்வாரே, உம்முடைய வார்த்தையை ஏற்றுக் கொள்கின்றேன். எம்பெருமானைத் த்யானிக்க இன்னும் எனக்கு பாக்கி காலம் இருக்கிறதே'.
ஆழ்வார் சொன்னார் ' இப்போதோ எப்போதோ, மரணம் எப்போது வாய்க்கும் என எவருக்கும் தெரியாது.
நாளாக நாளாக சக்தி ஹீனர்களாகப் போகும் போதில், திடீரென மரணம் சம்பவித்தால் ஈஸ்வர தியானத்திற்கு சமயமே கிடைக்காது போகும். ஒரு சமயம் நற் செயல்கள் எதுவும் செய்யாமலேயே வாழ்வு முடிந்திட எவருக்கும் வாய்ப்புள்ளது'.
No comments:
Post a Comment