கார்த்த வீர்யார்ஜுனன் அசுர குணம் படைத்த வேந்தன்

கிருதவீர்யன் மகன் தான், கார்த்தவீர்யார்ஜுனன்
கார்த்த வீர்யார்ஜுனன் அசுர குணம் படைத்த வேந்தன்

மகாவிஷ்ணுவின் சுதர்சனச் சக்கரத்தின் அம்சமாகப் பிறந்தவன்.


விஷ்ணு ஆழ்ந்த நித்திரையில் இருந்த போது அவரது திருக்கரங்களில் இருந்த சங்கிற்கும் சக்கரத்திற்கும் பெருத்த வாக்குவாதம் மூண்டது.

அப்போது சக்கரம் "நான் பளபளவெனப் பிரகாசிப்பவன். ‘கிர்கிர்’ என்று எங்கு வேண்டுமானாலும் சுற்றி வருபவன். எவ்வளவோ துஷ்டர்களின் தலைகளை நான் தான் துண்டித்திருக்கிறேன். என்னைக் கையில் கொண்ட விஷ்ணுவை சக்ரபாணி என அழைக்கிறார்கள்.

நீ எதற்கு லாயக்கு? ‘பொம்’ ‘பொம்’ என்று சத்தம் செய்ய தானே தெரியும்?" என்று ஏசியது.

அது கேட்டு பாஞ்சஜன்யம் என்ற அந்த தெய்வீகச் சங்கு "அடே சக்கரம்! இப்படி கர்வத்தோடு பேசும் நீ பூவுலகில் தலைக்கு மேல் கர்வம் கொண்ட மன்னனாகப் பிறப்பாய். அப்போது ஒரு முனி குமாரன் விறகு வெட்டும் தன் கோடாலியால் உன் கர்வத்தை அடக்குவான்" எனச் சபித்தது.

அந்த சுதர்சனச் சக்கரம் தான் கார்த்த வீரிய மன்னனாகப் பிறந்து மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி ஆண்டு வந்தான்.

கார்த்த வீர்யனின் #குரு #தத்தாத்ரேயர்.

கார்த்தவீர்யார்ஜுனன் திருமால் தத்தாத்ரேயராக அவதாரம் எடுத்த போது, அவரது தரிசனத்தைப் பெற்றவன்.

அவரிடம் திருமாலின் திருக்கையாலேயே மரணமடைய வேண்டும் என்ற வரத்தை கேட்டு வாங்கிய மாபெரும் விஷ்ணு பக்தன்.

கார்த்தவீர்யார்ஜுனன் மாபெரும் வீரன் மட்டுமில்லை மாபெரும் விஷ்ணு பக்தனும் கூட.

குரு தத்தாத்ரேயரிடம் அவன் பணிவுடன் வேத சாஸ்திரங்களைக் கற்று வந்தான்.

அவருக்குப் பணிவிடை செய்யும் முகத்தான், அவர் உறங்கும்போது கால்களை அமுக்கி விடுவான்.

ஒரு முறை இப்படிச் செய்கையில் குரு தத்தாரேயரின் காலில் இருந்த தீ , கார்த்த வீர்யனின் கைகளை எரிக்கத் துவங்கியது.

ஆயினும் குருவின் நித்திரைக்குப் பங்கம் விளையக்கூடாதே என்ற எண்ணத்துடன் பொறுத்துக் கொண்டான்.

அவர் தூங்கி எழுவதற்குள் அந்தத் தீ முழங்கை வரை வந்து விட்டது.

குரு தத்தாத்ரேயர் அதைப் பார்த்து என்ன ஆயிற்று? என்று வினவினார்.

கார்த்த வீர்யன், அவரது நித்திரை கலையாமல் இருக்க மிகவும் பிரயத்தனப் பட்டதைப் பகர்ந்தான்;

குருவுக்கு மெத்த மகிழ்ச்சி. அவனது கைகளைத் தடவிக் கொடுத்தார்.

உனக்கு இன்று முதல் ஆயிரம் கைகள் இருந்தால் என்ன பலம் கிட்டுமோ அவ்வளவு பலம் கிடைக்கும்; உன்னை வெல்லுவது எவனுக்கும் இயலாது என்று வரம் அளித்தார்.

ராவணன் நர்மதை நதிக்கரையில் உள்ள மாகிஷ்மதி என்ற நகரத்தில் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்தான்.

அப்போது திடீரென்று நர்மதை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, ராவணனுடைய கூடாரத்தை மூழ்கடித்தது. ராவணன், அந்த வெள்ளத்தில் தத்தளித்துப் போனான்.

இதைக்கண்டு கரையில் இருந்த பெண்களும் அவர்களுடன் இருந்த ஆயிரம் கை படைத்த கார்த்த வீர்யார்ஜுனனும் நகைத்தனர்.

உண்மையில் நர்மதையில் வெள்ளம் பெருக்கெடுக்கக் காரணமே அவன் தான்.

அவன் தனது ஆயிரம் கைகளையும் நர்மதையின் குறுக்கில் போட்டு, அதன் பிரவாகத்தைத் தடுத்தான்.

பின்பு அவன் தனது கைகளை அங்கிருந்து எடுக்கவே, நர்மதை மடை திறந்த வெள்ளமாக பாய்ந்து ஓடத் தொடங்கியது.

அந்த வெள்ளத்தில் தான், சிக்குண்டான் ராவணன். கார்த்தவீர்யார்ஜுனனும் அவனது சேவகிகளும் வெள்ளத்தில் தத்தளிக்கும் தன்னைக் கண்டு எள்ளி நகையாடியதும், ராவணனுக்கு கோபம் கண்ணை மறைத்தது.

சிங்கம் போல கர்ஜித்துக் கொண்டு, கார்த்தவீர்யார்ஜுனன் மீது பாய்ந்தான்.

பிறகு நடந்த போரில் கார்த்தவீர்யார்ஜுனன் ராவணனை வீழ்த்தியதோடு மட்டுமில்லாமல் அவனை ஒரு கயிறால் கட்டி, தனது நகரத்தில் இருப்பவர்களுக்கு ‘‘இதோ பாருங்கள் பத்துத் தலைப் பூச்சியை’’ என்று வேடிக்கை காண்பித்தான்.

இப்படி மகா பலம் பொருந்திய ராவணனையே, பூச்சியாக நசுக்கியவன் கார்த்தவீர்யார்ஜுனன்.

இப்படிப்பட்ட கார்த்தவீர்யார்ஜுனன் ஒரு முறை வேட்டையாடிவிட்டு, பரசுராமரின் தந்தையான ஜமதக்னியின் ஆசிரமத்திற்கு வந்தான்.

அவனுக்கும் அவனது படையினருக்கும் ஜமதக்னி முனிவர் தன்னிடமிருந்த காமதேனுவின் துணைக் கொண்டு அமோகமாக விருந்து படைத்தார்.

அதைக் கண்ட கார்த்தவீர்யார்ஜுனன், தனக்கு அந்த காமதேனு வேண்டுமென்றான்.

காமதேனு முனிவர்களின் தனிச் சொத்து என்றார் முனிவர்.

பிறகென்ன பெரிய யுத்தமே வந்தது. காமதேனுவினிடமிருந்து ஆயிரமாயிரமாக வீரர்கள் தோன்றினார்கள்.

கார்த்தவீர்யார்ஜுனன் சேனை அனைத்தும் நாசமானது.

கோபமடைந்த கார்த்தவீர்யார்ஜுனன் ஜமதக்னியைக் கொன்றுவிட்டு, காமதேனுவின் கன்றைக் கவர்ந்து சென்றுவிட்டான்.

பிறகு சுக்கிராச்சாரியாரின் உதவியால் ஜமதக்னி முனிவர் உயிர்த்தெழுந்தார்.

தன் தந்தையின் இந்நிலைக்கு காரணம், கார்த்தவீர்யார்ஜுனன் தான் என்று உணர்ந்த பரசுராமர் அவனை எதிர்த்துப் போருக்குச் சென்றார்.

அவனுடைய படை அனைத்தையும் த்வம்சம் செய்தார் பரசுராமர். இதனால் கோபம் கொண்ட கார்த்தவீர்யார்ஜுனன், போர்க்களத்திற்கு வந்து பரசுராமரைக் கண்டபடி தாக்கினான்.

அவன் செலுத்திய பாணங்கள், பரசுராமரை ஒன்றும் செய்யவில்லை.

மாறாக பரசுராமர் விட்ட பாணங்கள் அனைத்தும், அவனது ஆயிரம் மலைப் போன்ற கரங்களையும் பூவைக் கொய்வது போல வெட்டி வீழ்த்தியது. அப்போது தான் அவன் தன் முன்னால் நிற்பது, சாட்சாத் பரம்பொருளே என்பதை உணர்ந்தான்.

பின்பு ஒரு நொடி கூடத் தாமதிக்காமல், பரசுராமரின் பாதத்தில் கார்த்தவீர்யார்ஜுனன் சரணாகதி அடைந்தான்.

கும்பகோணம் அருகில் சேங்காலிபுரம் என்னும் புனிதஸ்தலம் உள்ளது.

குடவாசலில் இருந்து 4 கி.மீ தூரம்.

அந்தச் சிற்றூரில் நான்கு சிவன் கோயில்களும் இரண்டு பெருமாள் கோயில்களும் ஒரு முருகன் கோயிலும் உள்ளன.

ஆயிரம் கரங்கள் உடைய கார்த்த வீர்யார்ஜுனன் என்னும் அபூர்வமான சுவாமியின் சன்னிதி அங்கு மட்டுமே உள்ளது.

இந்த சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் காணாமல்போன பொருள் மீண்டும் கிடைத்துவிடும்

வாலாஜாபேட்டையிலும் உள்ளது இவருக்கான சன்னதி

காஞ்சிபுரத்திலுள்ள பாண்டுரங்கஸ்வாமி கோவிலில் கார்த்தவீர்யார்ஜுனர் சன்னிதி உள்ளது.


No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...