ஏகாதசி விரதம்


ருக்மாங்கதன்

நாரதர் ஒருசமயம் எமபட்டினம் சென்றிருந்தார். அவ்வூர் எவ்வித ஆரவாரமும் இல்லாமல் அமைதியாய் இருந்தது. அதற்கான கரணத்தை அவர் எமதர்மனிடம் கேட்டார். சுவாமி! பூலோகத்தில் பெரும்பாலானவர்கள் ஏகாதசி விரதம் இருக்கின்றனர்.

குறிப்பாக, ருக்மாங்கதன் என்பவனின் நாட்டில் எட்டு வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக ஏகாதசி விரதம் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, அங்கிருந்து யாருமே இங்கு வரவில்லை. இறப்பவர்கள் அனைவரும் நேராக வைகுண்டத்திற்கு சென்று விடுகின்றனர்.

அதனால் அந்நாட்டைப் பொறுத்தவரை எனக்கு அறவே வேலை இல்லை, என வருத்தத்தோடு சொன்னான். நாரதர் அவனை பிரம்மனிடம் அழைத்து சென்றார். தந்தையே! இது மிகப்பெரிய அநியாயமாக இருக்கிறது.

நியாயம் செய்பவர்களும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். அவர்களும் பரமபதத்தை அடைந்துவிட்டால் எமலோகத்தில் இருப்பவர்களுக்கு என்ன வேலை?

எனவே அந்நாட்டில் விரதம் இருப்பதை தடுக்க வேண்டும், என்று கூறினார். பிரம்மன் பயந்துபோனார்.நீ சொல்வதை என்னால் ஏற்க முடியாது. பகவான் நாராயணன் தனது பக்தர்களுக்கு அபச்சாரம் செய்வதை பொறுத்துக்கொள்ள மாட்டார். இந்த வேலையெல்லாம் வேண்டாம் என்றார். நாரதர் விடுவதாக இல்லை.

விஷ்ணுவின் கருணையை உலகறியச் செய்ய வேண்டும் என்பதற்காகவே, இந்த நாடகத்தை அவர் துவக்கினார். இது பிரம்மனுக்கு தெரிந்திருந்தாலும், எமதர்மனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லையே! நாடகம் தொடர்ந்தது. எப்படியேனும் அந்நாட்டில் விரதம் இருப்பவர்களை தடுத்தாக வேண்டும் என்றார். வேறு வழியில்லாத பிரம்மன் இதற்கு சம்மதித்தார். மோகினி என்ற பெண்ணை படைத்தார்.

ஏகாதசி அன்று உணவருந்தவும் கூடாது. சிருங்காரத்தில் ஈடுபடவும் கூடாது. ருக்மாங்கதனை ஏகாதசி விரதத்திலிருந்து பிறழச் செய்ய வேண்டுமானால் இந்த கன்னிகை அவனை மயக்க வேண்டும். அவனை சாப்பிச்செய்து, சிருங்காரத்தில் ஈடுபடுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அந்நாட்டில் ஏகாதசி விரதம் தடுமாறும். இறப்பவர்களும் எமலோகத்திற்கு வருவார்கள் என்றார்.

பேரழகு வாய்ந்த மோகினி ருக்மாங்கதனின் நாட்டிற்கு வந்தாள். அங்குள்ள மந்திரமலைக்கு அரசன் வேட்டைக்கு வருவான். மோகினி ஒரு மறைவிடத்தில் அமர்ந்து வீணை வாசித்துக்கொண்டிருந்தாள். வேட்டைக்கு வந்த அரசன் வீணாகானம் கேட்டு அத்திசைநோக்கி நடந்தான். மோகினியைக்கண்டான். அவளது அழகில் மயங்கினான். தான் அந்நாட்டின் அரசன் என்பதை எடுத்துச்சொல்லி, தன்னை மணந்துகொள்ளும்படி வேண்டினான். மன்னரே! நான் பிரம்மனின் புத்திரி.

தங்கள் பெருமையை அறிந்து தங்களைக் காணவே பூலோகம் வந்தேன். தங்கள் விருப்பப்படியே திருமணமும் செய்துகொள்கிறேன். ஆனால் அரண்மனையில்தான் தங்குவேன் என்றாள். இருவருக்கும் கந்தர்வ முறைப்படி திருமணம் நடந்தது. அரசனின் மனைவி சந்தியாவளியும், மகன் தர்மாங்கதனும் அவளை ஏற்றுக்கொண்டனர்.

மோகினி அரசனை தனது வலைக்குள் சிக்கச் செய்தாள். தன்னைவிட்டு எங்கும் செல்லவிடாமல் பார்த்துக்கொண்டாள். இந்நிலையில் ஏகாதசி திதி வந்தது. அன்று மன்னன் மது, மாமிசம் எதுவும் உண்ணாமல் விரதம் இருந்தான்.
மோகினி அவனிடம், அரசே! விரதம், உபவாசம் எல்லாம் மன்னர்களுக்கு விதிக்கப்படவில்லை. மன்னரின் கடமை நாட்டையும், மக்களையும் காப்பதுதானே. உங்களுக்கு பதிலாக மூத்த மனைவியை விரதம் இருக்கச் சொல்லுங்கள். அதுவே போதுமே, என்றாள்.

என் உத்தரவுப்படி இந்நாட்டு மக்கள் அனைவருமே ஏகாதசி விரதம் இருக்கின்றனர். நீயும் அதை பின்பற்றி ஆகவேண்டும். எனவே இந்த ஏகாதசி முதல் நீயும் விரதத்தை அனுஷ்டிப்பாய் என்றான். மோகினி அதிர்ந்துபோனாள். நான் ஏகாதசி விரதம் இருக்க வேண்டுமானால் எனக்கொரு வரம் தரவேண்டும் என்றாள்.

அரசனும் ஆராயாமல் வாக்கு கொடுத்துவிட்டான். ஏகாதசியன்று நீங்கள் என்னோடு உணவருந்த வேண்டும். ஒரு அவ்வாறு செய்தால் போதும். அடுத்த ஏகாதசியிலிருந்து இவ்விரதத்தை இருவரும் சேர்ந்து கடைபிடிப்போம், என்றாள். இதில் ஏதோ சதி இருப்பதை அரசன் புரிந்து கொண்டான். இருப்பினும் வாக்கிலிருந்து தவறவும் முடியவில்லை.

இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்தான். அப்போது சந்தியாவளியும், தர்மாங்கதனும் அங்கு வந்தனர். நடந்ததை அறிந்தனர். அவளிடம் சந்தியாவளி, நீ எனது கணவரை விரதத்திலிருந்து பிறழச் செய்யாதே.

அவர் கொடுத்த வரத்திற்கு பதிலாக என் உயிரை வேண்டுமானாலும் கேள். தருகிறேன் என்றாள். மோகினி சிரித்தாள். உன் உயிர் எனக்கு வேண்டாம். அந்த வரத்திற்கு ஈடாக உன் மகனின் உயிரைக்கொடு என்றாள். ருக்மாங்கதன் இந்த நிபந்தனைக்கு மறுத்தான். பிள்ளையைக் கொன்று பிரம்மஹத்தி தோஷத்தை அடைய விரும்பவில்லை என்றான். ஆனால், சந்திராவளி தெளிவாக இருந்தாள். அன்பரே! என் பிள்ளையை கொல்வதற்கு நான் சம்மதிக்கிறேன்.

நமக்கு வாக்குதான் முக்கியம். பிள்ளையை கருவில் சுமந்து வளர்ப்பதால் தந்தையை விட தாய்க்கே அதிக உரிமை உண்டு. அப்படியிருக்க, தர்மத்தைக் காப்பாற்ற என் பிள்ளையை காவு கொடுக்க சம்மதிக்கிறேன். அவனை கொன்று, அவனது தலையை மோகினியின் கையில் கொடுத்து விடுங்கள், என்றாள்.

தர்மாங்கதனும் அதற்கு சம்மதித்தான். அப்பா! உங்கள் வாக்கைக் காப்பாற்ற என்னை நான் அர்ப்பணிக்கிறேன். அதனால் நற்கதியை அடைவேன் என்றான். சந்தியாவளி தரையில் அமர்ந்தாள். தர்மாங்கதன் தாயின் மடியில் படுத்தான்.

மோகினியோ தர்மாங்கதனின் உயிரை பறிப்பதில் விடாப்பிடியாக இருந்தாள்.
ஏகாதசி விரதத்தை எந்த நிலையிலும் கைவிடமாட்டேன் என கூறிய ருக்மாங்கதன் வாளை உருவி ஓங்கினான். அப்போது பூமி அதிர்ந்தது. வானம் இருண்டது. மகாவிஷ்ணு ருக்மாங்கதன் முன்பு தோன்றி அவனை தடுத்தார்.

ருக்மாங்கதா! உனது மன உறுதியைக் கண்டு மகிழ்ந்தேன். நீ இன்னும் சிலகாலம் வாழ்ந்து உன் மனைவியுடன் என்னிடமே வந்து சேர் என ஆசிர்வதித்து மறைந்தார். மோகினி தன் பொறுப்பை நிறைவேற்ற முடியாவிட்டாலும், நாராயணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியுடன் மறைந்தாள்.

இதை எமதர்மன் கேள்விப்பட்டான். ஏகாதசியின் மகிமையை அறிந்த அவன், ஏகாதசி விரதம் இருந்து மரணம் அடைவோரை எமலோகத்திற்கு அழைத்துச் செல்வதை அறவே விட்டுவிட்டான். நாமும் சொர்க்கம் செல்ல ஏகாதசி விரதத்தை முறைப்படி இருப்போம்.

🌺ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம்🌺




No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...