ஸ்ரீ பாதம் தாங்கிகள்

ஸ்ரீரங்கம் போயிருந்த பொழுது அங்கு பெருமாள் புறப்பாடு நடப்பதைக் காண வாய்த்தது.


புறப்பாட்டில் பல்லக்கைத் தூக்கி வந்த இளைஞர்கள் வழியெங்கும் தங்கள் நடையை விசித்திரமான ஒரு நடனத்தைப்போல ஆடித் தூக்கி வந்தது, ஏதோ ஸ்ரீரங்கத்து பிராமண இளைஞர்களின் மனம்போன போக்கிலான ஒரு குதியாட்டம் என்று மட்டுமே அப்போது நான் எண்ணிக் கொண்டேன்.


வேளுக்குடி சொன்ன பிறகுதான் அதற்கெல்லாம் சரியான சம்பிரதாயப் பெயர்களும் அதற்கான விதிமுறைகளும் இருக்கின்றன என்று அறிந்து ஆச்சரியப்பட்டேன். ஒரு விஷயத்தை அறிந்துகொண்டு பார்த்து அனுபவிக்கும்பொழுது அதிலுள்ள சுவாரஸ்யமே தனிதான்! உங்களில் பலர் அவற்றை ஏற்கனவே அறிந்திருக்கக்கூடும். இருந்தாலும் மற்றவர்களுக்காக ஓரிரு வார்த்தைகள்.


சுவாமியின் பல்லக்குக்கு தோளுக்கினியான் என்ற பெயர் இருப்பதும், பல்லக்குத் தூக்கிகளுக்கு ஸ்ரீபாதம் தாங்கிகள் என்று பெயர் என்பதும் எனக்கு இத்தனை நாளாகத் தெரியாது!

பெருமாள் புறப்பாட்டின் ஆரம்பம், ஒரு கருடன் எப்படி சட்டென தன் சிறகை விரித்துப் பறக்குமோ அப்படிப் புறப்படுமாம். அப்பாங்கை கருடகதி என அழைப்பார்களாம்!


அதையடுத்து குகையில் இருந்து வெளியே வரும் ஒரு சிங்கம் எப்படி தன் இடப்பக்கமும் வலப்பக்கமும் தலையை லேசாகத் திருப்பி ஏதாவது அபாயம் உண்டா எனப் பார்த்துவிட்டுப் பின் சிங்கநடை போடுமோ அதுபோல ஸ்ரீபாதம் தாங்கிகள் நம்பெருமாளை கர்பக்கிரகத்திலிருந்து வெளியே தோலுக்கினியானில் தூக்கிப் புறப்படுவது சிம்மகதியாம்!


இதைத்தொடர்ந்து புலிபோல இரண்டுமூன்று அடிஎடுத்து வைப்பது பின் நிறுத்துவது, மீண்டும் இரண்டுமூன்று அடியெடுத்து வைத்துப் போவதை வியாக்ரகதி என்கிறார்கள்.


அதையடுத்து காளைமாடுபோல மணியோசையுடன் நடப்பதை ரிஷபகதி என்றும் ஆண்யானைபோல நடப்பதை கஜகதி என்றும் சொல்கிறார்கள்.


புறப்பாடு முடிந்து திரும்பி வந்து கர்ப்பகிரகத்தில் நுழையும்போது எப்படி ஒரு பாம்பு தன் புற்றுக்குள் நுழையூம் முன்பு தன் தலையை சற்று தூக்கிப் பார்த்துவிட்டு பின் சட்டென கடிதில் உள்ளே நுழையுமோ அவ்விதம் நுழைவதை சர்பகதி என்கிறார்கள்.


கடைசியாக, எப்படி ஒரு அன்னப் பறவை தன் சிறகை சட்டென மடித்துக்கொண்டு உட்காருமோ அப்படி உள்ளே நுழைந்த பெருமாளை சட்டென அமர_வைப்பதை_ஹம்சகதி என்று பெயரிட்டு வைத்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் அறிந்து மகிழ்ந்தேன் இன்று நான்.


'ஏன் ஸ்ரீபாதம்தாங்கிகள் வழியில் வெறுமே நிற்கும்போதுகூட சற்றே இடதுபுறமும் வலதுபுறமும் சாய்ந்துசாய்ந்து பெருமாளை தாலாட்டிக் கொண்டே இருக்கிறார்கள்? ஆயக்கால் போட்டு நிறுத்திவிட வேண்டியதுதானே?' என்று நான் பலநாள் நினைத்ததுண்டு. அப்படி ஆயக்கால் போட்டு நிறுத்துவது பெருமாள் கோயில்களில் வழக்கமில்லையாம்!

பெருமாள்_பாரத்தை-ஒரு பாரமாக_நினைப்பது_தவறாம்.

அடேங்கப்ப்ப்பா!

இதில் ஆச்சரியம் என்னவென்றால் முன்னே செல்லும் அறையர்சாமி ஸ்ரீபாதம் தாங்கிகளுடைய ஆட்டத்திற்கு ஏற்றதுபோல் இசைத்துக் கொண்டும் பாடிக் கொண்டும் செல்ல, தீப்பந்தம் பிடிப்போர் குடைபிடிப்போர் வெள்ளித்தடி ஏந்துவோர் ஆளவட்டப் பரிகாரகர் போன்றோரும் அதேகதியில் ஆடிக்கொண்டு செல்ல வேண்டுமாம்!


அது என்ன ஆளவட்டப் பரிகாரரர் என்கிறீர்களா?

பெருமாளுக்குவிசிறிவீசுபவர்

தவிர பெருமாள் சேஷவாகனம் கற்பகவிருட்ச வாகனம் யானை பசுவையாளிவாகம் ஆகியவற்றில் பயணிக்கும் பொழுது அதற்கு ஏற்றதுபோல எல்லா கதிகளும் மாற்றப்படுமாம்.


உதாரணமாக வையாளி வாகனத்தின் பொழுது அதாவது குதிரை வாகனத்தின் பொழுது இரண்டுநடை வேகமாகச் சென்றுவிட்டுப் பின் ஒருமுறை இடப்புறமாக சுற்றிவிட்டு அடுத்து ஒருமுறை #வலப்பக்கமாகச் சுற்றிவிட்டு மீண்டும் இரண்டுநடை தோளுக்கினியானைத் தூக்கி நடப்பார்களாம்.


சரி, எப்படி இந்த இளைஞர்களால் இப்படி தேர்ந்த நடனக் கலைஞர்களைப்போல இந்த அளவுக்கு அப்படித் தாளம் தப்பாமல் ஆடிக்கொண்டே பல்லக்கைத் தூக்கிச் செல்ல முடிகிறது?


இந்தப் பணிக்கு அத்தனை எளிதில் ஆளை நியமித்துவிட மாட்டார்களாம்.

முதலில் சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இடதுதோள் பழக்கமா வலதுதோள் பழக்கமா என்ன உயரம் என்பதையெல்லாம் கவனித்து அதன்பிறகு அவர்களுக்கு வெறும் தோளுக்கினியானைத் தூக்கிக்கொண்டு காவிரி மணலில் பல மாதங்கள் பயிற்சி எடுக்கச் சொல்வார்களாம்.


அவர்கள் தேர்ந்த ஸ்ரீபாதம் தாங்கிகளாக ஆகிவிட்டார்கள் என்று நிர்வாகத்திற்கு சமாதானம் உண்டானால்தான் அவர்கள் அந்தப் பணிக்கு அமர்த்தப்படுவார்களாம்.

ஆச்சரியமாக இல்லை?
உங்களுக்கு இல்லை என்றாலும் எனக்கு இருக்கிறது.

ஸ்ரீரங்கத்தைப் பற்றிய செய்திகள் எடுக்கஎடுக்க வற்றாத அமுதசுரபியைப்போல வந்துகொண்டே இருக்கின்றன. கேட்பதற்கு சில இனிமையாகயும் பல ஆச்சர்யமாகவும் இருக்கிறது எனக்கு.

நான் இத்தனைமுறை அங்கு சென்றிருந்தும் இதுவரை நான் பார்த்தும் பார்க்காத கேட்டும் கேட்காத விஷயங்களை இன்னொருமுறை சரியாகப் பார்த்துக்கேட்டு மகிழவேண்டும் என என் சிந்தைமிக விழைகிறது இப்போது.

தவிர நேற்று இரவு என் கனவில் திருமங்கையாழ்வார் வந்து என்னை திட்டிவிட்டுப் போனார்.

'சிறப்பாக வாழத்தகுந்த பெரியகோவில் எனப்படும் மதில்சூழ் திருவரங்கத்துக்குப் போய்ச்சேராமல் ஏன் இப்படி காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறீர்?' என்று.

'மருவிய பெரியகோயில் மதிள்திருவரங்கம் என்னா கருவிலே திருவிலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே?'

புறப்பட்டுவிட வேண்டியதுதான்!

சரணம் சரணம் ஸ்ரீரங்கா !
திருவடி சரணம் ஸ்ரீரங்கா !


No comments:

Featured Post

Agasthiyar Malai Trek | Pothigai Malai Trek | Agathiyarkoodam Off Season Package | Trek Booking

Hi All, Today I'm going to share about AgasthyaMalai Trek Booking. Read all the instructions carefully before going to book. Agasth...