கும்பகோணத்தின் சிறப்புகள்:
1. கும்பகோணம் குடந்தை என்றும் அழைக்கப்படுகிறது. குடந்தை என்பது குடமூக்கு என்பதன் சுருக்கமாகும்.
2. குடந்தை என்ற சொல்லுக்கு வளைவு என்று பொருள். காவிரி நதி வலமாக சுழித்து கும்பகோணம் சென்று வளைந்து பின் முகத்துவாரம் நோக்கி செல்வதால் குடமூக்கு என்ற பெயர் ஏற்பட்டது.
3. காவிரி, யமுனை, கங்கை, சரஸ்வதி முதலான நதிகள் எல்லாம் குடந்தையில் உள்ளன என்று திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.
4. சோழ மன்னர்கள் தங்கள் கருவூலத்தை பாதுகாப்பு கருதி கும்பகோணத்தில் அமைத்தனர்.
5. சிவரகசியம் நூலை சூத முனிவர் உலகில் மற்ற முனிவர்களுக்கு எடுத்துரைத்தார். அந்த சிவரகசியத்தில் கும்பகோணத்தின் சிறப்புப் பற்றி கூறப்பட்டுள்ளது.
6. உலக உயிர்கள் வினையில் இருந்து நீங்கி மோட்சம் பெற கும்பகோணம் தலம் உதவும் என்று சிவபெருமானே அருளியுள்ளார்.
7. கும்பகோணத்தில் மாந்தாதா என்ற அரசன் கும்பலிங்கத்தை வைத்துப் பூசை செய்ததன் பயனாக உலகம் முழுவதையும் ஆட்சி செய்யும் ஏக சக்ராதிபதியாக விளங்கினான்.
8. மாளவ நாட்டு வேந்தன் சத்திய கீர்த்தி பிராமணனைக் கொன்ற பாவம் நீங்க இத்தலத்தில் உள்ள காசிப தீர்த்தத்தில் நீராடிப் பயனடைந்தான்.
9. சந்திரன் சோமலிங்க அர்ச்சனை செய்து நோயில் இருந்து நீங்கினான்.
10. குபேரன் இத்தலத்து இறைவனை வணங்கிக் குபேரபுரிக்குத் தலைவன் ஆனான்.
11. திருமால் இத்தலத்தில் பூசை செய்து வைகுந்தத்தில் இருக்கும் பேறுபெற்றார்.
12. தட்சன் யாகத்திற்கு சென்ற தேவர்கள் துன்பத்தை சந்திக்க நேர்ந்தது. உடனே அவர்கள் கும்பகோணத்தில் உள்ள இறைவனை வழிபட்டு துன்பம் தீர்த்து கொண்டனர்.
13. சூரியன் ஒளியை அழிக்கும் படி மயனை அவன் மனைவி தூண்டினாள். சூரியன் மயனால் ஒளி இழந்தான். சூரியன் கும்பகோணம் வந்து பெருமானை வழிபட்டு மீண்டும் ஒளி பெற்றான்.
14. வானவர்களும் பெறாத மகத்துவத்தைக் கும்பகோணத்தில் வழிபாடு செய்தவர்கள் பெறலாம்.
15. வடமொழி புராணங்களில் ஒன்றான பவிஷ்யோத்ர புராணத்தில் கும்பகோணம் மகாமக மகிமை பற்றி சொல்லப்பட்டுள்ளது.
16. யாழ்ப்பாணத்தை சேர்ந்த முருகேசன் பிள்ளை ‘‘குடந்தை சிலேடை வெண்பா’’ பாடி உள்ளார்.
17. காசியைப் போலவே கும்பகோணத்திலும் எட்டுத் திசைகளிலும் எட்டுப் பைரவர்கள் இருந்து காப்பதாகச் சம்பிரதாயம் உண்டு. இங்கே ஞானாம்பிகையுடனான பைரவேசர் கோவில் கொண்டிருக்கிறார். இந்த இடத்துக்குத் தர்பாரண்யம் என்று பெயர்.
18. ‘சேதுவில் காசியில் செய்பெரும் பாவம் கோதிலாக் கும்பகோணத்தில் தீரும்’ என்பது கும்பேசர் குறவஞ்சி. இவ்வகையில் காசியைக் காட்டிலும் பெருமையை அடைகிற நகரமாகத் திகழ்கிறது குடந்தை மாநகர்.
19. மகாமகம் குளம் மொத்தம் 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
20. சூரியனுக்கு நேர் எதிரே குருவும், சந்திரனும் இருக்கும் கிரக நிலையில் இந்த மூன்று கிரகங்களின் கதிரியக்கமும் ஒன்று சேரும் இடமாக மகாமக குளம் இருக்கிறது. எனவேதான் புத்திர பாக்கியம், செல்வப் பேறு முதலான எல்லாம் தரும்.
21. மகாமகம் குளத்தில் நீராடிய அரசர்கள் பொன், பூமி, கன்னிகை, வஸ்திரம், பசு, குதிரை, காளைமாடு, அன்னம், தென்னை, குப்ததானம், சந்தனம், முத்து, நவரத்தினம், தேன், உப்பு, பழங்கள் எனப்படும் 16 தானங்களைச் செய்தார்கள். இந்தத் தானங்கள் எப்படிச் செய்வது என்ற விவரம் குளக்கரையை ஒட்டியிருக்கும் தான மண்டபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
22. ‘ராஜகேசரி’ என்ற சோழ அரசன் ஒருவனுடைய தொன்மையான கல்வெட்டில் மகாமகம் பற்றிய குறிப்புள்ளது. இவன் முதல் ராஜராஜ சோழனுக்கு முற்பட்ட அரசன் ஆவான்.
23. மகாமக வருடம் துவங்கியதிலிருந்து அதாவது சிம்மகுரு காலத்தில் உள்ள எல்லா நாட்களிலும் புனித நீராடலாம். மாசி மாதத்தில் குளிப்பது மிகவும் விசேஷம்.
24. மற்ற வருடங்களில் மாசி மாத மகம் நட்சத்திர நாள், சித்திரைப் பிறப்பு, கார்த்திகைச் சோமவார நாட்கள், அமாவாசை, பவுர்ணமி, சூரிய சந்திரகிரகண நாட்கள், உத்தராயனம், தட்சிணாயனம், விஷுபுண்ய காலம், கிருஷ்ணபட்ச அஷ்டமி, சிவராத்திரி, சுக்ரவாரம், கபில சஷ்டி ஆகிய நாட்களில் குளிப்பது விசேஷம்.
25. கும்பகோணத்தில் நுழையும் முன் பஞ்சக்குரோசத் தலங்களைத் தரிசிப்பதும், அஷ்டாதசத் தலங்களைத் தரிசிப்பதும் கூடுதல் பலன்களை தரும்.
26. மாசி மக நீராடலைப் பிதுர் மகா ஸ்நானம் என்று, மகாபுராண அம்மானை நூல் கூறுகின்றது. இதற்கேற்ப மாசி மகத்தன்று இறந்தவர்களுக்குப் பித்ருகடன் தீர்க்க எள்ளும் நீரும் கொடுக்கும் சடங்கு நடைபெறுவதை, மாசி மகத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஆண்டு தோறும் காணலாம்.
27. மாசி மகத்தன்று விரதமிருந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால், ஆண் சந்ததி உண்டாகும் என்பது நம்பிக்கை.
28. மாசி மாதம் முழுவதுமே புண்ணிய நீராட ஏற்ற நாட்கள் ஆகும்.
29. மகாமக விழாவை முதலில் துவக்கி வைத்தவர் பிரம்மா.
30. மகாமகக் கிணறு என்னும் சிம்மக் கிணறு திருக்கோஷ்டியூரில் உள்ளது. இதில் மாசி மகத்தில் நீராடுவது சிறப்பு. மாசிமகத்தன்று இங்குத் தெப்பத்திருவிழா நடைபெறும். சவுமிநாராயணரிடம் ஏதாவது வேண்டுகோள் வைத்து அது நிறைவேறியவர்கள், தெப்பக்குளத்தில் தீபமேற்றி வழிபடுவது சிறப்பாகும்.
31. குடத்தின் வடிவில் உள்ள கும்பகோணம் மகாமகக் குளம் கிழக்கு மேற்காக நீள் சதுரமாகவும், வடகரையும் தென்கரையும் சிறிது உள்வளைந்தும், கிழக்கில் குறுகியும், மேற்கில் அகன்றும் அள்ளது. இதை மேலிருந்து பார்த்தால் குடம்போல காட்சியளிக்கும்.
32. இக்குளத்தில் புனித நீராடினால் அமுதக் குடத்திற்குள்ளேயே நீராடியது போலாகும்.
33. பவுர்ணமி அன்று நீராடுவோருக்கு, ஏழேழு பிறவிக்கும் நன்மை ஏற்படும்.
34. மகாமகக்குளத்தில் நீராடுவதற்கு அமாவாசை, பவுர்ணமி, மாதப் பிறப்பு, வெள்ளிக்கிழமை, கார்த்திகை நட்சத்திரம், சிவராத்திரி, மாசிமகம், மகாமகம் ஆகிய நாட்கள் சிறப்பானவையாகும்.
35. மகாமகம் தினத்தன்று கும்பகோணத்தில் உள்ள ஐந்து வைணவத் தலங்களில் இருந்து பெருமாள் புறப்பட்டு காவிரி கரைக்கு சென்று தீர்த்தவாரி செய்வார்கள்.
36. மகாமகம் விழாவில் பங்கேற்க கும்பகோணம் செல்பவர்கள் கும்பேஸ்வரர், காசிவிசுவநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், ஆதிகம்பட்ட விசுவநாதர், கோடீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்த கலசநாதர் ஆகிய 12 சைவ தலங்களுக்கும் சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, அனுமார், சாரநாராயணை பெருமாள், திவராக பெருமாள், ராஜ கோபாலசாமி ஆகிய 7 வைணவத் தலங்களுக்கும் ஆக மொத்தம் 19 ஆலயங்களுக்கு சென்று வழிபட்டால் அதிகப்படியான பலன்களை பெறலாம்.
37. மகாமகம் விழாவுக்கு செல்பவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோவில், பட்டீஸ்வரம், தாராசுரம், திருக்கருகாவூர், சுவாமி மலை, 108 சிவாலயம், இன்னம்பூர், திருவலஞ்சுழி ஆகிய ஊர்களில் உள்ள ஆலயங்களுக்கும் சென்று வரும் வகையில் பயணத்திட்டத்தை அமைத்துக் கொண்டால் பயணம் ஆத்மார்த்தமாக மாறும்.
38. பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் ஆவதைப் போல குரு சூரியனை சுற்றி வர 4332 நாட்களாகும். இது சரியாக 12 ஆண்டுகள் இல்லை. 11.868 ஆண்டுகளாக கணக்கிடப்படுகிறது. இதனால் சில தடவை 11 ஆண்டுகளிலேயே மகாமகம் வந்து விடும். 1600, 1683, 1778, 1861, 1956 ஆகிய வருடங்களில் 11 வருட மகாமகம்தான் கொண்டாடப்பட்டது. இந்த மகாமகத்தை ‘‘இளமாமாங்கம்’’ என்று அழைக்கிறார்கள்.
39. கும்பகோணத்தில் அமுத குடத்தை சிவபெருமான், வேடன் வேடத்தில் வந்து அம்பு எய்ததை பிரதிபலிக்கும் சிலை ஒன்று கும்பேஸ்வரர் ஆலயத்தில் உள்ளது.
40. மகாமகம் விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அருள் தருவதை பிரதிபலிக்கும் வகையில் கும்பேஸ்வரர் ஆலயத்தில் மங்களாம்பிகை தன் வலது கரத்தில் கெண்டி ஏந்தி காட்சி தருகிறாள்.
41. மகாமகம் குளத்தில் நீராடினால் காசியில் 100 ஆண்டுகள் வாழ்ந்த புண்ணியமும், உலகை வலம் வந்த பலனும் கிடைக்கும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
42. குடந்தை நாகேஸ்வரர் ஆலயத்துக்கு தரிசனம் செய்ய செல்லும் போது மறக்காமல் 4 யானைகள் பூட்டப்பட்ட தேர் வடிவில் இருக்கும் நடராஜர் சன்னதியை காண தவறாதீர்கள். அந்த சன்னதி தேரில் உள்ள சக்கரம்தான் நமது தேசியக்கொடி நடுவில் உள்ள சக்கரமாக மாறியது என்கிறார்கள்.
43. நாகேஸ்வரர் ஆலய கருவறை முன் மண்டபத்தில் இருக்கும் கங்கை கொண்ட விநாயகர் சிலை மிக, மிக அழகானது. பார்த்தால் ரசிப்பீர்கள்.
44. நாகேஸ்வரர் ஆலய பிரகாரத்தில் பகவத் சித்தரின் ஜீவசமாதி உள்ளது. அங்கு சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்யலாம்.
45. எல்லா தலங்களையும், நகரங்களையும் பிரம்மன் படைத்தான். ஆனால் கும்பகோணத்தை சிவபெருமானே உருவாக்கினார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
46. மகாமகத்தில் நீராடும் நவநதிகள் எவை-எவை என்பதில் புராணங்களில் மாறுபட்ட தகவல்கள் உள்ளன. 47. மகாமகத் திருநாள் சிம்மகுருவாக இருக்கும் நிலையில்தான் கொண்டாடப்பட வேண்டும் என்பதே முக்கியமான விதியாகும்.
48. மகாமகம் குளத்தில் உரிய விதிமுறைப்படி புனித நீராடாவிட்டால் எதிர்விளைவுகள் ஏற்படும் என்று புராணங்களில் எச்சரிக்கப்பட்டுள்ளது. முறைப்படி செய்யாத மகாமக ஸ்நானம், அதுவரை அவர்கள் செய்துள்ள புண்ணியத்தையும் தொலைத்து விடும் என்று திருக்குடந்தை புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
49. மகாமக ஆண்டில் மங்கல காரியங்கள் செய்யக் கூடாது என்று ஒரு பேச்சு உள்ளது. ஆனால் மகாமக தீர்த்த யாத்திரைக்கு இடையூறு இல்லாத வகையில் திருமணம் உள்ளிட்ட மங்கல காரியங்களை செய்யலாம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
50. கும்பகோணம் பெரிய கடை வீதியில் தசாவதார கோவில் இருக்கிறது.
51. கும்பகோணம் சாத்தாரத்தெருவில் ‘‘திருமழிசைப் பிரான் ஆலயம்’’ உள்ளது. இது பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருமழிசை ஆழ்வார் சித்தியான இடமாகும்.
52. குடந்தை கும்பேஸ்வரரை நேரில்தான் தரிசனம் செய்ய வேண்டும் என்பது இல்லை. அவர் இருக்கும் திசை நோக்கி நின்று முறைப்படி வழிபட்டால் கும்பேஸ்வரரின் அருள் கிடைக்கும். 53. மகாமக விழாவை முன்னிட்டு 25 எஸ்.பி.க்கள் மேற்பார்வையில் 21 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
54. அசம்பாவிதத்தை தவிர்க்க கும்பகோணம் முழுவதும் 213 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
55. கும்பகோணம் நகருக்குள் பக்தர்கள் இடையூறு இல்லாமல் சென்று வருவதற்காக 83 இடங்களில் காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
56. மகாமகம் குளத்தின் தென்கரையில் உள்ள திருமண மண்டபத்தில் ‘மாஸ்டர் கன்ட்ரோல் ரூம்’ அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கும்பகோணம் நகரம் முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
57. பக்தர்களுக்கு உதவுவதற்காக கும்பகோணம் மற்றும் புறநகர் பகுதிகளில் 36 தற்காலிக காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
58. மகாமகம் குளத்தின் நடுவில் உள்ள நீராழி மண்டபத்தில் மின் விளக்குகள் எரிய செய்ய சூரிய தகடு பொருத்தப்பட்டுள்ளது. குளத்தின் உள்ளே மின்சார ஒயர்கள் கொண்டு செல்லக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
59. மகாமக புனித நீராடல் நடைபெறும் 10 நாட்களில், அவரவர் பிறந்த நட்சத்திரத்தில் நீராடினால் மிகுந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
60. உலகிலேயே பாவங்களை போக்கவல்ல முதன்மை தீர்த்தமாக மகாமகம் குளம் தீர்த்தம் கருதப்படுகிறது.
61. குடம் என்றால் மேற்கு என்று பொருள். மூக்கு என்றால் மூக்கு போன்று குறுகிய வடிவம் என்று அர்த்தமாகும். அதாவது குடந்தை நகரம் மேற்கே மூக்கு போன்று குறுகியும் கிழக்கில் அகன்றும் விளங்குவதால் குடமூக்கு என்ற பெயரை பெற்றதாக சொல்கிறார்கள்.
62. சங்க இலக்கியங்களில் குடந்தை என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் 1384-ம் ஆண்டு முதல் கும்பகோணம் என்று அழைக்கப்பட்டது. சாரங்கபாணி கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டு இதை உறுதிபடுத்துகிறது.
63. கும்பகோணம் என்ற சொல் வடமொழி சொல் ஆகும். வடமொழியில் குடம் என்றால் கும்பம், மூக்கு என்றால் கோணம் என்று அர்த்தமாகும். அந்த அடிப்படையில் ஏற்பட்ட கும்பகோணம் என்ற பெயர் கடந்த 600 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.
64. ‘குடமெடுத்து ஆடிய எந்தை’ என்ற பாடல் வரியே குடந்தையாக மாறியதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
65. கும்பகோணத்துக்கு பாஸ்கரசேத்திரம், கல்யாணபுரம், தேவலோகப்பட்டனம், சிவவிஷ்ணுபுரம், மந்திராதி தேவஸ்தானம், சாரங்கராஜன்பட்டினம், சேந்திரசாரம், ஒளிர்மிகு பட்டணம் உள்பட பல பெயர்கள் இருந்தன. இந்த பெயர்கள் தற்போது வழக்கில் இல்லை.
66. கும்பகோணம் நகரில் 100-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன.
67. சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளுக்கும் கும்பகோணத்தில் ஆலயங்கள் உள்ளன.
68. மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை தன்னுடைய திருக்குடந்தை புராணம், மங்களாம்பிகைப் பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களில் கும்பேசுவரரையும், மங்களாம்பிகையையும் போற்றி பாடியுள்ளார்.
69. கும்பகோணம் நகரிலும், அதை சுற்றி பத்து மைல் பரப்பிலும், 37 சிவத்தலங்களும், 10 வைணவ திவ்ய தேசங்களும் காணப்படுகின்றன. சோழ நாட்டைத் தவிர, எஞ்சிய எட்டு நாட்டுப் பிரிவுகள் ஒன்றிலுமே இவ்வளவு அதிகமான பழமையான ஆலயங்கள் காணப்படவில்லை.
70. மரசித்திர வேலைக்கு புகழ் பெற்றது கும்பகோணம் ஆலயங்கள்.
71. கும்பகோணத்தில் வைணவ, மத்வ, சைவ மடங்கள் உள்ளன. அஹோபிலமடம், வியாசராய மடம், ராகவேந்திர மடம், திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் ஆதீன மடங்கள் இவைகளில் முக்கியமானவை.
72. கும்பகோணமும், அதை சுற்றியுள்ள சிறு பகுதி யும், வித்யாதீர்த்தர், சங்கரானந்தர், போதேந்திரர், மஹாதேவேந்திர யதி, விஜயீந்திர தீர்த்தர் போன்ற ஆசார்ய பெருந்தகைகளுடன் தொடர்பு உள்ளது.
73. தலைசிறந்த அமைச்சர்களும், நிர்வாகிகளும், ராஜதந் திரிகளும், பத்திரிகை ஆசிரியர்களும், வழக்கறிஞர்களும், மேதைகளும், மருத்துவர்களும், கும்பகோணத்திலும் அதை சுற்றிலும் பிறந்து புகழடைந்தனர்.
74. கும்பகோணம் அரசினர் ஆண்கள் கல்லூரி கி.பி. 1894-ல் தொடங்கப் பெற்று பிற நாட்டவரால் ‘தென்னிந்திய கேம்பிரிட்ஜ்’ என்று புகழ் பெயர் சூட்டப் பெற்ற பழம் பெரும் கல்வி நிலையமாகும்.
75. சங்ககாலத்தில் சோழர்கள் தம் நாட்டுமக்கள் தந்த வரிப்பணத்தை இந்தக் குடந்தை நகரில் வைத்துப் பாதுகாத்துவந்தனர். இதனைச் சங்ககாலச் சோழரின் செல்வக் கருவூலம் எனலாம்.
No comments:
Post a Comment