''சுவாமி! பூமியில் நாம் பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி பிறக்காமல் இருக்க என்ன வழி?'' எனக் கேட்டார் பக்தர் ஒருவர்.
'' பிறப்புக்குக் காரணம் என்ன? நாம் ஏதோ தப்பு பண்ணியிருக்கிறோம். அதற்கு தண்டனையாகத் தான் பிறப்பு எடுத்திருக்கிறோம். செய்த தப்புக்கு இத்தனை கசையடி வாங்க வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. இந்த உடம்பின் மூலம் நோய், துன்பம் என்னும் கசையடிகளைப் பெறுகிறோம். இந்த உடம்பு போன பின் எஞ்சிய கசையடிகளைப் பெறவும், இந்த உடம்புடன் செய்த பாவத்திற்கான கசையடிகளைப் பெறவும் மீண்டும் பிறக்கிறோம். புதுஉடம்பு கசையடிகளை வாங்கத் தொடங்குகிறது.
இப்படி கோபம்,காமத்தால் மனிதன் பாவத்தில் ஈடுபடுகிறான். கோபத்துக்குக் காரணம் பற்று. அதாவது ஆசை. மனதில் நிறைய ஆசைகளை வளர்த்துக் கொண்டால் அது பாவத்தில் தள்ளி விடுகிறது.
'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு' என்கிறார் திருவள்ளுவர். பற்று இன்றி வாழ விரும்பினால் நாம் கடவுளின் திருவடிகளை கெட்டியாக பற்றிக் கொள்ள வேண்டும்.
ஆசைக்கு என்ன காரணம்? உலகில் நம்மைத் தவிர, இன்னொன்று மேலானது என எண்ணும் போது மனதில் ஆசை பிறக்கிறது. உண்மையில் 'சிவம்' ஒன்றே எல்லாமுமாக இருக்கிறது என்ற உண்மை புரிந்தால் ஆசை, கோபம் உண்டாகாது.
ஒரு மாடு கண்ணாடியில் தன்னைக் கண்டால், இன்னொரு மாடு எனக் கருதி முட்டப் போகும். மனிதன் தன் பிம்பத்தைப் பார்த்தால் முட்டுவானா? அதுவும், தானும் ஒன்று எனப் புரிந்து கொண்டு சாந்தமாக இருப்பான். அதுபோலத் தான் உலகமும். நாம் பார்க்கும் எல்லாம் ஒன்றே. இரண்டாவது என்பதே இல்லை என்ற தெளிவு மனதில் இருக்க வேண்டும். அந்த ஞானம் வந்தால் பிறகே துக்கம், பயம் நம்மை விட்டு நீங்கும். அதன் பின் பிறப்பு உண்டாகாது.
மிருக நிலையில் இருந்து மனித நிலைக்கும், அதன் பின் தெய்வ நிலைக்கும் உயர வேண்டும். ஆசை, காமம், கோபத்தை கைவிட்டால் மனிதன் தெய்வமாக உயரலாம். மனிதன் நல்லவனாக வாழச் செய்யவே மதங்கள் தோன்றின'' என்றார் மகாசுவாமிகள்.
No comments:
Post a Comment