இரண்டுமே அவதாரம் துவாபரயுகத்தில் சாத்தியமா?

இராமாயண யுத்தம் முடிந்து ராமரும் சீதையும் லஷ்மணர் சமேதியாக அயோத்திக்குத் திரும்பினார்கள். அதன் பின் பல நிகழ்ச்சிகள் நடந்தன. ராமரும் லஷ்மணரும் அவரவர் அவதாராம் முடிந்து அடுத்த அவதாரம் எடுக்கச் சென்று விட்டனர். அப்போது கடைசி கட்டத்தில் ராமரைப் பார்த்து தம்பி லஷ்மணர் கேட்டார்” அண்ணா எனக்கு ஒரு ஆசை. நான் இதுவரை நீங்கள் கூறியபடியேதான் நடந்து வந்துள்ளேன். ஆனால் என்னால் சுயமாக சிந்திக்க முடியாமல் போய் விட்டது. ஆகவே நான் அடுத்த ஜென்மத்திலாவது, அது என்ன பிறப்பாக இருந்தாலும், நானாக முடிவெடுக்கும் நிலையில் இருக்க வேண்டும் என்பது மட்டும் அல்ல, அந்த அவதாரத்திலும் உங்களுக்குத் துணையாக இருக்கவே விரும்புகிறேன்” எனக் கேட்டார். ராமர் சிரித்து விட்டு ‘அப்படி ஆகட்டும்’ என்று கூறி விட்டு சென்றப் பின் சில நாட்களிலேயே இருவரும் தாம் எடுத்த அவதாரங்களை முடித்துக் கொண்டார்கள். அடுத்த அவதாரத்தில் ராமர் கிருஷ்ணராகவும், லஷ்மணர் பலராமனாகவும் அவதாரம் எடுத்தார்கள்.

ஆனால் பாலராமரின் பிறப்பு சில காரணங்களினால், தேவகி மற்றும் ரோஹிணி என்ற இரு தாயார்களின் வயிற்றில் வளர்ந்து பிறப்பு எடுக்கும் நிலையில் நிகழ்ந்தது. அதனால்தான் அவரை சம்கர்ஷன் அதாவது இரு கருவில் வளர்ந்தவர் என்ற பெயரிலும் அழைத்தார்கள். லஷ்மணர் ஏன் பலராம அவதாரம் எடுத்தார்? அதற்கும் ஒரு பிண்ணனி கதை உண்டு. ராம அவதாரம் முடிந்தப் பின் அடுத்த அவதாரத்தை எடுக்க வேண்டி இருந்த விஷ்ணு லஷ்மணரை பாலராமராகவும், தன்னை கிருஷ்ணராகவும் -அண்ணன் தம்பிகளாக – அவதாரம் எடுக்க முடிவு செய்தார். வேடிக்கை என்ன என்றால் சம காலத்தில் விஷ்ணு பகவான் இரண்டு அவதாரங்களில் காட்சி அளிக்க வேண்டியதாயிற்று.

முதலில் கீழே உள்ள கதையைப் படியுங்கள்.
ஒரு நாள் ஆதிசேஷன் மீது அமைதியாகப் படுத்துக் கொண்டு இருந்த விஷ்ணு பகவானிடம் சென்ற நாரத முனிவர் அவரிடம் கேட்டார் ‘ ஐயனே நீங்கள் உங்களது எட்டாவது அவதாரத்தில் பாலராமராகவும், ஒன்பதாவது அவதாரத்தில் கிருஷ்ணராகவும் பிறந்து உள்ளதாக கூறுகிறார்கள். ஆனால் இரண்டுமே துவாபர யுகத்தில் தான் நடந்துள்ளது. உங்களால் எப்படி இரண்டு பிறப்புக்களை சமகாலத்தில் எடுக்க முடிந்தது? அது சாத்தியமா? மேலும் அப்படி சம காலத்தில் எடுத்த அவதாரத்தின் தத்துவாத்தம் என்ன?

விஷ்ணு பகவான் கூறினார் , ‘நாரதா உன் சந்தேகம் வலுவானது தான். என்ன செய்வது? சில காரணங்களினால் சிலவற்றை நடத்திக் காட்டும் பொறுப்பை நான் ஏற்று உள்ளேன். அவற்றில் ஒன்றே பலராம அவதாரமும். நான் ஒரு அவதாரத்தில் ராமனாகப் பிறந்து இருந்தபோது, என்னுடைய தம்பியாக லஷ்மணன் இருந்தார். அந்த லஷ்மணன் யார்? என்னுடைய படுக்கையான ஆதிசேஷனே லஷ்மணனாக பிறப்பை எடுத்து இருந்தது. அடுத்து கிருஷ்ணருக்கு உதவியாக இருக்கப் பிறந்த பலராமன் யார்? ஆதிசேஷனே பலராமனும். உங்களின் அவதாரம் பலராமர் என்றால், அவர் எப்படி ஆதிஷேஷனுடைய அவதாரமாக இருக்க முடியும் என்று யோசனை செய்கிறாயா?

நாரதா….கவனமாகக் கேள்………. என்னால் பல அவதாரங்களை ஒரே நேரத்தில் எடுக்க முடியும். ஆனால் அனைவரினாலும் அவற்றை செய்ய முடியாது. நான் தசாவதாரம் எடுத்து சில காரியங்களை செய்ய வேண்டும் என்ற நியதி இருந்ததினால் என்னையும் படைத்த பரப்பிரும்மன் எனக்கு சில விசேஷ சக்திகளை அளித்து உள்ளார். அதில் ஒன்றுதான் பல ரூபங்களை ஒரே நேரத்தில் எடுக்கும் நிலை. நான் எந்த அவதாரத்தை எடுத்தாலும், என்னுடைய மூல அவதாரத்தை (விஷ்ணு) களங்கப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை. ஆகவே நான் எந்த அவதாரத்தை எடுத்தாலும், என்னுடைய மூல அவதாரத்தின் துணை எனக்குத் தேவை எனக் கருதியதினால் , என்னுடைய சக்தியில் ஒரு பாகத்தை கொண்டு ஆதிசேஷனை படைத்து அதில் என்னை வைத்துக் கொண்டு இருந்தேன். ஒவ்வொரு அவதாரத்திலும் எனக்குத் துணையாக ஆதிஷேஷனுக்குள் உள்ள என் சக்தியும் ஒரு உரு எடுத்து என்னுடன் துணையாக வர வேண்டும் என்று எண்ணியே அப்படி ஒரு ஏற்பாட்டை செய்தேன். அதில் வந்துள்ளதே பலராம அவதாரமும். அதாவது என் மாயையான ஆதிசேஷனின் மூலம் வெளிவந்த அவதாரமும்.

ராம அவதாரம் எடுத்தபோது நான் என்னுடைய விஷ்ணு அவதாரத்தை துறந்திருன்தேனா? எனக்குள் உள்ள பல சக்திகளில் ஒன்றான ஒரு சக்தியின் ஆதிசேஷனே லஷ்மணராகவும், பாலராமராகவும் அவதாரங்களை எடுத்தபோது கூட விஷ்ணுவாக நான் இருந்தபோது எனக்கு படுக்கையாகவும் இருந்து வந்தார். ஆதிசேஷன் என்பது என்னால் படைக்கப்பட்ட ஒரு மாயையான உருவமே. ஆகவே ஆதிசேஷன் பாலராமராகவும், லஷ்மணராக அவதாரத்தை எடுத்ததாக சொல்லப்பட்டாலும், இருவருமே என் மாய ரூபங்களே.

நான் ராம அவதாரத்தில் இருந்தபோது என்னை வேண்டித் துதித்த பலரும், பல நன்மைகளை அடைந்தார்கள். ஆனால் என்னுடன் எப்போதும் இருந்த, என் கால்களில் தினமும் விழுந்து வணங்கி வந்த தம்பி லக்ஷ்மணன் மட்டும் என்னுடன் சேர்ந்து பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டு இருந்தான். ஆகவேதான் ஒரு அவதாரத்திலாவது லஷ்மணனை எனக்கு மூத்தவராக அவதரிக்கக் எண்ணினேன். அப்போதுதானே என்னுடைய நன்றிக் கடனை தீர்க்க அவருடையக் காலில் நான் விழுந்து வணங்க முடியும்? இதுவே நான் எடுத்த எட்டாவது மற்றும் ஒன்பதாவது அவதாரங்களின் பலராம- கிருஷ்ணனின்- ரகசியங்கள்” என்று கூறியதும் நாரதர் முகத்தில் வெளியாகிக் கொண்டு இருந்த இன்னொரு சந்தேகத்தை விஷ்ணு பகவான் கண்டு கொண்டார். ஆகவே மீண்டும் நாரதரிடம் அவர் என்ன தயங்குகிறார் என்று விஷ்ணு கேட்க, நாரதரும், ஒரே நேரத்தில் எப்படி பல ரூபங்களை அதாவது அவதாரங்களை விஷ்ணுவால் எடுக்க முடியும் என்பதை நேரில் பார்த்தல் ஒழிய யாரும் நம்பமாட்டார்களே என்று யோசிப்பதாகக் கூற விஷ்ணு கூறினார் ” நாரதா உன் சந்தேகம் உண்மையில் இந்த உலகத்துக்கு நன்மை பயக்கும். ஆகவே தக்க சமயத்தில் நான் யார் என்பதையும், எனக்குள் அடங்கி உள்ள ரூபங்களையும் உலகறியச் செய்வேன். அதுவரை சற்று பொறுமையாக இரு” என்று கூறி விட்டு மறைந்து விட்டார். அதன் காரணமாகவே விஷ்ணு பகவான் கிருஷ்ணராக அவதரித்தபோது, அர்ஜுனனுடைய சந்தேகத்தின் மூலம் உலகறியச் செய்யும் விதமாக விஸ்வரூபக் காட்சியைத் தந்து தனக்குள் அடங்கி இருந்த அனைத்து ரூபங்களையும் வெளிப்படுத்தினார்.



No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...