மதுரையம்பதியின் பஞ்சபூத சிவ ஸ்தலங்களில் இம்மையில் நன்மை தருவார் திருக்கோயில் நிலத்திற்குரிய தலமாகும்
மூலவர்: இம்மையில் நன்மை தருவார்
அம்மன்: நடுவூர் நாயகி
பிறபெயர்: மத்யபுரி அம்மன்
தலமரம்: தசத்தல வில்வம்
தீர்த்தம்: சிவ தீர்த்தம்
திருவிளையாடல்:
சிவபெருமான் வளையல் விற்ற திருவிளையாடல் நடந்த திருத்தலம்.
சிறப்பு:
1. சிவபெருமான் தன்னை தானே பூஜை செய்த அற்புத திருத்தலம். பிரம்மன், திருமால், சக்தி, முருகன், மற்றும் தேவர்கள் பிரதிஷ்டை செய்த லிங்கங்களை நாம் பல தலங்களில் தரிசனம் செய்ந்திருப்போம். ஆனால், சிவனே பிரதிஷ்டை செய்த லிங்கத்தை இக்கோயிலில் மட்டுமே காண இயலும்.
2. மதுரையில் உள்ள பஞ்சபூத சிவஸ்தலங்களில், நிலத்திற்குரிய திருத்தலம் (ப்ரித்வி தலம்).
பழமை: யுகங்கள் தாண்டி நிற்கும் திருத்தலம்.
பயண வழிகாட்டல்:
1. மதுரை மத்திய பேருந்து நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது.
2. மதுரையிலுள்ள பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் இருந்து சுமார் 750 மீட்டர் தொலைவில் உள்ளது.
3. மதுரையிலுள்ள பிரசித்தி பெற்ற கூடலழகர் திருக்கோயிலில் இருந்து சுமார் 180 மீட்டர் தொலைவில் உள்ளது.
தலவரலாறு:
கயிலாயத்தில் நடந்த பார்வதி பரமேஸ்வரன் திருமணத்தைக் காண முனிவர்களும், தேவர்களும், கந்தர்வர்களும், கின்னர்களும், பக்தர்களும் குவிய துவங்கினர். அதனால் வடக்கு பகுதி தாழ்ந்து தெற்கு பகுதி உயர்ந்தது. சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை செல்லுமாறு ஈசன் கூறினார். அவ்வண்ணமே செய்தார் அகத்திய மாமுனி. அதனால் அவருக்கு மட்டும் திருமணத்தைக் காணும் பாக்கியம் கிட்டவில்லை. தென் திசை வந்த அகத்தியர் கடம்ப மரங்கள் உள்ள வனத்தில் சுயம்புவாக எழுந்தருளி இருந்த சொக்கநாதரை பூஜை செய்து வாழ்ந்து வந்தார். இருப்பினும் திருமணத்தைக் காண முடியாத ஏக்கம் அவருள் இருந்தது. தன் பக்தனின் குறையை தீர்க்க எண்ணினார் சிவபெருமான். அதன்படி, பார்வதி தேவி மதுரையை ஆண்ட மலையத்துவஜன் என்ற பாண்டிய மன்னனுக்கு மகளாக வந்தாள். மன்னன் வளர்த்த ஓம குண்டத்திலிருந்து மூன்று வயது குழந்தையாக வெளிப்பட்டாள். குழந்தை செல்வம் இல்லாத கொற்றவனும் தேவிக்கு மீனாட்சி என்ற திருநாமம் சூட்டி, சீராட்டி பாராட்டி வளர்த்தான். மங்கை மீனாட்சிக்கு மணிமகுடம் சாற்றி மதுரையம்பதியின் அரசியாக்கினான். காலங்கள் உருண்டோடின. திருமண வயதை அடைந்த மீனாட்சி திக் விஜய பயணம் மேற்கொண்டாள். கயிலாயத்தை அடைந்து சிவபெருமானை கண்டாள். காதல் வயப்பட்டு தன் நாடு திரும்பினாள். மீனாட்சிக்கு ஏற்பட்ட மாற்றத்தை அவள் அன்னையான காஞ்சனமாலை உணர்தாள். அம்மாற்றம் சிவபெருமானை கண்டதால் ஏற்பட்டது என்பதையும் அறிந்தாள். சிவபெருமானையே மாப்பிள்ளையாக பெறுவது என்பது பெறற்கரிய பாக்கியம். இருப்பினும், அது எப்படி சாத்தியப்படும் என விசனம் கொண்டாள். காஞ்சனமாலையின் துயரை நீக்கும் வண்ணம் அசரீரி ஒலித்தது. திருமண ஏற்பாடுகளை செய்ய துவங்குமாறு கூறியது. சிவபெருமானே கயிலையிலிருந்து மதுரையம்பதிக்கு வந்து அரசி மீனாட்சியை மணம் முடிப்பார் எனக் கூறியது. அவ்வண்ணமே மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மதுரையம்பதியில் கோலாகலமாக நடந்தது. அகத்தியரின் மனக்குறையும் அகன்றது. அரசி மீனாட்சியை மணந்த சுந்தரேஸ்வரர் மதுரையம்பதியின் அரசனானார். மதுரையை எட்டு மாதங்கள் சுந்தரேஸ்வரரும், நான்கு மாதங்கள் மீனாட்சியும் ஆட்சி செய்ய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அரச மரபுப்படி பொறுப்பை ஏற்பதற்கு முன் சிவ பூஜை செய்ய வேண்டும் என்பது நியதி. அதன்படி, சுந்தரேஸ்வரர் தனது ஆத்மாவையே பிராண பிரதிஷ்டை செய்து, தானே சிவ பூஜை செய்தார். தான் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்க்கு "இகா அபிஷ்ட வரப்பிரதேஸ்வரர்" என்ற நாமம் சூட்டினார். இந்த லிங்கமே நாம் இந்நாளில் காணும் "இம்மையில் நன்மை தருவார்" திருமேனி. அதாவது, இப்போதே இப்பிறவியிலேயே பாவத்தை நீக்கி முக்தி தருவார் என்று பொருள்.
கல் ஸ்ரீசக்கரம்.
அம்பாள் மத்தியபுரி நாயகி தனிசன்னதியில் இருக்கிறாள். மதுரையின் மத்தியில் இருப்பதால் இவளுக்கு இப்பெயர். திருமணமாகாதவர்கள் இவளிடம் வேண்டிக்கொள்ள நல்ல வரன் அமையும் என்பதால் இவளுக்கு, "மாங்கல்ய வரபிரசாதினி' என்றும் பெயருண்டு. தாமரை பீடத்தின் மீது நின்றிருக்கும் இந்த அம்பிகையின் பீடத்தில், கல்லால் ஆன ஸ்ரீசக்ரம் உள்ளது.பொதுவாக செம்பில் ஸ்ரீசக்ரம் வரைந்து பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால், இங்கு கல் ஸ்ரீசக்ரம் இருப்பது வித்தியாசமான அமைப்பு
தலப்பெருமைகள்:
1. கருவறையில் மூலவர் அருவுருவமாகவும் (லிங்க வடிவம்) உருவமாகவும் அருள்பாலிக்கிறார். லிங்க ப்ரதிஷ்டைக்கு பின் சிவபெருமான் மற்றும் அம்மனின் திருவுருவங்கள் உள்ளன. இத்தகைய அமைப்பை ஒருசில தலங்களில் மட்டுமே காணமுடியும்.
2. லிங்க திருமேனிக்கு முன் பின் புறங்கள் என்ற பாகுபாடு இல்லை. இருப்பினும் வேறெங்கும் இல்லாத வண்ணம் பக்தர்கள் லிங்க திருமேனியின் பின்புறத்தையே தரிசனம் செய்கிறார்கள். சிவபெருமான் மற்றும் அம்மன் சிவ பூஜை செய்வதால் லிங்க திருமேனியின் முன்புறம் அவர்களை நோக்கி உள்ளது.
3. கருவறையில் இறைவன் திருமண கோலத்தில் காட்சி தருகின்ற தலங்களில் இதுவும் ஒன்று.
4. அரசியான மீனாட்சிக்கு சிவபெருமான் வளையல் விற்றதாக கூறப்படும் திருக்கண் மண்டபம் இக்கோயிலில் தான் உள்ளது.
5. மேற்கு பார்த்த சிவாலயம்.
பரிந்துரை செய்யும் சண்டிகேஸ்வரர் :
பொதுவாக சிவன் கோவில்களில், அவரது கணக்காளரான சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு எதுவும் நடப்பதில்லை. ஆனால், இத்தலத்திலுள்ள சண்டிகேஸ்வரருக்கு பக்தர்கள் விசேஷ பூஜை செய்கிறார்கள். தீராத பிரச்சினைகளில் இருந்து விடுபட சிவனுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து, அதே மாலையை இவருக்கு அணிவித்து வழிபடுகிறார்கள். இதனால், சண்டிகேஸ்வரர் தங்களது பிரச்சினை தீர சிவனிடம் பரிந்துரை செய்வார் என்று நம்புகிறார்கள். எனவே இவரை பக்தர்கள், பரிந்துரைக்கும் சண்டிகேஸ்வரர்’ என்று அழைக்கிறார்கள்.
No comments:
Post a Comment