சிவபெருமான் சீதா தேவிக்கு அளித்த விலைமதிப்பற்ற உயர்ந்த பரிசு



கம்பராமாயணத்தில் அசோக வனக் காட்சியில் சீதை மரத்தடியில் அமர்ந்திருக்க, அந்த மரத்தின் மீது ஸ்ரீ ஆஞ்சநேயர் ராமபிரானிடம் இருந்து கொண்டு வந்த செய்தியுடன் அரக்கர்களுக்குத் தெரியாமல் அமர்ந்து இருக்கிறார். அச்சமயத்தில் , அங்கு வந்த இராவணன் , சீதா தேவியைப் பார்த்து " பெண்ணே! எவ்வாறு ஓடிவிட்ட நதியின் பிரவாகம், திரும்பப் போவதில்லையோ, அதே போலத் தான் இளமையும் போய்விட்டால் திரும்பாது. அதனால், உனது இளமைப் பருவத்தை வீணாக்காமல், என்னை மணந்து இலங்கையின் மகாராணி போல வாழலாமே " என்று ஆசை வார்த்தைகளைக் காட்டுகிறான். அதுகேட்ட சீதை, ஒரு துரும்பை அவன் முன் போட்டு புன்முறுவலுடன் பதில் கூறுகிறாள். இந்த இடத்தில் சீதை ஏன் புன்முறுவல் செய்கிறாள் . அதற்கான, காரணம் இது தான் .

சீதா தேவி , ஸ்ரீ ராமர் திருமணத்தின் போது : சீதா கல்யாணத்திற்கு அனைவருக்கும் அழைப்பு அனுப்பப் பட்டது. ஆனால், பரமேஸ்வரனுக்கு அழைப்பு அனுப்பவில்லையாம். இதற்குக் காரணம் , அவர் எல்லா இடங்களிலும் வியாபித்து இருப்பவர் அல்லவா? அதனால் அழைப்பை எந்த இடத்திற்கு அனுப்புவது என்று தெரியாமல் தான், அவருக்கு அழைப்பே அனுப்பவில்லையாம். ஆனால் பரமேஸ்வரன் சீதைக்குத் திருமணம் நடப்பதை அறிந்து கொண்டு, அதைக் காண ஓடோடி வந்தார். ஆனால், என்ன செய்ய அவர் வருவதற்குள் திருமணம் முடிந்து மக்கள் வந்திருந்த பெரியவர்களை நமஸ்கரித்துக் கொண்டு இருந்தார்கள்.

பரமசிவனைக் கண்ட இராமபிரானும், சீதாதேவியும், அவரது பாதம் தொட்டுப் பணிந்து நமஸ்கரித்தனர். சீதை சிவபெருமானிடம், " தாங்கள் எங்களுக்கு தங்களது ஆசிர்வாதம் என்ற அந்தப் பெரிய பரிசை மட்டும் கொடுத்தால் போதும், வேறு எதுவும் தங்களிடம் இருந்து எங்களுக்கு வேண்டாம் " என்று கூற. அதற்கு சிவன் " அப்படிக் கூறாதே, என்னிடம் மிக உயர்ந்த பொருள் ஒன்று உள்ளது. அதையே உனக்குப் பரிசு அளிக்கிறேன் எதிர்காலத்தில் அது உனக்குப் பயன் படும் " என்றார் . சீதை, " அது என்ன ? "எனக் கேட்க, சிவபெருமான் " என்னுடைய சிரிப்பு தான் அது " என்றார்.

அது எப்படி விலை உயர்ந்த பொருளாகும் என்று சீதை நினைக்க, அதனை அறிந்த சிவபெருமான் விளக்கம் அளித்தார் "சீதா, நீ நினைப்பதன் அர்த்தம் எனக்குப் புரிகிறது. என் சிரிப்பைக் கண்டு தான் திரிபுரம் எரிந்தது . அதை உனக்குப் பரிசாகத் தருகிறேன்" என்றார் .

சிவனது சிரிப்பால் திரிபுரம் எரிந்தது போல, சிவன் தனக்கு தந்த சிரிப்பால் இலங்கையும் அழியும் என்பதைச் சுட்டிக் காட்டவே சீதை அசோக வனத்தில் புன்முறுவல் செய்தாள் என்கிறது ராமாயணம் .


No comments:

Featured Post

276 Shivan Temple List | 276 paadal petra sthalam,

276 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது. எண் - கோயில் - இருப்பிடம்...