ஆத்யந்த_பிரபு
ஒரு பாதி விநாயகர் | மறுபாதி ஆஞ்சநேயர்.
துவங்குவது ஆனைமுகனிடம் முடிவது அனுமனிடம்!
விநாயகருக்கும் அனுமனுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் இருவருமே பிரம்மச்சாரிகள். இருவருக்குமே மனித முகங்கள் அல்ல. விநாயகர் ஆனைமுகன். அனுமன் வானரன். இருவருமே அசாத்திய சக்தி பெற்றவர்கள்.
இந்த தெய்வ உருவத்துக்கு ஆலயத்தார் வைத்துள்ள பெயர் ‘ஆத்யந்தப் பிரபு’. ஆத்யந்த என்பதை ஆதி, அந்தம் என்று இரண்டாகப் பிரிக்கலாம்.ஆதி+அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள். "ஆதி' என்றால் "முதலாவது'. முதல் கடவுள் விநாயகர். "அந்தம்' என்றால் "முடிவு'. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார். ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம்.
அனுமன், விநாயகர் இருவருமே புத்திக்கூர்மைக்குப் பெயரெடுத்தவர்கள். ஆத்யந்தப் பிரபு, புத்திக் கூர்மையின் சங்கமமாகவும் தோன்றுகிறார். இவரை வணங்கும் பக்தர்கள் எளிதில் வாழ்வை எதிர்கொண்டு அதில் ஆனந்தத்தைக் காண முடியும் என்பதன் கருத்தாக ஆத்யந்தப் பிரபு உருவம் உள்ளது.
பக்தியில் தலைசிறந்த ராமாயணப் பாத்திரமான அனுமன், மகாபாரதத்தையே தன் தந்தம் கொண்டு எழுதிய விநாயகன் என இரு ‘காவிய நாயகர்களும்’ இணையும் போது ஆசிகளுக்கு குறைவேது?
காலட்சேபங்களிலும், பூஜைகளிலும் விநாயகரை முதலில் வழிபடுவது மரபு. இறுதியில் ஆஞ்சநேயரைத் துதிப்பதும் மரபுதான். ஆக ஆதியும் அந்தமுமாக விநாயகரும் ஆஞ்சநேயரும் விளங்குகிறார்கள்.
பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டுள்ளோர், இந்த இரண்டு பிரம்மச்சாரிகளும் இணைந்த வடிவத்தை தங்கள் இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ளனர்.
சென்னையில் அடையாறு மத்திய கைலாஷ் கோவிலில் இவர் இருக்கிறார்.
Lord Ganesh and Lord Hanuman |
No comments:
Post a Comment